ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சிறுநீரகம் சீராகச் செயல்பட...!

வயது 48. தற்சமயம் பிரஷர் மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். எனக்கு சிறுநீர் கழித்து முடித்த பின் சொட்டு சொட்டாக வருகிறது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சிறுநீரகம் சீராகச் செயல்பட...!
Updated on
2 min read

வயது 48. தற்சமயம் பிரஷர் மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். எனக்கு சிறுநீர் கழித்து முடித்த பின் சொட்டு சொட்டாக வருகிறது. மேலும் சிறுநீரில் சிறிதளவு துர்நாற்றம் வருகிறது. அதிகாலையில் எழுந்தவுடன் அவசரமாக சிறுநீர் கழிக்கவேண்டியுள்ளது. ப்ராஸ்டேட் சுரப்பி சிறிதளவு வீங்கியுள்ளது. இதற்கு ஆயுர்வேதமருந்துகள் உள்ளனவா.

- ட.செல்வின், மணிநகர், இராமநாதபுரம்.

இரத்தக் கொதிப்பின் அளவில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் இப்பிரச்னைக்குக் காரணமாக இருக்கலாம். அதை சரி செய்வதற்கான மாத்திரைகளை நீங்கள் சரி வர சாப்பிடாமல் நடுவே நிறுத்தினால் இப்பிரச்னை ஏற்படலாம். அதனால் இரத்தக்கொதிப்பை கட்டுக்குள் வைத்திருக்க சர்ப்பகந்தா எனும் ஆயுர்வேத மாத்திரை ஒன்றை காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். தனியா, நெல்லிவற்றல், சீரகம் மூன்றையும் வகைக்கு ஐந்து கிராம் வீதம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு கால் லிட்டராக குறுக்கி வடிகட்டி ஒரு நாளில் பலதடவை சிறிது சிறிதாக குடித்து வரவும். சிறுநீரை வெளியேற்றும் நரம்புகளின் செயலூக்கிகள் பலதும் தலையிலும், முதுகு தண்டுவடத்திலும் அமைந்துள்ளதால் அவைகளின் சீரான செயல்பாட்டிற்கு நீங்கள் வாரம் இருமுறை காலையில் நல்லெண்ணெய், வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றை 4:2:1 என்ற விகிதத்தில் எடுத்து இரும்புக் கரண்டியில் சூடாக்கி தலையிலும், முதுகு தண்டுவடத்திலும் வெதுவெதுப்பாக தடவி அரை } முக்கால் மணி நேரம் ஊறிய பிறகு குளிக்கவும். ஏலக்காய் பொடித்து ஒவ்வொரு சாப்பாட்டிற்கு பிறகும் சிறிதளவு சாப்பிடவும். ஏலக்காய்க்கு சிறுநீரை நன்றாக வெளியேற்றும் சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. நெருஞ்சி விதை சிறுநீரகச் செயல்பாட்டை நன்றாக்கித் தருமென்பதால் நீங்கள் பதினைந்து கிராம் நெருஞ்சி விதையை பதினைந்து கிராம் நீர்முள்ளி விதையுடன் சேர்த்து நன்றாக அரைத்து துணியால் சலித்து மூன்று சிட்டிகை சிறிது வெந்நீருடன் காலை, மாலை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட நல்ல குணம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. சிறுநீர் பெருக்கிகளாகிய புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, கோவைக்காய், முருங்கைக்காய் போன்றவற்றை உணவில் தாராளமாய் சேர்த்துக் கொள்ளவும். இதன்மூலம் சிறுநீரில் வரும் பித்தத்தினுடைய ஒரு குணமாகிய விஸ்ரம் எனும் துர்நாற்றமானது விலகி சிறுநீரும் தாரையாக வெளியேறும். உடற்சூட்டை அதிகரிக்கும் பட்டை, சோம்பு, கரம் மசாலா, மீன், சிக்கன், பார்பெக்யு பாம்ப்ரட், ஆஃப்கானி கபாப், மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி போன்றவற்றைச் சாப்பிடுவதை சிறிது காலம் நிறுத்தவும்.

ப்ராஸ்டேட் சுரப்பியினுடைய வீக்கத்தினால் இவ்வாறு ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறியிருப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் பலாண்டவஏரண்டம் தைலத்தை சிறிது சூடாக்கி அடிவயிற்றின் பகுதிகளில் தடவி விட்டு அரைமணிநேரம் ஊறியபிறகு குளிப்பது வீக்கத்தை குறைக்க உதவும். சுகுமாரம் க்ருதம், வஸ்தி ஆமயாந்தகம் க்ருதம், வீரதராதி கஷாயம், லசுனஏரண்டாதி கஷாயம், சந்த்ரப்ரபா குடிகா, சிலாசத்து பற்பம், ப்ரவாளபற்பம் போன்ற மருந்துகள் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடத் தகுந்தவை.

சிறுநீர்ப்பையை தன்னுடைய கட்டுக்குள் வைத்திருக்கும் நரம்புகள் இடுப்பினுடைய கீழ்ப்பகுதியில் அமைந்திருப்பதால் அவ்விடத்தில் செய்யப்படும் கடிவஸ்தி எனும் சிகிச்சைமுறை தங்களுக்கு உதவிடக்கூடும். உளுந்து மாவை அப்பகுதியில் வரம்புபோல கட்டி அதன் உட்புறத்தில் வெதுவெதுப்பாக மூலிகைத் தைலங்களை ஊற்றி அரை முக்கால் மணிநேரம் வைத்திருந்து எடுக்கப்படும் இந்த சிகிச்சைமுறை சிறுநீர்ப்பை உபாதைகளை நீக்குவதோடு முதுகுத் தண்டுவட நரம்புகளையும், எலும்புகளையும், தசை நார்களையும் வலுப்படுத்துவதால் இடுப்புவலி நிவாரணியாகவும், பல அறுவைச் சிகிச்சைகளை செய்துகொள்ளவேண்டிய நிர்பந்தங்களிலிருந்து தடுத்து ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மூக்கில் விடப்படும் நஸ்யம் எனும் சிகிச்சையும், தலையில் எண்ணெய் ஊற வைக்கப்படும் பிசு எனும் சிகிச்சையும், உடலெங்கும் தரப்படும் மூலிகை ஒத்தடமும், சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறும் உபாதைக்குத் தீர்வாக அமையலாம். ஆயுர்வேத மருத்துவமுறைகளில் இச்சிகிச்சை அனைத்தும் மிகச் சிறப்பாக தற்சமயம் செய்யப்படுகின்றன.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com