ஒன்ஸ் மோர்

மேற்கத்திய பாணி உடை, ஆங்கிலம் என்று துரைமார் தோற்றத்தில் இருந்த மனிதர், பின்னாட்களில் இந்தியாவின் ஆன்மாவைப் புரிந்துகொண்டு
ஒன்ஸ் மோர்

மேற்கத்திய பாணி உடை, ஆங்கிலம் என்று துரைமார் தோற்றத்தில் இருந்த மனிதர், பின்னாட்களில் இந்தியாவின் ஆன்மாவைப் புரிந்துகொண்டு எளிய உடைகளுடன், தவறாத நேர்மையுடன் உழைத்தார் என்று சொன்னால், காந்தியைக் குறிப்பிடுவதாகக் கருதுவோம். ஆனால், இவர் காந்தியையும் மிஞ்சிய காந்தியவாதி! அவர்தான் ஜே.சி.குமரப்பா. காந்தியத் தத்துவத்துக்குப் பொருளாதார வடிவம் அமைத்துத் தந்தவர்.

தஞ்சாவூரில் பிறந்த இவர், அமெரிக்காவில் பொருளாதாரம் பயின்றவர். அமெரிக்காவில் மாணவராக இருந்தபோதே தமது ஆய்வுக்கென இந்திய மக்களைப் பற்றி அவர் சேகரித்த தகவல்கள் இந்தியாவை உறிஞ்சி வாழும் இங்கிலாந்தின் உண்மை உருவத்தை அம்பலமாக்கியது. மாணவப் பருவத்தில் "இந்தியா வறுமைப்பட்டது ஏன்?'' என்ற தலைப்பில் இவர் ஆற்றிய உரையை "நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்டது.

தான் எழுதிய கட்டுரை தொடர்பாக முதன்முதலாக காந்தியடிகளைச் சந்திக்கச் சென்றார் குமரப்பா. சபர்மதி ஆஸ்ரமத்தில் பிற்பகல் 2ணீ மணிக்கு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இச்சந்திப்பைப் பற்றி பின்னர் குமரப்பா இப்படி விவரித்தார். "காந்தியடிகள் தங்கியிருந்த வீட்டை எனக்குக் காட்டினார்கள். குறித்த நேரத்திற்கு அங்கு சென்று அவரைச் சந்திக்க வேண்டும் என்றும் எச்சரித்தார்கள். ஒரு கையில் கைத்தடியுடனும் மறு கையில் கட்டுரைச் சுருளுடனும் இரண்டு மணிக்கே சபர்மதி ஆற்றின் கரையில் உலவ ஆரம்பித்தேன். வழியில் ஒரு மரத்தடியில் சாணமிட்டு அழகாக மெழுகப்பட்ட இடத்தில் ஒரு கிழவர் உட்கார்ந்து நூல் நூற்றுக் கொண்டிருந்தார். நான் அதற்கு முன் ராட்டையைப் பார்த்ததே கிடையாது. ஆகவே, ஆச்சரியத்துடன் கைத்தடியைக் கீழே ஊன்றி அதன்மேல் சாய்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். என் சந்திப்புக்கு இன்னும் 10 நிமிடங்கள் இருந்தன. இவ்வாறு சுமார் ஐந்து நிமிடங்கள் வேடிக்கை பார்த்தேன். காந்தியடிகளைச் சந்திப்பதற்கான நேரத்தைத் தவற விட்டு விடக் கூடாது என்று முன் எச்சரிக்கையாகப் பையினின்று கடிகாரத்தை எடுத்துச் சரியான நேரத்தைப் பார்த்தேன். இதை அக்கிழவர் கவனித்து, தன் பொக்கை வாயைத் திறந்து ஒரு புன்னகையுடன், "நீங்கள்தான் குமரப்பாவா?'' என்று விசாரித்தார்.

அக்கிழவர் காந்தியடிகளாக இருக்கக்கூடுமோ என திடீரென என் மனதில் ஒரு சந்தேகம் உதித்தது. ஆகவே, நீங்கள்தான் காந்தியடிகளா? என்று பணிவுடன் கேட்டேன். அவர் தலையை அசைத்ததும் கீழே உட்கார முயன்றேன்; இஸ்திரி செய்யப்பட்டிருந்த "பட்டு சூட்' அழுக்காகி விடுமே என்று கவலைப்படாமல் சாணம் மெழுகிய தரையிலேயே உட்கார்ந்துவிட்டேன்.''

இந்தச் சந்திப்பு, வெள்ளைக்கார துரையாக இருந்த குமரப்பாவை உடையிலும் சரி, உள்ளத்திலும் சரி, காந்தியவாதியாக மாற்றியது. ஆடம்பர வாழ்க்கையைக் கைவிட்டு, காந்தியடிகளுடன் தேசப்பணியில் ஈடுபடுவது என்று தீர்மானித்தவர், நேராகக் கதர் கடைக்குச் சென்ற குமரப்பா, தனக்கு வேட்டிகள் வேண்டுமென்றும், அதைத் தயாரித்துக் கொடுக்க அளவு எடுத்துக் கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டார்! வேட்டிக்காக யாரையும் அளவெடுக்கத் தேவையில்லை என்று கடைச் சிப்பந்தி சிரித்தபடி விளக்கினார். அந்த அளவுக்கு இந்திய உடைகளைப் பற்றிய புரிதலின்றி இருந்தவர், பிற்காலத்தில் காந்தியப் பொருளாதாரத்தின் தந்தையாகப் பரிணமித்தார்.

அமைச்சர் ஒருவர் குமரப்பாவிடம் சமுதாய நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதால் ஏற்படும் "வளர்ச்சி' குறித்து விரிவாகப் பேசலானார். குமரப்பா குறுக்கிட்டு, "நான் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இந்தத் திட்டங்களை நிறைவேற்றும் முன்னதாக முதலில் அங்குள்ள ஏழைகளின் விலா எலும்புகளை எண்ணுவேன்.

திட்டக்காலம் முடிந்ததும் அந்த எலும்புகளில் ஏதாவது சதைப்பற்று காணப்படுகிறதா என்று ஆராய்வேன். அப்படிக் காணப்பட்டால் அந்தத் திட்டம் வெற்றி பெற்றிருப்பதாகக் கருதுவேன்'' என்றார்.

எந்திரக் கலப்பைக்கும் மாடுகள் பூட்டிய கலப்பைக்கும் உள்ள வித்தியாசம் பற்றி அவர் தெரிவித்த கருத்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பது. வெளிநாட்டு ஆய்வாளர் குமரப்பாவிடம், "நீங்கள் எந்திரங்களுக்கு எதிரியா... டிராக்டர் பயன்படுத்துவதை ஏன் எதிர்க்கிறீர்கள்?'' என வினவினார். குமரப்பா சிரித்துக்கொண்டே, "ஏன் என்றால்... டிராக்டர் சாணி போடாது!'' என்றாராம்!

புதியதோர் உலகம், சர்வோதய சமுதாயம் இம்மண்ணில் ரோஜாவாகப் பூக்க வேண்டும் என்பதே குமரப்பாவின் விருப்பம்! உண்மையான கிறிஸ்தவராக வாழ்ந்த குமரப்பா, தமது மறைவுக்குப் பிறகு "தன்னை எரிக்க வேண்டும் என்றும், தனது சாம்பலை கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமத்தில் தனது குடிலைச் சுற்றித் தான் வளர்த்த ரோஜாச் செடிகளுக்கு உரமாக்க வேண்டும்' என்றும் கூறியிருந்தார். பூத்துச் சிரித்தபடி காட்சி தந்த ரோஜாப் பூக்க ளின் வேரில் உரமாக உதிர்ந்தார் குமரப்பா.

"காந்தியை மிஞ்சிய காந்தியவாதி' என்ற கட்டுரையில் 
தஞ்சாவூர்க் கவிராயர்.

தொகுப்பு: கேசி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com