தன் ஊன் பெரிதென்பான்

தன் ஊன் பெரிதென்பான்

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடை மேல் மிளிர்க்கொன்றை அணிந்தவனே! மன்னே! மாமணியே! மழபாடியுள் மாணிக்கமே'' என்று முணுமுணுத்துக் கொண்டே விபூதியைக் குழைத்து

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடை மேல் மிளிர்க்கொன்றை அணிந்தவனே! மன்னே! மாமணியே! மழபாடியுள் மாணிக்கமே'' என்று முணுமுணுத்துக் கொண்டே விபூதியைக் குழைத்து நெற்றியில் அணிந்து கொண்டார் சதாசிவம். சிறு வயதிலிருந்தே அணிந்து வரும் வழக்கமாதலால் நெற்றி முழுவதும் மூன்று பட்டைகளாக அது காட்சியளித்தது. சரியான அளவுகளுள்ள கோடுகளாக அழகாக இருந்தது. ""இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க'' என்று சற்று உரக்கக் கூறிக் கொண்டே விபூதிப் பட்டைகளின் நடுவே வட்டமாக சந்தனப் பொட்டும் அதன் நடுவில் சிறிய குங்குமம் இட்டவர் கண்ணாடியில் பார்த்துத் திருப்திப் பட்டுக்கொண்டார். 
உரக்க அவர் குரல் கேட்டதுமே அவர் மனைவி பார்வதி புரிந்து கொண்டாள். அவளும் உடன் பதில் கொடுத்தாள். 
""இட்லி எடுத்து வச்சாச்சு.'' பூஜை அறைக்குள் போனவர், ""தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!'' என்று கூறிக்கொண்டே நெடுஞ்சாண் கிடையாகத் தரையில் உடல் முழுதும்
படியும்படிக் கைகளை முன்புறம் நீட்டிக் படுத்துக் கும்பிட்டவர் எழுந்து வந்தார்.
உணவு மேசையின் மீது ஒரு தட்டில் இரண்டு இட்லிகள் தயாராக இருந்தன. 
""சட்னி போதுமா; மொளகாப் பொடி எடுத்து வரட்டுமா?'' என்று வந்து கேட்ட மனைவிக்குச் ""சட்னியே போதும்'' என்று பதில் கூறியவர், ""பெரியவன் பேசினானா?'' எனக் கேட்டார். 
""பேசிட்டான்; இந்த வாரம் நாகர் கோவில் போறானாம்; அதால வரமாட்டானாம்'' என்றார். மதுரையில் இருக்கும் அவருடைய பெரிய மகன் வாராவாரம் பெற்றோரைப் பார்க்க வந்து போவது வழக்கம். சிறியவன் கனடாவில் உள்ளான்.
சதாசிவமோ அந்தக் கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத ஊரைவிட்டு வரமாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். அங்கே தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலைப் பார்த்து ஓய்வு பெற்றவர். 
""ஒன்னை வந்து ஒம்பது மணிக்கு அழைச்சிட்டுப் போகட்டுமா?'' என்று கேட்டதற்கு, 
""பார்வதி வேணாம் நானே நடந்து வந்திடறேன்'' என்று பதில் கூறினார். தொடர்ந்து ""எத்தனை மணிக்கு மாநாடு ஆரம்பிக்கும்?'' என்று அவர் கேட்க, ""கொடியேத்தி எல்லாம் முடிஞ்சு தலைவர் பேச பத்தரை ஆயிடும்'' என்றார் சதாசிவம். 
""அதுக்கு ஏன் இப்ப ஏழு மணிக்கே போறிங்க?''
""போயி எல்லா ஏற்பாடும் சரியா இருக்கான்னு பாக்க வேண்டாமா? நானே அந்த நேரத்துக்குப் போனா சரியா இருக்குமா?'' என்று கேட்ட அவரிடம், ""அப்ப நீங்க ஒரு பத்து மணிக்கு வந்து கூப்பிட்டுகிட்டுப் போங்க; அப்ப வெயில் வந்துடும்; நடந்து வர முடியாது''
""சரி, நீ தயாரா இரு; என்னைக் காக்க வைக்காத'' என்று சொன்னவர் கைகழுவ எழுந்து சென்றார்.
அந்த ஊரில் உள்ள ஆபத்சகாய ஈஸ்வரன் கோயிலில் அன்று திருமுறை மாநாடு நடக்க உள்ளது. கடந்த முப்பது வருடமாக சதாசிவம்தான் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். முழுநாளும் நடக்கும்; மதிய உணவு உண்டு. வெளியூரிலிருந்து பிரபலமான பேச்சாளர்கள் வந்து சமயக்குரவர் நால்வரின் புகழ் மற்றும் திருமுறைகளின் பெருமை, சைவ சமயத்தின் மேன்மை எனப் பேசுவார்கள்.
அவர் வீட்டிலிருந்து திருக்கோயில் சுமார் ஒரு கிலோமீட்டர் இருக்கும். கடைத்தெரு வழியாகப் போய் செந்தில்விநாயகம் மளிகைக் கடைப் பக்கத்துச் சந்து வழியாகத் திரும்பினால் கோயிலுக்குப் போயிடலாம். கோயிலுக்கு அருகிலேயே காவல் நிலையமும் சதாசிவம் பணியாற்றிய பள்ளியும் உள்ளன. வழியில் ஒட்டப்பட்டிருந்த மாநாட்டுச் சுவரொட்டிகளையும் வைக்கப்பட்டிருந்த பேனர்களையும் பார்த்துக் கொண்டே தன் இரு சக்கர வாகனத்தை மெதுவாக செலுத்திச் சென்றார் சதாசிவம். 
கோயில் வாசலில் வாழை மரங்கள் மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. அங்கேயே சற்று நேரம் நின்று அவற்றின் அழகைப் பார்த்தார். உள்ளே செல்லலாமா என அவர் நினைக்கும்போது கோயிலின் முன் ஒரு பெரிய கார் வந்து நின்றது. அதில் ஒரு கட்சிக் கொடி பறந்து கொண்டிருந்தது. அந்தக் காரிலிருந்து ஒருவர் இறங்கினார். உடன் கார் சற்றுத் தள்ளி நிறுத்துவதற்காக புறப்பட்டுச் சென்றது. 
காரிலிருந்து இறங்கியவர் கண்ணைப் பறிக்கும் வெள்ளை நிறத்தில் வேட்டியும் முழுக்கைச் சட்டையும் அணிந்து கொண்டிருந்தார். தோளில் இப்போதைய அரசியல்வாதிகள் போல் ஒரு சிறிய துண்டும் இருந்தது. இருக்கிறதா இல்லையா என சந்தேகப்படும் வண்ணம் நெற்றியில் விபூதிக் கீற்று தெரிந்தது. மிதியடிகளை விட்டுவிட்டு மேலே நிமிர்ந்தவர் ""திருமுறை மாநாடு'' என்று உரக்கப்படித்தவர் அருகில் நின்றுகொண்டிருந்த சதாசிவத்திடம், ""என்னா மாநாடுங்க?'' என்று கேட்டார். 
""தேவாரம் திருவாசகம், அப்பர்பெருமான், மாணிக்கவாசகர், சுந்தரர் பற்றியெல்லாம் பேசற மாநாடுங்க'' என்று பதில் கூறினார் சதாசிவம். அதைக் காதில் வாங்காதவர் போல ""சாமி பாக்க உடுவீங்களா'' என்று கேட்டார். ""நான் யாருங்க தடுக்கறதுக்கு? தாராளமா போயிக் கும்பிடலாம்'' என்று பதில் கூறினார் 
சதாசிவம்.
அவர் உள்ளே செல்ல வழிவிட்ட சதாசிவம், அவர் போன பிறகு நேராக மாநாடு நடக்கும் மண்டபத்திற்குச் சென்றார். அந்த மண்டபம் சாமி சன்னதிக்கும் அம்பாள் சன்னதிக்கும் நடுவில் இருந்தது. அங்கே நின்று கொண்டிருந்த சாமிநாதனிடம் ""என்னா சாமி? இங்க வாழை மரம் கட்டற வழக்கமாச்சே; எங்க காணோம்?'' என்று கேட்டார். ""ஆமாங்க, தெரியலயே; நான் போயி நாராயணனைக் கேக்கறேன்'' என்று சொல்லி கோயில் அலுவலகம் நோக்கிச் சென்றார்.
சிவன் கோயிலின் எழுத்தர் பெயர் நாராயணன் என்பது சற்று விசித்திரமான முரண்தான். ஆனால் நாராயணனால்தான் இந்தக் கோயில் நிர்வாகம் தங்கு தடையில்லாமல் நடந்துகொண்டு வருகிறது. ஓர் அர்ப்பணிப்பு உணர்வோடு யார் யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் அவர் நிபுணர். காவல் நிலையம், பத்திரப் பதிவு அலுலகம், மின்சார அலுவலகம், ஊராட்சி அலுவலகம் என எல்லா இடங்களிலும் எப்போதும் அவருக்கு நன்கு தெரிந்தவர்கள்தான் இருப்பது போலத் தோன்றும். அவர் உள்ளூர்க்காரர் என்பது அதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகும். 
சாமிநாதனுடன் வந்த நாராயணன், ""வாங்கய்யா, வணக்கம். வாழைமரம்லாம் வந்துகிட்டே இருக்குது. வாசல்ல கட்டி இருக்கறது உள்ளூர்லியே கெடச்சுது, பக்கத்துல கிராமத்துல ரெண்டு மரம் உபயமா தரேன்னாங்க. அதான் வர நேரம் ஆயிடுச்சு'' என்றார்.
""வந்துடும்ல'' என்று சிரித்துக் கொண்டே சதாசிவம் கேட்க, ""என்னாங்க நீங்க... கடைத்தெருவுகிட்ட வண்டி வந்திடுச்சாம்'' என்றார் நாராயணன். 
""சரி, அதுக்குள்ள நான் போயி சாமியைப் பாத்துட்டு வந்துடறேன்'' என்று நகர்ந்தார் நாராயணன்.
"மாசில் வீணையும்' பாடலை முணுமுணுத்துக் கொண்டே குருக்கள் தந்த விபூதியைச் சதாசிவம் நெற்றியில் கொஞ்சம் பூசிக்கொண்டிருக்கும்போது வெளியே சத்தம் கேட்ட மாதிரி இருந்தது. சதாசிவம் வேகமாக வந்தார். அங்கே மாநாட்டு மண்டபத்தின் முன்னால் காரிலிருந்து வந்தவர் நின்று கொண்டு, ""இப்படி வாழைமரத்தைக் குறுக்கே போட்டிருந்தா அம்பாள் சன்னதிக்கு எப்படிப் போறது?'' என்று கோபமாகக் கேட்டார். 
""இப்பதான் வந்துச்சு; இதோ கட்டிடப் போறோம்'' என்று பதில் சொன்னான் சாமிநாதன்.
அருகில் சென்ற சதாசிவம் ""ஐயா, கொஞ்சம் நகருங்க; இதோ பத்து நிமிஷத்துல கட்டிடுவோம்'' என்றார். 
அதற்கு அவரோ, ""வந்ததுமே என்னை நகரச் சொல்றீங்களா?'' எனச் சொல்ல, 
""இல்லீங்கய்யா, நீங்க நகர்ந்தாத்தானே எடுத்துக் கட்ட முடியும்'' என்றார் சதாசிவம். 
""இப்பதான் இதெல்லாம் கட்டறதா?'' என்றார் அவர்.
""வாழைமரம் கிராமத்துலேந்து வருது; கொஞ்சம் வர லேட்டாயிடுச்சுய்யா; நீங்க நகருங்க'' என்ற சாமிநாதனைப் பார்த்து முறைத்தார் அவர். 
""இப்ப என்னா சொல்ற நீ?'' என்று அவர் சாமிநாதனைப் பார்த்துக் கோபமுடன் கேட்க, சதாசிவம், ""அவரு அப்போ புடிச்சு ஒங்களை நகரச் சொல்றாரு அப்பதான் மரத்தைக் கட்ட முடியும்'' என்றார்.
""என்னை நவுரு, நவுருன்னு சொல்றீங்களே தவிர மரத்தைக் குறுக்கே போட்டு அம்பாள் சன்னதிக்கு வழி மறிச்சதை ஒத்துக்க மாட்டீங்க இல்ல?''
சதாசிவத்துக்கும் லேசாகக் கோபம் வந்தது. 
""இதோ பாருங்க, பூரா வழியையும் மறிச்சா கெடக்குது. எவ்வளோ அகலமா வழி அதோ கெடக்குது; அந்தப் பக்கமா போலாம்ல'' என்றார் அவர். கார்காரர், சதாசிவத்தைப் பார்த்துத் தன் ஒரு விரலை நீட்டி, ""எனக்குப் புத்தி சொல்லி வழி காட்ட நீ யாருய்யா?'' எனக் கேட்க, ""இந்த மாதிரி வெரல நீட்டிப் பயமுறுத்தறதெல்லாம் வேணாம்'' என்றார் பக்கத்திலிருந்த சாமிநாதன். 
""இந்த மாதிரி வாய்யா போய்யான்னெல்லாம் பேசாதீங்க; அப்பறம் நாங்களும் பேச வேண்டி வரும்; எங்களைப் பேச வைக்காதீங்க'' என்றார் சதாசிவம்.
அவ்வளவுதான்; கார்காரர் முகம் சிவந்து விட்டது. ""என்னா பேசிடுவீங்க? என்னாய்யா மாநாடு இது? இதுக்கு அனுமதி எல்லாம் வாங்கி இருக்கீங்களா? நான் யார் தெரியுமா?'' எனக் கேட்டார்.
""அனுமதி எல்லாம் வாங்கவேண்டிய எடத்துல எல்லாம் வாங்கித்தான் இருக்கோம்'' என்று சாமிநாதன் சொல்ல, ""எல்லாம் தலைக்குத் தல பேசறீங்களா?'' என்று கோபமாகக் கூறிவிட்டு அவர் வேகமாகச் சென்று விட்டார். வாழைமரத்தை நகர்த்தும்போது கார் கிளம்பிச் செல்லும் சத்தம் கேட்டது.
அப்போதுதான் நாராயணன் அங்கு வந்து, ""என்னா சாமி. இதைக் கட்ட இவ்வளவு நேரமா?'' என்று கேட்க சாமிநாதன் நடந்ததைக் கூறினார். 
""சரி, சரி, வேலயைப் பாருங்க'' என்று கூறி அவர், ""நான் போயி வாசல்ல யாராவது பேச்சாளருங்க வந்தா வரவேற்க நிக்கறேன்'' என்று அகன்றார். சதாசிவம், ""வீட்ல வரேன்னாங்க; நானும் போயி அழைச்சுகிட்டு வந்துடறேன்'' எனச் சொல்ல ""சீக்கிரம் வந்திடுங்க'' என்றார் சாமிநாதன். 
வாழை மரங்கள் அழகாகக் கட்டப்பட்டு விட்டன. மேடைக்குப் பின்னால் அலங்கரித்த பேனர் சற்றுச் சாய்வாக இருந்ததைக் குருக்கள் வந்து கூற அதைச் சாமிநாதன் சரி செய்தார். கீழே உட்காருபவர்களுக்குப் பெரிய இரு சமக்காளங்கள் போடப்பட்டன. மின்விசிறிகள் எல்லாம் இயங்குகின்றனவா என்று நாராயணன் வந்து போட்டுப்பார்த்தார். அவர், ""சாமிநாதா மேடையில மேசையில் விரிப்புத் துணி சுருக்கமா இருக்கு பாரு; அதைச் சரி செஞ்சுடு'' என்று கூறவும் இரண்டு காவலர்கள் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
வந்த காவலர்கள் இருவரும் மாநாட்டு மண்டபத்தினை ஒரு முறை நோட்டம் விட்டார்கள். பிறகு அம்பாள் சன்னதிக்குப் போனார்கள். சற்று நேரத்தில் அங்கிருந்து திரும்பினார்கள். பிறகு சாமி சன்னதிக்குப் போய்விட்டு வந்தார்கள். அவர்கள் அலுவலகம் நோக்கிப் போவதைப் பார்த்த நாராயணன், ""என்னாங்கய்யா? என்ன சேதி?'' என்று கேட்டார். 
""இங்கதான் இருக்கறீங்களா? நாங்க ஒங்களைப் பாக்கவே இல்ல; கோயில்ல ஒருத்தரைத் தேட வந்தோம்'' என்று அவர்கள் பதில் சொல்ல, ""யாரை இங்க வந்து தேடறீங்க?'' என்று கேட்டார் நாராயணன்.
""ஒருத்தரு நெத்தி நெறயே விபூதிப்பட்டை போட்டுக்கிட்டு இருந்தாராமே?'' என்று காவலர் சொல்ல, ""சிவன் கோயில்ல வேற என்னா போட்டிருப்பாங்களாம்?'' என்று நாராயணன் சிரித்துக் கொண்டே கேட்டான். ""இல்லீங்க சார், நெத்தியில விபூதி வச்சுக்கிட்டு நடுவில சந்தனமும் வச்சிருந்தாராமே... அவருதான்'' 
இப்பொழுது அவர்கள் தேடுவது யாரை என்று தெரிந்து விட்டது. 
""ஆமா. பக்கத்து ஊர்லேந்து மாநாடு பாக்கறதுக்கு ஒருத்தரு வந்திருந்தாரு; இப்பதான் அவரு வீட்லேந்து கூப்பிட்டு ஆளு வந்துச்சு போயிட்டாரே; அவருக்கு என்ன?''
""நீங்க வேற சார் இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி பெருந்தனக்காரர் வந்திருந்தாராம்''
""அப்படீன்னா யாரு?'' என்று நாராயணன் கேட்டுக் கொண்டிருக்கும்போது சாமிநாதனும் அங்கு வந்து சேர்ந்து கொண்டார்.
""அதாங்க, கம்பநாட்டு மங்கலத்துக் கிராமத்து நாட்டண்மை அவரு. போற வழியில நம்ம கோயிலுக்குள் நுழைஞ்சாராம். இங்க யாரோ பெருந்தனக்காரரை மரியாதைக் குறைவாகப் பேசிட்டாராம்; கோயிலுக்குப் போயி ஈஓவையும் அவரையும் கூப்பிட்டுக்கிட்டு வான்னு ஸ்டேஷனுக்கு வந்து சாமியாயிடறாரு''
அதைக் கேட்ட சாமிநாதன் நடந்தவற்றைச் சொன்னார். உடனே, மற்றொரு காவலர், ""அப்படியா இவ்வளவு நடந்திருக்கா? அவரு ஒண்ணுமே சொல்லலையே'' என்றார்.
நாராயணன் ""இப்ப என்னா செய்யலாம்?'' என்று காவலரிடமே கேட்டார்.
""சார் அவரு தயவு எங்களுக்கு வேணும். நீங்களும் தான் வேண்டியவங்க; நான்தான் ஈஓன்னு வாங்க; அவரைச் சமாளித்து அனுப்பிவிடலாம்'' என்று அவர் சொல்ல ""சரி நீங்க போங்க நான் பின்னாலியே வரேன்'' என்றார் நாராயணன். 
காவலர் சென்ற கொஞ்ச நேரத்தில் சதாசிவம் மனைவியுடன் வந்திறங்கினார். மனைவிடம் ""நீ சாமியைக் கும்பிட்டு மண்டபத்துல ஒக்காந்துக்கோ'' என்றார் சதாசிவம். மண்டபத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் வந்து அமர்ந்திருந்தனர். சாமிநாதன் சதாசிவத்தை அலுவலகத்துக்கு அழைத்துக் கொண்டு போனார். எல்லாம் அறிந்துகொண்ட சதாசிவம், ""நான் போய் என்னா நடந்ததுன்னு சொல்றேன்'' என்றார்.
""சாமிநாதன், வேணாங்கய்யா? நீங்க போயி வாகனக் கொட்டாயில ஒக்காந்துக்குங்க; அவரு போனதக்கப்பறம் வரலாம்'' என்றார். நாராயணனோ, ""இல்ல வாணாம், அந்தாளு மறுபடியும் தானே வந்து கோயில் பூரா பாத்தாலும் பாப்பாரு. நமக்கு மாநாடு நல்லபடியா நடக்கணும்; நீங்க வீட்டுக்குப் போயி ஒரு மணிநேரம் கழிச்சு வாங்க'' என்றார். 
சோர்ந்த முகத்துடன் வீடு திரும்பிய சதாசிவம் என்ன செய்வதென்று புரியாமல் வானொலியைப் போட அதிலிருந்து "பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா செளக்கியமா?' என்னும் பாடல் ஒலிக்கத் தொடங்கியது.
ஸ்டேஷனின் உள்ளே பெருந்தனக்காரர் நாராயணனை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார். 
""நீதான் ஈஓவாய்யா? என்னாய்யா நிர்வாகம் செய்யறே? விழாவுக்கு வாழைமரம் எப்பய்யா கட்டறது? ஒண்ணுமே சரியில்லியே! எல்லாம் தலைக்குத் தலை ஆடறாங்க; ஒங்களாலதான் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையே ஆரம்பிக்குதய்யா''
எல்லாம் தெரிந்த நாராயணன் ஒன்றும் தெரியாதவர் போல் அமைதியாக நின்றுகொண்டு கேட்டுக்கொண்டிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com