/

வானியல் கற்றுத் தரும் நாடகம்!

வான அறிவியலையும் வழக்கமான நாடகத்தையும் இணைக்க முடியுமா? "முடியும்'' என்கிறார், சிறுவர் சிறுமியருக்கு அறிவியலின் அரிச்சுவடியை ஆழமாகப் பதிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும்

News image
Updated On :8 அக்டோபர் 2018, 10:08 am IST

வான அறிவியலையும் வழக்கமான நாடகத்தையும் இணைக்க முடியுமா? "முடியும்'' என்கிறார், சிறுவர் சிறுமியருக்கு அறிவியலின் அரிச்சுவடியை ஆழமாகப் பதிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சென்னையைச் சேர்ந்த பொறியாளர் ஜகதீஷ் கண்ணா.
 ஜகதீஷ் கண்ணா "வாயுசாஸ்த்ரா' அமைப்பின் நிறுவனர். இந்த அமைப்பின் நோக்கம் நாடகம் வழியாக வானியல் அறிவியலை எளிய முறையில் விளக்குவது. ஜெகதீஷ் அடிப்படையில் பறக்கும் அறிவியலில் பொறியாளர். ஒரு நாடகக் கலைஞரும் ஆவார். அதனால் ஜெகதீஷுக்கு தனக்குப் பிடித்த நாடகத்தையும் தெரிந்த பறக்கும் அறிவியலையும் ஒன்று சேர்த்து அதை சிறுவர், சிறுமியர்களிடம் கொண்டு சேர்க்கும் நேர்த்தி வசமாகியுள்ளது.
 ஜெகதீஷுக்கு நாடகத் துறையுடன் எட்டாண்டு காலமாக தொடர்பு. ""சிறுவர், சிறுமியர்களுக்கு விமானம் எப்படி வானில் பறக்கிறது என்பதை விளக்க ஆரம்பத்தில் நான் ஏற்பாடு செய்திருந்த பட்டறைகளில் காகிதத்தில் செய்த விமானங்களை பறக்கத் செய்து விமானம் எப்படி பறக்கிறது என்பதை விளக்கி வந்தேன். அதை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக்க கதையை வானியலுடன் நெய்து குழந்தைகளுக்குச் சொல்ல ஆரம்பித்தேன். கதையை விரும்பாத குழந்தைகள் உண்டா என்ன? அதற்காக நான் கிரீஸ், சீன நாட்டுக் கதைகளைத் தேடிப் பிடித்தேன். வானியலை அந்தக் கதைகளைக் கொண்டு விளக்கி புரிய வைத்தேன். நமது இதிகாசங்களில் வரும் புஷ்ப விமானத்தையும் நான் உதவிக்கு அழைத்துக் கொண்டேன். இந்த முறையால், சிறுவர், சிறுமியர்களின் மனதில் விமானம் குறித்த அனைத்து தகவல்களும் பதிந்தன. வானியல் பொறியாளர்கள் இந்த நாடக நிகழ்ச்சிகளில் பங்கு பெறுகிறார்கள். நிகழ்ச்சிக்கான கதைக்கும் இயக்கத்திற்கும் நான் பொறுப்பேற்கிறேன். படிப்பு முடிந்ததும், சில திரைப்படங்களுக்கு உதவி இயக்குநராகப் பணி புரிந்திருக்கிறேன். அந்த அனுபவத்தால், கதையை நாடக வடிவமாக்குவது எளிதாக அமைந்துவிட்டது. இப்போது எட்டு வானியல் பொறியாளர்கள், ஏழு நாடகக் கலைஞர்கள் என்னுடன் "வாயுசாஸ்த்ரா' அமைப்பில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
 பள்ளிகளில் வானியல் குறித்த நிகழ்ச்சிகளை நடத்துவதுதான் "வாயுசாஸ்த்ரா' வின் திட்டம். இதற்காக சிறார்களுடன் இணைந்து சிறார்களுக்காக தொடங்கப்பட்டிருக்கும் பல தொடக்க நிலை நிறுவனங்களுடன் "வாயுசாஸ்த்ரா' கை கோர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. வானியல் அறிவியலை கிராமப்புற சிறார்களுக்கு விளக்குவதற்காக இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வானில் விமானம் பறப்பதை கிராம சிறுவர் சிறுமியர் அதிசயமாக வாய் பிளந்து நிற்காமல், விமானம் பறக்கும் தத்துவத்தைப் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் விளக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம்'' என்கிறார் ஜகதீஷ்.
 - சுதந்திரன்
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.