கடைகளில் கிடைக்கும் எண்ணெய்களை வாங்கிப் பயன்படுத்தினால் எவ்வளவோ உடல்நலப் பிரச்னைகள்... இப்போது செக்குகளில் தயாரிக்கப்படும் எண்ணெய்வகைகளைத் தேடிக் கண்டுபிடித்து மக்கள் வாங்குகின்றனர். செக்கெண்ணெய்களைத் தயாரிக்க மரச்செக்குகள் தேவை.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த செல்வராஜு என்பவர் மரச் செக்கு தயாரிக்கும் தொழிலில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளார். இத்தொழிலில் அவர் ஈடுபாடு காட்டுவதற்கு பின்னே ஒரு சுவாரசியமான தகவல் உள்ளது. திருப்பூரில் "மதிவதனி டிரேடர்ஸ்' என்ற பெயரில் பேப்ரிகேஷன் யூனிட்டும், ஸ்பேன்டக்ஸ் நூல் இறக்குமதியும் செல்வராஜு செய்து வந்துள்ளார். தனது 63}வது வயதில் அத்தொழில்களை அவரது மகனிடம் ஒப்படைத்துள்ளார்.
ஆனால், தனது தந்தையார் காலத்தில் செய்த மாடு பூட்டி, செக்கு எண்ணெய் தயாரித்துக்கொடுக்கும் தொழில் அவருக்கு நினைவுக்கு வந்துள்ளது. "பாட்டன் & பாட்டி' மரச்செக்கு எண்ணெய் நிறுவனத்தை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கியுள்ளார். இன்றைய காலகட்டத்தில், மாடு பூட்டி மரச் செக்கு எண்ணெய் தயாரிப்பது சாத்தியமில்லை என்பதால், மின்சாரத்தில் இயங்கும் மரச் செக்கை தொழிலுக்குப் பயன்படுத்துவது என முடிவு செய்துள்ளார்.
தரமான, உறுதியான மரச் செக்குகள் கிடைப்பது சிரமமாக இருந்திருக்கிறது. தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களுக்கு நேரில் சென்று, நான்கு மரச்செக்குகளை வாங்கி, அதில் இருந்த சின்னச் சின்ன பழுதுகளை நீக்கி, செக்கு எண்ணெய் தயாரிக்கும் தொழிலை மூன்று வருடங்களுக்கு முன்பு தனது வீட்டின் பின்புறத்தில் இருந்த இடத்தில்ஆரம்பித்துள்ளார். அவரது நட்பு வட்டத்தில் இருந்த சிறு தொழில் முனைவோர்கள் தங்களுக்கும் செக்கு தயாரித்துத் தருமாறு கேட்கவே, செக்கு எண்ணெய் தயாரிக்கும் தொழில் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, செக்கு தயாரிக்கும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்.
வாகை மரத்தை செக்காகவும், கருவேல மரத்தை உலக்கையாகவும் கொண்டு கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 30 செக்குகளை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், உள்ளூர் வியாபாரிகளுக்கும் தயார் செய்து கொடுத்துள்ளார். தற்போது தமிழக எல்லையைத் தாண்டி ஆந்திரம், கர்நாடகம் வரையிலும் வாடிக்கையாளர்களின் மரச் செக்கு தேவையைப் பூர்த்தி செய்துவருகிறார். ஒரு செக்கு தயாரிக்க சுமார் 15 முதல் 20 நாள்கள் வரை தேவைப்படுவதாகவும், மரச் செக்கு, கல் மரச் செக்கு, மேற்புறத்தில் மோட்டார் பொருத்தப்பட்ட செக்கு, அடிப்பாகத்தில் மோட்டாருடன் இயங்கும் செக்கு என வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ப தயாரித்துத் தருகிறார்.
"எனது தயாரிப்பிலான செக்குகளை பராமரிப்பது மிகவும் எளிது. சுமார் 70 முதல் 100 முறை எண்ணெய் பிழிதலுக்குப் பிறகு, உலக்கையையோ அல்லது அடிப்பாக செக்கையோ தேய்மானத்தைப் பொறுத்து மாற்ற வேண்டி வரும். அதையும் அந்தந்த ஊர்களில் உள்ள மரத் தச்சர்களைக் கொண்டே எளிதில் மாற்ற இயலும். தேவைப்படும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டால் அவர்களது இடத்துக்கே நேரடியாகச் சென்று பழுது, தேய்மானங்களைச் சரிசெய்து தேவையான நுணுக்கங்களை அளிப்பதற்கும் தயாராக உள்ளேன்'' என்கிறார் செல்வராஜு.
முதன்முதலில் ஒரு வாடிக்கையாளருக்கு செக்கு தயாரிக்கும்போது, மரம், கல் இழைக்க, சரியான அளவுகளில் இயந்திர பாகங்கள் தயாரிக்கத் திறமையானத் தொழிலாளர்கள் கிடைக்காமல் சிரமப்பட்டதாகவும், அவ்வாறு தயாரிக்கப்பட்ட செக்கிலும் சிறு சிறு கோளாறுகள் இருந்ததாகவும், பிறகு விடாமுயற்சியின் காரணமாக, திறமையான தொழிலாளர்களைக் கண்டறிந்து, செக்கிலுள்ள சிறு சிறு கோளாறுகளைச் சரிசெய்து இன்று செக்கு தயாரிப்பில் தேர்ந்த அனுபவம் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
"10 அடிக்கு 10 அடி இடமும், மும்முனை மின்சார இணைப்பும், சொற்பமான முதலீடும், சுய தொழில் புரிய ஆர்வமுமுள்ள எவரும் செக்கு எண்ணெய் தயாரிப்பிலும், செக்கு தயாரித்தல் தொழிலும் ஈடுபட இயலும்'' என்கிறார் செல்வராஜு.
அரசுப் பணியோ, தனியார் பணியோ அல்லது சொந்தத் தொழிலோ எதுவாகிலும் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு ஓய்வைப் விரும்பும் பெரும்பாலானோர் மத்தியில் தனது ஓய்வுக் காலத்திலும் மரச்செக்கு, செக்கு எண்ணெய் தயாரிப்பில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கும் செல்வராஜு இளைஞர்களுக்கும், இளம் தொழில் முனைவோருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.
- இரா.சுந்தரபாண்டியன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








