

அலுமினிய பாத்திரங்களில் சமையல் செய்து உட்கொண்டால் மத்திய மூளை நரம்பு மண்டலங்களில் மிகவும் மோசமான கோளாறுகளுடன் ALZEIMER என்ற மூளை செயலிழப்பு ஏற்படும் என்றும், ஹிண்டாலியம் என்ற அலுமினியம் சேர்ந்த அலாய் உலோகத்தில் சமைத்தால், DIAXIN என்ற புற்றுநோயை உண்டாக்கும் கொடிய வாயு வெளியேறுவதால், குணப்படுத்த முடியாத நோய்கள் ஏற்படுவதாகவும், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் எனும் எவர்சில்வர் பாத்திரங்கள் இரும்பு எஃகு உலோகத்துடன் விஷமயமான நிக்கல், குரோமியம் கலப்புடன் செய்யப்பட்டு தயாரிக்கப்படுவதால், அதில் சமையல் செய்தால் TOXIC METALLIC விஷங்கள் கலப்பது உறுதி என்றும் செய்திகள் வருகின்றன. அது பற்றிய ஆயுர்வேத கருத்துகள் எவை?
-எம்.எஸ். நளினி, அண்ணாநகர், சென்னை - 40.
இந்த கேள்வியின் மூலம், மனிதர்கள் மறுபடியும் மண்பாத்திரம், இரும்புப் பாத்திரத்திற்கும் மாற வேண்டும் என்று நீங்கள் நினைப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இது காலத்திற்கு ஏற்ற ஒரு கேள்வியாகத் தெரியவில்லையே? ஏனென்றால் இதை எழுதும் நாமும், படிக்கும் நீங்களும் அலுமினியப் பாத்திரம், ஹிண்டாலியப் பாத்திரம், ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரம் என்று காலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொண்டுவிட்டோமே! நீங்கள் குறிப்பிடுவது போல, பல விஷக்கலப்புள்ள உலோகங்கள் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்தும் பலரும் 70 - 80 வயது வரை வாழ்ந்து விடுகிறார்கள், அதுவும் உடல்ரீதியாக பெரிய பிரச்னைகள் ஏதுமில்லாமலேயே! அது எப்படி அவர்களுக்கு மட்டும் சாத்தியமாகிறது? அதற்கான விடை மட்டும் தெரிந்துவிட்டால், அதையே ஓர் அஸ்திரமாக மாற்றி, இந்த உலோகக் கெடுதிகளை உடலிலிருந்து நீக்கிவிடலாமே!
ஆரோக்கியத்தை மனிதர்கள் நோய் எதிர்ப்பு சக்தி மூலமாகப் பெறுவதாகவும், அதற்கேற்றாற் போல குடல் அமைப்பும், தாதுக்களில் பொதிந்துள்ள நெருப்பின் சீரான செயல்பாடும் அமைந்துவிட்டால், நீங்கள் குறிப்பிடும் விஷத்தை அவை பஸ்பமாக்கி, சத்தான உணவினுடைய வரவை மட்டுமே வரவேற்று உள்வாங்கும் சக்தியையும் பெற்றுவிடுவதாலும் ஆயுர்வேதம், மற்ற மருத்துவ முறைகளிலிருந்து ஒரு மாறுபட்ட கருத்தை முன் வைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி என்பது- ஸஹஜ பலம், கால பலம், யுக்திக்ருதம் என்று மூன்று வகையில் நாம் சம்பாதித்துக் கொள்ள முடியும்.
முதலாவதாகக் குறிப்பிட்ட ஸஹஜ பலம் என்பது கரு உருவான தருணத்திலிருந்தே, தந்தையின் வழியாகவும், தாயின் வழியாகவும், அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை கருவின் அகத்தே புகுத்திவிடுகிறார்கள். கரு வளர்ந்து, குழந்தையாகி, வெளிவந்த பிறகு அந்த ஸ்தூல உடலின் மரணம் ஏற்படும் வரை, தாய் தந்தையரின் வழியாகப் பெறப்பட்ட, நோய் எதிர்ப்பு சக்தியானது குன்றாமல் நின்று அரணாகப் பாதுகாக்கக் கூடியது!
காலபலம் என்பது பருவகாலம் மற்றும் ஜீரண அஜீரண காலமாகும். பருவ காலங்களுக்குத் தகுந்தாற் போல், குளிர் காலத்தில் குவியக் கூடிய கபம் எனும் தோஷத்தை, வசந்த காலத்தில் கடுமையான வாந்தி சிகிச்சை, மூக்கில் மருந்துவிட்டு, தலையைச் சுத்தி செய்து கொள்ளும் முறை மூலமாகவும், கோடையில் சீற்றமடையும் வாயு தோஷத்தை, மழையின் ஆரம்ப நாட்களில், வஸ்தி எனும் எனிமா சிகிச்சை மூலமாகவும், மழைக் காலத்தில் குவியக் கூடிய, பித்த தோஷத்தை, சரத்ருது எனும் கார்த்திகை - மார்கழி மாதங்களில் பேதி மூலமாகவும், ரத்தக் குழாய்களைக் கீறி, ரத்தத்தை வெளிப்படுத்தியும் நம் முன்னோர் வாழ்ந்தமையால், அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியானது குறையாமல், எந்த விஷத்தன்மை கொண்ட பொருளையும் எதிர்த்து வென்றுவிடக் கூடிய ஆற்றலையும் வளர்த்துக் கொண்டார்கள். முன் உண்ட உணவு, நன்றாக செரித்த பிறகு - ஏப்பம் சுத்தமடைதல், உற்சாகம், மலம், சிறுநீர் ஆகியவை இயற்கையாகவே நன்கு எளிதில் வெளியேறுதல், உடல் லேசாகுதல், பசியும் தண்ணீர் தாகமும் நன்கு ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்ட பிறகே அடுத்த உணவை ஏற்றல் என்ற கருத்தில் உறுதியாக இருந்ததால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியானது, ஒரு நிரந்தர பாதுகாப்பை அவர்களுக்கு கவசமாக நின்று ஏற்படுத்தியது.
யுக்திக்ருதம் எனும் அறிவைப் பயன்படுத்தி, அன்றைய தினத்தின் உடல் நிலை எவ்வாறு உள்ளது என்பதை நன்கு ஊகித்தறிந்து அதற்கேற்றாற் போல, உணவையும், நடவடிக்கைகளையும், தேவையானால் மருந்தையும் உட்கொண்டு, பாதுகாத்துத் கொண்டனர். உணவு விஷம், விஷக்காற்று, உலோகக் கலப்புள்ள பாத்திரங்கள் மூலம் வரும் எந்த விஷத்தையும் முறிக்கக் கூடிய திறனையும் இம் மூன்று விஷயங்களையும் கையாண்ட நம் முன்னோர் அறிவு, நமக்கு இல்லாமல் போனதால் தான், இன்று சிறிய காரணம் கொண்டும் பெரிய உபாதைகளுக்கு ஆட்பட்டுவிடுகிறோம்.
அதனால், நீங்கள் குறிப்பிடுவது போல, விஷக் கலப்புள்ள உலோகப் பயன்பாடுகளை இனி நாம் திரும்ப பெற இயலாது. அதனால், காலத்தை ஒட்டிய நம் சிந்தனையானது, நம் முன்னோர், நமக்களித்த உபதேசங்களை இயன்ற அளவு கடைப்பிடித்து, பாத்திரங்களின் பயன்பாட்டின் மூலமாக, வரக் கூடிய உட்புற விஷங்களை எதிர்த்துப் போராடும் திறனை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டுமே தவிர, பாத்திரத்தை மாற்று என்ற கருத்து இனி எடுபடாது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.