மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

திரைக் கதிர்

தமிழ் சினிமா அல்லாமல் இந்தியா முழுவதும் பரபரப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது "மீ டூ' என்ற ஹேஷ்டேக்.

News image
Updated On :22 அக்டோபர் 2018, 9:30 am

தமிழ் சினிமா அல்லாமல் இந்தியா முழுவதும் பரபரப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது "மீ டூ' என்ற ஹேஷ்டேக். இதன் மூலம், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நடிகைகள், பிற துறை பெண்கள் புகார் அளித்து வருகின்றனர்.  தமிழ் சினிமா இல்லாமல் அரசியல் தளத்திலும் இது பல சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு எழும் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க குழு ஒன்றை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் விஷால். திரையுலகில் உள்ள நடிகைகள் யாராவது கடினமான சூழ்நிலையைச் சந்தித்திருந்தால், அதுபற்றி உடனே வெளிப்படையாகச்  சொன்னால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் விஷால். நடிகைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது. அதில் இடம் பெறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


கமலின் திரை வாழ்க்கையில் குறிப்பிடத்தகுந்த படங்களில் "தேவர் மகன்' படமும் ஒன்று. திரைக்கதை ஆக்கம், காட்சிகள், வசனங்கள், சொல்ல வந்த விஷயம் என பல விதங்களில் அந்தப் படம் இப்போதுள்ள இளம் இயக்குநர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறது. 1992-ஆம் ஆண்டு பரதன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில்  கமலுடன் சிவாஜி, கௌதமி, ரேவதி, வடிவேலு, நாசர் உள்ளிட்டோர் நடித்தனர். கதை எழுதி தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலமாக தயாரித்தார் கமல். நீண்ட வருடங்களாகவே "தேவர் மகன்'  படத்தின் இரண்டாம் பாகம் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. இந்நிலையில் இது பற்றி தற்போது மனம் திறந்துள்ளார் கமல். இது பற்றி அவர் பேசும் போது... "தேவர் மகன் 2', "இந்தியன் 2' ஆகிய படங்கள் தான் பட்டியலில் இருக்கின்றன. இதர வேலைகள் இருப்பதால் இப்படங்களை மட்டும் தான் ஏற்றுக் கொள்ள முடிந்தது. இரண்டுமே எப்போது வெளியாகும் என்று சொல்ல முடியாது. இரண்டில் ஒரு படத்துக்காக கொடுக்கப்பட்டு இருக்கும் நாள்கள் நீளமானது என்று தெரிவித்துள்ளார் கமல்.


"பாகுபலி', "பாகமதி' என வெற்றிப் படங்களைக் கொடுத்தபோதும் புதிய படங்களை ஏற்காமல் அமைதி காத்து வருகிறார் அனுஷ்கா. பிரபாஸ் நடித்து வரும் "சாஹோ' படத்தில் அனுஷ்காவை ஒப்பந்தம் செய்ய எண்ணியபோது அவரது குண்டான தோற்றத்தால் அப்படத்தில் நடிக்க முடியவில்லை. முன்னதாக தமிழில் அவர் நடித்த "இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக உடல் எடையை 100 கிலோவாக உயர்த்தி நடித்தார். அதன் பிறகு அந்த எடையைக் குறைக்க முயன்றதில் ஓரளவுக்கே பலன் கிடைத்தது. எடை குறைந்தாலும் ஒல்லியான தோற்றம் கிடைக்காமல் கவலை அடைந்தார். நண்பர்கள், தோழிகள், சக நடிகைகள் தந்த ஆலோசனையின்படி தென்னிந்தியாவில் பல்வேறு உடல் எடை குறைப்பு பயிற்சி இடங்களுக்குச் சென்று வந்தார் அனுஷ்கா. அப்போதும் போதிய பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து ஒல்லியாகத் திரும்புவது என்ற முடிவோடு ஆஸ்திரியா நாட்டுக்குப் புறப்பட்டு சென்றிருக்கிறார். அவருக்கு அங்கு இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்கும் பிரத்யேக பயிற்சி  அளிக்கப்பட்டு வருகிறது.


திருமண முறிவுக்குப் பின் மீண்டும் நடிக்க வந்த அமலாபால் சமீபகாலமாக மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிக்கிறார். "ஆடை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த புகைப்படம் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி விவாதங்களை ஏற்படுத்தியது. இனிவரும் படங்களிலும் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புவதாகவும் எதிர்காலத்தில் அரசியலில் குதிக்கும் எண்ணமும் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். கடந்த மாதம் கேரளத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது பாதிக்கப்பட்டவர்களுக்கு நல உதவிகளை நேரில் சென்று வழங்கினார். அப்போது பல பெண்கள் அவரிடம் உதவி கேட்டனர். இதையடுத்து சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை கொண்டு புதிய தொழில் தொடங்கி அதில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர முடிவு செய்திருக்கிறார். இயற்கை முறையிலான சத்துள்ள உணவு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்க எண்ணி உள்ளார். இதில் போட்டியாளர்கள் குறைவு என்பதால் தன்னால் வெற்றிகரமாக இந்த தொழிலை நடத்த முடியும் என்று தெரிவித்துள்ளார் அமலாபால்.

"துள்ளுவதோ இளமை', "காதல் கொண்டேன்', "யாரடி நீ மோகினி', "திருவிளையாடல் ஆரம்பம்', "3' ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்த படமாக உருவாகி வருகிறது "பாண்டி முனி'. ஜாக்கி ஷெராப், மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, ஷாயாஜி ஷிண்டே, சுமன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் கஸ்தூரிராஜா. படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு 15 நாட்கள் திருவண்ணாமலை அருகே உள்ள வேட்டவலம் என்ற ஊரில் நடை பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.