பு(மு)துமைத் தம்பதியர்

சக "ரிடையர்டு' நண்பர்களுடன் மாலைப் பொழுதைப் போக்கி விட்டு இரவு எட்டரை மணிக்கு இல்லம் திரும்பினார்  சதாசிவம்.
பு(மு)துமைத் தம்பதியர்

சக "ரிடையர்டு' நண்பர்களுடன் மாலைப் பொழுதைப் போக்கி விட்டு இரவு எட்டரைமணிக்கு இல்லம் திரும்பினார் சதாசிவம்.

ஐந்தரை மணி வாக்கில் வெளியில் கிளம்பி சகாக்களுடன் அளவளாவி வருவது சதாசிவத்தின் தினசரி வழக்கம். மனைவி சரஸ்வதி, கணவர் வரும் வரையில் தொலைக்காட்சியில் தொடர் பார்த்துக்கொண்டிருப்பாள். குடும்பங்களில் நடுத்தர, வயதான பெண்மணிகளின் பொழுதுபோக்கு சீரியல் பார்ப்பது என்றாகிப் போய்விட்டது. இதற்கு சரஸ்வதி மட்டும் விதிவிலக்காய் இருக்க இயலுமா? ஆனால் ஒருவித்யாசம்... எல்லா சீரியல்களையும் விடாது வெறியாய்ப் பார்க்கும் ஆர்வம் அவளுக்குக் கிடையாது. தேர்ந்தெடுத்து ஒரு சில சீரியல்களை மட்டுமே பார்ப்பது சரஸ்வதியின் வழக்கம். அதுவும் இரவு எட்டு மணிக்கு மேல் தொலைக்காட்சிப் பக்கம் சரஸ்வதி போவதில்லை. எட்டுமணிக்கு வீட்டுக்கு வருகிற சதாசிவம் செய்திச் சேனலைக் கவனிக்கத் தொடங்குவார். அதுவும் அடுப்படியில் இருந்து, இல்லாளின் அழைப்பு வருகிற வரைதான்.

""சாப்பிட வாரீங்களா?''” சரஸ்வதியின் குரல் கேட்டதும் தொலைக்காட்சியின் மூச்சை நிறுத்தி விட்டு, இரவு டிபன் சாப்பிட சமையலறைக்குப் போய் விடுவார்.

இன்றும் அப்படித்தான்... மனைவியின் அழைப்புக் குரல் வந்ததும், அடுப்படி நோக்கிப் போக முற்படும் போது... அலைபேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்த போது மகன் மாதவன் அழைப்பில் இருந்தான்.
"எப்பவுமே நாமதானே ஃபோன் போட்டுப் பேசி... பேரன் பேத்திங்க எப்படி இருக்காங்க? காயத்திரி எப்படி இருக்கா? நீ எப்படி இருக்கேன்னு கேப்போம். இன்னக்கி என்ன அதிசயமா அவன் கூப்பிட்டிருக்கான்' “ என்று நினைத்தவாறு அலைபேசியை "ஆன்' செய்தார் சதாசிவம்.
""என்னப்பா மாது... எப்பிடி இருக்க? என்ன திடீர்னு கூப்பிட்டிருக்க... எல்லாரும் நல்ல இருக்கிங்கள்ல... பிள்ளைங்க, காயத்திரி செளகரியம்தானே?''”
""எல்லாரும் சுகமா இருக்கோம்ப்பா.. நாங்க
எல்லாரும் வர்ற சனிக்கிழம அங்க வர்றோம்''”
""என்னப்பா திடீர்னு?''”
""எல்லாத்தையும் நேர்ல விவரமாச் சொல்றேன்ப்பா... ஃபோன்ல வேண்டாம். நீங்க அம்மா சுகந்தானே?''”
""ரெண்டு பேரும் செளகரியந்தான்... இந்தா ஒங்கம்மாகிட்ட பேசு''”
அலைபேசியை சரஸ்வதியிடம் தந்தார். அவள் எப்போதும் பேசுகிற மாதிரி... ஒவ்வொருத்தரைப் பற்றியும் விசாரித்தாள். சனிக்கிழமை எல்லாரும் இங்கு வருகிற சங்கதி தெரிந்ததும்... அவளது முகம் ஊதிய பலூன் போல பளபளப்பாக மின்னியது. பேசி முடித்து ஃபோனை கணவரிடம் தருகிற போது மனதிற்குள் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது.
"எதுக்கு இப்ப வர்றான்? தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு வந்திருன்னு கூப்பிடும்போது வேலை இருக்குது... லீவு இல்ல அப்பிடி இப்பிடிம்பான்...
அப்பறம் வற்புறுத்தி கூப்பிட்ட பிறகு வருவான். அதுவும் தீபாவளிக்கு வந்தா பொங்கலுக்கு வரமாட்டான்... இப்ப திடீர்னு எதுக்கு வர்றான்? வலுவான காரணம்
இல்லாம வரமாட்டான்'”
சதாசிவத்தின் அனுபவ அறிவு உணர்த்தியது.
தூத்துக்குடியில இருந்து மதுரை வந்து மானாமதுரை வரவேண்டும். தூத்துக்குடிக்கும் மதுரைக்கும் மூணு மணி நேரம் ஆகும். அப்பறம் மதுரையில் இருந்து மானாமதுரை ஒரு மணி நேரம்... என்னதான் கார்ல
வந்தாக் கூட நான்கு மணி நேரம் ஆகிடும். எப்படியும் மதியச் சாப்பாட்டிற்கு இங்கு வந்து விடுவார்கள்.
சனிக்கிழமை அதிகாலையில் எழுந்து வீட்டைச் சுத்தப்படுத்தி, குளித்து, பூஜை முடித்து... கணவரை எதிர்பார்க்காமல் கூடையைத் தூக்கிக்கொண்டு காய்கறி வாங்கப் புறப்பட்டாள் சரஸ்வதி.
வாழைக்காய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு வாழை இலை என்று நிறைய அயிட்டங்கள் வாங்கி வந்தாள்.
""இதென்ன வீட்டு சமையலுக்கு வாங்கிட்டு வந்திருக்கியா? இல்ல விசேஷ வீட்டுக்கு சமைக்க வாங்கிட்டு வந்திட்டியா ?''”
காய்கறிக் கூடையின் கனத்தை கண்டு கிண்டலடித்தார் சதாசிவம்.
""என்னைக்கோ ஒருநாளைக்கு வர்றான். வாய்க்கு ருசியாச் சாப்பிடட்டும். அங்க தெனமும் அவசர அவசரமாச் சாப்பிட்டிட்டு ஆபீசுக்கு ஓடுவான். லீவு நாட்கள்ல இன்னக்கி ஓட்டலுக்குப் போவோம்னு உத்தரவு போட்டிருவா ஒங்க மருமக மகராசி''
பெத்த அம்மாக்களுக்கு மகன் என்னதான் பாராமுகமா மனைவி சொல்லே மந்திரம்னு திரிஞ்சாக் கூட... மகன் மீதுள்ள பாசம் அலாதிதான்... மருமக அடக்கமானவளா வாச்சிருந்தாலும் அவள் பொல்லாதவள்தான்... அவளப் பத்தி குறை கூறாம இருக்க முடியாது” என்கிற எண்ணங்கள் இழையோட, செய்தித்தாளில் மூழ்கினார் சதாசிவம்.
சரஸ்வதி நினைத்தபடி மதியம் ஒரு மணி வாக்கில் மாதவனின் கார் வீட்டு வாசல் முன் வந்து நின்றது.
மகன் மாதவனை... மருமகள் காயத்திரியை... பேரன் பேத்திகளை சந்தோசப்பிரவாகம் பெருக்கெடுக்க..
வரவேற்றார்கள் சதாசிவம்-சரஸ்வதி தம்பதியர்.
பரஸ்பர நல விசாரிப்புக்களுக்குப் பிறகு, ""என்ன மாதவா திடீர் வருகை?''” காரணத்தை தெரிந்து கொள்ளும் ஆவலில் வினவினார் சதாசிவம்.
""மொதல்ல சாப்பிடட்டும்... அப்பறம் பேசுவோம்... வந்ததும் வராததுமா என்ன அவசரம் ?''”
சதாசிவத்தின் கேள்விக்கு சரஸ்வதியின் பதில் முற்றுப் புள்ளியானது.
எளிமையான ஆனால் சுவை நிறைந்த மதிய உணவினை தயார் செய்திருந்தாள் சரஸ்வதி. எல்லோரும் இலை முன் அமர்ந்திருக்க... சரஸ்வதியும் காயத்திரியும் பரிமாறினார்கள்.
"எத்தனையோ ஸ்டார் ஓட்டல்கள்ல சாப்பிட்டிருக்கோம்... இந்த அளவுக்குச் சாப்பிட்ட சாப்பாடு திருப்தியா இருந்ததில்லையே... அம்மா சமையல் அம்மா சமையல்தான்...'”
வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு, ""சாப்பாடு
சூப்பர்மா... சமீபத்தில இப்படியொரு சாப்பாட்ட சாப்பிட்டதில்ல''” அம்மாவைப் புகழ்ந்தவாறு கடைக்கண்ணால் காயத்திரியைக் கவனித்தான் மாதவன். காயத்திரி முகத்தில் எந்தவிதமான சலனமும் தோன்றவில்லை.
அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு வராண்டாவிற்கு வந்தார்கள். பாய் விரித்து தரையில் உட்கார்ந்தார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு மாதவன் காயத்திரி பிள்ளைகள் தரையில் உட்கார்கின்றார்கள்.
எல்லாரும் இருக்கையில் அமர அங்கு நாற்காலிகள் கிடையாது. சதாசிவத்திற்கு மட்டும் பழைய கால ஈசிச்சேர் உண்டு. சரஸ்வதிக்கோ இதுவரை சேரில் அமர்ந்த அனுபவம் இல்லை. சேரில் ஆண்களுக்கு இணையாக உட்காரக் கூடாது என்கிற தன்மையுடைய பழைய மனுஷி அவள்.
வந்ததற்கான காரணத்தை அப்பாவிடம் சொல்லத் தொடங்கினான் மாதவன்.
""அப்பா எனக்கு வெளிநாடு போகக் கூடிய வாய்ப்பு கெடச்சிருக்கு... அமெரிக்காவில ஒரு கம்பெனிக்கு அட்வைசரா போறேன். கம்பெனியோட ஒவ்வொரு புராஜக்ட்டுக்கும் என்னடோ ஒப்பினியன் சொன்னாப் போதும்... வேற ஒண்ணும் வேல கிடையாது. நல்ல சம்பளம்... அதனால கொஞ்ச காலம் அமெரிக்காவில நான்மட்டும் இருந்திட்டு வரலாம்னு இருக்கேன்''”
""வெளிநாட்டுக்கு வேலைக்குப் போறதெல்லாம்
கல்யாணத்துக்கு முந்திப் போயிருக்கணும். இப்ப குடியும் குடித்தனமுமாகி நாப்பது வயசத்தொடப் போற... இப்பப் போயி மனைவி, ரெண்டு பிள்ளைகள விட்டிட்டு அங்க போயிச் சம்பாரிக்கணுமா? இப்பப் பாக்கிற வேலையில என்ன கொறச்சல்? கைநிறையச் சம்பளம் கொடுக்கிறாங்க... சிப்காட் தொழில் பேட்டையிலேயே பெரிய கம்பெணி இது... நாப்பது வயசுக்குள்ளயே தூத்துக்குடியில வீடு கட்டிட்ட... கார் வாங்கிட்ட... இந்தத் திருப்தியோட இருக்கிறத விட்டிட்டு...அமெரிக்க எதுக்குப் போகணும்? எனக்கெல்லாம் ரிடையர்மென்டுக்கு அப்பறம் வேலைக்குப் போகத் தெரியாமலா? எதுக்கு நம்ம வாழ்க்கைக்கு பென்சன் போதும் அதிக ஆசைப்பட வேண்டாம்னுதான வேலைக்குப் போகல''”
""எனக்கு ரெண்டு பிள்ளைங்கப்பா, அதுவும் பொம்பளப் பிள்ள ஒண்ணு இருக்கு... அதப்படிக்க வச்சு கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்...பையனப் படிக்க வச்சு ஒரு பொசிசனுக்குக் கொண்டு வரணும்... இதுக்கெல்லாம் அமெரிக்கா வேல அவசியம்னு நெனைக்கிறேன்''
""நீ சொல்றதெல்லாம் இங்க இருந்துக்கிட்டே செய்யலாம். ஒங்கப்பா ஒன்னய இந்த நெலமைக்கு கொண்டு வர குவைத்தா போய்ட்டு வந்தேன். அங்க போய்
சம்பாரிச்சுதான் ஆகணும்ங்கிற நெலம இப்ப இல்ல. அமெரிக்கா போகணும்னு ஒரு முடிவோட இருக்க. அப்பா அம்மாகிட்ட சொல்லாமப் போகக் கூடாதுன்னு சொல்ல வந்திருக்க. ஒன்னோட முடிவ நிச்சயம் மாத்த முடியாது... சுருங்கச் சொன்னா நீ பெர்மிஷன் கேட்கல இன்ஃபர்மேசன் சொல்லற... போய்ட்டு வான்னு சொல்றதுதான் எங்களுக்கு மரியாத''”
""ஏம்ப்பா மாது... எனக்கும் ஒங்கப்பாவுக்கும் வயசு போகுதா... வருதா? நீ பாட்டுக்கு அவ்வளவு தூரம் போய்ட்டா நாளைக்கி எங்களுக்கு எதாவது
ஒண்ணுன்னா ஒடனே உன்னல ஓடி வரமுடியுமா?''”
இதுவரை அமைதி காத்த சரஸ்வதி சங்கடத்தோடு மகனிடம் சந்தேகம் கேட்டாள்.
""ஒங்களுக்கு முடியலைன்னு கேள்விப்பட்ட ஒடனே விமானத்தில ஏறி பறந்து வந்திடுவேம்மா''”
செத்த தகவல் கிடைத்ததும் தாமதிக்காமல் வந்திடுவேன்னு மறைமுகமாகச் சொன்னான் மாதவன்.
""காயத்திரி பிள்ளைகளெல்லாம் தனியாத் தூத்துக்குடியில இருந்திடுவாங்களா?''”
""இருந்திடுவாங்க... எவ்வளவு வருசமா தூத்துக்குடியில வசிக்கிறோம்... என்னக்காட்டிலும் காயத்திரிக்குத்தான் தூத்துக்குடியில ஆட்கள் நிறையத்
தெரியும்... ஒன்னோட மருமக அழகாக கார் ஓட்டுவாம்மா... வீட்டுக்காவலுக்கு செக்குரிட்டி இருக்கான்... பயமே கிடையாதும்மா''”
""சரிப்பா... இதுக்கு மேல நா என்னத்தச் சொல்ல சூதானமாப் போயிட்டு வா... அவ்வளவுதான்''”
அவர்கள் கிளம்பிய பிறகு வீடு வெறிச்சோடிப் போயிற்று. இரண்டு நாட்களாக காணப்பட்ட கலகலப்பு
கள் காணாமல் போயிற்று.
"இவன் தூத்துக்குடியில இருக்கும் போதே வருசத்துக்கு ஒரு தடவதான் வந்து பேரப்பிள்ளைங்கள கண்ணில காட்டுறான்... வெளி நாட்டுக்குப் போயிட்டா
மருமக எங்க இங்க வரப்போறா?'” என்கிற வகையில் மனதிற்குள் வருத்தங்கள் வட்டமிடத் தவறவில்லை.
"நமக்கோ அவளுக்கோ எதாவது ஒண்ணுன்னா.. பறந்து வந்திடுவேன்ட்டுப் போறானே... அவ்வளவு சுலபமா வந்திட முடியுமா?'”
இது மாதிரியான யோசனைகள் தோன்றியதால், அன்று மாலை நேரத்தில் சதாசிவம் நண்பர்களைப் பார்க்கக் கூடப் போகவில்லை. விடாது யோசனை செய்து ஒரு முடிவிற்கு வந்து சரஸ்வதியைக்
கூப்பிட்டு தான் எடுத்த தீர்மானமான முடிவை தெளிவாகச் சொன்னார்.
""நாம இதுவரைக்கும் யாருக்கும் பேசுபொருளாக ஆனதில்லை... சொந்தங்கள் பழகினவங்க
எவரோட வாய்க்கும் அவலாக மாறினதில்ல...
மாதவனும் அப்படித்தான்... அவனோட சேந்து சுத்தினான்.. இவனோட சேந்து சுத்தினான்னு... குறும்பு பண்ணினான்... முச்சந்தியில நின்னு பொண்ணுகளப் பத்தி "கமான்ட்' அடித்தான்னு கெட்ட பேரு வாங்கினதில்ல...ஒழுங்காப் படிச்சான்... உருப்படியான வேலைக்குப் போனான்... ஒரு நிலமைக்கு வந்திட்டான்...இப்படியே இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்... அயல்நாடு போக ஆசப்பட்டிட்டான்... அத நெனச்சு கவலப்பட்டு பொலம்பறதில இனி அர்த்தமில்ல'' “
""ம்... சொல்லுங்க என்னதான் சொல்ல வர்றீங்க?''”
""நமக்கும் வயசாகிட்டே போகுது... நெருப்புன்னா வாய் வெந்திடாது... வெளிப்படையாச் சொல்றேன்... நீயோ நானோ செத்துப் போயிட்டோம்னு வை... மாது சொன்ன மாதிரி அவனால பறந்தெல்லாம் வர முடியாது... அவன் வர்ற வரைக்கும் எத்தன நாளைக்கி பொணத்தப் பாதுகாப்பாங்க...துக்கத்திற்கு வந்தவுங்க துக்கம் விசாரிச்சிட்டு... அடுத்து கேக்கிற கேள்வி எப்ப எடுப்பிங்கங்கிறதுதான்...”
""அதனால...?''”
""வாழ்வாங்கு வாழ்ந்தவுங்க... மகன் வந்து ஈமக்காரியம் பண்ண இதுகளுக்கு கொடுத்து வைக்களன்னு யாரும் பேசிடப் பிடாது... அது மாதிரி பணத்துக்கு ஆசப்பட்டு... ஃபாரின் போயிட்டான்... பெத்தவுங்களுக்கு கடேசி நேரக் கடமையச் செய்யிற பாக்கியம் கெடைக்கலைன்னு எளக்காரமா வாய்க்கி
வந்தத யாரும் வாரி வீசிடப் பிடாது... இப்படிப் பட்ட பேச்செல்லாம் வராம இருக்க நாம ஒரு நல்ல காரியம் ஒண்ணு பண்ணனும்''”
""என்ன காரியம் பண்ணனும்?''”
""செத்தப் பெறகு நம்ம உடல்கள எடுத்துக்கிடச் சொல்லிடணும். அதாவது அரசாங்க மருத்துவக் கல்லூரிக்கு தானமாத் தந்திட சம்மதித்து இப்பவே எழுதிக் கொடுத்திடணும்... யாருக்கும் நாம
உபயோகமா இருந்திருக்கோமே தவிர யாருக்கும் இதுவரைக்கும் உபத்திரவமா இருந்ததில்ல... அது மாதிரி செத்துப் பிணமான பிறகும் மத்தவுங்களுக்குப் பயன்படுவோம்... இறுதிச் சடங்கு செய்ய மகன் வந்தாலும் வராவிட்டாலும்...ஏளன பேச்சுகள்
நிச்சயம் வராது...''”
""நீங்க சொல்றது சரிதான்... அப்பிடியே பண்ணிடலாம்...''” கொஞ்சமும் யோசிக்காமல் தனது
சம்மதத்தைத் தெரிவித்தாள் சரஸ்வதி. சதாசிவம் கூட எதிர்பார்க்கவில்லை. சரஸ்வதியை சம்மதிக்க வைக்கப் படதாபாடு பட வேண்டியிருக்கும் என்று அவர் கணித்தது தவறாகப் போனது.

மறுநாளே...எடுத்த தீர்மானத்தை நிறைவேற்ற அரசாங்க மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் புறப்பட்டார்கள் இந்த முதுமையான புதுமைத் தம்பதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com