பார்வை
சூரியன் தூக்கத்திலிருந்து விழித்து தன் வேலையை ஆரம்பித்திருந்தது. அந்த ஆஸ்பத்திரியில் இரவு ஷிப்ட் முடிந்து செல்பவர்களும், பகல் நேர ஷிப்டுக்கு வருபவர்களும் தங்களின் அடையாள அட்டையை மெஷினுக்குள் நுழைத்துக


சூரியன் தூக்கத்திலிருந்து விழித்து தன் வேலையை ஆரம்பித்திருந்தது. அந்த ஆஸ்பத்திரியில் இரவு ஷிப்ட் முடிந்து செல்பவர்களும், பகல் நேர ஷிப்டுக்கு வருபவர்களும் தங்களின் அடையாள அட்டையை மெஷினுக்குள் நுழைத்துக் கொண்டிருந்தனர்.
இரவு ஷிப்ட் முடிந்தவர்கள் வேகமாகச் செல்ல வேண்டும் என்பதற்காக பகல் நேர ஷிப்டுக்கு வந்து நின்றவர்களை முந்திச் சென்று அட்டையை தேய்த்து சென்றதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. ரிசப்சனில் அமர்ந்திருந்த எனக்கு அது பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது.
பொதுவாக சாலையோர சண்டைகள் நடக்கும்போதோ, அலுவலகத்தில் பிரச்னை ஏற்படும் போதோ நான் எரிச்சல் அடைபவன் இல்லை. ஆனால், இன்று டாக்டரின் ரிப்போர்ட்டுக்காக பல மணி நேரம் காத்திருந்த காரணத்தால் என்னை அறியாமலேயே எரிச்சல் வந்தது. டாக்டர் கூப்பிடும் நேரத்தில் இல்லாமல் போய் விடக்கூடாதே என்பதற்காக காலை முதல் காபி கூட குடிக்காமல் காத்துக் கிடக்கிறேன். பக்கத்திலேயே எனது மனைவியுடன் மகன் அமர்ந்திருந்தான்.
""சைலப்பன் யாருங்க. டாக்டர் கூப்பிடுதாரு'' என்று குரல் கொடுத்தார் நர்ஸ். மனைவியையும், மகனையும் வெளியே இருக்கச் சொல்லிவிட்டு நான் மட்டும் டாக்டரின் அறைக்குள் நுழைந்தேன். அந்த அறை இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. எனக்கு முன்னதாக 3 பேர் அமர்ந்திருந்தனர். எதுக்கு இந்த சிஸ்டம் என புரியவில்லை. வெளியிலுள்ளவர்களை வரிசையாகவே அழைத்திருக்கலாமே? "திருப்பதி போல் எதற்காக வெயிட்டிங் சிஸ்டம்?' என நினைத்துக் கொண்டேன்.
""நீங்க நாலாவது ஆளா உள்ள போங்க'' என்றார் நர்ஸ். அனிச்சையாய் தலையாட்டினேன். முதலாமவர் டாக்டரின் அறைக்குள் நுழைந்தார். இரண்டாவது நபர் முதல் நாற்காலியில் எழுந்து அமர்ந்தார். என்னை பார்த்த நர்ஸ், "" நீங்க நகர்ந்து இரண்டாவது நாற்காலில உட்காருங்க'' என்றார். வெளியே இருந்து வந்த நபர் மூன்றாவது நாற்காலியில் அமர வைக்கப்பட்டார். சிறு வயதில் விளையாடிய மியுசிக்கல் சேர் ஞாபகம் வந்தது. ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒரு மியுசிக்கல் சேர் போல்தான், பிரமோஷன் என்ற நாற்காலியை பிடிக்க என்னென்ன பிரயத்தனம் எல்லாம் செய்ய வேண்டியிருக்கு.
""சார்... நீங்க உள்ள போங்க'' நர்ஸின் குரல் கேட்டு எழுந்து உள்ளே சென்றேன். டாக்டரைப் பார்த்து கைகூப்பினேன். அவர் பதிலுக்கு தலையாட்டினார். ""உங்க பையனோட ரிப்போர்ட் எல்லாம் பார்த்துட்டேன். எல்லாமே சரியாத்தான் இருக்கு. சிகிச்சையை எப்ப வேணாலும் வச்சுக்கலாம்'' என்றவரை இடை மறித்து, "" நாங்க ரெடியாத்தான் சார் இருக்கோம். இன்னைக்கேனாலும் அட்மிட் ஆயிருதோம்'' என்றேன்.
""அப்ப சரி. ரிசப்ஷன்ல எவ்வளவுன்னு கேட்டுட்டு பணத்தை கட்டிட்டு அட்மிட் பண்ணியிருங்க. எப்ப அறுவை சிகிச்சைங்கிறத ஈவினிங் சொல்றேன்'' என்றவாறே பெல்லை தட்டினார். நான் வெளியே வருவதற்கு முன்பே அடுத்தவர் என்னை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தார். நோயின் அவசரத்தை காட்டிலும் மனிதர்களின் அவசரம் அதிகம் என்று புலம்பிக் கொண்டே டாக்டரின் அறையை விட்டு வெளியே வந்தேன்.
""கன்சல்டிங் பீஸ் 400 ரூபாய் கொடுங்க'' என்ற நர்சிடம் பணத்தை கொடுத்தேன்.
""நீங்க ரிசப்ஷன்ல போய் பாருங்க. அவங்க டீடெய்ல் சொல்லுவாங்க'' என்றார் நர்ஸ். ""சரி'' என்றபடி வெளியே வந்தேன். கதவுக்கு அருகிலேயே மனைவி நின்று கொண்டிருந்தாள். ""என்ன சொன்னாங்க?'' என்றவளிடம், "" ஆபரேஷன் பண்ணலாம். சரியாயிடுமாம். இன்னைக்கே அட்மிட் பண்ண டாக்டர் சொல்லியிருக்கார்'' என்றேன். மனைவியின் முகத்தில் மகிழ்ச்சி.
""சரி காலையிலிருந்தே பிள்ள ஒண்ணும் சாப்பிடல. சாப்பிட்டு வந்து மத்ததைப் பார்ப்போம்'' என்றவள் மகனை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரி கேண்டீனை நோக்கி நடந்தாள். நானும் பின் தொடர்ந்தேன். ஆஸ்பத்திரி கேண்டீன் சாப்பாடு அவர்களுக்கு ரசிக்கவில்லை போலும். இரண்டு இட்லிகளுடன் முடித்துக் கொண்டனர்.
ரிசப்ஷனில் இருந்த இளம்பெண் யாரிடமோ சிரித்து பேசிக் கொண்டிருந்தாள். நோயாளிகள் சிலர் அவள் எப்போது பேசி முடிப்பாள் என்பது போல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனாலும், அவள் பேசி முடித்தபாடில்லை. அவள் பேசி முடிவதற்காக காத்திருந்தேன். பேசி முடித்து விட்டு காத்திருந்த நோயாளிகளிடம் என்னவென்று கேட்டு பதில் சொல்லி அனுப்பினாள். என்னைப் பார்த்ததும், "" சார் என்ன வேணும்?'' என்றாள். நான் விவரம் சொன்னேன்.
""சார் எங்க போய்ட்டிங்க நீங்க? அப்பவே ரிப்போர்ட் எல்லாம் வந்திருச்சு. இங்க 3 கிளாஸ் இருக்கு. உங்களுக்கு எந்த கிளாஸ் ரூம் வேணும்'' என்றாள் ரிசப்டனிஸ்ட்.
""மீடியமா பி கிளாúஸ கொடுங்க'' என்றேன்.
"" இந்த பணத்தை கேஷ் கவுண்டரில கட்டிட்டு வாங்க'' என்று துண்டுத்தாளை நீட்டினாள். அதில் தொகை மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.
மாடியிலிருந்த கேஷ் கவுண்டரில் பணத்தைச் செலுத்தினேன். "பெய்டு' என்ற ஸ்டாம்ப்பை குத்தி விட்டு என்னிடம் அந்த துண்டுத் தாளை கொடுத்த அவர், "" ரிசப்ஷனில் கொடுத்திடுங்க'' என்றார். ரிசப்ஷனில் கொடுத்தவுடன் எனக்காக ரூம் ஒதுக்கப்பட்டது.
""டாக்டர் வந்து எப்போ அறுவை சிகிச்சைன்னு சொல்வாங்க'' என்றாள் அங்கிருந்த நர்ஸ்.
அன்று இரவே எனது மகனுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது. ""நல்லபடியாக நடந்து விட்டது'' என்றார் டாக்டர். ""இறைவன் இப்பவாவது கண்ணை திறந்தானே'' என்று சந்தோஷப்பட்டாள் மனைவி. பார்வை இல்லாமலேயே இருந்த எனது மகனுக்கு பார்வை வருவதற்கான ஆபரேஷன் செய்வதற்காகத்தான் இந்த மருத்துவமனையில் மகனைச் சேர்த்திருந்தோம். பல வருடங்கள் எத்தனையோ மருத்துவர்கள் பார்த்தும் பலனில்லாத நிலையில் இவர் மட்டும்தான் பார்வை வர வைக்க முடியும் என்ற நம்பிக்கை கொடுத்தார். இப்போது அந்த ஆபரேஷனும் வெற்றியாக முடிந்து விட்டது. ""இன்னும் சில தினங்களில் நீங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம். அதுவரை எங்களின் பார்வையில் அவன் இருக்க வேண்டும்'' என சொல்லி விட்டார் டாக்டர்.
பார்வையில்லாத மகனுக்கு இதுவரை பார்வையாக இருந்தவள் எனது மனைவிதான். அடுத்த வருடம் 10-ஆம் வகுப்பு செல்லவுள்ள அவனுக்கு அனைத்துமாக இருந்த அவள். ஒவ்வொரு பொருளையும் அவன் புரிந்து கொள்ளும்படி விளக்குவதைப் பார்த்தாலே அவளின் பொறுமை புரியும். அவன் கேட்கும் ஒவ்வொரு விஷயத்தையும் பொறுமையாக புரிய வைப்பாள் அவள்.
இன்னும் சில தினங்களில் அவனுக்குப் பார்வை வந்துவிடும். அம்மா சொன்ன அத்தனை விஷயங்களையும் அவனால் இனி நேரடியாகவே பார்க்க முடியும் என்ற எண்ணம் எனக்கு பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியது. டாக்டர் சொன்னபடி 3 தினங்கள் கழித்து பார்வையுடன் வெளியே வந்தவன் இருவரையும் கட்டித் தழுவிக் கொண்டான். எப்போதும் காரில் அம்மாவுடன் பின் சீட்டில் அமர்ந்து கொள்பவன் இன்று எல்லாவற்றையும் பார்ப்பதற்காக முன் சீட்டில் அமர்ந்தான்.
கார் போகும் போதே ஒவ்வொன்றாக பார்த்தவன் அவன் அம்மாவிடம் அதையெல்லாம் சரியாகவே சொன்னான். எனது மனைவியும் வழியில் பார்க்கும் ஒவ்வொன்றையும் அவனிடம் சொல்லிக் கொண்டே வந்தாள். திடீரென்று கார் நின்றது. சாலையில் யாரோ இருவர் ஒருவரை தாக்கிக் கொண்டிருந்தனர். சிலர், வேறு சிலரை ஆயுதங்கள் கொண்டு துரத்திக் கொண்டிருந்தனர்.
""ஐயா, இங்கு ஏதோ சண்டை நடக்குது. நாம பேசாம திரும்பி வேறு வழியில போயிருவோம்'' என்றவாறே காரை திருப்பினான் டிரைவர்.
""அம்மா இங்க என்ன நடக்குது. நாம ஏன் திரும்பி போகணும்? டிரைவரண்ணன் நீங்க போய் சமாதானம் பண்ணுங்க'' என்றான் எனது மகன்.
""என்ன தம்பி விளையாடுறீயா? உலகம் தெரியாத பிள்ளையா இருக்கியே. நாம அங்க போனா நம்மையும் போட்டுத் தள்ளிருவாங்க தம்பி. நீங்க பேசாம வாங்க'' என்றான் டிரைவர். எனது மகனுக்கு டிரைவர் சொன்னது எதுவும் புரியவில்லை போலும். ஒன்றும் தெரியாமல் விழித்தான்.
""அம்மா என்னம்மா இது?'' என்ற மகனுக்கு பதில் சொல்ல முடியாமல் கலங்கினாள் மனைவி. ""ஊரைச் சுத்திட்டுத்தான் போக வேண்டியிருக்கு. கூடுதல் காசு வேணும்'' என்ற டிரைவரிடம் "சரி' என்றேன் நான். வழி நெடுக ஊர் முழுவதும் கொட்டிக் கிடக்கும் குப்பையைப் பார்த்தவாறே வந்த மகனிடம் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் சொன்னாள் மனைவி.
சாலையின் குறுக்கே விபத்தில் சிக்கி ரத்தம் சிந்தியவாறே கிடந்த இளைஞனைக் கண்டும், காணாதது போல் மக்கள் பறந்து கொண்டிருந்தனர்.
""அப்பா அவரை போய் காப்பாத்துங்கப்பா'' என்ற மகனின் பேச்சை தட்ட முடியாமல் காரை நிறுத்த சொன்னேன் நான்.
""உங்களுக்கு எதுக்குங்க வீண் வேலை. போலீஸ் கேசு அது இதுன்னு அலைய வேண்டியிருக்கும்'' என்றார் டிரைவர். மகனின் நச்சரிப்பு தாங்காமல் கீழே விழுந்து கிடந்தவனுக்கு உதவப்போனேன். அதற்குள் 108 ஆம்புலன்ஸ் வந்து அந்த இளைஞனை அள்ளிச் சென்றது.
முன் சீட்டில் அமர்ந்திருந்த மகன் அம்மா அருகில் வந்து அமர்ந்து கொண்டான்.
""அம்மா எனக்கு பார்வையில்லாத போது நீ ஒவ்வொரு விஷயத்தையும் சொன்னே. எனக்கு கண் தெரிஞ்சவுடனே அதை எல்லாம் பார்க்கணும்னு ஆசை, ஆசையா இருந்துச்சும்மா. ஆனா, நீ சொல்லாத எல்லாத்தையும் கூட இப்போ பார்க்கிறேன். என்னால் தாங்க முடியலமா... இந்த பார்வை எனக்கு தேவையில்லம்மா. பழையபடியே என்னை குருடனாக்கியிருங்கம்மா'' என்ற மகனின் முகம் பார்க்க முடியாமல் அழுதாள் என் மனைவி. காரின் குறுக்கே வந்தவனைப் பார்த்து, "" ஏன்டா உனக்கு கண் என்ன குருடா?'' என்று ஏசியபடி வண்டியை வேகமெடுத்தான் டிரைவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...