போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தும் நடத்துநர்!

தங்கள் குடும்பத்துக்காக உழைப்பவர்களை பார்த்திருப்போம். அல்லது உறவுகளுக்காக கூட  பணி செய்பவர்களைப் பற்றிக் கூட கேள்விப்பட்டிருப்போம்...

News image
Updated On :10 மார்ச் 2019, 11:27 am

வி.குமாரமுருகன்

தங்கள் குடும்பத்துக்காக உழைப்பவர்களை பார்த்திருப்போம். அல்லது உறவுகளுக்காக கூட  பணி செய்பவர்களைப் பற்றிக் கூட கேள்விப்பட்டிருப்போம்... ஆனால், மாணவர்களுக்கு சேவை செய்வதில் மகிழ்ச்சி  காண்கிறார்  நடத்துநர் ஒருவர் .

திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை, வரகுணநாதபுரத்தில் வசித்து வரும் கோ.வரதராஜன்தான் அந்த பெருமைக்குரிய  நடத்துநர். 
சுரண்டை-ரெட்டியார்பட்டி வழித்தடத்தில் இயங்கும் அரசுப் பஸ்சில்(டவுன் பஸ்) இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் நடத்துநராக பணியாற்றி வரும் அவரைத் தெரியாத மாணவர்களே இருக்க முடியாது என்ற அளவிற்கு மாணவர்களுடன் நெருங்கி பழகி வருகிறார் அவர்.
கிராமப்புற வழிகளில் இயங்கும் பேருந்து என்பதால் இலவச பாஸ் மூலம் பயணம் செய்யும் மாணவர்கள்தான் இங்கு அதிகம். மாணவர்களைக் கண்டாலே எரிந்து விழும் நடத்துநர்கள் மத்தியில் இவரது சேவை அப்பகுதி மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 
வரகுணநாதபுரத்திலுள்ள அவரது சிறிய வீட்டில் அவரைச் சந்தித்தோம். மாணவர்களுக்கு கொடுத்தது போக மீதியிருந்த நூற்றுக்கணக்கான புத்தகங்கள் கொண்ட அலமாரியை நம்மிடம் காண்பித்தவாறே அவர் கூறியது..
""நான் பிறந்தது ஆனைகுளத்தில். எனது தந்தை கோமதிநாயகம். தாய் பார்வதியம்மாள். விவசாய குடும்பம் எங்களுடையது.1988- இல் அரசுப் போக்குவரத்து கழகத்தில் நடத்துநராகப் பணியில் சேர்ந்தேன். அன்று முதல் இன்று வரை சுரண்டை-ரெட்டியார்பட்டி வழித்தடத்தில் தொடர்ந்து வேலை செய்து வருகிறேன்.
ஓய்வு நேரங்களில் எங்கள் பகுதியிலுள்ள மாணவர்களை அழைத்து புத்தகங்களை வழங்கி வாசிக்க பழக்கி வருகிறேன். நாளிதழ்களில் வரும் பயனுள்ள தகவல்களை நகலெடுத்து பஸ்சில் பயணம் செய்யும் மாணவர்களிடம் கொடுத்து படிக்க செய்து வருகிறேன்.  தலைவர்கள் குறித்த புத்தகங்களை மாணவர்கள் பஸ்சில் ஏறும்போது கொடுத்து விட்டு மாலையில் வரும் போது திரும்பவும் பெற்றுக் கொள்கிறேன்.
மேலும், சுற்று வட்டாரப் பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள கோயில் வளாகத்தில் மாணவர்களை அழைத்து வைத்துக் கொண்டு திருக்குறள் புத்தகங்களைக் கொடுத்து படிக்கச் சொல்லி, பின்பு அந்த குறள்களை ஒப்புவிக்க சொல்லி பரிசு வழங்கி வருகிறேன். விவேகானந்தர், முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கல்வி சார்ந்த தலைவர்களின் பிறந்த நாளில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கி வருகிறேன்.மேலும் பள்ளிகளுக்குச் சென்று கலாமின் "அக்கினி சிறகுகள்' புத்தகங்களையும் கொடுத்து வருகிறேன்.
பஸ்சில் பயணம் செய்யும் மாணவர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்து வைத்துள்ளேன். அவர்களில் ஏழை மாணவர்களுக்கு கல்விக்கான உதவிகளை முடிந்த வரையில் செய்து வருகிறேன். விரும்பும் மாணவர்களை கல்வி தொடர்பான சுற்றுலாத் தலங்களுக்கும், கன்னியாகுமரி விவேகானந்தர் கேந்திரத்துக்கும் அழைத்துச் செல்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளேன். எனது ஊதியத்தில் 50 சதவீதத்தை மாணவர்களின் நலனுக்காக செலவிட்டு வருகிறேன். இப்படி செய்து வரும் சேவைகளில் தடை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக திருமணமே செய்து கொள்ளவில்லை.
மாணவர்கள் யாரும் தாங்களாகவே தவறு செய்வதில்லை. அவர்களை சரியாக வழிநடத்த ஆள்கள் இல்லாததால்தான் அவர்கள் தவறு செய்ய முயல்கிறார்கள். அவர்களிடம் சரியாகப் பேசி புரிய வைத்து விட்டால் எந்த பிரச்னையுமில்லை.  என்னுடன்  தொடர்பில் உள்ள பழைய மாணவர்களை எல்லாம் இணைத்து ஓர்  அமைப்பை உருவாக்கி அதன் மூலம் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். நூலகத்தை விரிவுபடுத்துவதுடன், பள்ளிகள் தோறும் சென்று மாணவர்களுக்கு நூல் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் என் ஆசை''  என்று  தெரிவித்த அவர்,   முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன், இந்திய பொருளாதார நிபுணர் ஜே.சி.குமரப்பா, ஜெகதீஸ்சந்திரபோஸ் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று  புத்தகத்தையும் எழுதி வருகிறார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.