

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா இரட்டை சந்தோஷத்தில் இருக்கிறார். ஒன்று, சானியாவின் தங்கைக்கு டிசம்பரில் நடக்க இருக்கும் திருமணம். இரண்டாவது, இரட்டையர் டென்னிஸ் ஆட்டத்தில் நம்பர் ஒன்னாக இருந்த சானியா மீண்டும் ஆட முடிவெடுத்திருப்பது.
சானியா டென்னிஸ் கோர்ட்டை விட்டு விலகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. டென்னிஸ் விளையாட்டில் ஏற்பட்ட காயம்.. பிறகு கல்யாணம்... குழந்தை பிறந்தது, பராமரிப்பது... இவை காரணமாக சானியா டென்னிஸ் ஆட்டத்திலிருந்து தற்காலிக விடுப்பு எடுக்க நேர்ந்தது.
ஆறு வயதிலிருந்து டென்னிஸ் ஆடிக் கொண்டிருக்கும் சானியா இந்த முறைதான் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் டென்னிஸ் ராக்கெட்டைத் தொடாமல் இருந்திருக்கிறார். பிரசவத்திற்குப் பின் பெண்களுக்கு எடை அதிகரிக்கும். அது இயற்கை நியதி. சானியா விஷயத்திலும் அதுதான் நடந்தது. குண்டாகிவிட்டார். விழித்துக் கொண்ட சானியா நான்கு மாதத்திற்குள் 26 கிலோ உடல் எடையைக் குறைத்து விட்டார்.
2020 - ஜனவரியில் சானியா மீண்டும் டென்னிஸ் விளையாடத் தொடங்க தேதியும் குறித்துவிட்டார். மீண்டும் டென்னிஸ் ஆடுவது குறித்து சானியா மனம் திறக்கிறார்:
""கர்ப்பம் ஆனதும் மீண்டும் டென்னிஸ் ஆட வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் என்னுள் ஏற்பட்டது உண்மைதான். டென்னிஸில் எனது எதிர்காலம் குறித்து நான் அப்போது சிந்திக்கவில்லை என்பதுதான் நிஜம். கர்ப்ப காலத்தில் டென்னிஸ் எனது முன்னுரிமையாக இருக்கவில்லை. குழந்தை குறித்துதான் சிந்தனை. கர்ப்பத்தின் போது 23 கிலோ கூடியிருந்தேன். கர்ப்ப காலத்தில் நான் நன்றாகச் சாப்பிட்டேன். டென்னிஸ் ஆடும் போது எடை கூடும் என்ற பயத்தில் எதையெல்லாம் ஒதுக்கினேனோ அவற்றை கர்ப்பமாக இருக்கும் போது ஒரு கை பார்த்தேன். பிரசவம் ஆன கொஞ்ச நாளில் நான் பழைய டென்னிஸ் ஆட்டக்காரி சானியாவாக மாற முயற்சித்தேன். அதே சமயம் இது எப்படி சாத்தியப்படும் என்று நினைத்துக் கொண்டேன். அந்த அளவுக்கு எனது எடை கூடியிருந்தது. டிரெட்மில்லில் ஏறி உடல் பயிற்சிக்காக நடக்க ஆரம்பித்ததும் ஐந்து நிமிடம் நடக்கவே ரொம்பவும் சிரமப்பட்டேன். பழையது போல ஆக முடியாது என்று அபாய மணி எனக்குள் அடித்தது. இருந்தாலும் மனதையும் உடலையும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்திற்காகத் தயாராக்கிக் கொண்டேன்.
கடுமையான உடற்பயிற்சியின் போது மனது களைத்துப் போகும் முன் உடல் ஓய்விற்காகத் தயாராகிவிடும். அதையெல்லாம் சமாளித்துதான் ஆகவேண்டும். அதனால் உடல் எடை படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. எனது உடல் எடை குறைப்பு பற்றி எல்லா விவரங்களையும் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளேன். குழந்தை பெற்றுக் கொள்வதுடன் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைக்கும் பெண்களின் விழிப்புணர்வுக்காக அப்படி செய்தேன்.
வரும் ஜனவரியில் மீண்டும் டென்னிஸ் ஆடத் தொடங்குவேன். பிரசவத்திற்குப் பின் பெண் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அது மட்டுமல்ல குழந்தைதான் எல்லாமும் என்றாகிவிடுகிறது. என்னை எடுத்துக் கொண்டால் பயிற்சிக்குப் பின் குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும். உடல் உழைப்பு உடற் பயிற்சியிலும் உள்ளது. குழந்தையைக் கவனித்துக் கொள்வதிலும் இருக்கிறது. நான் எனது நாட்டிற்காக விளையாடுகிறேன். அதில் இன்னும் கூடுதல் பொறுப்பு இருக்கிறது. அதை சரிவர நிறைவேற்றியாக வேண்டும். அதனால் அழுத்தம் அதிகமாகிறது. அதையும் நான் சமாளித்தாக வேண்டும்.
டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், ஓட்ட நாயகி அல்லிசன் ஃபெலிக்ஸ் போன்றவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டு மீண்டும் களத்தில் இறங்கினவர்கள். முன்பெல்லாம் திருமணம் ஆனதும் அல்லது குழந்தை பெற்றுக் கொண்டதும் ஆடிக் கொண்டிருந்த விளையாட்டிற்கு முழுக்கு போட்டு
விடுவார்கள். அந்த நிலைமை இப்போது மாறிவிட்டது. உடல்நிலை அனுமதிக்கும் பட்சத்தில் மீண்டும் விளையாட்டுகளில் முனைப்பாக முழுமையாக ஈடுபடலாம். அதற்கு வெளியேயிருந்து உந்துதல் அல்லது சுய உந்துதல் வேண்டும். கிம் கிலிஜிஸ்டர்ஸ் குழந்தை பெற்று பத்தாண்டுகள் கழித்து டென்னிஸில் உலகக் கோப்பையை வென்றவர். இவர்கள் எனக்கு மட்டுமல்ல, அனைத்துப் பெண்களுக்கும்முன்மாதிரி.
சமுக வலைதளங்களில் எனது மகன் இழான் மிர்ஸா மாலிக் என்னை விட பிரபலம் என்று சொல்லலாம். இன்றையச் சூழலில், சமூக வலைதளங்களின் கவனத்திலிருந்து மகனை முற்றிலும் விலக்கி வைப்பது சிரமமான விஷயம். பிரபலங்கள் இருவருக்குப் பிறந்தவன் இழான். அதனால் வெளியில் உள்ளவர்களின் கவனம் அவன் மீது விழத்தான் செய்யும். இப்போது கேமராக்கள் அவன் பக்கம் திரும்பும் போது, அவனைப் படம் எடுக்கப் போகிறார்கள் என்று புரிந்து கொண்டு கேமராக்களை எதிர்கொள்கிறான். அந்த அளவுக்கு பழக்கப்பட்டு விட்டான். அவன் பெரியவன் ஆகும் போது அவன்பால் பார்வைகள் இன்னும் அதிகமாகத் திரும்பும். இழானை "பிரபல' நிலையிலிருந்து "சகஜ' நிலைக்கு பொருந்தச் செய்ய பெற்றோர்களாகிய நாங்கள் முயல வேண்டும். முயலுவோம்.
அண்மையில் நடந்த சம்பவம். ஏர்போர்ட்டில் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் என் அருகில் வந்து.."" சானியா .. மகனிடத்தில் இருக்க வேண்டாமா.. அவனை விட்டுவிட்டு வந்திருக்கிறீர்களே..'' என்று கேட்டார். இப்படி பெண்களிடம் மட்டும் அநேகர்கேட்கிறார்கள். வேறு ஆண் விளையாட்டுவீரர்களிடம் ""ஏன் குழந்தைகளுடன் பொழுதைக் கழிப்பதில்லை.. எப்போதும் விளையாட்டுதானா..'' என்று யாரும் கேட்க மாட்டார்கள். குழந்தையைப் பெற்றுவிட்டால், தாய் எப்போதும் குழந்தையுடன் இருக்க வேண்டும். அதுதான் பெண்ணின் வாழ்க்கை முறை என்ற கண்ணோட்டத்தின் வெளிப்பாடுதான் இந்தக் கேள்விகள். குழந்தையைப் பார்த்துக் கொள்வதும் ... குழந்தையிடம் நேரத்தைச் செலவிடுவதும் தந்தை என்ற ஆணின் பொறுப்பில்லை என்ற மனநிலைதான், பெண்களை நோக்கி கேட்கப்படும் இந்த மாதிரியான கேள்விகளுக்கான அடிப்படைக் காரணம்'' என்கிறார் சானியா மிர்ஸா.
சானியா மிர்ஸா வீட்டில் திருமணம்!
சானியா மிர்ஸாவின் தங்கைக்குத்திருமணம் நடக்கப் போகிறது.
மணமகன் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முகம்மத் அஸாருதீனின் மகன் அசாதுதீன். சானியாவின் தங்கை அனம் மிர்ஸா.
ஃபேஷன் ஸ்டைலிஸ்ட்டாக இருப்பவர். அசாதுதீன் இடது கை கிரிக்கெட் ஆட்டக்காரர். வழக்கறிஞராவும் இருக்கிறார். ரியல் எஸ்டேட் பிஸினஸýம் உண்டு.
அனம் அசாதுதீன் ஹைதராபாத்தில் இருப்பதால் திருமணம் ஹைதராபாத்தில் வரும் டிசம்பர் மாதம் நடக்குமாம்! அனம், அசாதுதீன் சிறு வயது முதலே அறிமுகம், நட்பு உண்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.