செருப்பு பழுது நீக்க ஆன்லைன்!

இன்றைக்கு எல்லாமே உங்கள் வீடு தேடி வருகிறது. காய்கறிகள், வீட்டுப் பொருள்கள், உணவு என இப்படி எல்லாமே வீடு தேடி வருகிறது.  
செருப்பு பழுது நீக்க ஆன்லைன்!


இன்றைக்கு எல்லாமே உங்கள் வீடு தேடி வருகிறது. காய்கறிகள், வீட்டுப் பொருள்கள், உணவு என இப்படி எல்லாமே வீடு தேடி வருகிறது.  விரல்நுனியில் ஆன்லைனில் எல்லாவற்றையும் ஆர்டர் செய்கிறார்கள், இன்றைய இளம் தலைமுறையினர்.  ஆனால் காலணி பழுதாகிவிட்டால்?   காலனி பழுது பார்க்கும் இடத்தை நோக்கி நேரடியாகச் செல்லத்தான் வேண்டும்.  அதையும் தொலைபேசி மூலமாக,  இன்டர்நெட் மூலமாக   இருந்த  இடத்தில் இருந்தே சரி செய்ய முடியும் என்றால் என்ன?  என்று தோன்றியிருக்கிறது இரண்டு இளைஞர்களுக்கு. 

நாம் மாம்பலத்தில் இருந்து அம்பத்தூருக்கு செல்கிறோம். அம்பத்தூரில் நமது காலனி பழுதாகி விடுகிறது. திடீரென்று நடக்கும் இந்த செயலுக்கு யாருமே பொறுப்பில்லை. சரி, யாராவது செருப்பு தைப்பவர் இருப்பாரா என்று சுற்றும் முற்றும் பார்க்கிறோம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமே இல்லை. நம் நிலையை நாமே நொந்து கொண்டு ஒரு பையில்  செருப்பைப்  போட்டுக் கொண்டு  வெறுங்காலுடன் நடக்கிறோம்.  ஆனால் நாம் போகும் இடத்தை நாம் அடைவதற்குள் ஒரு செருப்பு தைப்பவர் நமக்காகத் தயாராக இருந்தால் எப்படி இருக்கும்? அதைத்தான் இரு இளைஞர்கள் செய்துள்ளார்கள். 

செருப்பு, ஷூ கிழிந்தால், அதைத் தைப்பதற்கு  உதவிட இவர்கள் தயாராக இருக்கிறார்கள். அதற்குரிய கட்டணத்துடன்தான். அந்த இரு இளைஞர்கள் பிரணவ நாத் மற்றும் கிஷான் ஜி... இவர்களுக்கு தோன்றிய இந்த ஐடியாவை செயலாக மாற்றியது சென்ற வருடம் ஜூன் மாதத்தில். 

""நாங்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும் போதே இதே மாதிரி செருப்பு அறுந்த நிலையில், எந்த ஒரு செருப்பு தைப்பவரும் கிடைக்காத தருணத்தில், ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கிறோம்.  அப்படி  பிறர் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக,  ஆரம்பிக்கப்பட்டதுதான் flying cobbler என்ற எங்கள் நிறுவனம். முதலில் சென்னையில் கண்களுக்குத் தென்படும் செருப்பு தைப்பவரை எல்லாம் அழைத்து வந்து அவர்களுக்கு நிரந்தரமாக வேலையும் கொடுத்து, அதற்கேற்ற விதத்தில் கூலியும் கொடுத்து தொடங்கினோம். எங்களது ஆரம்பமே சிறப்பாகத்தான் இருந்தது. எங்கள் flying cobbler நிறுவனம் இன்று சென்னையில் மட்டும் அல்லாமல் திருச்சி, கோவை என்ற இடங்களிலும் கால் பதித்துள்ளது. 

எங்களது சிறப்பு திடீரென்று அறுந்து விடும் செருப்புகளைத் தைத்துக் கொடுப்பது மட்டும் அல்ல. நாங்கள் கால்கள் இல்லாதவர்களுக்கும், போலியோ தாக்கப்பட்டு உள்ள கால்களை உடையவர்களுக்கும்  அவர்களுக்கு ஏற்றாற்போல்   ஷூ அல்லது செருப்பைத் தயாரித்துக் கொடுக்கிறோம். எங்களிடம் எல்லா  ஷூக்களுக்கும் அடிப்பாகம் sole இருக்கிறது. எந்த ஷூவாக இருந்தாலும் நாங்கள் சரி செய்து கொடுக்கிறோம். அதுமட்டும் இல்லாமல் பழைய ஷூவைப் புதிதாக மின்னும் வண்ணம் மாற்றிக் கொடுக்கிறோம். எலும்பியல் நோய்க்கான ஷூ ஒரு தனி வகை.  அதையும் நாங்கள் சிறப்பாக அவர்களுக்கு ஏற்றாற்போல் செய்து கொடுப்பதால் எங்களது பணி பாராட்டப்படுகிறது. இது தவிர எங்களிடம் ஷூ shine செய்பவர்கள் கூட உண்டு. re-sole மற்றும் பல்வேறு செருப்புகள் மாற்றினால், நாங்கள் குறைந்தது 6 மாதம், இல்லை என்றால் ஒரு வருடம் உத்தரவாதமும் அளிக்கிறோம். ஒரு தடவை எங்களிடம் ஒருவர்  செருப்பைப் பழுதுநீக்கம் செய்து கொண்டால் எங்களைவிட்டு அவர் கண்டிப்பாக வேறு எங்கும்  போகமாட்டார்கள். அந்த அளவிற்கு நாங்கள் எங்கள் தொழிலில் சர்வ அக்கறை கொண்டு செய்கிறோம். எங்களை தொலை பேசியிலும் அழைக்கலாம், கூகிளில் flying cobbler போட்டால் இன்டர் நெட் முகவரி வரும், அதிலும் அழைக்கலாம். மூன்று நாளில் உங்கள் ஷூ அல்லது செருப்பு தயார்'' என்கிறார்கள் பிரணவ நாத் மற்றும் கிஷான் ஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com