ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கசப்பே மருந்து!

வீட்டிலேயே இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் என் உடல் கனம் கூடுகிறது. மிகவும் சோம்பேறித்தனமாக இருக்கிறேன். வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடுமோ?
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கசப்பே மருந்து!
Updated on
2 min read

வீட்டிலேயே இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் என் உடல் கனம் கூடுகிறது. மிகவும் சோம்பேறித்தனமாக இருக்கிறேன். வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடுமோ? என்ற பயம் வேறு. வேப்பிலையையும் மஞ்சளையும் தண்ணீரில் கரைத்து ஊற்றுகிறார்களே! இது சரியா? அவை கிருமித் தொற்றிலிருந்து பாதுகாக்குமா? என்ன வகையான உணவு இந்த சமயத்தில் உதவிடும் ?

 -ராமகிருஷ்ணன், சேலம்.

வேப்பிலையையும் மஞ்சளையும் கசப்புச் சுவை வர்க்கத்தில் ஆயுர்வேதம் சேர்த்துள்ளது. வாயு மற்றும் ஆகாயம் எனும் இரு மகாபூதங்களின் ஆதிக்கத்தை அதிகம் கொண்ட கசப்புச் சுவை, கிருமி மற்றும் வைரஸ் தொற்று களை அழிப்பதில் மிகவும் சக்திவாய்ந்தது. தற்சமயம் உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தொற்றினுடைய விபரத்தில், தும்மல் மற்றும் இருமலின் போது வெளியே வந்துவிடும் இந்த வைரஸ், சுமார் 
3 அடிமுதல் 6 அடிவரை தள்ளி நிற்கும் நபரினுடைய கண், மூக்கு, வாய்வழியாக உள் நுழைந்துவிடும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. அதனுடைய கனமான தன்மையினால் அது அவ்வளவு தூரம் வரை மட்டுமே வந்துவிழும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அப்படி நுழைந்த இந்த வைரஸ் தொண்டையிலிருந்து, பின் நுரையீரலுக்குள் நுழைந்தால் பல்கிப் பெருகிவிடும் ஆபத்துள்ளது. 

இதயத்தின் மேல் பகுதியானது கபம் எனும் தோஷத்தின் ஆதிக்கப் பகுதியாகும். நிலம் மற்றும் நீரின் தன்மை அதிகம் கொண்ட கபத்தினுடைய இருப்பிடம் குளிர்ச்சியானது. அதற்குக் காரணம் நிலம் மற்றும் நீர் குளிர்ந்த குணமுடையவை. வைரஸ் மற்றும் கிருமிகள் இந்தக் குளிர்ந்த பிரதேசமான உடலில் சுகமாகத் தங்கி மேலும் மேலும் தன்னைப் போன்ற மற்ற வைரஸ்களை எளிதாகத் தோற்றுவிக்க முடியும்.

கசப்புச் சுவையில் நிலம், நீர் இல்லாத காரணத்தாலும், வாயு - ஆகாயம் லேசான தன்மையுடையதாலும், அது உடலின் மேல் பரப்பில் வேகமாகச் செயல்படும் தன்மையுடையதாக இருக்கிறது. கனமான ஒரு வைரûஸ எதிர்கொண்டு அதனுடன் சண்டையிடுவதில் லேசான வஸ்துவுக்கு மட்டுமே சாத்யமாவதால், கசப்புச் சுவையுடைய இவ்விரு பொருட்களும் சிறந்தவையே. ஆனாலும் அவற்றைப் பெருமளவு வெளிப் பிரயோகத்திற்குப் பயன்படுத்துவதை விட, உள் பிரயோகமாகப் பயன்படுத்தினால், கிருமிகளையும் வைரஸ் தொற்றுதலையும் நம்மால் பெருவாரியாக எதிர்க்க முடியும்.

வேப்பிலையையும் மஞ்சளையும் உள்ளுக்குச் சாப்பிடுங்கள் என்று கூறுவது எளிது. ஆனால் நடைமுறையில் பலருக்கும் அது முடியாது என்பதால், இருபது வேப்பிலைக் கொழுந்துடன் 3 - 5 கிராம் மஞ்சள் கிழங்கை வைத்து மைய அரைத்து, சிறிய உருண்டையாக்கி, காலை உணவிற்குப் பிறகு அரை மணி நேரம் கழித்து விழுங்கிவிட்டு, சிறிது தேனை நாக்கில் தடவி விட்டுக் கொள்ளலாம். தேன் வயிற்றில் சீரண இறுதியில் காரமாக மாறுவதாலும், வரட்சியான குணம் உடையதாலும் நுரையீரல் பகுதியில் வைரஸ் தாக்குதலை வேப்பிலைக் கொழுந்துடன் சேர்க்கப்பட்ட மஞ்சள் கிழங்குடன் சேர்ந்து எதிர்த்துப் போராடும் ஆற்றலை உடையது.

கசப்புச் சுவையினுடைய பெருமைகளை கீழ்காணும் வகையில் ஆயுர்வேதம் வர்ணிக்கிறது:

நாக்கில் பட்டவுடன் வெறுத்து ஒதுக்கிடத் தோன்றும். ஆனால் இதற்கு முன் உண்டதன் சுவை வெகுட்டலை ஏற்படுத்தியிருந்தால் அந்த வெகுட்டலை நீக்கிவிடும். ருசியின்மையைப் போக்கும். நாக்கை வறளச் செய்து உமிழ் நீர் வடிதலைக் குறைக்கும். கிருமி, தண்ணீர்தாகம், விஷம், குஷ்டம், மயக்கம், காய்ச்சல், உள்எரிவு, பித்த கபங்களால் ஏற்படும் உபாதைகள் ஆகியவற்றை நீக்கும். 

நொச நொசப்பான தன்மை, கொழுப்படைப்பு, தசைகளில் நீர்க்கோர்வை, கொழுப்பு மிகுதி, வியர்வை, சிறுநீர் அதிகமாகப் வெளியாகுதல், மலமிளகிப் போதல்  ஆகியவற்றுக்கு நீர்க்கசிவை குறைப்பதன் மூலம் குணம் தருகிறது. நினைவாற்றலை வலுப்படுத்துகிறது. வறட்சியானது. தொண்டையையும் தாய்ப்பாலையும் சுத்தமாக்குகிறது.

மேற்கூறிய கருத்திலிருந்து நீங்கள் குறிப்பிடும் உடல் கனம் கூடுகிறது என்ற பிரச்னைக்குத் தீர்வையும், சோம்பேறித்தனத்தை அதிகப்படுத்தும் கப மேதஸ்களைக் குறைப்பதிலும், வைரஸ், கிருமித்தொற்றுகளை எதிர்த்துப் போராடும் தன்மையுடையதாலும் கசப்புச் சுவையே இவை அனைத்திற்கும் தீர்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை!

கசப்புச் சுவை கொண்ட எண்ணற்ற ஆயுர்வேத மருந்துகள், வைரஸ் தொற்றையும் கிருமிகளையும் அழிக்கும் வகையில் உள்ளன. நீங்கள் உணவில், வீட்டிலேயே இருக்க வேண்டிய நிர்பந்தமுள்ள இந்நாட்களில் கசப்புச் சுவையான வேப்பம்பூவை உணவின் ஆரம்பத்திலும் இறுதியிலும் சேர்த்து பயன்பெறலாம். வேப்பம்பூ, பொன்னாங்கண்ணி கீரை, மணத்தக்காளிக்கீரை, வெந்தயக்கீரை, அகத்திக் கீரை போன்றவை நமக்கு அருமருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்தப்பட வேண்டிய கால நிர்பந்தத்தில் இருக்கிறோம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com