

விஜய்யின் "பீஸ்ட்' ஏப்ரல் 13-இல் வெளியானது. "கே. ஜி. எஃப் - அத்தியாயம் 2 " ஏப்ரல் 14 -இல் வெளியாகியுள்ளது. எதிர்பார்த்தது போல, இந்த இரண்டு படங்களுக்கும் தமிழகத்தில் வசூலில் கடும் போட்டி, நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
2 மணி, 35 நிமிடம், 35 விநாடிகள் நேரம் திரையில் ஓடும் "பீஸ்ட்' படப் பாடல்களான "ஹலமிதி ஹபிபோ' "ஜாலி லோ ஜிம்கானா' சூப்பர் ஹிட்டாக, அதற்கு சற்றும் தளராமல் கெத்து காட்டும் விதத்தில் "கே. ஜி. எஃப் - 2' ன் "தூஃபான்' பாடல்-கம்-வசனமும் ஹிட்டாகியுள்ளது. திரையில் "கே. ஜி. எஃப் - 2' காட்டப்படும் நேரம் 2 மணி 50 நிமிடங்கள். ஹிந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஐந்து மொழிகளில் "கே. ஜி. எஃப் - 2' வெளியிடப்பட்டுள்ளது. உலகமெங்கும் 10000 - க்கும் மேலான திரை அரங்குகளில் "கே. ஜி. எஃப் - 2' வெளியாகியுள்ளது. பன்ச் வசனங்களையும் தாண்டி, முக்கிய காட்சி களின் அழுத்தமான வசனங்களையும் யஷ் எழுதியிருக்கிறார்.
பொதுவாக கன்னடப் படங்கள் கர்நாடகத்திற்கு வெளியே பிரபலம் ஆவதில்லை. அதுபோல நடிகர் யஷ்ஷை "கே.ஜி.எஃப் -1' க்கு முன் கர்நாடகத்திற்கு வெளியே யாருக்கும் தெரியாது. "கே.ஜி.எஃப் -1' வெளியாகி அகில இந்திய ரீதியில் வெற்றி பெற்றதினால் யஷ் எல்லா திரைப்பட உலகங்களின் கவனங்களை "ராக்கிங் ஸ்டார்' என கவர்ந்துள்ளார்.
"கே. ஜி. எஃப் - 2' வில் வரும் "நீங்க மட்டும் அவன் குறுக்க போயிடாதீங்க ஸார்..' என்ற வசனம் டிரெண்ட் ஆகியுள்ளது. வசூல் விஷயத்தில் மற்ற படங்களுக்கு "கே.ஜி.எஃப்-2' விட்ட எச்சரிக்கைதான் அது என்று எழுதத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஹிந்தியில் ஆமிர் கான் நடித்திருக்கும் "லால் சிங் சத்தா' படம் பஞ்சாபியர்களின் "பைசாகி' நாளான ஏப்ரல் 14- அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வெளியிடுதலை கடைசி நேரத்தில் சில மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழில் மட்டும்தான் "பீஸ்ட்'டுக்கும் "கே. ஜி. எஃப் - 2' வுக்கும் வசூல் ரீதியான போட்டிகள். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடத்தில் "கே. ஜி. எஃப் - 2' ஐ அடிச்சுக்க படமில்லை. தனிக்காட்டு ராஜாவாக நிமிர்ந்திருக்கிறது "கே. ஜி. எஃப் - 2'.
""நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். அப்பா பஸ் டிரைவர். சினிமாவில் நடிக்கணும் என்ற ஆசை சின்ன வயதிலிருந்தே இருந்தது. அதனால் நடிக்கக் கத்துக்க மைசூரிலிருந்து பெங்களூரு வந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தேன். சம்பாதிப்பது வாய்க்கும் வயிற்றிற்கும் போதுமானதாக இருந்தது. நாடகத்திலிருந்து நேராக படங்களில் நடிக்கப் போகலாம் என்பது எனது பிளான். வாழ்க்கையில் நாம் போடும் திட்டம் நடக்கவா செய்கிறது. அப்பா அம்மா பெங்களூரு குடிபெயர்ந்தார்கள். அதனால் கூடுதல் வருமானம் தேவைப்பட்டது. அதிக வருமானத்திற்காக நான் ஒதுக்கி வந்த டிவி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தேன். பிறகு சினிமா வாய்ப்புகள் வந்தன. மூன்று திரைப்படங்களில் ஜோடியாக நடித்த ராதிகா பண்டிட்டை திருமணம் செய்து கொண்டேன்.
"திருமணம் நெருங்கிய சுற்றத்துடன் சிறிய அளவில் நடந்தாலும், பெங்களூரு அரண்மனையில் நடந்த வரவேற்பிற்கு ரசிகர்கள் அனைவரையும் வருமாறு அழைப்பு விடுத்தேன்''
யஷ்ஷுக்கு வாரிசுகள், ஒரு மகன். ஒரு மகள். 36 வயதாகும் யஷ்ஷின் சொந்தப் பெயர் நவீன் குமார் கெளடா. "பத்தோடு பதினொன்னு' என்கிற மாதிரி இருந்த யஷ்ஷை அகில இந்திய அளவுக்கு விசுவரூபம் எடுக்க வைத்தது "கே.ஜி.எஃப் - 1'.
2018-இல் வெளிவந்தாலும் "கே.ஜி.எஃப் 1' அகில இந்திய அளவில் டிவி சானல்களில் மாறி மாறி இன்றைக்கும் ஒளிபரப்பாகி வருகின்றன. அதனால் படத்தின் தாக்கம் அப்படியே நிலையாக இருக்கிறது.
"கே.ஜி.எஃப் 1' இந்த அளவுக்கு வெற்றி பெறும் என்று படத்தின் பின்னணியில் இருந்தவர்களே நினைத்து பார்க்கவில்லை. இதுவரை "கே.ஜி.எஃப்' 250 கோடி கல்லா கட்டியிருக்கிறது. "கே.ஜி.எஃப்' 400 கோடி வசூலைத் தாண்டி 500 கோடியை நோக்கி பயணிக்கிறது.
"கே.ஜி.எஃப் 1', "கேஜிஎப் 2' குறித்த எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக விதைத்திருந்ததால்... "கே.ஜி.எஃப் 2' மிகப் பெரிய வெற்றியை அடையும் என்று படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் சத்தியம் செய்தனர். அது உண்மையாகி இருக்கிறது.
"கே.ஜி.எஃப் 1'-இல் வரும் வில்லன்களைப் பற்றி யாருக்கும் ஒன்றும் தெரியாது. முன்பின் பார்த்திராத முகங்கள்.
"கே.ஜி.எஃப் 2' வில் அட்டகாச வில்லனாக "ராக்கி' படம் மூலம் ஹிந்திக்கு அறிமுகம் ஆன 62 வயது சஞ்சய் தத் வருகிறார். இரண்டு கே.ஜி.எஃப் படங்களிலும் நாயகன் கதாபாத்திரத்தின் பெயரும் "ராக்கிதான்.
நேற்றைய நாயகி "டிப் டிப்பு பர்ஸா பாணி' புகழ் ரவீணா டண்டன் நடிக்க ... கே.ஜி.எஃப் 1-இல் ராக்கியைக் காதலிப்பவராக நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி, "2-ஆம்' அத்தியாயத்தில் அதே பாத்திரத்தில் நடிக்கிறார்.
"ரசிகர்கள் வித்தியாசமான திரைக்கதையுள்ள படங்களை எதிர்பார்க்கிறார்கள். இப்போது திரைப்படம் மாநிலத்தை மட்டுமல்ல இந்தியாவையும் தாண்டி வெளியே செல்கிறது. அதிக மக்களை சென்றடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன்தான் கே.ஜி.எஃப் படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
திரைப்படத்துறையில் "அழுத்தம்' என்பது ஆனந்தம்தான். மக்களது எதிர்பார்ப்பை சவாலாக எடுத்துக் கொண்டு அதை நிறைவேற்றிவிட்டால் அதுதான் வெற்றி.... வெற்றி மகிழ்ச்சியைத் தரும்தானே... கே.ஜி.எஃப் இரண்டாம் அத்தியாயத்தில் கதை மாற்றமில்லாமல் அப்படியேதான் இருக்கிறது. எங்களது பார்வையை "முதல் கே.ஜி.எஃப்' மாற்றிவிட்டது. பெரிதினும் பெரிதாகச் செய்ய எங்களை வற்புறுத்தியது. அதை நாங்கள் "கே.ஜி.எஃப் 2' வில் செய்து முடித்திருக்கிறோம். படத்தில் கெத்து, வெறித்தனத்திற்கு குறைவில்லை. ரசிகர்களையும் தாண்டி படம் பார்ப்பவர்களின் மனங்களை கவரும். கண்களை விரிய வைக்கும் காட்சி அமைப்புகள், செவிகளுக்கு ரம்மியமான பின்னணி இசை, மனதை உறைய வைக்கும் கதை... வேறென்ன வேண்டும்'' என்கிறார் யஷ் "ராக்கி'.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.