ஐரோப்பியர்கள் விரும்பும் இந்திய உணவு!

ஐரோப்பியர்கள் விரும்பும் இந்திய உணவு!

நெதர்லாந்து நாட்டுக்கு நான் எனது குடும்பத்தோடு,  3 மாதங்கள் சுற்றுலா சென்றுள்ளேன்.  

நெதர்லாந்து நாட்டுக்கு நான் எனது குடும்பத்தோடு, 3 மாதங்கள் சுற்றுலா சென்றுள்ளேன். அங்கு பல ஊர்களுக்கும் பயணித்தேன். ஐரோப்பிய உணவு வகைகளைச் சாப்பிட்டுவரும் நிலையில், தென்னிந்திய உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும் என்று ஆவல் தூண்டியது. அங்கு பலரைக் கேட்டபோது, அவர்கள் கை காட்டிய உணவகம்தான் "அன்னவிலாஸ்'.

பல நாடுகளைக் கடந்து வெளிநாட்டில் இருக்கும்போது, நம்மூர் உணவகம் குறித்து தகவல் கேட்டவுடன் உடனே அங்கு செல்ல ஆர்வம் தூண்டியது. அங்கு சென்றேன்.

அங்கு நான் கண்ட காட்சி, "தட்டிலே முழுமையான தென்னிந்திய சாப்பாடு. பூரி, சாதம், சாம்பார், ரசம், காரக் குழம்பு, பொறியல், கூட்டு, அப்பளம், தயிர், ஊறுகாய் என அனைத்தும் உண்டு. விரல்களால் பிசைந்து, சாம்பார் சாதத்துடன் கொஞ்சம், வாழைக்காய் பொறியலை எடுத்து நளினமாகச் சாப்பிடுகிறார் லிமெண்டா. பக்கத்தில் அவரது கணவர் சாப்பிடுவது வாழைப்பூ பிரியாணி. ஐரோப்பியர்களான இவர்கள் தென்னிந்திய சாப்பாட்டையும், பிரியாணியையும் சாப்பிடுவது நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் உள்ள அன்னவிலாஸ் உணவகத்தில்தான்!'.

என்பது ஆச்சரியப்பட வைத்தது.

அங்கே விசாரித்தேன். அங்கு வந்து சாப்பிடும் வாடிக்கையாளர்களில் இந்தியர்கள் பாதி என்றால், மற்றவர்கள் ஐரோப்பியர்கள்தான். ஐரோப்பியர்களை இந்திய உணவு வகைகள் ரொம்பவும் ஈர்க்கின்றன.

இதுகுறித்து ஆம்ஸ்டர்டாம் அன்ன விலாஸ் உணவகத்தை நிர்வகித்துவரும் ராமநாதனிடம் பேசினேன். ""நாளுக்கு நாள் உணவகத்தில் அதிகரித்துவரும் ஐரோப்பிய வாடிக்கையாளர்கள்தான் வெற்றிக்குக் காரணம்'' என்று உற்சாகத்துடன் சொல்கிறார்.

அவரிடம் ஒரு மினி பேட்டி:

அன்னவிலாஸ் பற்றி சொல்லுங்களேன்...

கோவையைச் சேர்ந்த பொன்னுரங்கம் வேணுகோபாலின் பாரம்பரிய தென்னிந்திய உணவு மீதான பற்றும், அதனை உலகின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்குக் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற ஆர்வமும்தான் அன்னவிலாஸூக்கு அடித்தளம்.

2015-இல் கோவையில் முதல் உணவகம் துவக்கப்பட்டது. அடுத்து சென்னை, கொச்சியில் கிளைகள். பின்னர், இந்தியாவுக்கு வெளியில் துபையில் முதல் அயல்நாட்டுக் கிளை. அடுத்து 2021-இல் ஆம்ஸ்டர்டாமில் இரண்டாவது கிளை. விரைவில் சென்னை மயிலாப்பூரில் இரண்டாவது கிளைதுவங்க உள்ளது.

ஆம்ஸ்டர்டாமில் தென்னிந்திய உணவுகள் தயாரிப்பதில் உள்ள சவால்கள் என்ன?

இந்தியாவில் இருந்து சமையல் செய்ய ஆள்களை அழைத்து வர வேண்டும். முக்கிய மளிகை சாமான்கள், வெண்டைக்காய், முருங்கை, வாழை இலை போன்ற காய்கறிகளும் இந்தியாவில் இருந்துதான் வர வேண்டும். ஃபில்டர் காபிக்கான காப்பி பொடி கூட தமிழ்நாட்டில் இருந்துதான் வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு உணவு சப்ளை செய்யும் பணிக்குப் பெரும்பாலும் உள்ளூர் ஆள்களையே வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டும்.

தென்னிந்திய உணவு சாப்பிட ஐரோப்பியர்கள் ஆர்வம் காட்டுகிறார்களே! அவர்களை ஈர்ப்பது எது?

பொதுவாக, இங்கே உள்ளவர்கள் பிரெட் அடிப்படையிலான உணவையே அதிகம் சாப்பிடுவர். மாறுதலுக்காக, இந்திய உணவை சுவைத்துப் பார்த்திருக்கலாம்.

இந்திய நண்பர்களோடு எப்போதாவது, இந்திய உணவை சுவைத்திருப்பார்கள். அண்மைக்காலமாக சைவ உணவு சாப்பிடுவதில் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்று பல காரணங்கள் உள்ளன.

உணவு சாப்பிடும் முறை ஐரோப்பியர்களுக்குத் தெரிகிறதா?

முதன் முறையாக வருகிறவர்களுக்கு உணவை மேஜையில் கொண்டு போய் வைக்கும்போதே ஒவ்வொரு உணவு வகையின் பெயர், எவற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது, எப்படி சாப்பிடுவது என்று விளக்கமாகச் சொல்லுவோம். அவர்கள் ஆர்வத்துடன் கேட்டு சாப்பிடுவார்கள். உணவக இணையதளத்தில் மெனு பகுதியில் ஒவ்வொரு வகையும் என்னென்ன பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது என்ற விவரத்தைக் குறிப்பிட்டிருக்கிறோம்.

தமிழக உணவகங்களில் கிடைக்காத சில உணவு வகைகள் கூட உங்களுடைய உணவகத்தில் இடம் பெற்றுள்ளனவே?

அதுதான் சிறப்பு. தட்டு இட்லி, ராகி இட்லி, பொன்னாங்கன்னி கீரை வடை, பரங்கிக்காய் அல்வா, வாழைப்பூ தம் பிரியாணி, ஆப்பிள் கேசரி, கொழுக்கட்டை, வாழை இலை தம் பரோட்டா, பொடி போண்டா, குழந்தைகளுக்கு ஸ்பெஷலாக சாக்லேட் இட்லி என்று பல வகைகள் உள்ளன. நூறு வகையான இட்லிகளையும், 50 வகை வடைகளைச் செய்துதரமுடியும். நன்னாரி சர்பத்தை அறிமுகம் செய்திருக்கிறோம். ஃபில்டர் காபி, சுக்கு காபி ஆகிய இரண்டும் கிடைக்கும்.

ஆம்ஸ்டர்டாமில் கரோனா பாதிப்பில் இருந்து உணவகத் தொழில் முழுமையாக
மீண்டுவிட்டதா?

பொதுமுடக்கத்தின்போதே வீட்டுக்கு நேரடியாக அனுமதி இருந்ததால், பெரிய அளவில்பாதிப்பு இல்லை. இப்போது வியாபாரம் சூடுபிடித்துவிட்டது. சமூக ஊடகங்கள் மூலமாகவும் புதிய வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com