பிரியா எனும் நான்!

திருநங்கைகள்  சமூகத்தில் பல அச்சுறுத்தல்களுக்கும்,  நெருக்கடிகளுக்கும் இடையில் வாழ்கிறார்கள் என்பது  வெளிப்படையான உண்மை.
பிரியா எனும் நான்!
Published on
Updated on
2 min read

திருநங்கைகள் சமூகத்தில் பல அச்சுறுத்தல்களுக்கும், நெருக்கடிகளுக்கும் இடையில் வாழ்கிறார்கள் என்பது வெளிப்படையான உண்மை. ஆனால், சிலருக்கு குடும்பத்திலும், உடனிருப்போரிடம் ஆதரவு கிடைத்துவிடும். அப்படி ஒருவர்தான் பிரியா.

கேரளத்தின் திருச்சூர் நகரைச் சேர்ந்த திருநங்கை பிரியா, ஆயுர்வேத மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். அவர் தனது வெற்றிக் கதையைப் பகிர்கிறார்:

""பொதுவாக திருநங்கைகளுக்கு பிரச்னை வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்கும். இதனாலேயே பலர் வீட்டை விட்டு ஓடுவார்கள். அதிர்ஷ்டவசமாக எனது வீட்டில் எனது "பால் திரிபு நிலை'-க்கு ஆதரவாக நின்றனர். எனது லட்சியங்களை அறிந்து, அவற்றை அடைய உதவுவதாக உறுதி அளித்தனர். தைரியம் தந்தனர். அண்ணனுக்கு உதவுவது போல் எனக்கும் பொருளாதார ரீதியாக உதவினர். பாகுபாடும் காட்டவில்லை.

நான் பிறப்பால் ஆண்தான். ஏழு வயதானபோது என்னுள் "பால்திரிபு' ஏற்பட்டிருப்பதை உணர்ந்தேன். அதிர்ச்சியாக இருந்தது. பெற்றோரிடம் சொல்ல பயப்பட்டேன்.

வெளியே சிறுவனாக நடந்து கொண்டாலும் உள்ளுக்குள் பெண்தான் என்று நம்பத் தொடங்கினேன். எனது உள் உணர்வுகளை ஒரு நோட்டு புத்தகத்தில் அவ்வப்போது பதிவு செய்து வந்தேன். அது எனது பெற்றோருக்குக் கிடைத்துவிட, வாசித்து உணர்வு மாற்றங்களை அறிந்தனர். மிகவும் பக்குவமாக நடந்து கொண்டனர்.

மருத்துவ ஆலோசனைகளைப் பெற மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். மன ரீதியான பிரச்னை இல்லை என்றும் சொன்னார். வயது அதிகரிக்க நான் பெண்ணாக வெளிக்காட்டினால் ஏளனம் செய்வார்கள் என்று எனக்குத் தோன்றியது.

ஆணாகக் காட்டிக் கொண்டு பள்ளிப் படிப்பை முடித்தேன். சிறார்களுடன் சேர்ந்து அமர, பேச, பழகப் பிடிக்கவில்லை. பெண்களுடன் சேர்ந்து இயங்கினால் நல்லது என்று தோன்றியது. பெற்றோர் இருவருமே செவிலியராகப் பணிபுரிந்து வந்ததால், அவர்களுக்கு எனது பால் திரிபு நிலையை எளிதில் உள்வாங்கிக் கொள்ள முடியும். பெற்றோரின் மனப் பக்குவம் எனக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது. பெற்றோர்களின் கனவு என்னையும் எனது அண்ணனையும் மருத்துவர்களாக ஆக்க வேண்டும் என்பதுதான்.

அண்ணன் பெற்றோர்களின் கனவை நனவாக்கி பெங்களூருவில் மருத்துவராகப் பணிபுரிகிறார். எனக்கு ஆசிரியர் பணியில் சேர வேண்டும் என்று நினைத்திருந்தேன். இருப்பினும், பெற்றோருக்காக மருத்துவராவது என முடிவெடுத்தேன்.

2013-இல் நுழைவுத் தேர்வு எழுதியதில் ஆயுர்வேதப் படிப்புக்கு இடம் கிடைத்தது. ஆணாகப் படித்து முடித்தேன். மங்களூரில் முதுநிலை மருத்துவம் படித்து, தேர்ச்சி பெற்றதும், கேரள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிய ஆரம்பித்தேன். இந்த நிலைமையிலும் ஆணாகவேக் காட்டிக் கொள்ளவும், அப்படி நடிக்கவும் மிகவும் சிரமப்பட்டேன்.

ஒருவழியாக 2018-ஆம் ஆண்டில் என்னை மருத்துவராக நியமித்தனர். பொறுப்புள்ள மருத்துவராகப் பணியாற்றிவந்தேன். என்னைப் பெண்ணாக்கக் காட்டிக் கொள்ளும் தருணம் வந்துவிட்டது. அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாற வேண்டும் என தீர்மானித்தேன்.

வேறுவழியில்லாமல் பெற்றோர் சம்மதித்தனர். அறுவைச் சிகிச்சை முடியும் வரை அம்மா எனக்காகக் காத்து நின்றார். அப்போது செய்யப்பட்டது அடிப்படை அறுவை சிகிச்சைதான். இன்னும் இரு அறுவைச் சிகிச்சைகள் பாக்கி உள்ளன. ஆண் குரலை பெண் குரல் போல மாற்றவும் சிகிச்சை உள்ளது. அனைத்து சிகிச்சைகளுக்கு சுமார் ரூ.8 லட்சம் வரை செலவாகும்.

நான் பணிபுரியும் மருத்துவமனையில் பணியாற்றுவோர் ஆதரவாக இருந்து, என்னைப் பெண் மருத்துவராக ஏற்றுக் கொண்டனர். இனி நோயாளிகளும் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். ஆம்... பெண் மருத்துவராக மக்களுக்குப் பணி ஆற்றப் போகிறேன்...'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com