புதுவை அரசு கலைக் கல்லூரியில் கணினிதுறை உதவி பேராசிரியராக இருக்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த கிருத்திகா ரவிச்சந்திரன். கல்லூரி பேராசிரியரான இவர், நாட்டியத்திலும் சாதனை படைத்து, விருதுகள் பல வென்ற பரதநாட்டியக் கலைஞராகவும் உள்ளார்.
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் ஆய்வியல் (எம்பில்) அறிஞர் பட்டம் பெற்றவர். புதுவை தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கணினி அறிவியல், நாட்டியத்திலும் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர். இந்திய சாதனைப்பெண்கள் 100 பேரில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த 2016-ஆம் ஆண்டில் சாதனைப் பெண்மணி விருதினை குடியரசுத் தலைவரிடம் பெற்றவர்.
புதுச்சேரி வெங்கட்டா நகரில் 'நாட்டிய சக்கரா' என்ற அறக்கட்டளையை நடத்தி வரும் கிருத்திகா, மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற குழந்தைகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாகப் பரத நாட்டியம் கற்றுத் தருகிறார். இதன் தொடர்ச்சியாக, ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாகப் பரதநாட்டியம் கற்றுக் கொடுத்தும் வருகிறார். புதிய முயற்சியாக சிறைக் கைதிகளுக்கும் நாட்டியப் பயிற்சியளித்து, அவர்களை நல்வழிப்படுத்ததும் முயற்சியில் உள்ளார்.
கல்வியோடு, நாட்டியக்கலைச் சேவையாற்றி வருவது குறித்து, கிருத்திகா ரவிச்சந்திரன் கூறுகையில்,
''எனது அறக்கட்டளையின் குறிக்கோள், அனைவரிடமும் நாட்டியக் கலையைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பன. கலைக்கு பல குணங்கள் உண்டு. மனிதனை மெருகேற்றும் தகுதி பரதக்கலைக்கு உண்டு. இதன்மூலம் புதியனவற்றை சிந்திக்கும் ஆற்றலும், மனத்தெளிவும் பிறக்கும்.
நடனம் கற்பவர்கள் அனைவருமே நடனக் கலைஞராக ஆகப்போவதில்லை. இந்தக்கலை மூலம் தெளிந்த சிந்தனையும், சிறந்த பேச்சும், சமூக ஒருங்கிணைப்பும், சகிப்புத்தன்மையும் வருவதோடு, தனிமனித ஒழுக்கத்தையும் உயர்வினையும் வழங்கும்.
பொதுவாக பரதநாட்டியம் கற்பதற்கும், நாட்டியத்துக்கான உபகரணங்களை வாங்குவதற்கும் செலவினம் இருக்கும்.
இதனால், ஏழைப்பிள்ளைகள் பரதம் கற்பது தடைபடக் கூடாது என்பதற்காகவே, இலவசமாக ஏழைக் குழந்தைகளுக்கும் பரதம் கற்றுக் கொடுத்து வருகிறேன். ஆரம்ப காலத்திலிருந்து சிறிய அளவில், விரும்பிய குழந்தைகளுக்கு நாட்டியம் கற்றுத் தந்தேன். 100-க்கும் மேற்பட்டவர்கள் பயின்றுள்ளனர், அதில் சிலர் நாட்டியப் பயிற்சியளித்து வருவாய் ஈட்டும் நிலையிலும்
பயனடைந்துள்ளனர் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில், சிறைத்துறை தலைவர் ரவிதீப்சிங்சாகர், மாதிரி சிறைச்சாலைத் திட்டத்தை ஏற்படுத்தி கைதிகளுக்கு நற்பண்புகள் கிடைக்க வழிகாட்டினார். அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கைதிகளுக்கும் நடனப்பயிற்சி அளிப்பதையும் இணைத்து, அதனை வழங்கினேன்.
கைதிகளுக்கு நாட்டியப் பயிற்சி நான் அளித்தது எனக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே புதிய அனுபவமாக இருந்தது.
கைதிகளுக்கு நடனப்பயிற்சி அளித்தது, மன அழுத்தத்தில் உள்ள தனிமனிதனைப் பக்குவப்படுத்துவதாக அமைந்தது. அங்கே நடனம் கற்பதற்கு ஆரம்பத்தில் 5 கைதிகள் மட்டுமே விரும்பி வந்தனர். தொடர் பயிற்சியால், அவர்களுக்கு அமைதியும், மனத்தளர்ச்சியும் ஏற்பட்டதால் 25 பேர் வரை விரும்பி கற்க ஆர்வம் காட்டினர்.
உறவினர்களைக் கூட சந்திக்க முடியாத மன அழுத்தத்துடன் கூடிய நெருக்கடியில் இருந்த கைதிகளுக்கு, இந்த நடனப் பயிற்சியின் தொடர்பு மூலம் புதிய சிந்தனையும், மன மகிழ்வும் கிடைத்ததால் அவர்கள் மனம் திறந்து பேசி, நட்பினைப் பகிர்ந்துகொண்டனர். அங்கு நடந்த ஜெயில் மகோற்சவ நிகழ்வில், நடனம் பயின்ற கைதிகள் நடனம் ஆடி, விழாவில் பங்கேற்ற ஆளுநரின் பாராட்டைப் பெற்றனர்.
ஒரு கைதி, தனது மகளுக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்படியே அவருடைய மகளுக்குக் கற்றுக் கொடுத்தேன்.
குறைந்த பட்சம் 5 மாதங்கள் பயிற்சி பெற வேண்டும். இலவசப் பயிற்சிக்கு விருப்பமுள்ள நபர்களைத் தேர்வு செய்வதும் சவாலாக உள்ளது. தாழ்த்தப்பட்ட, பின்தங்கிய பிரிவினரின் பிள்ளைகள், ஏழைக் கூலித் தொழிலாளிகளின் பிள்ளைகள், கணவரால் கைவிடப்பட்டவரின் பிள்ளைகள் என விரும்பி வரும் பிள்ளைகளுக்கு நாட்டியம் கற்றுத் தருகிறேன்.
பரதநாட்டியம் வெறும் நாட்டியப் பயிற்சியை மட்டும் வழங்குவதில்லை, இலக்கியம், இதிகாசங்கள், புராணங்கள் போன்றவற்றையும் கற்று அதனை நாட்டியத்தில் வெளிக்கொண்டு வருவதால், சமூகத்தின் நிறைய விஷயங்களை மாணவர்கள் கற்றுக்கொண்டு தெளிவு பெறுவார்கள்.
கல்விப் பணியோடு நாட்டிய சேவையும் மகிழ்ச்சி தருகின்றது'' என்கிறார் கிருத்திகா ரவிச்சந்திரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மாநிலங்களவை அதிமுக வேட்பாளர் தம்பிதுரை! பாமகவுக்கு ஒரு இடம்!

முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு!

அகற்றப்பட்ட ”கர்தவ்ய த்வார்” சு.வெங்கடேசன் பதிவிட்ட விடியோ!

மாநிலங்களவை திமுக வேட்பாளர்கள்!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

