வயசுக் கோளாறு
என் அம்மா இருந்தவரை எங்கள் வீடு பாசமும் நேசமும் ஒற்றுமையும் மிக்க அந்நியோன்னிய குடும்பமாகத்தான் இருந்தது.


என் அம்மா இருந்தவரை எங்கள் வீடு பாசமும் நேசமும் ஒற்றுமையும் மிக்க அந்நியோன்னிய குடும்பமாகத்தான் இருந்தது. அமைதிப் பூங்காவாக இருந்த இல்லம் இரண்டு ஆண்டுகளாக, என் அம்மாவின் மறைவுக்குப் பின்னர் வீட்டின் நிம்மதியே பறி போயிற்று.
எனக்கும் என் அன்பான மனைவிக்கும் இடையில் ஒரு கோல்டு வார் மாதிரி. ஒரு பிரச்னை புகுந்து, குடும்ப சந்தோஷத்தைக் குலைத்தது. இவ்வளவு பில்டப் கொடுக்கிறானே. அப்படி என்னதான் பிரச்னை! என்கிறீர்களா? எல்லாவற்றுக்கும் எண்பத்திரண்டு வயதான என் அப்பா தான் காரணம்! அவ்வளவு வயதானவர் பாவம். அவர் போய் என்ன செய்ய முடியும். ஏதோ போட்டதை சாப்பிட்டுப் படுத்துக் கிடக்கப் போகிறவர்? என்று நீங்கள் முணுமுணுப்பீர்கள். அவருடைய சாப்பாடு. அதுதான் பிரச்னையே?
எப்பவுமே அவர் கொஞ்சம் சாப்பாட்டுப் பிரியர். அப்படியென்றால் நிறைய சாப்பிடுவார் என்பதல்ல. சாப்பாட்டை விரும்பி, ரசித்து, ருசித்து சமைத்தவரைப் பாராட்டி சாப்பிடுவார். அவ்வளவு சுமுகமாக இருந்தவரின் குணம் அம்மாவின் மறைவுக்குப் பிறகு அடியோடு மாறிப் போயிற்று. அத்தனை நாள் கூடவே வாழ்ந்த மனைவியின் பிரிவின் பாதிப்பு என்று ஏதாவது இருந்தால் கூடப் பரவாயில்லை.
என் மனைவியின் சமையல் பக்குவம்தான், எனது தந்தைக்குப் பிடிக்காமல் போயிற்று. ஒவ்வொரு வேளையும் ஏதோ கோளாறு சொல்லி எங்களை நோகடித்தார். இத்தனைக்கும் என் மனைவி கமலாவும் அம்மாவுடன் சமையல் வேலைகளில் ஈடுபட்டு அம்மாவின் பாங்குதான் அவளுக்கும் பிடிபட்டிருந்தது. அப்பா, அம்மாவின் சமையல் ருசியை மிஸ் பண்ணுவதாக பீல் பண்ணினால் கூட எங்களுக்கு அவர் மேல் பரிதாபம் பிறக்கும். யதார்த்தம் புரிந்து கொள்வோம்.
ஆனால் அவர் காலை நேரம் நானும் அப்பாவும் டிபன் சாப்பிட உட்கார்ந்திருந்தோம். இருவருக்கும் தட்டுக்களையும் தண்ணீரையும் எடுத்து வைத்துவிட்டு என் மனைவி கமலா இருவருக்கும் உப்புமா பரிமாறினாள். இன்று இந்த நேரம் எப்படிப் போகுமோ? என்று வழக்கம்போல் என் மனதுக்குள் டென்ஷன்.
தட்டிலிருந்த உப்புமாவை துளி எடுத்து வாயில் போட்டுக் கொண்ட உடனே முகம் அஷ்ட கோணலாக மாற, "தூ....உப்பே இல்லை' என்று தட்டிலேயே துப்பினார் அப்பா. அதே உப்புமாவை நான் ரசித்துச் சாப்பிட ஆரம்பித்தேன்.
"உப்புமா நன்றாகத்தானே இருக்கிறது. வெங்காயம்,வெஜிடபிள்ல்ஸ் எல்லாம் போட்டுச் செய்திருக்கிறாள் உங்கள் மருமகள் கமலா. ஏன் அப்பா இப்படிசெய்கிறீர்கள்''
""போடா. உப்பு சப்பு இல்லாமல், நாலு காயை அதன் தலையிலே போட்டு விட்டால் ஆயிற்றா. எங்கம்மா..அதாண்டா, உங்க பாட்டி பண்ணுவா பாரு ..
முந்திரி பருப்பு போட்டு சுடச்சுட ரவா உப்புமா. வாஷிங்டன் திருமணம் நாவலில் சாவி வர்ணித்த மாதிரி சூப்பரா இருக்கும்' என்று பாட்டியைக் கொண்டு வந்தார். பாட்டி, ,அப்பாவின் இருபதாவது வயதிலேயே மாரடைப்பில் காலமாகி விட்டார்.அப்பொழுது அவருக்கு கல்யாணம் கூட ஆகவில்லை.
அப்பாவின் உப்புமா வர்ணனையைக் கேட்டுக் கொண்டிருந்த கமலா விடுவிடுவென்று சமையலறைக்குப் போனாள். கையிலிருந்த உப்புமா பாத்திரத்தை "ணங்'-கென்று மேடையில் வைத்தாள். கரண்டியை எடுத்துத் தன் தலையில் ஓங்கி அடித்துக் கொண்டு தன் கோபத்தைக் காட்டினாள். எனக்கோ. ஒருபக்கம் அப்பா மேல் வருத்தமும் இரக்கமும் கலந்த கோபமும்,ஒரு பக்கம் மனைவியின் ரியாக்ஷனை நினைத்துப் பயமாகவும் இருந்தது.
கமலா கோபப்படுவதும் நியாயம் தானே! அவள் கஷ்டப்பட்டு, அதுவும் வேலைக்காரியும் இல்லாமல், வேலைப் பளு ரொம்ப ஜாஸ்தியல்லவா?
இதோ..அப்பா இப்படி பிரெக்பாஸ்ட் சாப்பிடாமல் எழுந்து போய் விட்டார். கொஞ்ச நேரம் கழித்து வயிற்றைத் தடவிக் கொண்டு உட்கார்ந்திருப்பார். எனக்குப் பாவமாக இருக்கும்.. பழம், பிஸ்கட், ஹார்லிக்ஸ் என்று எதையாவது கொண்டு கொடுப்பேன். நானும் வீட்டில் இருந்தால் இதை செய்ய முடிகிறது. வேலைக்குச் சென்றுவிட்டால்..?
மறுபடி மதியம் சாப்பாட்டு நேரத்தில் இப்படித்தான் எதாவது குறை சொல்லிக் கொண்டிருப்பார்.
"" கத்தரிக்காய் வதக்கலுக்கு மசாலா பொடி பண்ணிப் போடணும் கமலா .. ரசத்துக்கு கடா மார்க் பெருங்காயம் போட்டாத்தான் ருசியாயிருக்கும்...உங்கப் பாட்டி அப்படித்தான் சமைப்பாடா..'' என்று அடுத்த அத்தியாயத்தைத் தொடருவார்.
""சரிப்பா...எல்லோரும் ஒரே மாதிரி சமைக்க முடியுமா? அவரவர்களுக்குத் தெரிந்த மாதிரித்தான் செய்ய முடியும். வயிற்றுக்கு வஞ்சனை செய்ய முடியுமா?'' என்று அக்கறையாகச் சொல்லி கொஞ்சமாகவாவது சாப்பிட வைப்பேன்.. வேறென்ன செய்ய?
ஆனால் கமலா என்கிட்டே மல்லுக்கு நிற்பாள்.
""அதென்ன உங்கப்பா இப்படி பாட்டி சமையலைப் பற்றியே புகழ்ந்து சொல்றார். என்னை விடுங்கள் .என் சமையலில் குறை சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும். உங்கம்மா அவருடன் எத்தனை வருஷம் வாழ்ந்திருக்கிறார். அப்பாவுக்கு அது பிடிக்கும். இது பிடிக்கும்னு வக்கணை வக்கணையாக எப்படி சமைப்பார். அம்மாவின் சமையலைப் பற்றி ஒரு நாள் கூட நினைவு கூர்வதில்லை. அம்மா போய் இரண்டு ஆண்டுகள்தானே ஆகின்றன. அவரை விட்டு என்றோ இருந்த பாட்டி சமையலையே வர்ணித்துக் கொண்டிருக்கிறார்.
எனக்கும் அப்படித் தான் தோன்றும். என் அம்மாவுடன் ஒப்பிட்டுக் கமலாவை குறை சொன்னால் கூடப் பரவாயில்லை? என்றோ மறைந்த,நாங்களெல்லாம் பார்த்தேயிராத பாட்டி சமையலை ஒவ்வொரு வேளையும் நினைத்துக் கொண்டு சாப்பிடாமல் பாடாய்ப்படுத்தினால் ...""ஆமாம் கமலா? ஏனோ அப்பா இப்படி இருக்கிறார்! நீயும் எல்லாம் நன்றாகத்தான் செய்கிறாய்?'' என்று அவளையும் சமாதானப்படுத்துவேன்.
மற்றபடி அப்பா தங்கமானவர். பேரன்கள் ரவி, ராகுல் மீது மிகுந்த பாசம். அவர்களுக்குப் பாடம் சொல்லித் தருவதும் அவர்கள் கேட்கும் கிரிக்கெட் பேட், டிரஸ்ஸூன்னு தனது பென்ஷன் பணத்தை வாரி வழங்குவார். அவர்களுக்கும் தாத்தான்னா உயிர்..
எனக்குமே என் அப்பாவை கடைசிவரை நன்றாக பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்ளணும் என்று தான் தீவிரமான ஆசை.அவருக்கு நான் ஒரு பிள்ளைதான். ஆதலால் அவர் என்னிடம்தான் இருக்க வேண்டும்..கடவுள் அருளால் இந்த வயசுக்கு அவர் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார்.ஏதாவது உடம்பு தொந்திரவு செய்தால் கூட நான் கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொள்வேன். ஆனால் இப்படி என் இல்லத்தரசியுடன் மன்றாடுவதுதான் பிரச்னையாயிருக்கு!
நானும் அடிக்கடி கமலா கடைக்கோ, சிநேகிதி வீட்டுக்கோ போயிருக்கும் சமயம் பார்த்து அப்பாவிடம் கேட்பேன் "" ஏனப்பா உங்களுக்கு கமலாவைப் பிடிக்கவில்லை'' என்று.
""அட யார்ரா இவன். கமலாவை ஏன் எனக்குப் பிடிக்காமப் போகணும்... தங்கமான பொண்ணு அவள்'' என்று பதிலளிப்பார்.
நானும் விடாமல் ""பின்னே ஏன் அவள் சமையலை எப்பொழுதும் குற்றம் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள்.. சரியாக சாப்பிடுவதுமில்லை'' என்று தொடர்வேன்.
""அதுக்காக சாப்பாடு நன்னாயில்லேன்னா சொல்லாமாயிருக்க முடியுமா? மனுஷனுக்கு நாக்கு இருக்குல்லே! உங்க பாட்டி மாதிரி உனக்கையா சமைக்கச் சொல்லி உன் பெண்டாட்டிகிட்டே சொல்லுவியா? அதை விட்டு...போடா சந்துரு.." என்று முடித்து விடுபவரை நான் என்ன சொல்ல?
சமையலும், வீட்டு வேலைகளும் இயந்திரத் தனமாய் வாழ்க்கையாகிப் போனதில் , நாளாக நாளாக அப்பாவின் குணத்தில் கமலா பொறுமையை இழக்க ஆரம்பித்தாள்..
""இங்கே பாருங்கள்.. உங்கப்பாவுக்கு சமைத்துப் போட என்னால் முடியாது.அவரை நல்ல வசதியான ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுங்கள். அங்கு எல்லோரும் சாப்பிடுவதுபோல் சாப்பிடட்டும்.. உங்களை மாதிரி யாரும் கெஞ்சிக் கொண்டிருக்க மாட்டார்கள்." என்று அடிக்கடி சொல்லத் தொடங்கி விட்டாள்.
சாதாரணமாகவே இப்பொழுது நிறைய இடங்களில் நடக்கும். தங்களைப் பெற்றவர்களை இப்படி பண்ணுவது போல் எங்கோ இல்லத்தில் விடும் கலாசாரம் எனக்கு நாராசமாகத் தோன்றும். இப்பொழுது என் அருமை அப்பாவையே என் அருமை மனைவியே இப்படிச்சொல்கிறாளே..அவளின் அந்தப் பேச்சு எனக்குப் பிடிக்கவேயில்லை. அவள் அப்படிச்சொல்லும்போதெல்லாம் என் மனம் பதறுகிறது.
எனக்கு ஒரு காபி போடக் கூடத் தெரியாது.அவளின் கஷ்டம் நன்றாகவே புரிகிறது.அதற்காக அவள் சொல்வதுபோல் செய்ய முடியுமா?
என் நெருங்கிய நண்பன் சூர்யாவிடம் என் மன வருத்தம்,அப்பாவின் போக்கு அதையொட்டிக் குடும்ப ப் பிரச்னை எல்லாவற்றையும் சொல்லி யோசனை கேட்டேன்..
""சந்துரு. உங்கப்பாவுக்கு உடம்பில் ஒன்றும் பிரச்னை இல்லையென்றாலும் , வயசானவர் தானே. ஒரு சைக்காலஜி டாக்டரிடம் காட்டிப் பார்க்கலாமே. அதை விட்டு ஏன் இப்படித் தவிக்கிறே'' என்று சூர்யா சொன்னான்.
"அடாடா ..இது நல்ல ஐடியா' என்னு சுறுசுறுப்பாய் செயல்பட்டேன். சூர்யா சொன்ன பேமஸ் டாக்டரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மறு நாளைக்கே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினேன்.
""டாக்டர் சார். என் அப்பாவுக்கு நான் அவரைப்பற்றி உங்களிடம் கன்சல்ட் செய்யும் விவரம் தெரிய வேண்டாம். அவருடைய பிரச்னை பற்றி எங்களிடம் மட்டும் கூறுங்கள்'' என்றும் கேட்டுக்கொண்டேன்.
""எதுக்குடா இப்ப டாக்டர் கிட்டே. எனக்கு உடம்புக்கு ஒன்றுமில்லையே..நான் நன்றாகத்தானே இருக்கேன்'' என்று அப்பா மறுத்தார்.
""அப்பா. வயசானவர்கள் ஒரு ஜெனரல் செக்கப் செய்து கொள்வது நல்லதாம். என் ஃபிரெண்ட் சூர்யா சொன்னான்ப்பா.அவனுடைய அம்மாவைக் கூட்டிப் போய் காட்டிட்டு வந்த டாக்டரிடம் உங்களையும் அழைத்துப் போகிறோம்' என்று சொல்லி சம்மதிக்க வைத்து, மறுநாள் கமலாவையும் வரச்சொல்லி முகக் கவசம், கைக் கவசம்எல்லாம் அணிந்து கொண்டு மூவருமாகச் சென்றோம்.
""என்னடா சந்துரு ,சைக்கியாட்ரிக்ஸ்னு போட்டிருக்கு. தப்பா வந்துட்டியா'' என்று க்ளினிக் வாசலில் காரிலிருந்து இறங்கும்போது, போர்டைப் பார்த்து விட்டு அப்பா இழுத்தார்.
""அப்பா.. இப்போ அத்தனை டாக்டர்களும் ரொம்ப பிசிப்பா. இவர் சாதாரணமாகவும் பார்ப்பாராம்'' என்று சூர்யா சொன்னான்.
""சரி சரி வாருங்கள். நம்ப டோக்கன் வந்துடுத்து'' என்று அப்பாவை மேற்கொண்டு ஒன்றும் பேசவிடாமல்...நுழைந்ததுமே ரிசப்ஷன் கவுன்ட்டரில் உட்கார்ந்திருந்த பெண்ணிடம் எங்கள் அப்பாயிண்ட்மெண்ட் விவரங்களைக் கூறி அவள் அனுமதியுடன் டாக்டரின் அறைக்குள் நுழைந்தோம்.
எங்களைப் பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டதுமே டாக்டர் புரிந்து கொண்டார்.
""சார் நீங்கள் இருவரும் வெளியில் இருங்கள். நான் பெரியவரை டெஸ்ட் பண்ணிவிட்டுக் கூப்பிடுகிறேன்'' என்று எங்களை வெளியேற்றினார்.
நானும் கமலாவும் டாக்டரின் அறையை விட்டு நோயாளிகள் காத்திருக்கும் ஹாலுக்கு வந்தோம். ஹால் கொஞ்சம் பெருசாகவே இருந்தது. நிறைய நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. சுமார் பத்து பேர் இருக்கும். மாஸ்க் அணிந்து இடைவெளிவிட்டு விட்டு உட்கார்ந்திருந்தனர்.
நானும் கமலாவும் அவர்கள் மாதிரியே உட்கார்ந்து கொண்டோம். ஓரமாக ஓர் ஆள். வரிசைப்படி நோயாளிகளை டாக்டரிடம் அனுப்புபவர் போலும். ஹாலின் வலது கோடியில் ஒரு டாய்லெட். சற்று தள்ளி ஒரு அறை. டாக்டரிடம் அப்பா என்ன சொல்வாரோ?
டாக்டர் நம்மிடம் என்ன சொல்வாரோ? எங்களை டாக்டர் கூப்பிடும் வரை ஒரு மாதிரித் தவிப்புடன் காத்துக் கொண்டிருந்தோம்.
நாங்கள் உள்ளே நுழைந்ததும் டாக்டர், ""பெரியவரே நீங்கள் டாய்லெட் போய் விட்டு வாருங்கள்..அதற்குள் இவர்களிடம் மருந்து
எழுதிக் கொடுத்து விடுகிறேன்'' என்று அப்பாவை உதவியாளருடன் அனுப்பி வைத்தவர், எங்களிடம் சொன்னார்.
""மிஸ்டர் சந்துரு உங்கப்பாவுக்கு உடம்பில் இந்தக் கோளாறும் இல்லை. ஹி இஸ் பெர்பெக்ட்ல்லி ஆல்ரைட். நீங்கள் கவலைப்படுகின்ற அவருடைய பிரச்னைக்கு வயசுக் கோளாறுதான் காரணம்''
""புரியலையே டாக்டர்'' என்றேன் குழப்பத்துடன்.
""வயதானவர்களுக்கு அம்னிஷியா,அல்சைமர். அப்படி இப்படின்னு சொல்வார்களே... கேள்விப் பட்டிருக்கிறீர்களா''
" "ஆளு, ஊரு கண் முன்னாடியே நடந்த நிகழ்வுகள்ன்னு எல்லாத்தையும் மறந்து மறந்து போயிடு
வாங்களே. அதானே டாக்டர். ஆனால் இவருக்கு துளியும் கூட அந்த மாதிரி மறதியெல்லாம் கிடையாது. தான் வேலை பார்க்கும் சமயம் ஆபீஸில் நடந்த தமாஷுக்கள், முக்கியமான நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் அவ்வப்போது நினைவு கூர்ந்து பேரன்களிடம் ஜாலியாக விவரிப்பார். கரண்ட் பில் எப்பொழுது கட்டணும், கேஸ் என்னிக்குத் தீர்ந்து போச்சுன்னு பக்காவா ஞாபகம் வைச்சுண்டு எங்களை அவர்தான் முடுக்கி விடுவார் டாக்டர். அதனால் அவருக்கு அந்த மாதிரி மறதிக்கு சான்ஸே கிடையாது'' என்று அவசர அவசரமாக நானும் கமலாவும் ஒருவரையொருவர் முந்திக் கொண்டு ஒரே சமயத்தில் சொல்லவும்,டாக்டருக்கு சிரிப்பே வந்து விட்டது.
" "கூல்.கூல் . .அதுமாதிரி உங்கள் அப்பாவுக்கு நாக்கில் மட்டும் மறதி வந்து விட்டது. நாக்கின் சுவையரும்புகள் களைப்படைந்து மரத்துப் போய்கிடக்கின்றன. ஆனாலும் விட்டுக் கொடுக்காமல் சின்ன வயசில் அவருடைய அம்மா சமையலின் சுவையை மட்டும் நினைவில் வைத்திருக்கின்றன. இனி இப்படித்தான் இருப்பார். நீங்கள் தான் பொறுமையாக அவருக்கு ஏற்றார் போல் அனுசரிக்கணும்'' என்று டாக்டர் முடிக்கக்கூட இல்லை.
""ஓ... அப்படியா... ஓ ..கே.. டாக்டர்... நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்..'' என்று பதில் சொன்னாள் கமலா. முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பின் பிரகாசம்...எனக்குத்தான் ஒன்றும் தெளிவு கிடைக்கவில்லை.
""மிஸ்டர் சந்துரு...கவலைப்படாதீர்கள்..உங்கள் மிஸ்ஸஸ் புரிஞ்சுக்கிட்டாங்க. அவங்க பார்த்துப் பாங்க..'' என்று எங்களுக்கு விடை கொடுப்பதுபோல் சொன்னார்.அதே சமயம், ""போலாமா சந்துரு'' என்று தவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார் அப்பாவும்.
" "சரி, வரோம் டாக்டர்'' என்று நாங்கள் எழுந்திருக்கவும், "" டாக்டர்கிட்டே மருந்துச் சீட்டு வாங்கி கொண்டாயா?'' என்கிறார் அப்பா ஞாபகமாக!
டாக்டரும் சிரித்துக்கொண்டே ,விட்டமின் மாத்திரைகள் பெயரடங்கிய பிரிஸ்க்ரிப்ஷனை என்னிடம் நீட்டினார்.
இப்பொழுதெல்லாம் எங்கள் வீட்டில் அந்த சாப்பாட்டு நேர டென்ஷன் இல்லவே இல்லை..
கமலா ஒவ்வொரு நேரமும் சமையல் தொடங்குவதற்கு முன்னால், ""பாட்டி அவியலுக்கு என்னென்ன காய்கள் சேர்ப்பார், பாட்டி,பொங்கலுக்கு பாசிப் பருப்பும் அரிசியும் என்ன ரேஷியோவில் கலந்து செய்வார்கள்'' என்று அப்பாவைக் கேட்டுக் கேட்டுச் செய்ய ஆரம்பித்தாள். சாப்பிடும்போது அப்பாவும் , ""கமலா. நீ சின்னவள் தானே ...பாட்டி டேஸ்ட் பிடிபட நாளாகும்'' என்று சொல்லிக் கொண்டே! பிடிக்கிறதோ பிடிக்கல்லியோ ஏதோ கொஞ்சம் சாப்பிடப் பழகினார்.
நானும் மனத்துக்குள் டாக்டருக்கு அடிக்கடி நன்றி சொல்லிக் கொண்டேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...