

அறைக் கதவை திறந்து கொண்டிருந்த மனோவிடம்...
""என்ன மனோ இப்பதான் வர்றியா?'' என்று கேட்ட வீட்டுக்கார அம்மாவிடம், ""ஆமாம் ஆண்டி...'' சொல்லியபடியே கதவை திறந்தான்.
""இந்தா உனக்கு ஒரு லெட்டர் வந்திச்சு... லெட்டரை நீட்டியபடியே ஆமாம் இந்தக் காலத்திலயும் யாருப்பா லெட்டருக்கு ஆதரவு கொடுக்கிறது?'' என்று சிரித்தபடியே கேட்டார்.
""ஊருலேயிருந்துதான் வந்திருக்கும். அப்பா போட்டிருப்பார்'' என்று சொல்லிக் கொண்டே லெட்டரை வாங்கியவன். முகவரியைப் பார்த்துவிட்டு, சொன்னான்.
""அப்பாகிட்டேயிருந்துதான்''
உள்ளே வந்த மனோ, யோசனையோடு லெட்டரை பிரித்தான், படிக்க ஆரம்பித்தான்.
படித்து முடித்ததும், சோகம் அவனை கவ்விக் கொள்ள..!
"என்ன செய்யப் போகிறேனோ' என்ற கவலையில் ஆழ்ந்தான். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, கையில் வைத்திருந்த கடிதத்தை மறுபடியும் படிக்க ஆரம்பித்தான்.
""அன்பு மனோவுக்கு,
அப்பா அநேக ஆசிர்வாதங்களுடன் எழுதிக்
கொண்டது. இங்கு எல்லோரும் நலம். உன் நலத்தை தெரியப்படுத்தவும். பாப்பா செல்விக்கு ஒரு மாதிரியாக மாப்பிள்ளை அமைந்துவிட்டது. அடுத்த முகூர்த்த நாளில் நிச்சயம் செய்துவிடலாம் என்று சொல்லிவிட்டார்கள். நல்ல இடமாகத்தான் தெரிகிறது. மாப்பிள்ளையும் நல்ல மாதிரிதான். நல்ல வேலையில் இருக்கிறார். எங்களுக்கும் மாப்பிள்ளையை ரொம்பவும் பிடித்துவிட்டது. தவறவிடக் கூடாது என்று தோன்றுகிறது.
பிரச்னை என்னவென்றால்... மாப்பிள்ளை வீட்டில் வரதட்சிணை எதிர்பார்க்கிறார்கள். நகை சவரன் 25-ம், ரொக்கம் ரெண்டும் எதிர்பார்க்கிறார்கள். நகையை சமாளித்துவிடலாம். பணம்தான் இப்பப் பிரச்னை.
அவர்கள் கேட்ட மாதிரி இல்லையென்றாலும்... குறைந்தது ஒன்றரையாவது நாம் செய்து ஆக வேண்டும். அப்படி, இப்படி என்று ஒரு ஐம்பதாயிரம் இங்கு புரட்டிவிடலாம். இன்னும் ஒரு லட்சம் நீதான் ஏற்பாடு செய்ய வேண்டும். ரொம்ப போராட்டத்துக்குப் பிறகு இப்பத் தான் அமையற மாதிரி இந்த இடம் வந்திருக்கு... இதுவும் போச்சுன்னா... சொந்தப் பந்தம் பேச்சுக்கு பதில் சொல்ல முடியாது. அதிலேயிருந்து தப்பிக்க ஒரே வழி எதாவது சாப்பிட்டு நாங்க மூணு பேரும் சாகிறதுதான். என்னடா இப்படி எழுதிருக்கேன்னு தப்பா நினைக்காத... சூழ்நிலை அப்படி. அதனால் எப்படியாவது பணத்தை ஏற்பாடு பண்ணிட்டு எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ? வந்து சேர். மறக்காத?''
இவ்வாறு கடிதம் முடிந்தது.
மறுபடியும் கவலையோடு சிந்திக்க ஆரம்பித்தான். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டிருந்தான். யாரிடம் கேட்பது. கேட்டால் கொடுப்பார்களா..? எவ்வளவுதான் மூளையை கசக்கி, கசக்கி யோசித்தாலும் என்ன செய்யலாம் என்கிற சரியான முடிவு அகப்படுவேனா என்று அடம் பிடித்தது.
கடவுளே எப்படியாவது நிலைமையை சரி செய்து, பிரச்னையிலிருந்து நல்லபடியாக வெளியே வர உதவி பண்ணு. மனதுக்குள் பலவாறாக குழம்பிக் கொண்டு அமர்ந்திருந்த மனோகரை... அப்போதே உள்ளே வந்த நண்பன் சுபாஷ் கேட்டான்.
""என்ன மாப்பிள்ளை சீக்கிரம் வந்துட்ட போலிருக்கு? எதாவது விசேஷமா?'' கலகலப்பாக கேட்டவன்.
மனோவின் சோகம் நிறைந்த முகத்தை பார்த்ததும்... ஏதோ விபரீதம் என்பதை உணர்ந்தவனாய்...
""என்ன மனோ...? எதாவது பிரச்னையா?''
பதில் சொல்ல முடியாதவனாய். கடிதத்தை அவனுக்கு நீட்ட. வாங்கி படித்த சுபாஷ் கேட்டான்.
""என்னடா செய்யப் போற?''
""அததான் இவ்வளவு நேரம் யோசிச்சுக்கிட்டு இருந்தேன். எதுவும் சரியா புலப்பட மாட்டேங்குது. இப்படி முடியாதவனா புலம்பறதவிட. செத்திடலாம்ன்னு தோணுது.'' என்று விரக்தியில் சொன்ன மனோவை கோபமாக பார்த்த சுபாஷ். அதே கோபத்தில் பேசினான்.
""அறைஞ்சிடுவேன், பைத்தியமாடா நீ... வந்த லெட்டரைப் பார்த்து ஒரு மணி நேரம் கூட ஆகல. இது விஷயமா என்ன தவிர யாரு கிட்டேயும் பேசல... அப்படி இருக்கிறப்ப... ஏதோ நிறைய முயற்சி எடுத்து... எதுவுமே நடக்காத மாதிரி. சாகப் போறேன்னு முட்டாள் தனமா பேசற. நீ
சாகணுங்கிறதுக்காகவா உனக்கு லெட்டர் போட்டு பணம் கேட்டுருக்காங்க. பையன் எதாவது செய்து பணம் ஏற்பாடு பண்ணிட்டு வந்து, நம்ம மானத்த காப்பாத்துவாங்கிற எண்ணத்தில உனக்கு கடிதம் போட்டா? நீ என்னடான்னா சாகப் போறேன்னு அறிவுகெட்ட தனமா பேசுற? வெட்கமா இல்ல.''
""நான் இப்ப இருக்கிற சூழ்நிலையில. எப்படிடா அவ்வளவு பணம் ஏற்பாடு செய்ய முடியும். என்ன நம்பி யாரு பணம் குடுப்பாங்க... சொல்லு. எனக்கு தெரிஞ்சது எல்லாம் நீயும்... உன் மூலமா அறிமுகமான சில நண்பர்களும்தான்'' என்று பரிதாபமாக கேட்டான் மனோ.
""அதுக்காக முட்டாள் மாதிரி முடிவு எடுப்பியா? கவலைப்படாத எதாவது ஒரு வழி கிடைக்கும். கண்டிப்பா கடவுள் கை விட மாட்டாரு. இப்ப கிளம்பு. வெளியே போய்... டீ சாப்பிட்டு வரலாம். யோசிக்கலாம். எதாவது சிக்கும்'' என்று உள்ளுக்குள் யோசனை இருந்தாலும் உற்சாகமாய் சொன்னான்.
அவன் பேச்சை கேட்டதும் ஏதோ மனம் கொஞ்சம் லேசா ஆனது போல் உணர்ந்தவனாய்... கொஞ்சம் திடப்பட்டவனாய் எழுந்தான் மனோ.
""சில வழிகள் சொல்றேன். எது வொர்க்அவுட் ஆகும்ன்னு சொல்லு'' என்று சுபாஷ் வரிசையாக வழிகளை சொல்ல ஆரம்பித்தான்.
""எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் வட்டிக்கு கொடுக்கிறாரு. அவருகிட்ட கேட்கலாம். ஆனா வட்டி ஜாஸ்தி.''
""வேணா. கடைசியா, வட்டிக்கு வாங்கிறத பத்தி யோசிக்கலாம். அடுத்து சொல்லு'' என்று இடை மறித்து சொன்னான் மனோ.
""நீ உன்னோட ஆபிஸ்ல கேட்கலாம்...''
""சரி... வேற...?''
""எதாவது பொருள். அதாவது நகை இருந்தா வச்சு பணம் வாங்கலாம்.''
""ம்கும். வேற...''
""வட்டி இல்லாமா நண்பர்கள்கிட்ட வாங்கறது...''
""இதான் சரியா வரும்ன்னு நினைக்கிறேன். பார்க்கலாம். எதா இருந்தாலும் ரெண்டு நாள்ல பணம் ஏற்பாடு செய்யணும். இல்ல பிரயோசனம் இல்ல.''
""கவலைப்படாத எல்லாம் நல்லபடியா நடக்கும்.'' சொன்ன சுபாஷை பார்த்து சொன்னான் மனோ.
""அந்த எண்ணத்திலதான் நான் நிம்மதியா இருக்கேன்.''
மறுநாள் ""எப்படி பணம் கேட்பது. கடிதத்தை அவரிடமே கொடுத்து படித்துக் கொள்ள சொல்லலாமா? இல்ல விஷயத்தை சொல்லி கேட்கலாமா...? கிடைக்குமா...? எப்படியோ பணம் கிடைக்க வேண்டும். பலவாறாக யோசித்து கொண்டிருந்த மனோவை!
""மேனேஜர் ஃப்ரி ஆயிட்டாரு. போய் பாருங்க.''
பியூன் வந்து சொல்ல, என்ன சொல்லப் போகிறாரோ என்ற டென்ஷனோட உள்ளே நுழைந்து... ஒரு மாதிரியாக விஷயத்தை சொல்லிவிட்டு அவரின் பதிலுக்காக பரிதாபமாக அவர் முகத்தையே நோக்கி கொண்டிருந்தான்.
""மன்னிச்சுடுங்க மனோ. உங்க சூழ்நிலை புரிஞ்சும் என்னால அவ்வளவு பணம் உதவி பண்ண முடியாது. நீங்க வெளியில எதாவது ஏற்பாடு பண்ணிக்கிங்க. தப்பா நினைச்சிக்காதிங்க. ஏதோ என்னால முடிஞ்சது.'' என்று அவனின் கையில் ஐந்தாயிரத்தை திணித்தார்.
""முடிஞ்சா திருப்பிக்கொடுங்க.'' என்றவரிடம், ""ரொம்ப நன்றி சார்.'' என்றவன் சோகத்தோடு வெளியே வந்தான்.
மறுபடியும் அதே நிலைமையா என்று பயத்தோடு யோசித்தவனை சுபாஷின் அழைப்பு கலைக்க!
""சொல்லுடா...'' என்று கேட்டவனை ""என்ன மாப்பிள? பணம் கேட்டியா? என்ன சொன்னாங்க?'' கேட்ட சுபாஷ்க்கு நடந்தவற்றை சொல்லி
விட்டு, ""இப்ப என்னடா செய்யறது?'' பதில் கேள்வி கேட்டான்.
""நீ எப்ப ஊருக்கு போகணும்?''
""நாளைக்கு''
""ரைட். கவலையை விடு... நாளைக்கு ஈவினிங் ஊருக்கு போறமாதிரி தயாரா வந்திடு. அங்கிருந்தபடியே புறப்படலாம். சரியா?'' என்று சொன்ன சுபாஷிடம்
""என்னடா சொல்ற?'' குழப்பமாக கேட்டான் மனோ.
""எதுவும் பேசாத.. நாளைக்கு நீ ஊருக்கு போற! நீ கேட்ட பணத்தோடு. சரியா?''
""சரி.'' நிறைய கேள்விகள் இருந்தாலும்... ஒற்றை வார்த்தையோடு முடித்துக் கொண்டான் மனோ.
மறுநாள் மாலை. தி.நகர். நண்பர்கள் வழக்கமாகச் சந்திக்கும் இடத்துக்குச் சென்றபொழுது, சுபாஷிடன் இன்னும் சில நண்பர்கள். அதில் சிலர் இவனுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள். அவர்களை நெருங்கினான் மனோ.
""வா மனோ. எல்லாரும் நம்ம நண்பர்கள்தான். இவங்கள உனக்கு ஏற்கெனவே தெரியும்'' என்று அறிமுகமானவர்களை விட்டுவிட்டு, மற்றவர்களை அறிமுகப்படுத்திவிட்டு, தான் வைத்திருந்த பையிலிருந்து பணக்கட்டை எடுத்து அவன் கையில் திணித்தான்.
""இதில நீ கேட்ட பணம் இருக்கு. ஊருக்கு போயி நிச்சயத்தை நல்லபடியா முடிச்சுட்டு வா...'' என்று உற்சாகமாக சொன்னான் சுபாஷ்.
திக்குமுக்காடி போனான் மனோ. திணறலாக கேட்டான். ""ஏதுடா...? எப்படிடா...?''
""விஷயத்தை பசங்ககிட்ட சொன்னேன். ஒவ்வொருத்தனும் எவ்வளவு முடியுமோ. கொண்டாந்து குடுத்திட்டானுங்க. பார்த்தா நீ கேட்டதவிட அதிகமாவே வந்திட்டது. கொண்டாட கொஞ்சம் பணம் எடுத்துகிட்டு, பாக்கிய அப்படியே உன்னுட்டு கொடுத்திட்டோம்... சரியா?''
""எப்படிடா இத நான் திருப்பி குடுக்கிறது?''
""ஜி.. மொதல்ல ஊருக்கு போயிட்டு வாங்க! குடுக்கலாமா, வேணாமா, எப்படி குடுக்கிறதுன்னு பேசிக்கலாம்'' என்று இடை புகுந்த நண்பன் ஒருவன் பேச, அவனுக்கு பதில் சொல்லாமல் எல்லோரையும் நோக்கி கண்ணீரோட கையெடுத்து கும்பிட ஆரம்பிக்க ""அடடா... ஓவரா செய்றானே'' என்ற சுபாஷ்.
""வா கிளம்பு.'' என்று பைக்கை ஸ்டார்ட் செய்ய-
எல்லோரையும் பார்த்து...
""போயிட்டு வர்ரேன்.'' சொல்லிவிட்டு பைக்கில் அமர்ந்தான் மனோ.
""ரொம்ப நன்றி சுபாஷ். நீ இல்லேன்னா... என்ன வேணுமானாலும் நடந்திருக்கலாம். மறக்க முடியாத உதவி... சான்úஸ இல்ல... நீயும் வந்தா... இன்னும் நல்லா இருக்கும்.''
""ஆபிஸ்ல டைட் ஒர்க். இல்லேன்னா கண்டிப்பா வந்திருப்பேன். எல்லாரும் கல்யாணத்துக்கு வந்து உண்டு இல்லேன்னு ஆக்கிடுவோம். சரி... நீ கிளம்பு. டிரைவர் உட்கார்ந்திட்டாரு.'' சுபாஷ் சொல்லவும். மனோ உள்ளே சென்று அமர்ந்தான். பஸ் புறப்பட்டது.
மறுநாள் மதியம் மணி பார்த்தார் மனோவின் அப்பா பக்கிரிசாமி. மூன்று இருபது.
""எத்தனை மணிக்கு வர்றதா அந்தத் தம்பி போன் பண்ணுச்சு?'' கேட்ட சாவித்திரியிடம்
""காலையில ஆறரை மணிக்கு பஸ் ஏறுனாப்லயாம். வந்திடுவாப்பல. வர்ற நேரம்தான்'' என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே. வெளியில் யாரோ தன் பெயரை சொல்லி விசாரிக்கும் சத்தம் கேட்க...
வெளியே வந்தார். ""என்ன பாண்டி? யாரு அது?''
""உங்களதான் பார்க்க வந்திருக்காரு மாமா'' என்று பதில் சொன்ன பாண்டி.
""அவருதான்.'' என்று தன்னருகே நின்றிருந்தவனிடம் சொல்ல... திரும்பியவன்... பக்கிரிசாமியை நெருங்கினான்.
""சார்... நான் சுபாஷ். மனோவோட நண்பன். அவன் அவசரமா... தவிர்க்க முடியாத வேலையா மும்பை போக வேண்டியதா போச்சு. அதான் என்கிட்ட பணத்த குடுத்து... உங்ககிட்ட ஒப்படைக்க சொன்னான்.'' என்றபடியே பணத்தை அவரிடம் கொடுக்க ""ரொம்ப நன்றிப்பா... மோசமான சூழ்நிலையா போச்சு. இல்லேன்னா அவனுக்கு அப்படி ஒரு கடுதாசி போட்டு இருக்க மாட்டேன். எப்படியோ பணம் வந்திட்டு. அவன் இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். அதான் அவனுக்கு பதிலா... நீ இருக்கியே... அது போதும்.'' எல்லாவற்றையும் அவரே சொல்லியபடியே பணத்தை வாங்கி கொண்டார்.
இரவு மணி பத்து... அவனுடன் பேருந்து நிலையம் வரை வந்த பக்கிரிசாமி...
""ரொம்ப நன்றிப்பா... எனக்கு நம்பிக்கையே இல்லப்பா... ஏன்னா அவன் யாருகிட்டேயும் உதவின்னு கேட்கவே மாட்டான். அவன் சுபாவம் அப்படி! ஏதோ கடவுள் அருளால பிரச்னையும் இல்லாம முடிஞ்சிட்டு'' உணர்ச்சிகரமாய் பேசினார்.
""பரவாயில்ல சார். நீங்க கிளம்புங்க. நான் போயிட்டு... மும்பையிலே இருந்து மனோ வந்தோன்ன பேச சொல்றேன்.'' என்று பஸ்ஸில் அமர்ந்தான். அவர் பார்வையிலிருந்து மறையும் வரை பார்த்து கொண்டே இருந்த சுபாஷின் கண்களை கண்ணீர் மறைத்தது. துடைத்து கொண்டான்.
மொபைலை எடுத்து, நம்பரைத் தேர்வு செய்து அழைக்க... தொடர்பு கிடைத்ததும்... கேட்டான்...
""மனோ எப்படி இருக்கான். ஒண்ணும் பிரச்னை இல்லையே?''
""நல்லா இருக்கான். தூங்கிகிட்டு இருக்கான். பணம் கொடுத்திட்டியா? எப்படி சமாளிச்ச?
""மும்பை போயிருக்கிறதா சொல்லி சமாளிச்சேன்.''
""சரி பார்த்து வா.'' சொன்னவனுக்கு
நன்றி சொல்லி மொபைல அணைத்துவிட்டு... மெல்ல சாய்ந்து கண்கள் மூட அதிகாலை நிகழ்வுகள் நினைவுக்கு வர ஆரம்பித்தன.
பக்கத்தில் வைத்திருந்த மொபைல் தொடர்ந்து அலறி கொண்டே இருக்க, விழித்த சுபாஷ் எரிச்சலுடன் எடுத்து, நம்பரை பார்த்தவன்.
"மனோ... இந்த நேரத்தில எதுக்கு...' என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டவனாய்...
""சொல்லு மனோ.'' பேசிய சுபாஷிடம்...
""சுபாஷா பேசுறிங்க?'' எதிர்புறம் பேசியவன் பதற்றத்தோட கேட்க... ஏதோ விபரீதம் என்று உணர்ந்தவனாய்... எழுந்து அமர்ந்து பேச ஆரம்பித்தான்.
""சொல்லுங்க... சுபாஷ்தான் பேசுறேன்.''
""நேத்து ராத்திரி உங்க நண்பர் மனோ டிராவல் பண்ண பஸ் கூடுவாஞ்சேரி தாண்டி விபத்துக்குள்ளாயிட்டு... ஸ்பாட்லேயே ரெண்டு பேர் இறந்திட்டாங்கா.''
""மனோவுக்கு என்னாச்சு?'' என்று தொடர்ந்தவனை இடை மறித்து கேட்டான் சுபாஷ்.
""சரியா தெரியல சார். இவ்வளவு நேரம் மயக்கத்தில இருந்தாரு. கொஞ்ச முன்னாடி
தான் உணர்வு வந்து பேசினாரு. அந்த கொஞ்ச நேரத்திலதான்... உங்கள பத்தி சொன்னாரு. நீங்க உடனே கிளம்பி வாங்க. எல்லா விவரமும் சொல்றோம்.'' என்று சொல்லிவிட்டு மொபைலை கட் செய்தார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆஸ்பத்திரியில் இருந்தான் சுபாஷ். மனோ மயக்கத்தில் இருந்தான்.
""நீங்கதான சுபாஷ்?'' என்று பக்கத்தில் இருந்தவன் கேட்க
""ஆமாம்.''
""வாங்க டாக்டர பார்க்கலாம்.'' கேட்டவன் நகர, தொடர்ந்தான் சுபாஷ்.
""டாக்டர் இவருதான் சுபாஷ். மனோகரனோட நண்பர்.''
தன்னை நோக்கி திரும்பிய டாக்டரிடம்...
""எப்படி டாக்டர் இருக்கான். ஒண்ணும் பிரச்னையில்லையே?''
""எதுவும் சொல்ல முடியாது. ஆனா ரொம்ப சிரத்தையா சிகிச்சை கொடுத்துக்கிட்டு இருக்கோம். கவலைப்படாதீங்க. அவர் நிதானத்தில இருந்தப்ப, சில விஷயங்கள் சொன்னாரு. அதோட இந்த பணத்தை உங்ககிட்ட கொடுத்து, உடனடியா உங்கள ஊருக்கு போயி பணத்தை அவங்ககிட்ட கொடுக்க சொன்னாரு. அவரோட தங்கச்சிக்கு நிச்சயதார்த்தமாமில்ல? அதனால எக்காரணத்தை கொண்டும் தவறக் கூடாதுன்னு சொல்லியிருக்காரு! போன் பண்ணிட்டு கிளம்ப சொல்லியிருக்காரு'' என்று சொன்ன டாக்டர் தயங்கிய சுபாஷை பார்த்தார்.
""யோசிக்காதிங்க சுபாஷ். இவ்வளவு நேரம். இத்தனை பேரையும் நாங்கதான் பார்த்துகிட்டோம். இனியும் பார்த்துக்குவோம். தைரியமா போயிட்டு வாங்க'' என்று திரும்பியவனை. ""ம். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்... விபத்து விஷயத்தை அங்க யாருக்கும் தெரியப்படுத்த வேணாம்ன்னு சொல்ல சொன்னாரு. சரியா?'' என்று டாக்டர் சொல்லி கேட்க....
""சரிங்க டாக்டர்...'' தைரியப்படுத்தி கொண்டவனாய் புறப்பட்டான் சுபாஷ்.
""பேருந்தின் திடீர் பிரேக்கினால், நினைவுகளிலிருந்து கலைந்த சுபாஷ். மணி பார்த்தான். அதிகாலை நான்கு. இன்னும் அரை மணி நேரத்தில் ஆஸ்பத்திரியை அடைந்து விடலாம் என்று நினைத்தவன்.
"கடவுளே விபரீதமா எதுவும் நடக்க கூடாது. நீதான் பார்த்துக்கணும்' என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டவனாய், உள்ளே நுழைந்து... மனோ இருந்த அறைக்கு விரைந்தான்.
வழியிலேயே எதிர்கொண்ட டாக்டர்.
""வாங்க சுபாஷ். ஊர்ல நிச்சயதார்த்தம் நல்லபடியா நடந்திச்சா?'' என்று கேட்டபடியே டாக்டர் முன்னே செல்ல... சுபாஷ் பின் தொடர்ந்தான். தன் அறைக்குள் நுழைந்த டாக்டர் அங்கே அமர்ந்து, சுபாஷையும் அமர சொல்ல!
""மனோ எப்படி இருக்கான் டாக்டர்?'' என்று கேட்டபடியே அமர்ந்தான்.
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த டாக்டர்...
மேஜை டிராயரை திறந்து... பணக்கட்டை அவன் முன் வைத்து...
""இதில ரெண்டரை லட்ச ரூபா இருக்கு... நீங்க உங்க நண்பர்கள்கிட்ட கடனா பணம் வாங்கிதான் மனோவுக்கு கொடுத்திங்களாமில்ல. அதையும், அப்புறம் அவங்க மேனேஜர் ஐயாயிரம் கொடுத்தாராம். அதையும் கொடுத்திட்டு... பாக்கி பணத்தை அவங்க வீட்ல கொடுத்திட சொன்னாரு.'' என்ற டாக்டரை
""அதெல்லாம் சரி... இந்த பணம் ஏது? மனோவுக்கு என்னாச்சு?''
பெருமூச்சு ஒன்றை விட்ட டாக்டர்...
""மனோ இப்ப இல்ல. நேத்து இரவு ஒரு மணி இருக்கும் ரொம்ப சீரியஸ் ஆயிட்டு, நாங்களும் ரொம்ப முயற்சி செய்தோம். முடியல'' என்று கலங்க ஆரம்பித்த கண்களை சரி செய்து கொண்டு... தொடர்ந்தார்.
""ஆனா ஒண்ணு சுபாஷ். மனோகர் மாதிரி ஒரு மனுசன பார்க்கிறத ரொம்ப ரொம்ப அபூர்வம். அதுவும் இப்ப உள்ள சூழ்நிலையில, வாய்ப்பே இல்ல. உயிர் பிழைப்போமா?, மாட்டோமாங்கிற அந்த மோசமான சூழ்நிலையிலும்... தன்னைப்பற்றி சிந்திக்காமா, பெத்தவங்க மானத்த காப்பத்தணும். தனக்கு உதவி செய்த நண்பர்கள் மற்றும் மேனேஜருக்கு சங்கடத்த ஏற்படுத்தாம, வாங்கின பணத்த கொடுக்க நினைச்சது. மனோகர் மாதிரி உயர்வான கேரக்டர நான் இப்பத்தான் பார்க்கிறேன். சினிமாவிலும் சரி; தொலைகாட்சியிலயும் தான் பார்க்கலாம்ன்னு நினைச்சிகிட்டு இருந்த ஒண்ண... நிஜமாக்கிட்டாரு மனோகர். கொஞ்ச நேரம் பழக்கம்தான்! ரொம்ப பாதிச்சிட்டாரு. எனக்கே இப்படின்னா? சாரி சுபாஷ்...''
""இந்தப் பணம் எப்படி?'' கலங்கியபடியே திணறலாய் கேட்டான் சுபாஷ்.
""ஒரு நிமிஷம்...'' என்றபடி உள்ளிருந்து அவனுடைய மொபைலை எடுத்து... ""என்னால சரியா சொல்ல முடியாது... அவரே இதில பேசி இருக்காரு கேளுங்க.'' என்று மொபைலை அவனிடம் கொடுக்க வாங்கிய சுபாஷ், கேட்க ஆரம்பித்தான். மனோ பேச ஆரம்பித்தான்! என்று திணறலாய் ஆனால் தெளிவாய்''
"சுபாஷ் அநேகமா இத நீ கேட்கிறப்ப, நான் இருக்க மாட்டேன். உள்ளுக்குள்ள தோணுது. அதான். டாக்டர்கிட்ட சொல்லிட்டேன். ஒரு வேளை எனக்கு எதாவது ஆச்சுன்னா? என்னோட உடல் உறுப்புகள எத, எத பயன்படுத்த முடியுமோ அதெல்லாத்தையும் எடுத்துக்க சொல்லிட்டேன். அதாவது கிட்னி, கண், இப்படி... அதற்கான பார்மாலிட்டிஸ் எல்லாத்தையும் முடிச்சிட்டேன். வீடியோவும் எடுத்தாச்சு! நாளைக்கு என்னால டாக்டருக்கு எதுவும் சிக்கல் வரக்கூடாதில்ல? வர்ற பணத்தில.. யார் யாருக்கு கொடுக்கணுமோ அவங்களுக்கெல்லாம் கொடுத்திட்டு, உன்னையும் சேர்த்துதான் சொல்றேன். பாக்கிய வீட்டுல கொடுத்திடு! கல்யாணத்துக்கு தேவைப்படும். அப்புறம் முக்கியமான விஷயம்! என்னைப்பத்தி எதுவும் சொல்லாத? எதாவது நம்பற மாதிரி காரணத்த சொல்லு. கல்யாணத்துக்கு எந்தத் தடங்கலும் வரக்கூடாது. சரியா? அப்புறம் ஒரு வேண்டுகோள். கல்யாணம் வரைக்கும் வீட்டோட டச்சில இரு! எதாவது உதவி செய்து கொடு. நான் இல்லங்கிற விஷயமே அவங்களுக்கு நினைப்பில வரக்கூடாது... செய்வ! இருந்தாலும் சொல்றேன். ஓகே நண்பா! நல்லபடியா என்ன எரிச்சிடு.. நன்றி...'
நிமிர்ந்த சுபாஷ் கலங்கியிருந்தான். எதுவும் பேச முடியாதவனாய் டாக்டரை பார்க்க... டாக்டரும் அதே நிலைமையில் இருந்தார். மெல்ல எழுந்து சுபாஷின் தோளை தட்டிக் கொடுத்துவிட்டு... வெளியேற மனோ... உண்மையிலேயே நான் உன் நண்பன்னு சொல்லிக்கிறதுக்கு ரொம்பவே கர்வப்படுறேன். என்று தனக்குள் சொல்லிக்கொண்ட சுபாஷ் நண்பர்களுக்கு விஷயத்தை சொல்ல ஆரம்பித்தான்!
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கதை இது
ராகவன் மாணிக்கம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் யார்யார்? முழு விவரம்!

நிதீஷ் குமார் இல்லம் முன்பு தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்! மாநிலங்களவை எம்.பி. ஆவதற்கு எதிர்ப்பு!!

ஒரு கப் டீ, ரெண்டு பிஸ்கெட்! உடலுக்கு நல்லதா? உண்மை என்ன?

தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் யார்? அறிவிப்பு வெளியீடு!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

