ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அரிசி தவிர்த்து ஆரோக்கியமாக வாழ முடியுமா? 

என் நண்பர் காலையில் பார்லி, இரவில் கோதுமை, மாலையில் பச்சைப்பயிறு, கறுப்பு கொண்டைக்கடலை என்றெல்லாம்  பயன்படுத்தி,  அரிசியைத் தவிர்த்து ஆரோக்கியமாக வாழ்கிறார்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அரிசி தவிர்த்து ஆரோக்கியமாக வாழ முடியுமா? 

என் நண்பர் காலையில் பார்லி, இரவில் கோதுமை, மாலையில் பச்சைப்பயிறு, கறுப்பு கொண்டைக்கடலை என்றெல்லாம்  பயன்படுத்தி,  அரிசியைத் தவிர்த்து ஆரோக்கியமாக வாழ்கிறார். இவற்றின் மருத்துவக் குணங்கள் என்ன? நானும் அதுபோலப் பயன்படுத்தி வாழ விரும்புகிறேன்.

விஜயசங்கர்,
காட்பாடி.

உடல் உட்புற வரட்சியை ஏற்படுத்தும் பார்லியினால், கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் , இதயம், ரத்த நாளங்கள் போன்ற பகுதிகளில் ஏதேனும் கொழுப்பு அடைப்பு ஏற்பட்டிருந்தால், அதனை முழுவதுமாக சுரண்டி எடுத்து வெளியேற்றும் திறனைச் செய்துவிடும். 

அப்படிச் செய்தாலும் உடலை சூடாக்காமல் குளிர்ச்சி அடையவே செய்கிறது. இனிப்புச் சுவையுடன் கூடியதும், செரிப்பதில் கடினமானதும் குடலில் நிறைய மலத்தை உற்பத்தி செய்து வெளியேற்றும் தன்மையுமுடையது பார்லி.

குடலில் வாயுவை அதிகம் ஏற்படுத்தும் என்பதால் வயிறு உப்புசம், ஏப்பம், கீழ்க்காற்று அதிக வெளியேற்றம் உடையவர்கள், பார்லியை சமைத்தவுடன் சூடாக இருக்கும் நிலையிலேயே சாப்பிட்டுவிட வேண்டும்.

சூடாறிய நிலையில், அதைச் சாப்பிட்டால் குடல் வாயு மிகவும் அதிகமாகி துன்பத்தை ஏற்படுத்தும்.

ஆண்கள் விந்தணுப் பெருக்கத்தை ஏற்படுத்தி உடலையும் உறுதியாக்கும். சிறுநீரகம் சார்ந்த அனைத்து உபாதைகளிலும், பார்லியைக் காலை உணவாக ஏற்பதன் மூலம்  நல்லதொரு பலனைச் சிறுநீரக உபாதையால் பாதிக்கப்பட்டவர்கள் பெறலாம்.

அதிகக் கொழுப்பு உடலில் சேர்ந்து, குண்டான நபர்கள், உடலை மெலிதாக்கலாம். சளியில் பித்தம் உறைந்து, மஞ்சள் நிறத்துடன், துர்நாற்றத்துடன் வெளியேறும் உபாதையிலும், பார்லியைக் காலை உணவாக ஏற்று குணம் பெறலாம். மூக்கிலிருந்து நீராக ஒழகும் நிலை, ஆஸ்துமா நோயாளிகள், இருமல் உபாதை, தொடை விரைப்பு போன்ற உபாதைகளில், மருந்தைவிட, பார்லி உணவானது விரைவாகச் செயல்படலாம்.

பார்லியிலிருந்து கோதுமை குணம் மற்றும் செயல்களில் பல இடங்களில் மாறுபடுகிறது. நெய்ப்பு எனும் தன்மையால், கோதுமையை உணவாகக் கொள்வதால், பூட்டுகளிலும், உட்புற உறுப்புகளிலும் நிறைய எண்ணெய்ப் பசையை உருவாக்கித் தருகிறது. 

மூட்டு வலி, அதை அசைப்பதால் ஏற்படும் சத்தம் போன்றவை கோதுமையினால் குறையும். பார்லியைப் போலவே, ஆண்களுக்கு விந்தணுப் பெருக்கம், குளிர்ச்சி, செரிப்பதில் கடினம் போன்ற குணங்களை கோதுமையிலும் காணலாம்.  வாயு பித்தங்களை நன்றாகக் கண்டித்து அவற்றை அடக்கும். உடைந்த எலும்புகளை விரைவாகக் கூட்டிச் சேர்க்கும். இனிப்புச் சுவை, உடல் வன்மையை மேம்படுத்தும். நல்லதொரு மலமிளக்கியாகும்.

பச்சைப் பயறு, கறுப்பு கொண்டைக்கடலை போன்றவை குடலில் வாயுவை அதிகப்படுத்தும் தன்மையுடவை. மலமிளகி பேதியாகும் நபர்களுக்கு இவையினால் மலக்கட்டு ஏற்படுத்தி குணப்படுத்தலாம். துவர்ப்பு மற்றும் இனிப்புச் சுவையுடையவை, சீரண இறுதியில் காரமான சுவையான மாறும் 
தன்மையுடையவை.

குளிர்ச்சி மற்றும் செரிமானத்தில் மிகவும் எளிதானவை. இவைகளை அரைத்து உடலின் மீது பற்றிட்டால், கொழுப்பினால் ஏற்படும் தோல் உபாதைகள் குணம் பெறும். தண்ணீரில் கலந்துக் காய்ச்சி,  உடலின் மீது ஊற்றினால் ரத்த பித்தம் எனும் கசிவு உபாதைகள் உடன் குணமாகும்.

அதனால் தங்களுடைய நண்பர் நல்ல உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்துதான் சாப்பிடுகிறார். அதற்காக அரிசியை அறவே ஒதுக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. நீங்களும் அவரைப் போலவே பயன்படுத்தி, பல நன்மைகளை அடையலாம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com