ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஆயுர்வேதத்தில் ஒழுக்கத்துக்கான அறிவுரைகள்..!

இன்றைய சூழலில் பள்ளி மாணவர்களுக்கு அந்த காலத்தில் இருந்தது போன்று ஒழுக்கத்துக்கான பாடவகுப்புகளை இப்போது அதிகம் சொல்லிக் கொடுக்க முடியாத நிலை உள்ளது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஆயுர்வேதத்தில் ஒழுக்கத்துக்கான அறிவுரைகள்..!
Updated on
2 min read

இன்றைய சூழலில் பள்ளி மாணவர்களுக்கு அந்த காலத்தில் இருந்தது போன்று ஒழுக்கத்துக்கான பாடவகுப்புகளை இப்போது அதிகம் சொல்லிக் கொடுக்க முடியாத நிலை உள்ளது. ஆயுர்வேதத்தில் ஒழுக்கத்துக்கான அறிவுரைகள் உள்ளதா? 

- கிருஷ்ணவேணி,
ஈரோடு.

'தினசரியை' எனும் அத்தியாயத்தில் ஆயுர்வேத நூலாகிய 'அஷ்டாங்கஹிருதயம்' பல நல்லஒழுக்கங்களைக் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அதிலிருந்து சில அறிவுரைகளை பள்ளியில் நீங்கள் பிள்ளைகளுக்கூ கூறலாம்.

தும்மல்,  சிரிப்பு, கொட்டாவி ஆகியவற்றில் முகத்தை மறைத்துகொள்வது நல்லது. 

பொது இடங்களில் மூக்கினுள் விரலை விட்டுக் குடைவது, தேவையில்லாமல் நிலத்தில் விரல் அல்லது குச்சியால் கோலம் போடுவது, ஒரே இடத்தில் வெகுநேரம் அமர்ந்திருப்பது போன்றவை தவிர்க்கப்பட வேண்டியது.

உடல், மனம், வாக்கு ஆகியவை சோர்வடையும் முன்னரே அவற்றை நிறுத்திவிடுவது, மூட்டை மடக்கி வெகுநேரம் அமராதிருத்தல், இரவு நேரங்களில் மரத்தினடியில் தங்கக் கூடாது, மூன்று அல்லது நான்கு சாலைச் சந்திப்பு, கோயில், பல நாள்கள் யாருமில்லாத பாழடைந்த கட்டடம் ஆகிய இடங்களுக்கு இரவில் செல்லாதிருத்தல், உடலை எரியூட்டுமிடம், புதைக்குமிடம் ஆகிய பகுதிகளுக்குப் பகலில் கூட செல்வதைத் தவிர்த்தல்.

சூரியனை அதிக நேரம் பார்க்கக் கூடாது. தலையில் பாரம் சுமக்கக் கூடாது. மிகச் சிறிய பொருள்கள், கொழுந்துவிட்டு எரியபவை, கீழ் கிடக்கும் அசிங்கமான  எச்சில், மலம், சிறுநீர், வாந்தி போன்றவற்றைப் பார்ப்பது தவிர்க்கப்பட வேண்டும்.  மதுபானத்தை விற்பது, தயாரிப்பது, தானமாகக் கொடுப்பது, குடிப்பது செய்யக் கூடாது.

கிழக்கிலிருந்து வரும் காற்றை உடலில் படுமாறு செய்யக் கூடாது.  அதிக சூடு, மூடுபனி, கடும் காற்று ஆகியவற்றைத் தவிர்த்திடல் வேண்டும். உடலை பல வகையில் வளைத்துத் தும்மல், ஏப்பம், இருமல், தூக்கம், உணவு, உடலுறவு ஆகியவை செய்யக் கூடாது.

எதிரி, சத்திரம், பொது இடம், மட்டமானவை போன்றவற்றிலிருந்து கிடைக்கும் உணவை உண்ணாதிருத்தல்.

வெளியே செல்லும்போது குடை எடுத்துச் செல்லுதல், காலணி அணிந்தே செல்லுதல், நடக்கும்போது கண் பார்வையை மூன்று மீட்டர் தூரம் வரை மட்டுமே பதித்து நடத்தல், மிகவும் தேவையிருந்தால் மட்டுமே இரவில் வெளியே செல்லுதல், அதுவும் தன்கூட ஒருவரை அழைத்துகொண்டும், கையில் தடியுடனும், தொப்பியுடனும் செல்லுதல் நலம்.

தினமும் குளித்தல், நறுமணத்துடனிருத்தல், தூய ஆடைகளையே அணிதல், ரத்தினக் கல், நன்மை தரும் மூலிகைகள் ஆகியவற்றை உடலில் எப்போதும் அணிந்திருத்தல், முடிந்தவரை மந்திர ஜபம் ஜபித்தல் ஆகியவை நல்லது.

தலைமுடியை சீராக வைத்துகொள்ளுதல், நகம் வளர விடாமல் நறுக்கி அழகாகவும், சுத்தமாகவும் வைத்துகொள்ளுதல், ஆண்கள் மீசை, தாடி போன்றவற்றை அதிகம் வளராமல் நறுக்கி சுத்தமாக வைத்திருக்கப் பழகுதல், கால் பாதம், மலத்துவாரங்கள் அழுக்குப் படியாமல் சுத்தமாக்கி வைத்திருத்தல் போன்றவை சொல்லிக் கொடுக்க வேண்டிய பள்ளி அறிவுரைகளாகும்.

மேலும் தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களை வெறும் கையுடன் திருப்பி அனுப்பலாகாது. அவர்களை அவமானப்படுத்துவதோ, இகழ்ச்சியுடன் பேசுவதோ கூடாது. தனக்கு நன்மை செய்யாதவர்களுக்குக் கூட நன்மை செய்ய வேண்டும். பிறருடைய உழைப்பை நினைத்துப் பொறாமை அடையலாம்.  ஆனால், அதனால் அவர் அடைந்த உயர்ந்த நிலையை எண்ணி பொறாமைப்படலாகாது.

மேற்குறிப்பிட்டவை அனைத்தும் ஒழுக்க நெறியாகத் தோன்றினாலும் அவற்றைக் கவனமாகப் பழகி வந்தால், உடலும் மனமும் ஆரோக்கியத்துடன் திகழும் என்பதை உணர வேண்டும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com