இயந்திர வாழ்க்கை..!

அலுவலகத்தில் இருந்தபடியே கமலாவைத் தொடர்பு கொண்டார் சீதாராமன். மனைவி தன் கைப்பேசியை எடுக்கவில்லை.
இயந்திர வாழ்க்கை..!

அலுவலகத்தில் இருந்தபடியே கமலாவைத் தொடர்பு கொண்டார் சீதாராமன். மனைவி தன் கைப்பேசியை எடுக்கவில்லை. "இன்னும் ஒருமுறை முயற்சி செய்யலாம்' என எண்ணுகையில் ஏஜிஎம் வர, அவரிடம் பேச ஆரம்பித்தார்.

அரை மணி நேரம் கழித்து அவர் கைப்பேசி ஒலிக்க, கமலா. எடுத்தார். "ஹலோ, ஒரு மீட்டிங்ல இருந்தேன்.என்ன விஷயம் சொல்லுங்க'' என்று சொன்னாள் கமலா, ஒரு கம்பனியில் ஏஜிஎம் ஆக இருப்பவள்.

"இல்லை கமலா, இப்ப நான் ஒரு மீட்டிங்குக்கு ரெடி ஆயிண்டு இருக்கேன்.அப்புறம் பேசறேன்'' என்று சொன்னார் சீதாராமன், ஒரு கம்பனியில் டீஜிஎம் ஆக இருப்பவர்.

ஒருமணி நேரம் கழித்து சீதாராமன் கைப்பேசியில் கமலாவைத் தொடர்பு கொள்ள, அது காலர் ட்யூனை இசைத்தபடியே இருக்க, அவருக்குப் பிடித்த பாட்டு "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே.. ..'' என்று கேட்டுக் கொண்டிருந்த வேளையில் சீனியர் சேல்ஸ் எக்ஸ்க்யூட்டிவ் அவர் அறைக்கு வர, கைப்பேசியை அணைத்துவிட்டு அலுவலக வேலையில் மூழ்கினார்.

இரவு எட்டு மணிக்கு அலுவலகத்திலிருந்து கமலா வீடு வந்தாள். சீதாராமன் ஹாலில் சோபாவில் அமர்ந்திருக்க, வந்து பொத்தென்று அருகில் அமர்ந்தவள் தலையைப் பிடித்துக் கொண்டு அப்படியே சாய்ந்து கொண்டாள்.

"என்ன ஆச்சு கமலா?''

"பயங்கர தலைவலிங்க. நீங்க ரெண்டாவது தடவை கால் பண்ணினபோது, இன்னொரு மீட்டிங்ல இருந்தேன். அப்புறம் கால் பண்ணலாம்னு பார்த்தேன். பயங்கர தலைவலி ஆரம்பிச்சுடுத்து. வீட்டுக்கு எப்படி வந்தேன்னே நினைவில்லை. நான் போய் படுத்துக்கறேன். என்னால எதுவும் சமைக்க முடியாது.''
"கல்பனா'' என்று கமலா தனது மகளை அழைக்க, "என்னம்மா?'' என்று கேட்டபடியே வந்தாள் .
"எனக்கு பயங்கர தலைவலிம்மா. மாத்திரை போட்டுண்டு அப்படியே படுத்துக்கப் போறேன். நீ டிபன் வேலையை கொஞ்சம் பார்த்துக்கறியா "ஷரத் எங்கே?'' என்று கேட்டு, படுக்கை அறைக்குள் நுழைந்தாள்.
"எங்கே இருப்பான். ரூம்ல இருக்கான்'' என்று சொல்லிவிட்டு, "என்ன சாப்பிடறேப்பா தோசையா?'' என்று கேட்டபடியே அப்பாவைப் பார்க்க அவர் "ஹலோ ஷ்யாம். டெல் மீ. வீ ஆர் வெரி பர்டிகுலர் அபெளட் தட் ப்ராஜக்ட்' என்று கைப்பேசியில் பேசிக் கொண்டே அவருடைய அறைக்குச் சென்று கொண்டிருந்தார்.
"நீ ஏதாவது சாப்பிடறியாம்மா?'' என்று கல்பனா தனது அம்மாவைக் கேட்க, "ஐயோ என்னால முடியலை. போய் படுத்துக்கறேன்'' என்று சொல்லியபடியே தனது படுக்கை அறைக்குச் சென்றாள். யோசனை முத்திரையில் சில நிமிடங்கள் அமர்ந்திருந்தாள் கல்பனா, சோபாவில்!
மறுநாள் காலை எழுந்து வந்தாள் கமலா. தலைவலி மறைந்திருக்க, பல் தேய்த்துவிட்டு கிச்சனுக்குள் நுழைந்தாள். குளித்துவிட்டு அலுவலக உடை போட்டுக் கொண்டு அலுவலகம் கிளம்ப தயாராக இருந்தார் சீதாராமன்.
"கமலா, காப்பி மட்டும் கொடு. நான் ஒரு க்ளயண்ட் ஆஃபீஸ் போயிட்டு அப்படியே கம்பனிக்கு போகணும். அதுதான் சீக்கிரம் கிளம்பிட்டேன். லஞ்ச் ஆபீஸ்ல பார்த்துக்கறேன்'' என்று சொல்லியபடியே காலில் ஷூவை மாட்டிக் கொண்டார். உடனே கிளம்பும் தோரணையில் காபிக்காகக் காத்திருக்கலானார் சோபாவில். இரண்டு நிமிடங்கள் கழித்து இரண்டு காபி கோப்பைகளுடன் கிட்டத்தட்ட ஓடி வந்த கமலா ஒன்றை அவர் கையில் கொடுத்து விட்டு இன்னொன்றை தான் எடுத்துக் கொண்டு அவர் அருகில் உட்கார்ந்தாள்.
"என்னவோ சொல்லணும்னுதானே ஃபோன் பண்ணினீங்க. என்ன விஷயங்க?''
"இப்ப பேச நேரம் இல்லை கமலா.'
அப்போது, சீதாராமனின் கைப்பேசி ஒலிக்க, "ஹலோ இர்ஃபான், இதோ கிளம்பிட்டேன்'' என்று சொல்லியபடியே காபி கோப்பையை கமலா கையில் கொடுத்துவிட்டு கிளம்பினார்.
"காபியைக் கூட முழுசா குடிக்கலையாம்மா?'' என்று கேட்டாள் கல்பனா.
"வேலை இருக்கு. ஓடறார். டீஜிஎம்முன்னா சும்மாவா. சம்பளம் கொட்டிக் கொடுக்கறானே. நானும் கிளம்பணும். நீ எப்ப கிளம்பணும். ஆமாம் ஷரத் எங்கே. எப்பப் பார்த்தாலும் ரூம்ல உட்கார்ந்து மொபைலை நோண்ட வேண்டியது. இன்னும் எழுந்திருக்கவேயில்லையா? நான் ஏதாவது சமைச்சுட்டு கிளம்பறேன். சமையலுக்கு ஒரு ஆள் போட்டுடலாம்னு பார்க்கறேன். என்ன சொல்றே கல்பனா. சரிதானே. ஒண்ணாம் தேதியில இருந்து சமையலுக்கு ஒரு மாமி ஏற்பாடு பண்ணிடறேன்!'' என்று கமலா சொல்லியபடியே கிச்சனை நோக்கி விரைந்தாள்.
அன்று இரவு சீதாராமன் கம்பனியிலிருந்து வரும்போது, மணி பத்து. கதவைத் திறந்துவிட்ட கமலாவின் வாயிலிருந்து வரிசையாக கொட்டாவி வந்தது.
"பயங்கரத் தூக்கமா கமலா. பசி பயங்கரமா இருக்கு. ஏதாவது சாப்பிட இருக்கா?''
"சாப்பிட்டு வரலையா. ஒண்ணுமே பண்ணலையே. தோசைதான் ஊத்தறேன்!'
"அம்மா நான் வார்த்துப் போடறேன். நீ போய் படு. ஷரத் துரை இன்னும் சாப்பிடலையே. எப்பப் பார்த்தாலும் கையில மொபைல். ஃப்ரண்ட்ஸோட அரட்டை. காலேஜ்ல என்ன படிக்கறானோ. பத்து மணி ஆச்சு. சாப்பாடைக் கூட மறந்துட்டு என்ன மொபைலோ?'' என்று கல்பனா புலம்பியபடியே சோபாவில் அமர்ந்தவள் அன்றைய செய்தித்தாளை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தாள்.
"நீ போய் குளிச்சுட்டு வாப்பா. நான் சூடா தோசை வார்த்துப் போடறேன்'' என்றாள் கல்பனா.
"என்னவோ சொல்லணும்னு நேத்தி ஆபீஸ்ல இருந்து சொன்னீங்க. இன்னும் சொல்ல முடியலை.இப்ப வேணும்னா சொல்றீங்களா!'' என்றாள் கமலா.
"பேசும்போதே கொட்டாவி விடறே. போய் படு. நாளைக்கு சொல்றேன். நாளைக்கு லீவுதானே'' என்று சீதாராமன் சொல்லிவிட்டு குளிக்க விரைந்தார்.
மறுநாள் காலை பத்து மணிக்கு கமலா சோபாவில் அமர்ந்திருந்தபோது, அந்த அறையில் நுழைந்தார் சீதாராமன். வரும்போதே கம்பனி விஷயமாக ஒரு கைப்பேசி உரையாடல் நடத்தியபடியேதான் வந்தார்.
"இப்பவாவது சொல்லுங்களேன் என்ன விஷயமுன்னு!'' என்று கமலா கேட்க ஆரம்பிக்க, அங்கு வந்த கல்பனா சோபாவில் அமர்ந்தாள்.
"இப்பதான் நேரம் கிடைக்கறதுன்னு நினைக்கறேன். நல்ல விஷயம்தான். கல்பனா கல்யாண விஷயம்'' என்று சொல்லியபடியே சீதாராமன், கல்பனாவைப் பார்த்தார்.
"அப்படியே ஏதாவது வரன் வந்திருக்கா. சொல்லுங்க'' என்று கமலா கணவரைக் கேட்க,, கல்பனா எழுந்து வேறு அறைக்குச் சென்று விட்டாள்.
" கல்யாண விஷயம் பேச ஆரம்பிச்சோம் இல்லையா? என்னதான் மாடர்ன் பெண்ணா இருந்தாலும் வெட்கம் இருக்கும்தானே. சொல்லுங்க!''
"ஒரு சூப்பர் வரன் வந்திருக்கு கமலா. எங்க க்ளையண்ட் கம்பனியில ஜீஎம்மா இருக்கார் சுந்தரம். அவரோட ஒஃய்ப் பத்மா ஒரு காலேஜ்ல மேத்ஸ் ப்ரொஃபஸர். அவரோட பெரிய பையன் ரோஹித், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சாஃப்ட்வேர் ப்ரொஃபஷனலா இருக்கான். சம்பளம் லாக்ஸ்ல. ரெண்டே பசங்க அவருக்கு.இங்கே மந்தவெளியில ஒரு பங்களா இருக்கு. சென்னையில ரெண்டு அபார்மெண்ட்ஸ், ஊருக்கு வெளியில ஃபார்ம் ஹவுஸ். இதைத் தவிர சவுத்ல லேண்ட் வேற இருக்கு அவங்களுக்கு. சின்ன பையன் இங்கே ஒரு ஐடி கம்பனியில ஒர்க் பண்ணறான். அவனும் இந்த வருஷத்துக்குள்ள யூ.எஸ். போயிடுவான்.நம்ம கல்பனாவைதான் அவரோட பெரிய பையனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு முடிவே பண்ணிட்டார். ரோஹித் கல்பனா ஃபோட்டோ பார்த்துட்டு டபுள் ஓகே சொல்லிட்டானாம்.''
"அப்படியா. ரொம்ப சந்தோஷமான விஷயமுங்க. இந்தச் சம்பந்தம் அமைஞ்சுட்டா. சூப்பரா இருக்குமே'' என்று சொல்லும்போதே கமலாவின் கண்கள் சந்தோஷ ஆச்சரியத்தில் விரிந்தன.
"அமைஞ்சா என்ன அமைஞ்சா. கல்பனா ஜாதகம் கொடுத்தேன். மேட்ச் ஆகிறது. கல்யாணம் ஃபிக்ஸ்ட்தான். இன்னிக்கு ஈவினிங் கல்பனாவை நேர்ல பார்க்க வர்றாங்க. ரோஹித் லீவுல வந்திருக்கான். அவனும் வர்றான்.''
"இன்னிக்கு ஈவினிங்கேவா. சூப்பர். சரி நான் ஏதாவது ஸ்நாக்ஸூக்கு ஏற்பாடு பண்ணறேன்'' என்று கமலா சொல்லியபடியே அறைக்குச் சென்று கைப்பேசியில் ஆன்லைனில் தின்பண்டங்கள் ஆர்டர் செய்யத் துவங்கினாள்.
அன்று மாலை சரியாக நான்கு மணி இருக்கும். அவர்கள் வீட்டு வாசலில் ஒரு வால்வோ கார் வந்து நிற்க, கோட்- சூட்டில் சுந்தரமும், ரோஹித்தும், பட்டுப் புடவையில் சுந்தரத்தின் மனைவி பத்மா. மூவரின் நடை மிடுக்கு இவர்கள் வீட்டுக்குள் நுழைந்தபோது, நவீன புன்சிரிப்பு உதிரிந்தது.
"வாங்க.. வாங்க..!'' சீதாராமன் சொல்லியபடியே மூவரையும் அமர வைத்துவிட்டு எதிர் சோபாவில் அமர்ந்தார்.
"உங்க சின்ன பையன் விஷ்வா வரலையா?''
"அவன் கம்பனி ப்ராஜக்ட் விஷயமா மும்பை போயிருக்கான். ஹீ ஈஸ் வெரி பிஸி'' என்றார் சுந்தரம்.
பின்பு சுந்தரம், சீதாராமன், கமலா மூவரும் தங்கள் தங்கள் நிறுவனங்களைப் பற்றி விளக்க, பத்மா தான் விரிவுரையாளராகப் பணிபுரியும் கல்லூரியைப் பற்றி விவரித்தாள்.
"சரி கல்பனாவைப் பார்த்துடலாமா?'' என்று பத்மா கேட்க, "பேஷா. நீங்க சொல்லணும்னுதான் காத்திண்டிருந்தேன்,. " கமலா... கல்பனாவை அழைச்சுண்டு வா'' என்று சொன்னார் சீதாராமன்.
கமலா உள்ளே செல்ல, ஐந்து நிமிடங்கள் கழித்து வர, அவளுடன் கல்பனா.
"இவங்களுக்கு நமஸ்காரம் பண்ணிக்கோம்மா'' என்று சீதாராமன் சொல்ல, கல்பனா அப்படியே அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.
"நோ ஃபார்மாலிட்டீஸ் சீதாராமன். மரியாதை மனசுல இருந்தா போதாதா! இப்படி உட்காரும்மா'' என்று சுந்தரம் சொல்ல, அருகில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள் கல்பனா.
பார்த்த மூவர் முகங்களிலும் திருப்தி என்றால் அப்படி ஒரு திருப்தி பளிச்சிட்டத்தை சீதாராமனும் கமலாவும் காணத் தவறவில்லை.
"எங்களுக்கு கல்பனாவை ரொம்பவே பிடிச்சுப் போச்சு. ரொம்ப பர்ஃபக்ட் ஜோடி. உடனே கல்யாணம் பண்ண ரெடி. நீங்கதான் சொல்லணும்'' என்று பத்மா சொல்ல, சுந்தரம் கல்பனாவைப் பார்த்தார்.
"ஏம்மா கல்பனா உனக்கு ரோஹித்தைப் பிடிச்சிருக்காம்மா. சொல்லு''
"ரோஹித்துக்கு என்ன அங்கிள். வெரி ஹாண்ட்ஸம். டால், நல்ல வேலை.கை நிறைய சம்பளம். ரோஹித்தை எந்த பெண் வேண்டாம்னு சொல்வா?''
"அப்ப சம்மதம்தான்னு சொல்லு.'
சுந்தரத்தைப் பார்த்த கல்பனா, "அங்கிள்.. எனக்கு ரோஹித்தைப் பிடிச்சிருக்குன்னுதான் சொன்னேன். ஆனா கல்யாணத்துல இஷ்டம் இல்லை!'' என்று சொல்ல அனைவரும் திடுக்கிட்டனர்.
"என்ன சொல்றே கல்பனா. என்ன திடீர்னு?'' என்று கேட்டார் சீதாராமன்.
"என்னடி.. என்னதான் சொல்ல வர்றே நீ.
விளையாடறியா? நல்ல வரன் தேடி வந்திருக்கு. இதைவிட்டா பயித்தியக்காரத்தனம் இல்லையா? ஓகே சொல்லு''' என்று மகளைக் கடிந்து கொண்டாள் கமலா.
"நோ. அப்படியெல்லாம் கோபமா கேட்காதீங்க. ஏம்மா கல்பனா. என்னம்மா சொல்றே. ரோஹித்தைத்தான் பிடிச்சிருக்குங்கறியே. பின்னே ஏன் இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்லைங்கறே. சொல்லும்மா.மனசுல எது தோணினாலும் சொல்லு. தயங்காம சொல்லு. எனக்கும் நீ பேசறது ஒண்ணும் புரியலை.'' என்று சொன்னார் சுந்தரம்.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த பத்மாவும் பேச ஆரம்பித்தாள்.
"இதோ பார்மா கல்பனா, நீயும் ஒர்க் பண்ணறே. பேங்கில். ஒரு ரெஸ்பான்சிபிள் பெண். காரணம் சொல்லு. நாங்களும் தெரிஞ்சுக்க வேண்டாமா? ஏன் இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்லைங்கறே? காரணம் சொல்லு இப்ப. மனசுல இருக்கறதைச் சொல்லு'' என்று ஒரு கல்லூரி விரிவுரையாளரின் லேசான கண்டிப்புடனே கேட்டாள் பத்மா.
"காரணம் சொல்லணுமா ஆண்ட்டி. வேண்டாம்னா விட்டுடக் கூடாதா?''
"பெண்ணோட விருப்பத்தையும் கேட்டுத்தாம்மா கல்யாணம் நிச்சயம் பண்ணனும். ஆனா காரணம் சொல்லு. நாங்க தெரிஞ்சுக்கணும்'' என்று சொன்னார் சுந்தரம்.
"சரி ஆண்ட்டி.கல்யாணம் எதுக்கு பண்ணிக்கணும்?''
இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை பத்மா என்று அவள் முகபாவம் சொல்லியது. முகத்தில் கேள்விக்குறியுடன் கல்பனாவைப் பார்த்தாள்.
"என்ன கேட்கறேம்மா?''
"பொதுவா வேண்டாம். நான் ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்?''
"கல்யாணம் எதுக்குன்னா! இப்ப உனக்கு அப்பா. அம்மா இருக்காங்க. அவங்க காலத்துக்கு அப்புறம்? தம்பி இருக்கான்தான். ஆனா உனக்குன்னு உன் வாழ்க்கையில ஒரு பிடிப்பு. கணவர், குழந்தைகள்!''
"தனியா வாழ முடியாதா?''
"வாழ முடியாதுன்னு இல்லை. திடீர்னு நமக்குன்னு யாருமே இல்லைன்னு ஒரு ஃபீலிங் வர ஆரம்பிச்சா, ஒரு வயசுக்கு அப்புறம். என்ன பண்ணுவே. உனக்குன்னு ஒரு குடும்பம் வேணும். இப்ப நீ இருக்கற குடும்பம்.நீ உன் அப்பா, அம்மா, உன் தம்பி இன்னும் சில வருஷம்தான். உனக்குன்னு ஒரு குடும்பம் வேணும்'' என்று பத்மா சொன்னதுதான் தாமதம், படக்கென்று
கேட்டாள் கல்பனா.
"இதைத்தான் எதிர்பார்த்தேன் ஆண்ட்டி. குடும்பம்னா என்ன?''
"குடும்பம்னா கணவன், மனைவி, குழந்தைகள். பெண்ணோ, பையனோ.. ..சில குடும்பங்களில் தாத்தா பாட்டி. இப்ப அது குறைஞ்சுடுத்துதான். இன்னும் அந்தக் காலத்துக்குப் போனா கூட்டுக் குடும்பம், அதெல்லாம் இப்ப இல்லை. ஹஸ்பண்ட் ஒஃய்ப், சில்ட்ரன். இதுதான் ஒரு குடும்பம்.''
""சரி ஆண்ட்டி. இப்ப எங்க வீடு மாதிரியே வைச்சுப்போம். ஏன் எங்க வீட்டையே எடுத்துக்குங்க. அப்பா அம்மா, நான் தம்பி.''
"என்ன டவுட்?''
"நாங்க நாலு பேரும் இந்த வீட்டுல ஒண்ணா இருந்தா அது குடும்பமா?'' என்று கேட்டாள் கமலா, பத்மாவின் முகத்தையே பார்த்தவாரே. ஒரு ப்ரொஃபசரான பத்மாவுக்கே கல்பனாவின் கேள்விக்கான அர்த்தம் என்ன என்று விளங்கவில்லை.
"உன் கேள்விக்கான அர்த்தம் எனக்குப் புரியலைம்மா. நீயே சொல்லு. இதுதான் குடும்பம். நீ என்ன நினைக்கறேன்னு எனக்கு விளங்கலைம்மா?''
"இதே மாதிரி ஒரு வீட்டுல நாலு பேர் அது யார் வேணும்னா இருக்கட்டும். ஒண்ணா இருந்தா அது குடும்பம் ஆயிடும் இல்லையா அப்ப?'' என்றாள் கல்பனா.
"அது எப்படிம்மா ஆகும். நீயே சுருக்கமா தெளிவா சொல்லிடு. ஏன் இந்தக் கல்யாணத்துல உனக்கு இஷ்டம் இல்லைன்னு'' என்று குறுக்கிட்டு சொன்னார் சுந்தரம். இதைக் கேட்டதுதான் தாமதம் தனது மனக்குமுறலைச் சொல்லத் தொடங்கினாள் கல்பனா:
"இல்லை அங்கிள். நாங்க நாலு பேரும் ஒரே வீட்டுல இருக்கோம். அவ்வளவுதான். ஒரு அரை மணி நேரம் கூட நாங்க நாலு பேரும் ஒண்ணா உட்கார்ந்து பேசினது இல்லைன்னா பார்த்துக்குங்களேன். ஏதோ ஒரு லாட்ஜ் மாதிரி இருக்கு. அப்பா அம்மா ரெண்டு பேரும் பிஸி. லீவு நாள்களில் கூட ஒர்க் ஃப்ரம் ஹோம். நானும் பேங்க்ல ஒர்க் பண்ணறேன்.தம்பி காலேஜ் போறான். கையில மொபைல் இல்லாம அவனை நான் பார்த்ததே இல்லை! 4 பேரும் தனித்தனியே அறைகளில்..! லீவு நாள்ல ஒரு ஓட்டல்.. ..ஒரு பீச், பார்க்குன்னு ஒண்ணா போறது கிடையாது. வெளியூர் டூரை நினைச்சுக் கூட பார்க்கறது இல்லை. ஒரே ஒரு வேளை நாலு பேரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடறது கூட இல்லை ஆண்ட்டி. எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன்.. கேட்கவே மாட்டேங்கறாங்க?'' என்று உணர்ச்சிப்பூர்வமாக வெளியிட்டாள் கல்பனா.
ஏறக்குறைய அழுதே விட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும்.
"சரிம்மா, உன் ஃபீலிங் எனக்குப் புரியறது. அதுக்கும் இந்தக் கல்யாணம் வேண்டாம்னு நீ சொல்றதுக்கும் என்ன சம்பந்தம்?'' என்று கேட்டாள் பத்மா.
"ரொம்ப சிம்பிள். உங்க பேமிலி மட்டும் என்ன ஆண்ட்டி. அங்கிள் பெரிய போஸ்ட்ல இருக்கார். நீங்க ஒரு காலேஜ்ல மேத்ஸ் ஹெச்.ஓ.டி. காலேஜே கதின்னு கிடப்பீங்க. இப்ப பாருங்க ரோஹித். பெண் பார்க்க வந்திருக்கற இடத்தில் கூட கம்பனி விஷயமா ஃபோன் பண்ண வேண்டிய கட்டாயம். கல்யாணம் பண்ணிண்டு அமெரிக்கா வேற போகணுமா? ரெண்டு பேர் மட்டும் அங்கே தனியா இருக்கணும். எங்க வீடு மாதிரியே! ஆளாளுக்கு ஒரு ரூம்ல உட்கார்ந்து மொபைலை நோண்டிண்டு இருந்தா, எதிர்காலத்துல அவங்க அவங்க தனியாவே வாழ்ந்துடலாமே!
என்னோட ப்ரண்ட் சுமதின்னு ஒருத்தி. அவ பாட்டிக்கு என்னை ரொம்ப பிடிக்கும். அவங்கக் காலத்தைப் பற்றி சொல்வாங்க! குடும்பம்னா அப்படி இருக்குமாம்.
வசதிகள் குறைவா இருந்திருக்கலாம். ஒவ்வொரு குடும்பத்துலயும் நிறைய குழந்தைகள். எல்லா உறவினர்களும் அடிக்கடி சந்திச்சுக்கறது, ஒரு பங்க்ஷன்னா எல்லாரும் அவ்வளவு சந்தோஷமா கலந்துப்பாங்களாம். ஒரு பண்டிகைன்னு வந்தா பக்கத்து வீடு எதிர் வீடு பக்கத்துத் தெருவுல இருக்கறவங்க.. ஒருத்தருக்கு ஒருத்தர் பட்சணங்களைப் பகிர்ந்துக்கிட்டு .. மனுஷங்க அப்படி ஒருத்தரோ ஒருத்தர் பேசி பழகி கூடி வாழ்ந்திருக்காங்களாம். வீட்டுக்குள்ளேயே நாலு பேர் இருந்தாலும் தனி மரம் மாதிரிதான் வாழணும்னா அதை நான் தனியா இருந்தே வாழ்துக்கறேனே. பொறுப்புன்னு ஒண்ணாவது இல்லாம இருக்கும்.நல்ல வேலைல இருக்கேன்.பேசறத்துக்குக் கூட ஆள் தயாரா இல்லைன்னா எதுக்குக் குடும்பம் ஆண்ட்டி. சொல்லுங்க! நீங்க இன்னிக்கு வர்றீங்கன்னு மூணு நாளா அப்பா, அம்மாகிட்டே சொல்ல ட்ரை பண்ணி இருக்கார். சொல்ல முடியலைன்னா பாருங்களேன் நிலைமையை! என்ன பணம் ஆண்ட்டி. யாருக்கு வேணும் இதெல்லாம்! நீங்க இன்னிக்கு என்னைப் பெண் பார்க்க வர்றதா காலையிலதான் சொன்னாங்க. முன்னாடியே தெரிஞ்சிருந்தா அப்பவே வேண்டாம்னு சொல்லி இருப்பேன். என்னை மன்னிச்சுடுங்க எல்லோரும். உங்களை இங்கே வரவழைச்சு இந்தப் பதிலை நான் சொல்லறத்துக்கு. என் அப்பா, அம்மாவையும் தயவு செஞ்சு மன்னிச்சுடுங்க.! என்னை மாதிரியே எண்ணம் இருக்கற ஒரு ஆள் கிடைச்சா நான் கல்யாண பண்ணிக்க ரெடி. அவங்க குடும்பத்துல எல்லாருக்கும் அதே எண்ணம் இருக்கணும். நாம கொஞ்சமாவது பழைய காலத்துக்குப் போய் வாழணும்னு தோணறது ஆண்ட்டி. சுமதியோட பாட்டி சொல்றதைப் பார்த்தா இந்த மொபைல் டி.வி., இதெல்லாம் இல்லாத அந்தக் காலம். மனிதனை மனிதன் நாடி விரும்பி பழகி கூடி வாழ்ந்த அந்தக் காலம் அதையெல்லாம் பார்க்க ரொம்ப ரொம்ப ஆசையா இருக்கு.ஆனா அது சாத்தியம் இல்லைங்கறது நிதர்சனமான உண்மை. ஆனா நாம நம்பளை கொஞ்சமாவது மாத்திக்கலைன்னா... இன்னும் அடுத்த தலைமுறையெல்லாம் என்ன இயந்திர வாழ்க்கை வாழப் போறதோன்னு நினைச்சா பயமா இருக்கு. எல்லாரும் மன்னிச்சுடுங்க. நான் சொல்றதுல தப்பு இருந்தா மட்டும் சொல்லுங்க. ப்ளீஸ்'' என்று கை கூப்பி கண்களில் கண்ணீர் மல்க அவள் நிற்க, அவள் வார்த்தைகளுக்கு பதில்தான் யாரிடமும் இல்லை.

அந்த அறையை அமைதி ஆக்கிரமித்துக்கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com