பேல் பூரி

'என்னங்க. ஒரு கிலோ, ரெண்டு கிலோ வாங்கின நீங்க, இப்ப அரை கிலோ, கால் கிலோ வாங்குறீங்க?''
பேல் பூரி

கண்டது


(திருச்சி சுப்பிரமணியபுரம் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள உணவகத்தின் பெயர்)

'தள்ளுவண்டி''

-சம்பத்குமாரி,
பொன்மலை.

(கடலூரில் அரிசிக் கடை ஒன்றில் எழுதப்பட்ட வாசகம்)

'பளபளப்பு அரிசி சாப்பிட்டா நம்ப ஆரோக்கியம் மங்களாயிடும்.''

-பி.பரத்,
தம்பரம்.

(கன்னியாகுமரி மாவட்டத்தில் சில ஊர்களின் பெயர்கள்)

'செட்டியார்மடம், வாணியக்குடி, ஆசாரிப்பள்ளம், வெள்ளான் விழை, வெள்ளாடச்சி விழை, நாவிதன் விழை, வட்டம், வட்டவிழை, வட்டக்கரை, வட்டக் கோட்டை.''

-கே.எல்.புனிதவதி,
கோவை.

கேட்டது


(திருச்சியில் ஒரு மளிகைக் கடையில் இருவர் பேசியது)

'என்னங்க. ஒரு கிலோ, ரெண்டு கிலோ வாங்கின நீங்க, இப்ப அரை கிலோ, கால் கிலோ வாங்குறீங்க?''
'ஏறிகிட்டு வரும் விலைவாசிக்கு ஏத்த மாதிரி சமையலை சுருக்கிட்டேன்.''

-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.

(காஞ்சிபுரத்தில் உணவகம் முன்பு நண்பர்கள் இருவர்..)

'ஏண்டா. இந்த ஓட்டலில் மட்டும் கூட்டம் அலை மோதுதே?''
'இங்கதான் தக்காளி தாராளமா போட்டு சாம்பார் வெக்கறாங்களாம்!''

--ஏ.மூர்த்தி,
திருவள்ளூர்.

(திருவாரூர் கூட்டுறவு நகரில் ஒரு வீட்டு வாசலில் தம்பதி பேசிக் கொண்டது)

'வீட்டுக்குள் நுழையும்போதே பருப்பு உருண்டை குழம்பு வாசனை தூக்குதே. ஒரு பிடி பிடிக்க வேண்டியதுதான்!''
'இது பக்கத்து வீட்டு வாசனைங்க. நம்ப வீட்டில் அகத்திக்கீரை தண்ணி சாறு மட்டும்தான் வச்சிருக்கேன்!''

-மு.தனகோபாலன்,
திருவாரூர்.

யோசிக்கிறாங்கப்பா!

உணவும் உணர்வும் ஓட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். நம்மை
அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் காரணிகள்.

-ஆர்.கே.லிங்கேசன்,
மேலகிருஷ்ணன்புதூர்.

மைக்ரோ கதை

மாதுவுக்கு (மாதவன்) பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வீட்டில் ஒரே பையன். நல்ல படிப்பும் வேலையும் இருந்தும், காலம் கடந்து போய் கொண்டிருந்தது.

கிராமத்திலிருந்துப் பாட்டி, தாத்தா வந்திருந்தனர். அவர்களுடன் மாதுவின் சித்தி பெண் கோமதியும் வந்திருந்தாள்.

மாது, அவன் தந்தை, தாத்தா, தங்கை கோமதி எல்லோரும் டி வி. பார்த்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தனர். அடுத்த அறையில் இருந்து மாதுவின் தாய், பாட்டியுடன் வந்து அமர்ந்து இவர்களுடன் பேச ஆரம்பித்தனர்.

அப்போது, டி .வி .சானலை மாது மாற்ற ஒரு பெண் நியூஸ் வாசித்துக் கொண்டிருந்தாள். அந்தப் பெண் நேர்த்தியாக புடவை உடுத்திக் கொண்டு , பார்க்க அழகாக இருந்தாள். மேலும் நின்று, நிதானமாக சரியான உச்சரிப்புடன் செய்தி வாசித்தாள். எல்லோரும் ரசித்து பார்த்தும் கேட்டும் கொண்டிருந்தனர்.
பாட்டி மட்டும் அந்த பெண்ணை சற்று நேரம் உற்றுப் பார்த்து விட்டு, 'மூக்கும், முழியும் லட்சணமாக இருக்கும் இந்த மாதிரி பெண்தான் மாதுவுக்கு சரியான ஜோடியாக இருப்பாள். விசாரித்து பாருங்களேன்'' என்றார்.

உடனே எல்லோரும் கொல் என்று சிரித்தனர். பாட்டிக்கு புரியவில்லை. செய்தி வாசித்த அந்த அழகிய மங்கை 'ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்' உதவியுடன் உருவாக்கப்பட்டவள்.

-மஞ்சுதேவன்,
பெங்களூரு.

எஸ்எம்எஸ்


வாழ்க்கையில் நம்மை அறியாமல் வரும்
சிரிப்புக்கும் கண்ணீருக்கும் என்றுமே மதிப்புகள் அதிகம்.

-தி.பச்சமுத்து,
கிருஷ்ணகிரி.

அப்படீங்களா!


வாட்ஸ் ஆப் தனது பயன்பாட்டாளர்களுக்காக புதிய சேவைகளை அறிமுகம் செய்துகொண்டே வருகிறது.
தகவல் பரிமாற்றத்துக்காக முதலில் எழுத்து வடிவில் தொடங்கிய சேவை, தற்போது ஆடியோ, விடியோ என பல்வேறு விதமான பைல்களை இணைத்து அனுப்ப உதவுகிறது. இதில் உலகில் வேகமாக பரவி வரும் சிறு விடியோ பயன்பாட்டை புதிய சேவையாக வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்துள்ளது.
உங்கள் சாட் பக்கத்திலேயே எப்படி ஆடியோ தகவலை பதிவு செய்து அனுப்புகிறோமா, அதுபோல், வலதுபுறத்தில் உள்ள விடியோ பொத்தானை அழுத்தி 60 நொடிகளுக்கு விடியோவை பதிவு செய்து அனுப்பலாம்.
முன்பு, பதிவு செய்யப்பட்ட விடியோவை இணைத்து அனுப்பும் வசதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது யாருக்கு விடியோ அனுப்ப வேண்டுமோ அவருக்கு அதிகபட்சமாக 60 விடிகளுக்கான விடியோவை அவரது சாட் பக்கத்துக்கு சென்று அங்கிருந்தபடியே அனுப்பலாம். இதில் பதிவு செய்யப்பட்ட விடியோ பிடிக்கவில்லை என்றால் அதை
உடனடியாக அழித்துவிடலாம்.
இப்படி அனுப்பப்பட்ட விடியோ அவரது அறிதிறன் பேசியில் தானாகவே இயங்கும்போது ஆடியோ இல்லாமலும், சாட் பக்கத்தில் இயங்கும்போது ஆடியோவுடனும் இயங்கும்.
பிறந்தநாள், ஜோக், நல்வாழ்த்துகளை போன்றவற்றை பிறருக்கு இந்த புதிய விடியோ வடிவில் அனுப்பி வைக்கலாம். இந்த புதிய சேவையைப் பெற வாட்ஸ்ஆப்பை அப்டேட் செய்ய வேண்டும். தற்போது குறிப்பிட்ட சில நாடுகளில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இந்தச் சேவையை வாட்ஸ்ஆப் விரைவில் விரிவாக்கம் செய்ய உள்ளது.

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com