நிலத்தாயும் நீரூற்றும்

அது ஒரு பிரம்மாண்டமான கல்லூரி. சுமார் மூன்று ஆயிரம் மாணவ,  மாணவிகள் படிக்கும்  அந்தக் கல்லூரியின் பெரிய வளாகம்  சென்னை அருகே தாம்பரம்- செங்கல்பட்டு மையத்தில் அமைந்துள்ளது.
நிலத்தாயும் நீரூற்றும்


அது ஒரு பிரம்மாண்டமான கல்லூரி. சுமார் மூன்று ஆயிரம் மாணவ,  மாணவிகள் படிக்கும்  அந்தக் கல்லூரியின் பெரிய வளாகம்  சென்னை அருகே தாம்பரம்- செங்கல்பட்டு மையத்தில் அமைந்துள்ளது. வானூயர கட்டடங்கள்.  மிகப் பெரிய கேட் வெளியேவும், உள்ளேயும் காவலாளிகள் மாணவர்களைப் பரிசோதித்துதான் உள்ளே அனுப்புவார்கள்.  அந்த இரு காவலாளிகள் வழக்கம்போல் கல்லூரியின் எதிர்புறம் சுமார் 90 வயதான பாட்டியை பார்த்து ஏதேனும் பேசிக் கொள்வார்கள்.  சுமார் மூன்று மாதங்களாக,  தினம்தோறும் வரும் அந்தக் கிழவி, ஒரு திட்டு மேல் அமர்ந்து கொண்டு கல்லூரியை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதும், சில மணிநேரம் கழித்து அங்கிருந்து கிளம்பி விடுவதும் வாடிக்கை.
இருவர்களுக்கும் அந்த கிழவி ஒரு புரியாத புதிர்தான்.
ஒருநாள் காலை, கல்லூரியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம். கூட்டமாக நின்று கோஷம் போட்டுக் கொண்டு வகுப்புகளைப் புறக்கணித்தனர். மாணவர்கள் அத்துமீறாமல் பார்த்து
கொள்ள ஆசிரியர்களும், காவலாளிகளும் துணை புரிந்தனர்.  பள்ளியின் தாளாளர் கந்தசாமிக்கு தகவல் அனுப்பப்பட்டது.  சுமார் 65 வயதான அவர்,  தனது இரு மகன்களுடன் கல்லூரிக்கு விரைந்தார்.  உள்ளே வந்து மாணவர்களைச் சமாதானப்படுத்தினார். அந்தக் கிழவியும் இதனை வேடிக்கை பார்த்துகொண்டுதான் இருந்தார். ஆனால், எந்தவித சலனமும் முகத்தில் இல்லை. வைத்த கண் எடுக்காமல் கல்லூரி வளாகம் முழுவதையும் வழக்கம்போல் இன்றும் பார்வையால் அளந்து கொண்டிருந்தார். 
உள்ளே வந்த கந்தசாமி மாணவர்களிடம் சமாதானம் பேசினார்.  
'ஹாஸ்டலில் தண்ணீர் வசதி இல்லை. இருக்கும் ஒரே கிணற்றில் தண்ணீர் வற்றிவிட்டது. தண்ணீர் லாரி மூலம் தண்ணீர் நிரப்பினாலும் மாணவர்களுக்கு தண்ணீர் போதவில்லை' என்று ஹாஸ்டல் மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து கல்லூரி நிர்வாகத்தினரை கெரோ பண்ண ஆரம்பித்தனர்.
'மறுநாள் போர்வெலுக்கு ரெடி பண்றேன்' என்று  உறுதிமொழி கொடுத்துவிட்டு நிர்வாகத்தினர் கிளம்பினர். 
 கல்லூரித் தாளாளர் கந்தசாமியின் காரை பார்த்து, எதிரே நின்ற கிழவி சாலையைக் கடக்க ஆரம்பித்தார்.  
காவலாளிகள், ''ஏய்! கிழவி வண்டியில் அடிபட்டு செத்துவிடாதே''  என்று கம்பை வைத்து மிரட்ட, பின்வாங்கினார்.  
''யாரது?''  என்று கந்தசாமி கேட்டார். 
''தெரியலை சார்.  இந்த மூன்று மாதமா இப்படிதான் நின்று கொண்டு கல்லூரியை வேடிக்கை பார்ப்பதும், பின்னர் கிளம்பிப் போவதுமாக இருக்கிறாங்க இந்தப் பாட்டி'' என்றனர்.  
கந்தசாமியை ஒரு புன்னகையுடன் பார்த்து கும்பிட்டாள். ஆனால் அவரோ கல்லூரிப் பிரச்னையில் அதனைக் கண்டு கொள்ளாது வண்டியை கிளப்பச் சொன்னார்.
மறுநாள் போர்வெல் மிஷின் நிலத்தைத் துளை போட ஆரம்பித்தது.  பொழுது சாயும் வரை ஓடியும் வெறும் தூசிதான் வந்தது.  தன் அலுவலகத்துக்கு வாட்டர் டிவனைரை வரழைத்தார்.  
''என்னய்யா ஆச்சு, நீ குறித்து கொடுத்த இடம் தானே!'' 
'' சார்! என் குறி இதுவரை தப்பியதே இல்லை. தண்ணீர் இருக்கும் அறிகுறியைக் காட்டியதால்தான் இந்த இடத்தைத் தேர்வு செய்தேன்.''
'' சரி மேலும் ஓர் இடத்தை தேர்ந்து எடுத்து இரவே போர்வெல் வேலையை ஆரம்பியுங்கள்''  என்றார் கந்தசாமி. 
வாட்டர் டிவைனர் மிகத் துல்லியமாக தனது மனோசக்தியை ஒன்று திரட்டி ஓர் இடத்தை தேர்வு செய்துகொடுத்தார். அன்று இரவே போர்வெல் வேலையை மீண்டும் ஆரம்பித்தனர்.
இரவெல்லாம் பணி நடைபெற விடியற்காலை கல்லூரி வளாகம் தூசி படர்ந்தது.  அந்தத் தூசிக்குள்ளும் கிழவி கண்களை சுருக்கிக் கொண்டு வைத்தக்கண் எடுக்காமல் கல்லூரியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.  கந்தசாமி மிகுந்த பதற்றத்துடன் கல்லூரிக்கு விரைந்தார். 
'என்னது! இரண்டு போர்வெல் இப்படி ஃபெயிலியர் ஆகிவிட்டதா?' என்று கந்தசாமி யோசித்தவாறே எந்த முடிவும் எடுக்க முடியாமல், யாருக்கு என்ன பதிலைச் சொல்வதென்று தெரியாமல் கல்லூரியை விட்டு வெளியே கிளம்ப ஆரம்பித்தார். அவர் கார் வெளியே வரும்பொழுது அந்தப் பாட்டியோ காவலாளியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அவர்கள் கம்பு கொண்டு, 'வெளியே போ'  என்று அதட்டிக் கொண்டிருக்க,  கந்தசாமியின் கார் அவர்களை நெருங்கியது என்னவென்று விசாரித்தார். 
''சார் காலேஜ் உள்ளே வரப் பார்க்கிறாள். உங்களைப் பார்க்கணுமாம். இப்படி இருக்கிற களேபரத்துல எப்படி சார் இங்கே நிற்க வைக்க முடியும்? அதுதான் விரட்டிக் கொண்டிருக்கிறோம்''  என்றனர் காவலாளிகள். 
''சரி...சரி பார்க்க பாவமாக  இருக்கிறது, அமைதியாகச் சொல்லி அனுப்புங்கள் அல்லது ஆபீஸ்ல கொஞ்சம் பணம் வாங்கிக் கொடுத்து அனுப்புங்க!''  என்றார். 
கார் மெதுவாக நகர்ந்தது. அந்தக் கிழவியின் ஏக்கப் பார்வை கந்தசாமியின் மனதை ஏதோ நெருடியது. கிழவியின் குரல் ஓங்கி ஒலித்தது. 
''ஐயா! உங்களைப் பார்க்கனும். ஏ.சி.  காருக்குள்ளேயும் அவள் குரல் தெளிவாகக் கேட்டது. 
''ஐயா நில்லுங்கள்! நான் ராமசாமி ஐயாவின் சம்சாரம் சீனியம்மாள்'' என்ற பாட்டியின் குரல் கேட்டு,  அதிர்ச்சியடைந்து காரை நிறுத்தச் சொன்னார் கந்தசாமி. 
கார் பின்னோக்கி வந்து மெயின் கேட்டை நெருங்கியது. 
கந்தசாமி காரைவிட்டு இறங்கி,  ''வணக்கம்மா'' என்றார்.
தன்னை நோக்கி பணிவுடன் கும்பிட்ட கந்தசாமியை மிகவும் பெருமையாகப் பார்த்தாள் அந்த கிழவி. கல்லூரியின் தாளாளர் கிழவிக்கு வணக்கம் சொல்லும் அளவுக்கு அந்தக் கிழவி யார் என்று அனைவரும் வியந்தனர். 
கடந்த மூன்று மாதமாக இந்தக் கல்லூரியின் வளாகத்தையே பார்த்து கொண்டிருந்த அந்த கிழவி யார்? என்று விடை தெரிய அனைவரும் காரை நோக்கி நகர்ந்தனர். 
பிரின்ஸிபால், அனைத்து பேராசிரியர்களும் வியப்புடன் அவர் அருகே நடந்து வந்தனர்.
'' ஐயா, எனக்கு 90 வயதுக்கு மேல் ஆச்சி.   நான் வாழ்ந்த இந்த பூமியை பார்க்கணும். ஆசையாக இருக்குய்யா?''  என்று வேண்டினார். 
''அவசியம் உள்ளே வாருங்கள்''  என்றார்.  கிழவி வீரநடை போட்டு கல்லூரிக்குள் நுழைந்தார். 
மாணவ, மாணவிகள் அனைவரும் மூன்று மாதமாகப் பார்த்து கொண்டிருக்கும் அந்தக் கிழவி கல்லூரி வளாகத்துக்குள் வருவதை வியப்புடன் பார்த்தனர். கிழவியின் நடை கம்பீரமாக மாறியது. கந்தசாமி, அவர்களின் இரு மகன்களும் உடன் சேர்ந்து கொண்டனர்.
படர்ந்த கல்லூரி வளாகத்தைப் பார்த்து,  ''இந்த இடத்தை பாருங்கையா?  இங்குதான் நெல் விளைந்தது. இதுதான் களம். அதோ பாருங்க, அங்குதான் நெல் அவிப்போம். இங்கு தண்ணீருக்கு பஞ்சமே இல்லைய்யா!'' என்றவுடன் எல்லோரும் நக்கலாகப் பார்த்தனர். கந்தசாமியின் மகன்களோ, ஏற்கெனவே தண்ணீர் இல்லாமல் கல்லூரி அவதிப்பட்டுக் கொண்டிருப்பதை நினைத்து கிழவியை அலட்சியமாகப் பார்த்தனர். 
''கந்தசாமி ஐயா இந்த கட்டடத்தில்தான் ஒருகாலத்தில் பசுக்களைக் கட்டிருப்போம். இங்கேதான் எங்கள் ஓட்டு வீடு இருக்கும். நானும் என் கணவரும், என் ஒரே மகள் செல்லத்தாயும் வாழ்ந்த இடம். செல்லத்தாய் கல்யாணம் ஆகிப்போகிற வரை பசுக்கள்தான் அவள் தோழிகள்.  இங்கு உள்ள மாமரத்தில்தான் ஊஞ்சல் கட்டி இருப்போம். இப்போ அந்த மரம் இல்லையே வெட்டிவிட்டீர்களா? இங்கே கொய்யா மரம் இருக்கும். வருஷம் முழுவதும் காய்க்கும், அதுவும் அதிர்ஷ்டமாக சிகப்புக் கொய்யா, வாங்கிட்டுப் போக வியாபாரிகள் வரிசையாக வருவார்கள். அதோ அந்த இடத்துலதான் ஒரு சாவடி இருக்கும். காமராஜர் அய்யா முதல்வரா இருக்கும்போது,  ஒரு தடவை இங்க வந்து இருக்கார். அப்ப இந்தச் சாவடில தான் அமர்ந்திருந்தார். நாங்க அதை ஒரு புனித இடமாகவே வச்சிருந்தோம். இப்ப அதுல என்னய்யா இருக்கு?'' என்றார் பாட்டி.
'' பெண் பிள்ளைகள் உபயோகப்படுத்துற இடமாக இருக்கு''  என்றார் கந்தசாமி.
'' என் மகள் செத்தே இருபது வருஷம் ஆச்சி, நான் இன்னும் எத்தனை நாள் இருக்கப் போறேன். சாகுறதுக்குள்ள நாங்கள் வாழ்ந்த இடத்தைப் பார்த்துவிட்டேன். ரொம்ப மகிழ்ச்சியா?  இங்கு கிணற்றுத் தண்ணீர் சுவையாக இருக்கும்யா?  கிணறு எங்கே?''  என பாட்டி கேட்க,  'எல்லோரும் சரிதான்.  இது பைத்தியம்'  என்று அங்கிருந்தோர் முடிவு கட்டினர். 
''அதுவாம்மா வாஸ்து படி அங்கே கிணறு இருக்கக் கூடாதுன்னு மூடிட்டோம்''  என்றார் கந்தசாமி.
''போங்கய்யா அந்த கிணற்றுத் தண்ணீயிலதான் பல தலைமுறையா இங்கு அரிசி, கம்பு, சோளம், கொய்யாமரம் வளர்ந்துருக்கு!''
கந்தசாமியின் இரு மகன்களும்  பாட்டியை நெருங்கி,  ''இந்தாங்கம்மா இங்க தண்ணீர் இல்லைன்னு மாணவர்கள் போராடுறாங்க?  இரண்டு போர் போட்டும் தண்ணீர் இல்லை.  நீங்கள் என்னடான்னா கிணறு, தண்ணீர் என்று பேசிட்டு இருக்கீங்க?  தயவுசெய்து கிளம்புங்க?''  என்று கடுமையாக பேசினர். இருவரையும் கந்தசாமி அமைதிப்படுத்தினார்.
''நீங்கள் சொல்லுங்க பாட்டி..''
''ஐயா! இந்த இடத்துல தண்ணீர் இல்லாமல் எப்படி இருக்கும்?  பல தலைமுறையாக எங்களுக்கு சோறு போட்ட இடம்யா?''
அப்பொழுது வாட்டர் டிவைனர்,  ''பாட்டி இந்த இடத்தை துல்லியமாக செக் பண்ணித்தான் இடத்தை கண்டுபிடிச்சு போர் போட்டோம்.  என் சர்வீஸ்ல நான் தோற்றுப் போனது இந்த இடத்தில்தான்!'' என்று  கந்தசாமி இடைமறித்து,  ''நீங்கள் என்ன சொல்லவாரீங்க பாட்டி, சொல்லுங்க?''  என்றார்.
''சொல்றேன் கேளுங்க. என் பூமியின் நீரோட்டம் எனக்கு தெரியாதா?  அதோ ஒரு மைல் தொலைவுல ஒரு சீமை கம்பெனி இருக்குதுல!. அதுதான் இங்கே மழைத் தண்ணீர் வரும் ஓடை. இப்ப அதுல கட்டடம் கட்டிட்டாங்க அதுதான் நீங்க தோண்டுற இடத்துல தண்ணீர் இல்லை. அந்தத் தண்ணீர் எந்தப் பக்கம் வாட்டம் மாறும்ன்னு எனக்கு தெரியும். அந்தக் கட்டடத்துக்கு வடக்கு பக்கம் கொஞ்சம் தள்ளி, அதிலிருந்து கிழக்கு பக்கமா கட்டடம் இல்லாத காலி இடத்தைப் பார்த்து கண்ணாலே கோடு போட்டுட்டு, இங்கே வாங்க, தலைமுறையா இருக்கும் தண்ணீர் வாட்டம் இந்த இடத்தில் எங்கோ ஒரு இடத்தில போய் சேரும் அது எந்த இடம்ன்னு கணக்குப் போட்டு பாருங்க?''  என்றார். ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.
பாட்டியே மனசுக்குள் கணக்குப் போட்டு அந்தச் சீமை கம்ப்யூட்டர் கம்பெனியில் இருந்து கண்ணை உருட்டி, உருட்டி, கையால் ஏதோ சைகை செய்து அப்படியே கல்லூரி வளாகத்துக்குள் கையை நீட்டிக் கொண்டே  ''இந்த இடம்தான்''  என்றார் புன்னகையுடன்.  ''இந்த இடத்தை தோண்டுங்கையா?'' என்றார் மேலும். 
அனைவரும் ஒருவருக்கொருவர் கிண்டலாகப் பேசிக் கொண்டனர். மாணவ, மாணவியர்கள் கூட ஏளனமாகப் பாட்டியைப் பார்த்தனர்.   ஆனால் பாட்டியோ,  அந்த இடத்தையே காண்பித்துக் கொண்டு சிறுபிள்ளை போல் 
பேசினார்.
தான் வாழ்ந்த தன் பூமியை, நெல் உற்பத்தி செய்து, ஊருக்கே பால் சப்ளை செய்த இடம் இன்று கிளப்புக் கடையாகவும், மகள் ஊஞ்சல் கட்டி விளையாண்ட மரம் இருந்த இடம் தற்பொழுது கரண்ட் அறையாக மாறியதைக் கண்டு வேதனை அடைந்தார். பசுக்கள் கட்டிய இடத்தில் ஆண்கள் கழிப்பிடமாக மாறியதைக் கண்டு மனம் வெதும்பினார். ஒவ்வொரு மாட்டுக்கும் பெயர் வைத்து அழைத்தது இப்பொழுது நினைவுக்கு வந்தது. நெற்களஞ்சியமாய் இருந்த இடத்தில் வானூயர்ந்த கல்லூரிக் கட்டடங்கள். 
கொஞ்சநேரம் அமைதிக்கு பின்னர், கந்தசாமியைப் பார்த்து,  ''ஆனாலும் எனக்குப் பெருமைய்யா, நாங்கள் மூன்று பேர் மட்டும் வாழ்ந்த இந்த பூமியில் இன்று எத்தனையோ ஆயிரக்கணக்கான பிள்ளைகளுக்கு கல்வி சொல்லிக் கொடுக்கிறீங்களய்யா அதுவும் எனக்கு பெருமைதான்!''  என்று நெஞ்சை நிமிர்த்தி கண்களில் பிரகாசத்துடன் சொன்னார். அது  கந்தசாமியின் மனதுக்கு ஆறுதலாக இருந்ததால்,  அங்கிருந்து நகர்ந்து அலுவலகத்துக்கு வந்தார்.
 ''வேண்டாம் சார், நமக்கு இன்னும் செலவுதான் ஆகும். மேலும் தோண்ட வேண்டாம்''  என தாளாளர் கந்தசாமிக்கு பேராசிரியர்கள்  அட்வைஸ் பண்ண, அவர் ஜன்னல் வழியே பாட்டியம்மாவைப் பார்த்தார். சிறுகுழந்தை போல் தான் வாழ்ந்த பூமியை ஒரு சந்தோஷத்துடனும், சிலநேரம் மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக் கொள்வதைப் பார்த்து சங்கடம் அடைந்தார். தண்ணீர் வருகிறதோ, இல்லையோ அந்த 90 வயது சீனியம்மாவின் மனசு வேதனைப்பட வேண்டாம்ன்னு போர்வெல்காரர்களை அழைத்தார். 
எல்லோரும் எதிர்த்தார்கள். ஆனால் அவர் உறுதியாக இருந்தார். போர்வெல் மீண்டும் செயல்பட ஆரம்பித்ததைக் கண்டு எல்லோரும் ஆவலில் கூடி 
விட்டனர்.
பலத்த இரைச்சலுடன் பூமியை துளைத்துக் கொண்டு துளைபோட ஆரம்பித்தது மிஷின். அப்பொழுது கந்தசாமியோ,  சீனியம்மாளைப் பார்த்தார். அவர் இந்தச் சத்தத்திலும் எந்தவித சலனமின்றி கல்லூரி வளாகத்தில் தன் இஷ்டத்துக்கு இங்கும்அங்கும் நடந்துகொண்டும் சில இடத்தைப் பார்த்து மனசுக்குள் சிரித்துக் கொள்வதும், சில நேரங்களில் வேதனையுடன் பார்த்துக் கொள்வதுமாக இருந்தார். 
போர் நூறு அடியை தாண்டியது. வெறும் தூசிதான். எல்லோரும் ஏதோ முடிவு தெரிந்தது போல் சர்வசாதாரணமாக இருந்தனர். இருநூறு அடியைத் தொட்டது. அதே தூசிதான். கசிவுக்கு கூட வழியில்லை. வாட்டர் டிவைனர், ''ஐயா நான் சொன்னது சொன்னதுதான். இனி வேஸ்ட், நிறுத்திக் கொள்ளுவோம்'' என்றார்.
போர்வெல் ஏஜென்டும், ''ஐயா இரண்டு இடத்தில் தோண்டி வீணாகிவிட்டது. இதோடு நிறுத்திக் கொள்ளலாம்''  என்றார். 
கந்தசாமிக்கு எல்லோரும் தன்னை சங்கடமாகப் பார்ப்பது கண்டு வேதனை அடைந்தார்.  மீண்டும் அந்த பாட்டியை ஜன்னல் வழியே பார்த்தார்.  மண்ணை கண்களில் ஒற்றிக் கொள்வதும், பின்னர் அதனை தன் முந்தானையில் முடிந்துக் கொள்வதையும் கண்டார். அவர்களிடம் தைரியமாகவே சொன்னார். ''ஓடட்டும், நிறுத்த வேண்டாம்'' என்றார்.
 வெகுநேரம் கழிந்தது. முந்நூறு அடியைத் தாண்டியது. கல்லூரி வளாகம் முழுவதும் தூசிதான். எல்லோரும் தன்னை ஏளனமாகப் பார்ப்பது போல் இருந்தது கந்தசாமிக்கு. திடீரென பலத்த ஓசையுடன்,  டங் டங்கென்று ஏதோ உடைவது போல் சத்தம்.  மிஷின் ஓட்ட முடியாத அளவுக்கு தண்ணீர் கொப்பளித்தது. மாணவர்கள் ஆராவாரம் செய்தனர். மாணவியர்கள் கை தட்டினர். எல்லோரும் பாட்டியை பார்த்தனர்.  
அவரோ அங்கே கிடந்த காலி பாட்டிலை எடுத்து பீச்சி அடித்த தண்ணீரைப் பிடித்து வாயில் ஊற்றினார்.  ''இதுதான், இதே தான் அதே சுவை, கடவுளே! இந்த தண்ணீரைத்தான் எத்தனை  ஆண்டுகள் குடித்து வாழ்ந்தேன்.  முப்பது ஆண்டுகளுக்குப் பின்பு நாங்கள் வாழ்ந்த இந்தப் பூமியின் தண்ணீரை குடித்துவிட்டேன்''  என்று ஆனந்தக் கண்ணீர் வடித்து பாட்டிலையும் கையில் எடுத்துக் கொண்டார்.        
'பிரச்னை இனி இல்லை.  தண்ணீருக்கு பஞ்சம் இருக்காது'  என்று அனைவரும் வெற்றிக் கூச்சல் இட்டார்கள். கந்தசாமி பெருமிதத்துடன் கண் கலங்கி,  பாட்டிக்கு நன்றி சொல்ல, அவரை அந்த வளாகத்தில் சுற்றும் முற்றும் தேடினார்.  எங்கும் காணவில்லை. எங்கே போயிருப்பார்?
'இன்றும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.  இராமசாமி பெரியவர் எனக்கு கிரையம் பண்ணிக்கொடுக்கும்போது,  ''இந்தப் பூமியை என் தாத்தா காலத்தில் இருந்து பிள்ளை போல் காத்து வந்தோம்யா. ஏதோ கஷ்டகாலம் நிலத்தை விற்கிறேன்யா?  பசு மாட்டை விற்றால் கூட என் மனைவி, மகள் ஒரு வாரம் தூங்க மாட்டார்கள். எல்லாம் நல்லா இருக்கும்யா?'  என்று கைநாட்டை வைத்ததை கந்தசாமி நினைத்துகொண்டார்.
 இதே சீனியம்மாள் பாட்டி, அன்று அறுபது வயது இருக்கலாம். முந்தானையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டதும், அவருடைய நாற்பது வயது மகள் அம்மாவைத் தேற்றுவதையும் மனக் கண்ணில் கொண்டு வந்தார். தன் கண்களில் தானாக வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்தார்.
' எங்கே போயிருப்பார்?'  என்று  காவலாளிகளிடம் கந்தசாமி கேட்டார், அவர்களோ, ''பார்க்கவில்லை''  என்றனர். 
மனதில் ஒருவித கலக்கத்துடன் தன் கல்லூரியைச் சுற்றி உள்ள வானூயர்ந்த கட்டிடங்களைப் பார்த்தார். 
விளைநிலங்கள் இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞான வளர்ச்சியும், தொழிற்வளர்ச்சியும் அதனை சார்ந்த வேலைவாய்ப்புகளும் தவிர்க்க முடியாததே!  என்று தன்னைத்தானே சமாதானப்படுத்தி மனதை தேற்றிக்கொண்டார்.  நாள்கள் பலவாகினும் இன்றும் அவரைத் தேடுகிறேன், ஆனால் சீனியம்மாள் பாட்டி, தான் வழக்கமாக அமரும் அந்த இடத்திற்கு இன்றுவரை மீண்டும் வரவே இல்லை. 
தான் வாழ்ந்த பூமியின் நீரோட்டத்தை கண்ணாலே அளந்து கல்லூரி வளாகத்தில் நீரின் வாட்டத்தை கண்டுபிடித்த சீனியம்மாள் பாட்டி, தன் மண்ணின் உயிரோட்டத்தை நெஞ்சில் இன்றுவரை சுமந்துகொண்டு எங்களிடையே தோன்றி, பின்னர் மறைந்து போன அந்த பாட்டி கந்தசாமிக்கு பூமாதேவியாகவே காட்சியளித்தார்.    
சென்னையின் இன்றைய வெள்ள அவலநிலைமைக்கு இந்த மாதிரியான தண்ணீர் பாய்ந்தோடும் நிலங்கள் வானுயரக் கட்டடங்களாக மாறியதும் ஒரு காரணம் என்றும் மனதில் நினைத்துக் கொண்டார் 
கந்தசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com