பேல் பூரி

மழைக்கு ஆதாரம் மரங்கள். அதை இனியாவது நடட்டும் நம் கரங்கள்
பேல் பூரி

கண்டது

(தருமபுரியில்  இளைஞர்கள் அணிந்திருந்த டி சர்ட்டில் எழுதியிருந்தது)

''மழைக்கு ஆதாரம் மரங்கள். அதை இனியாவது நடட்டும் நம் கரங்கள்''

மா.பழனி,
கூத்தப்பாடி.

(ஈரோட்டில் உள்ள ஒரு டீக்கடையில் எழுதியிருந்தது)

''பருகும் நீர், சாப்பிடும் உணவு, சம்பாதிக்கும் பணம் அனைத்திலும் அனைவரின் உழைப்பும் உள்ளது. 
தன்னலம் கொள்ளாதே!

கருங்கல்பாளையம் பி.செல்வம்,
ஈரோடு.

(விழுப்புரத்தில் ஓடிய ஆட்டோ ஒன்றில்...)

''உங்களின் வழிச்செலவு ; எங்களின் வாழ்க்கைச் செலவு''

ம.வசந்தி,
திண்டிவனம்.

கேட்டது


(திருச்சியில் உள்ள ஓர் வங்கியில்..)

''காரை வித்துட்டு டூ வீலர் வாங்கினதா சொன்னீங்களே?''
''ஆமாம். இப்போ அதையும் விற்கப் போறேன்!''
''ஏன்?''
''ரோட்டில் நடக்கற விபத்துகளைப் பார்க்கும்போது, நடந்து போறதுதான் பாதுகாப்பு!''

அ.சுஹைல்ரஹ்மான்,
திருச்சி.

(சிதம்பரம் பேருந்து நிலையத்தில்..)

''என்ன மச்சான். சோஷியல் மீடியா பக்கமே உன்னை  காணோம்?''
''இல்லடா. இப்போதான் மனசு ரிலாக்ஸா இருக்கேன்! விட்டுடு!''

-பி.கவிதா,
சிதம்பரம்.

(திருத்துறைப்பூண்டியில் உள்ள ஓர் திரையரங்க வாசலில் இருவர் பேசியது)

''இந்தக் காலத்தில் நீதி, நியாயத்தை எங்கே பார்க்க முடியுது?''
''சினிமாவில்தான் பார்க்க முடியும். அதுவும் கிளைமாக்ஸில்தான்!''

மு.பெரியசாமி,
விட்டுக்கட்டி.


யோசிக்கிறாங்கப்பா!


சத்தியம் எனும் தாய். ஞானம் எனும் தந்தை. தர்மம் எனும் சகோதரன். கருணை எனும் நண்பன். அமைதி எனும் மனைவி. பொறுமை எனும் புதல்வன் கொண்ட குடும்பம் சொர்க்கத்துக்குச் சமம்.

மல்லிகா அன்பழகன்,
சென்னை78.

மைக்ரோ கதை


காலையில் வந்த நாளிதழை ஓரம்கட்டிவிட்டு, கையில் இருந்த டெப்லெட் மூலம் செய்திகளைப் படித்துகொண்டிருந்தார் ஹரி. அப்போது மூச்சிறைக்க சமையல் அறையிலிருந்துவெளியே வந்தாள் அவரது மனைவி அகல்யா.  
''அத்தான். உங்க பக்கத்துல இருக்கிற பேப்பரை சீக்கிரமா எடுத்துதாங்க! எனக்குத் தேவை'' என்றாள். 
இதற்கு நக்கலடித்த ஹரி,  ''உலகம் எங்கேயோ போய்கிட்டு இருக்கு. இன்னும் பழைய பஞ்சாங்கமாவே இருக்கியே! பேப்பரைவிட்டுட்டு பாரினில் இருந்து நான் வாங்கி வந்த டேப்லெட்டை யூஸ் பண்ணிப் பாரு! அசந்து போயிடுவே!'' என்றான் ஹரி.
அவன் நீட்டிய டேப்லெட்டை வாங்கிக் கொண்டு, சமையல் அறைக்குள் ஓடினாள் அகல்யா. சில விநாடிகளில் 'தொம்.. தொம்..' என்று சத்தம் கேட்டது.  பதறி வீட்டினுள் ஓடிய ஹரி, அங்கு சந்தோஷமாய் அகல்யா நின்றிருந்ததைப் பார்த்தான்.
''நீங்க சொன்ன மாதிரி உங்க டேப்லெட் சூப்பரா யூஸ் ஆகுது. நானே அசந்துபோயிட்டேன்.  இத வச்சி ஓங்கி அடிச்சதும் ஒரே அடியில் கரப்பான் பூச்சி சுருண்டு செத்து போச்சு'' என்றாள் அகல்யா.
என்ன சொல்வது என்று தெரியாமல் ஹரி திடுக்கிட்டு நின்றான்.
அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

எஸ்எம்எஸ்


பறக்க முடியாதபோது ஓடுங்கள். ஓடமுடியவில்லை என்றால் நடங்கள். நடக்க முடியவில்லை என்றால் தவழுங்கள். 
எப்படியாவது முன்னேறிக் கொண்டே இருங்கள்.

இதயக்கனி பாரூக்,
திருநெல்வேலி.

அப்படீங்களா!


வாட்ஸ் ஆப்பில் புதிய சேவையாக தெரியாத நபர்களிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை சைலண்ட் மோடில் வைத்துகொள்வது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தகவல் பரிமாற்றத்துக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்ஆப்பில் கூடுதல் சேவையாக தொலைபேசி அழைப்புகளும் இணைக்கப்பட்டன.  இணைய உதவியுடன் மேற்கொள்ளப்படும் இந்த அழைப்புகள் பெரும்பாலும் வணிக ரீதியிலும், தெரியாத நபர்களிடம் இருந்து வருகின்றன. இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் தொல்லையாக அமைகிறது. அதுமட்டுமல்லாமல் இதுபோன்ற அழைப்புகளை தெரியாமல் ஏற்பவர்கள் பல்வேறு மோசடிகளில் சிக்கிக் கொள்கிறார்கள். இதைத் தடுக்க தெரியாமல் வரும் அழைப்புகளை எந்தவித அறிவிப்புமின்றி அமைதியாக வைக்கும் சைலண்ட் மோட் சேவை அறிமுகமாகி உள்ளது. தொலைபேசி மணி அடிக்கவில்லை என்றாலும் அழைப்புகள் வந்த பட்டியலில் விவரம் தெரிந்து கொள்ளலாம்.

இந்தச் சேவையை தேர்வு செய்ய வாட்ஸ்ஆப்பில் வலது மேல்புறம் உள்ள மூன்று புள்ளிகளைத் தேர்வு செய்து, செட்டிங்ஸ்  பிரைவஸி  கால்ஸ்  சைலன்ஸ் அன்நோன் காலர்ஸ் தேர்வு செய்ய வேண்டும். 

இதற்கு முன்பு உங்கள் கைப்பேசியில் உள்ள வாட்ஸ்ஆப்பை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். 

இதே போல், பயன்பாட்டாளரின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கவும், தகவல் பரிமாற்றத்தை ரகசியமாக வைக்கவும் உதவும் பிரைவஸி செட்டிங்ஸில் என்ன என்ன தேர்வு செய்யப்பட்டுள்ளன என்பதை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் பிரைவஸி செக்கப் என்ற புதிய சேவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்குள் சென்று நாம் தேர்வு செய்து வைத்துள்ள வாட்ஸ்ஆப் பாதுகாப்பு சேவைகளை தெரிந்து கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் இதுபோன்ற சேவைகளை தெரிந்து கொண்டு வாட்ஸ்ஆப்பை பாதுகாப்பாக  பயன்படுத்தி பயன் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com