பெத்தமனம்

கேசவன் இன்னும் வராதது வடிவேலுக்கு வியப்பாக இருந்தது.  அப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போதே விழுப்புரத்துக்குச் செல்லும் ஆறு மணி பாசஞ்சர் வண்டி செல்லும் சத்தம் கேட்டது.  
பெத்தமனம்

கேசவன் இன்னும் வராதது வடிவேலுக்கு வியப்பாக இருந்தது. அப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போதே விழுப்புரத்துக்குச் செல்லும் ஆறு மணி பாசஞ்சர் வண்டி செல்லும் சத்தம் கேட்டது. புறநகர்ப் பகுதியின்அந்தப் பூங்கா ரயில் பாதைக்கு அருகில்தான் அமைந்திருந்தது. நகர்ப் பகுதியின் தொந்தரவுகள் இன்னும் வந்து அந்தப் பூங்காவைத் தாக்கவில்லை.
அதனால்தான் வடிவேலு மாலை நான்கு மணியிலிருந்து இரவு ஏழு மணி வரை அங்கு வரும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். பூங்காவை இரண்டு சுற்றிச் சுற்றிவந்துவிட்டு அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்துவிடுவார். இனிமையான காற்றும், விளையாடும் குழந்தைகளின் காட்சிகளும் அவருக்கு மிகவும் உவப்பாக இருந்தன.
கடந்த ஒரு வருஷமாக கேசவனும் வந்துகொண்டிருந்தார். அது இன்னமும் அவருக்குப் பொழுது போக செளகரியமாக இருந்தது. இப்படித்தான்அவர்கள் பழக்கம் தொடங்கியது. பூங்காவைச் சுற்றி வந்துவிட்டு பெஞ்சில் உட்கார வந்தபோது வேறு யாரோ ஒருவர் தன் வழக்கமான இடத்தில் உட்கார்ந்திருப்பதை வடிவேலு பார்த்தார் அவர். வேறு இடத்துக்குச் சென்றுவிடலாம் என்று நினைத்து நகர்ந்தார்.
அப்போது உட்கார்ந்திருவர் எழுந்திருந்து, 'வாங்கய்யா. உட்காருங்க?' என்று சொல்லிக் கொண்டே எழுந்தார். வடிவேலுவும் அவர் பக்கத்தில் போய் உட்கார்ந்தார்.
'ஐயா யாருங்க? உங்களை நான் இங்கே பார்த்ததே இல்லையே?'என்றார் வடிவேலு.
'ஆமாங்க! நான் ஊருக்குப் புதுசு. ஆனா இனிமே இங்கதான் இருப்பேன். பரமசிவம் வீட்டுக்கு வந்திருக்கேன்' என்றார் அவர்.
'அப்படியா கோபால் நகரில் இருக்காரே அவரா?'
'ஆமாங்க என் மகன்தான் அவன்.'
'அப்படியா! நீங்கதான் கிராமத்துல இருந்தவருங்களா?' என்று கேட்டார் வடிவேலு.
'ஆமாங்க. எனக்கு ஒரே மகன் அவன். அங்கேயும் நிலம் சரியா விளைச்சல் இல்லை. இவனும் நிலத்தை எல்லாம் விற்றுவிட்டு இங்கே வந்திடுன்னு சொல்லிக்கிட்டே இருந்தான். நான் கட்டினவளும் போய் சேர்ந்துட்டா! அதான் எல்லாத்தயும் வித்துட்டுவந்துட்டேன். வீடு ஒண்ணு அங்க இருக்கு. அதுவும் அடுத்த வாரம் விலை போயிடும்' என்று தனது கதையையே சொல்லி முடித்தார் கேசவன்.
தினம்தோறும் கேசவன் வர, இருவருக்கும் நெருக்கம் அதிகமாய்விட்டது. அதனால்தான் இன்னும் கேசவன் வரவில்லையே எனும் ஏக்கம்அவருக்குள் எழுந்தது. சுற்றிலும் பார்த்தார். பறவைகள் எல்லாம் கூட்டுக்குள் கிழக்கு நோக்கிப் பறந்துகொண்டிருந்தன. சறுக்கு மரத்திலும் ஊஞ்சலிலும் சிறுவர்கள் ஆடிக் கொண்டிருந்தனர். தள்ளுவண்டியில் தனது குழந்தையை வைத்து ஒரு பெண்மணி தள்ளிக் கொண்டு போய்க் கொண்டிருந்தார். சற்று வயதானவர்கள் சிலர் நடை
பயிற்சியை மேற்கொண்டிருந்தனர்.
இப்படிப் பார்த்ததவரின் கவனத்தை ஒரு குரல் கலைத்தது.
'ஐயா. வணக்கம்.'
நிமிர்ந்து பார்த்த வடிவேலு சட்டென்று உடனே எழுந்தார். எதிரே முழு சீருடையில் காவல் ஆய்வாளர் ஒருவர் இருந்தார். அவர் உடனே வடிவேலுவைப் பார்த்து, 'ஐயா. உட்காருங்க? எழுந்திருக்க வேணாம்' என்றார். சொன்னதுடன் வடிவேலுவின் தோள்களை மெதுவாகப் பிடித்துப் பெஞ்சில் உட்காரவும் வைத்தார்.
வடிவேலுவோ'வணக்கங்க, நீங்க யாருன்னு' என்று இழுத்தார்.
ஆய்வாளர் தனது தொப்பியைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டார். அத்துடன் 'ஐயா. என்னை அடையாளம் தெரியலையா? நான் உங்கக்கிட்ட படிச்சவன். நீங்க கடலூரில் வேலை பார்த்தபோது நான் அங்கே படிச்சேன். என் பேர் ஆறுமுகம்' என்று கூறினார்.
'அப்படியா? வாங்க உட்காருங்க!' என்று வடிவேலு கூற, ஆறுமுகமோ, உட்காரக் கூச்சப்பட்டார். வடிவேலு அவர் கையைப் பற்றி இழுத்துத் தன் பக்கத்தில் உட்கார வைத்தார். நன்கு உற்றுப் பார்த்தார். இப்போது அவருக்கு அடையாளம் தெரிந்துவிட்டது.
'ஓ! கபடிஆறுமுகமா?' என்றார் சிரித்துக் கொண்டே.
'ஆமாங்கய்யா? இன்னும் நீங்க பழசை மறக்கலை' என்றார் ஆறுமுகம்.
'எப்படிப்பா மறக்க முடியும். உன்னாலப் பள்ளிக்கு நாலைஞ்சு வருஷம் பெருமை வந்துச்சுல்ல. அது சரி இங்கே எங்கே?' என்று கேட்டார்.
'இங்கதான் இப்ப வேலை எனக்கு. போன வாரம்தான் வந்தேன். இன்னிக்குதான் சுற்றிப் பார்க்கலாம்னு வந்தேன். அப்படியே உங்களைப் பார்த்தேன். மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு!'
'அப்படியா! நானும் இங்கேதான் பெரிய மகன் வீட்டில் இருக்கேன். தினமும் மாலையில் இங்கே வருவேன்!'
அதன்பின்னர் இருவரும் பழைய நினைவுகள், குடும்ப விவரங்கள் எல்லாம் பேசிக் கொண்டிருந்தனர். ஆறுமுகம் சற்று நேரத்தில் விடைபெற்றுச் சென்றார்.
வெளிச்சம் மறையத் தொடங்கியது. தெருவிளக்குகள், பூங்காவின் விளக்குகள் எரியத் தொடங்கின. பூங்காவைவிட்டு ஒருசிலர் வெளியேறத் தொடங்கினர். இதற்கு மேல் கேசவன் வர மாட்டார் என்று எண்ணிய வடிவேலு வீட்டுக்குப் புறப்பட்டார்.
வீட்டிலும் அவருக்கு இருப்பு கொள்ளவில்லை.
பார்த்த அவரின் மகன், 'என்னாப்பா என்னவோபோல்இருக்கீங்க?' என்றான்.
'ஒன்றும் இல்லைப்பா?' என்று அவர் சொன்னாலும் அவன்விடாமல் கேட்க அவர் பதில் சொன்னார்.
'வழக்கமா கேசவன் ஒருத்தரு வருவாரில்லை?'
'ஆமாம்பா! நீங்கக் கூடசொல்லியிருக்கீங்க?' என்றான் அவன்.
'அதாம்பா. அவரு இன்னிக்கு வரலை. ஏன்னு தெரியலை?'
'இதுக்காப்பா கவலைப்படறீங்க? எதாவது வேலையா இருக்கும்!'
'இல்லைப்பா! அவரு இது மாதிரி நின்னதே
கிடையாது. போய்ப் பார்த்துட்டுவரலாம்னு கேக்கறேன்.'
'அப்பா, அவரு வீடு கொஞ்சம் தூரம். இருட்ட வேற ஆரம்பிச்சிடுச்சு நாளைக்கும் வராட்டா போயி பார்க்கலாம்' என்றான்அவன்.
அவன் சொல்வதும் சரிதான் என்றெண்ணிச் சாப்பிட்டுவிட்டுப் படுத்தார் வடிவேலுவும். ஆனால் உறக்கம் என்னவோ வரவே இல்லை. கேசவன் வராததற்கு என்ன காரணமாக இருக்கும் என்றே நினைவுகள் ஓடிக் கொண்டிருந்தன. 'ஒருவேளை அவர் வீட்டில் மறுபடியும் ஏதாவது தகராறா?' என்றுநினைத்தார்.
இரண்டு மாதங்கள் முன்பு ஒருநாள் பூங்காவுக்கு வந்த கேசவன் எதுவும் பேசாமல் மெளனமாக உட்கார்ந்துகொண்டிருந்தார். வடிவேலுவும் அவராகப் பேசுவார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார். அவர் பேசாததால் வடிவேலுவே கேட்டார்.
'என்னா கேசவா? வந்ததிலேந்து ஒண்ணும் பேசவே இல்லை? மெளன விரதமா?'
'அதெல்லாம் ஒன்றும் இல்லைப்பா? எல்லாம் சொந்த விஷயம்தான்!'
'என்கிட்ட சொல்லலாம்னா சொல்லுப்பா?'
'உனக்குத் தெரியாதது என்னா இருக்கு என்கிட்ட! எல்லாம் பையன், மருமகளைப் பற்றித் தான்!'
'ஏன் திடீர்னு என்னாச்சு? எல்லாம் நல்லாத்தானே இருக்காங்க!'
'நல்லாத் தான் இருக்காங்க. பேங்குல நிலம், வீடு விற்ற காசு இருக்கு. அதுலேந்து மூணு லட்சம் ரூபாய் வேணுமாம். நகை வாங்கணுமாம். அவஆடறா; இவனும் தாளம் போடறான்.'
'ஏன் கேசவா. இதுக்கா மனசைப் போட்டு குழப்பிக்கிறே? எல்லாம் வேற யாருக்கு? உன் மகனுக்குத்தான். கேக்கறதைக் குடுத்திட்டு நிம்மதியா இரு!'
கேசவன் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். அவர் யோசிப்பதைப் பார்த்ததும் மீண்டும் வடிவேலு சொன்னார். நீ வேற யாருக்கும் எடுத்துக் கொடுக்க மாட்டேன்னு அவங்களுக்கும் தெரியும்பா? ஆனாலும் பேங்கில இருக்கறதை எடுத்து நகை வாங்கலாம்னு நினைக்கறாங்க! கல்யாணம் கார்த்தின்னா சிறுசுங்கப் போட்டுக்கிட்டுப் போகலாம்ல எடுத்துக் குடுப்பா?' என்று கூறினார்.
கேசவன் மேலே பார்த்தார். மரத்தில் மைனாக் குருவிகள் இரண்டு கொஞ்சிக் கொண்டிருந்தன. அணில்கள் துரத்திக் கொண்டிருந்தன. இப்பொழுதுதான் திருமணமான தம்பதியர் கைகோர்த்து மெல்ல நடந்து போய்க் கொண்டிருந்தனர். நாய்கள் உள்ளே ஓடி வர பூங்கா காவலர்அவற்றை விரட்டினார்.
'ஆமாம் வடிவேலு. நீ சொல்றதும் சரிதான். கொடுக்காட்டா பிரச்னைதான் அதிகமாகும். எல்லாம்அவங்களுக்குத்தான்?' என்று சொல்லிவிட்டார் கேசவன்.
இப்படியே குழந்தைக்கு காது குத்த, மச்சினிக்கு கல்யாணத்துக்கு, சிம்லா சுற்றுலா போக, நண்பர்களுக்கு கடன்கொடுக்க?... என்று அணை போட்டு வைத்திருந்த பணம் செலவாயிற்று! அதன் எதிரொலி கடந்த வாரம் தெரிந்தது. சாடை மாடையா மருமகளைப் பற்றி பேசத் தொடங்கினார். கேசவனும் வருத்தப்பட்டார்.
'வடிவேலு, என்னா சொல்றா தெரியுமா? அடுத்தத் தெருவுல ஒரு சாவு. சின்ன வயசுதான் இருபத்தைஞ்சு இருக்கும். அதுக்குப் போயிட்டு வந்த மருமகள் என் மகன்கிட்ட சொல்றாப்பா? இளவட்டங்களுக்குத்தான் எமன் தேடிட்டுவரான். வயசானது எல்லாம் நிலையா உட்காந்துக்கிட்டு இருக்குங்க?'
கேட்ட வடிவேலுவுக்கும் மனம் அடைத்தது. இருந்தாலும் சொன்னார். 'கேசவா. இதெல்லாம் பெரிசா எடுத்துக்காத? சாதாரணமா சொன்னாங்கன்னு எடுத்துக்க!'
'சரிப்பா. இவன் அதுக்குப் பதிலே சொல்லலியே? அப்ப இவனுக்கும் அந்த எண்ணம்தானே?'
'நீ ஏன் அப்படியெல்லாம் நினைச்சுக் குழப்பிக்கறே? சாதாரணமா வீட்டில் இரு!' என்றார் வடிவேலு.
அன்றைய மாலை எப்பொழுது வரும் என்று காத்திருந்தார் வடிவேலு. பகல் பொழுது மிகவும் நீள்வதாக அவருக்குத் தோன்றியது.
பூங்காவும் மிகவும் தொலைவுக்குச் சென்றுவிட்டதாக எண்ணினார். ஒருவழியாய் பூங்காவை அடைந்தபோது கேசவன் அவருக்கு முன்னதாகவே வந்து அமர்ந்திருந்தார்.
'என்னா கேசவா? சீக்கிரமா வந்துட்டே!' என கேட்டார் வடிவேலு. அதற்கு கேசவன் சொன்ன பதில்அவரைத் தூக்கி வாரிப் போட்டது.
'ஆமாம் வடிவேலு. இனிமேதான்இங்கே வர போறதில்லையே?'
'ஏம்பா என்னாச்சு?'
'இந்த ஊரைவிட்டுப் போகப் போறேன். ஏதாவது அநாதை ஆசிரமத்துலப் போயி சேர்ந்துடப் போறேன்.'
'ஏன் இப்படியெல்லாம் பேசறே? விவரமாச் சொல்லு!'
வடிவேலு பேசாமல் இருந்தார். சிறிது நேரம் கழித்து மெதுவாக அழஆரம்பித்தார். அவர்அழுது முடித்தவுடன் வடிவேலு கேட்டார்.
'இப்ப சொல்லு என்னாச்சு!'
'மகன் என்னை அடிச்சுட்டாம்பா? அது கூடப் பரவாயில்லை. புடிச்சு வெளியே தள்ளிட்டாம்பா? என் பணம்லாம் போயிடுச்சுல்லை. நான்அவனுக்கு இனிமே வேணாம்ல; நான் உன்கிட்டசொல்லலை; மூணுநாளா சோறே எப்படித் தெரியுமா எனக்கு? தட்டில் கொஞ்சம் சோறு போட்டு அதில் குழம்பு, ரசம் எல்லாத்தையும் போட்டுக் கொண்டு வந்து வச்சிடுவா? ஏம்மா இப்படின்னு கேட்டேன். பின்ன என்னா ஒண்ணு, ஒண்ணாக் கொண்டாந்து போடணுமான்னு கேக்குறா?'
மறுபடியும்அழஆரம்பித்துவிடுவார் போல இருந்தது. 'நாம்தானே வழிவகுத்தோம். நாம்தானே இதை முடிக்க வேண்டும்' என்று நினைத்தார் வடிவேலு.
மறுநாள் காலையில் கேசவனை அழைத்துக் கொண்டு காவல்நிலையம் சென்றார்.
'வாங்கய்யா உட்காருங்க!' என்று ஆய்வாளர் ஆறுமுகம் வரவேற்றார். அவரிடம் நடந்த முழு கதையையும் கூறினார் வடிவேலு. கேட்டஆறுமுகம் கூறினார்.
'நீங்க கவலைப்படாதீங்கய்யா? சரி செஞ்சுடலாம். இப்பல்லாம் தாய், தகப்பனைக் கவனிக்காத புள்ளங்க மேல கேஸ் போடலாம்னு சட்டம் வந்திடுச்சு!' என்று சொன்ன ஆறுமுகம் உடனேயே காவலர் ஒருவரை அழைத்து கேசவனின் மகன் பரமசிவத்தை வரவழைத்தார்.
'என்னவோ ஏதோ' என்று நினைத்துக் கொண்டு வந்த பரமசிவத்துக்கு நிலையத்தில் இருந்த தன் தந்தையையும் உடன் வடிவேலுவையும் பார்த்தவுடன் விவரம் புரிஞ்சுது.
'வாங்க பரமசிவம். உட்காருங்க!' என்று சொன்ன ஆய்வாளர், எடுத்தவுடனேயே 'ஏம்பா அப்பாவைப் போயி அடிக்கலாமா; அதுவும் கட்டினவ முன்னாடி? அப்பறம் ஒன் பொண்டாட்டி எப்படி இவரை மதிப்பாங்க?'என்றுகேட்டார்.
'நான்அடிக்கல்லாம் இல்லீங்க! இவர் பொய் சொல்லுறாரு?' என்றான் பரமசிவம்.
'அப்படியா! உங்கப்பா பொய் சொல்றாரா? இதோ பாரு உங்கப் பக்கத்து வீட்டுக்காரரு என்னா சொல்றாருன்னு கேளு!' என்று சொன்ன ஆறுமுகம், அடுத்த அறையிலிருந்த கேசவனின் அண்டைவீட்டுக்காரரை வரச்சொன்னார். அவர் வந்து நடந்ததைச் சொல்ல பரமசிவத்துக்கு ஆத்திரமும் கோபமும் அவமானமும் வந்தன.
அப்பாவைப் பார்த்து, 'யோவ் .. அடிச்சது உண்மைதான்! உன்னால் என்னா செய்யமுடியும்? போட்டதைத் தின்னுட்டு கிடக்காம இங்கவந்து பிராது செய்யறே? ஒண்ணும் இல்லாத வெத்து வேட்டு நீ' என்று சொன்னான்.
அவன் கடைசி சொல்லைக் கூறியவுடன் அவன் கன்னத்தில் விழுந்த அடி அவனைக் கீழேயே தள்ளிவிட்டது. ஆய்வாளர் தமக்கே உரிய மிடுக்கான குரலில், 'இங்க பாருடா! உனக்கு எவ்ளோ மரியாதையை கொடுத்தேன். உன் பேச்சுலேயே தெரிஞ்சிடுத்து நீ எப்படிப்பட்ட ஆள்னு. அப்பாவை அழைச்சிக்கிட்டுப் போயி மரியாதையா வச்சுக்க! உனக்கு புதுச் சட்டம்லாம் தெரியாதுன்னு நினைக்கறேன். அப்பா, அம்மாவைச் சரியாக் கவனிக்காட்டா கேசே போடலாம். நீ ஒழுங்கா வச்சுக்காட்டா உன்னைக் கஞ்சா கேசுல உள்ளத் தள்ளிடுவோம்' என்று கூறி முடித்தார்.
அடுத்த விநாடியேஆய்வாளர் காலில் விழுந்தார் கேசவன். 'ஐயா. அப்படியெல்லாம் செஞ்சுடாதீங்க, அவன் பாவங்க. நீங்க ஒரு அடி அவனை அடிச்சதையே என்னால் தாங்க முடியலீங்க; எப்படியோஅவனும் அவன்குடும்பமும் நல்லா இருக்கட்டுங்க?' என்றார்.
'என்னாங்க சார். இப்படி எல்லாம் செய்யலாமா? பார்த்தியாடா பெத்த மனசை; என்னா சொல்ற?' என்று ஆய்வாளர் கேட்டார். சற்றுநேரம் அப்பாவை உற்றுப் பார்த்தான் பரமசிவம். பிறகு, ' இல்லீங்கய்யா; இனிமே சரியா இருக்குங்க! இவரு மனம் கோணாம வச்சிக்குவேன்!' என்று பரமசிவம் மெதுவாகக் கூறினான்.
மூவரின் நடையிலும் வேறுபாடு இருந்தது. அவர்கள் எண்ணங்களிலும் அப்படியே!
'நான்தானே பணத்தைக் கொடுக்கச் சொன்னேன். அதனால்தானே இத்தனையும்; நானே நல்லபடியாக முடித்து வைத்துவிட்டேன். அப்பாடா; நிம்மதி' என்று வடிவேலு நினைத்துக் கொண்டார்.
'என்ன இருந்தாலும் நம்ம மகன் நல்லவன். என்னா கொஞ்சம் உணர்ச்சி வேகத்தில் எல்லாம் செஞ்சிடுவான். பொண்டாட்டி பேச்சைக் கேக்கறதும், அப்படித்தான். இன்ஸ்பெக்டரு சொன்னவுடனே கேட்டுட்டான்ல!' என்று எண்ணினார் கேசவன்.
'நம்ப அப்பா இவ்வளவு பெரியவரா? இனி மேலஅவர் மனம் வருந்தக் கூடாது' என்று நினைத்தான் பரமசிவம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com