பேல்பூரி

விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் வெற்றி நிச்சயம்.விடாப்பிடியாய் வாழ்ந்தால் மகிழ்ச்சி நிச்சயம்.
பேல்பூரி

கண்டது

(கும்பகோணம் அருகேயுள்ள ஒரு சிற்றூரின் பெயர்)

'சக்தி முத்தம்'

-கே.பிரபாவதி,
மேலகிருஷ்ணன்புதூர்.

(தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி- சேதுபாவாசத்திரம் சாலையில் உள்ள ஒர் ஊரின் பெயர்)

'பூக்கொல்லை'

-ப.விஸ்வநாதன்,
கீரமங்கலம்.

(திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த ஒரு காரில் எழுதியிருந்த வாசகம்)

'உளிபடாத கல் சிலையாவதில்லை;
உழைப்பில்லாத கனவு நினைவாவதில்லை.

-வெங்களாபுரம் பத்மாவதி,
திருப்பத்தூர்.

கேட்டது


(மயிலாடுதுறை  பேருந்து நிலைய வளாகத்தில் புத்தகக் கடையில் இருவர் பேசியது)

'என்ன சார். தினம் தவறாமல் பேப்பர் வாங்குவீங்க!  இந்த ஒரு மாசம் வேண்டாமுன்னு சொல்றீங்க?'
'துணிக் கடை, நகைக்கடைகளில் ஆடி தள்ளுபடி விளம்பரங்களை விதவிதமாகப் போடுறதைப் பார்த்து வீட்டில் நச்சரிப்பாங்க! அதான்'

-சங்கீத.சரவணன்,
மயிலாடுதுறை.

(விழுப்புரத்தில் உள்ள ஒரு பள்ளி வெளியே ஆசிரியரும், மாணவரும்..)

'தலையில் என்னடா கட்டு!'
'சின்னதா ஒரு ஆபரேஷன் சார்!'
'சரி டாக்டர் என்ன சொன்னார்'
' நீங்க சொன்னதைத்தான் அவரும் சொன்னார்!'
'நான் என்ன சொன்னேன்டா!'
'தலையில் ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டார். சார்..'

-கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்.

(நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருவர்)

'மாப்ளே. ஒரிஜினல் தேன் எங்கு கிடைக்கும்?'
'தேன் கூட்டில்தான்!'


-மகேஷ் அப்பாசுவாமி,
பனங்கொட்டான்வினை.

யோசிக்கிறாங்கப்பா!


விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் வெற்றி நிச்சயம்.
விடாப்பிடியாய் வாழ்ந்தால் மகிழ்ச்சி நிச்சயம்.

-அ.செந்தில்குமார்,
சூலூர்.

மைக்ரோ கதை

அந்த நிறுவன வாயிலில் 'வேலைக்கு ஆள்கள் தேவை' என்று பலகை வைக்கப்பட்டிருந்தது. அந்த வழியே சென்ற குமாருக்கு, அதை பார்த்தவுடன் முகம் பிரகாசமானது. நீண்ட நாள்களாக வேலை தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிறுவனத்திலாவது  வேலை கேட்போம் என்று எண்ணி, அந்தப் பகுதியில் வசிக்கும் தனது நண்பன் ரவியை செல்போனில் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னான்.
இதைக் கேட்ட ரவி, 'நீ சொல்றது சரிதான். ஒரு விஷயத்தைச் சொல்றேன் கேள். நானும் அந்தப் பலகையை ரொம்ப நாளாகவே பார்க்கிறேன்.  இதுவரை அங்கு யாருமே வேலை கேட்டு போகலையா? தொடர்ந்து ஆள்கள் தேவைன்னு பலகை இருக்குதுன்னா அங்கே ஏதோ பிரச்னை இருக்கு. சம்பளம் கொடுக்கலையா, குறைவான சம்பளமா?... 
இப்படி இருக்கும் யோசிச்சு பாரு?' என்றான்.
நண்பன் சொன்னது குமாருக்கு சரியாகப் பட்டது.

- ஆர்.அருண்குமார்,
பூந்தமல்லி.

எஸ்எம்எஸ்


பிரச்னைகள் வராமல் இருக்க... 
சிலரிடம் பேசவே கூடாது.
சிலரிடம் கேட்கவே கூடாது.
சிலரிடம் பதில் சொல்லவே கூடாது.

-பி.கோபி,
கிருஷ்ணகிரி.

அப்படீங்களா!


ஸ்மார்ட்போன் பெரும்பான்மையினரின் வாழ்வில் அங்கமாகி உள்ளது. 
கெபியோஸ் என்ற எண்ம நிறுவனம் நடத்திய ஆய்வில்,  உலகம் முழுவதும் சுமார் 500 கோடி பேர்,  அதாவது உலக மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் சமூக ஊடகங்களின் தொடர் பயன்பாட்டில் உள்ளனர்.
கடந்த ஓராண்டில் மட்டும் 15 கோடி பேர் புதிதாக இணைந்துள்ளனர். அதாவது விநாடிக்கு 4.7 சதவீதம் பேர் இதில் இணைந்துள்ளனர்.
ஃபேஸ்புக்,  யூ டியூப், வாட்ஸ் ஆப்,  இன்ஸ்டாகிராம், விசாட் ஆகிய செயலிகள் உலகளாவிய பயன்பாட்டில் முதலிடத்தில் உள்ளன. இதில் இந்தியாவில் தடைவிக்கப்பட்ட சீன செயலியான டிக்டாக்கில்தான் அதிக நேரத்தை (மாதம் சுமார் 31 மணி நேரம்) பயன்பாட்டாளர்கள் செலவழிக்கின்றனர்.
நாள்தோறும் 2 மணி நேரம் 24 நிமிஷங்கள் வரையில் சராசரியாக ஒருவர் சமூக ஊடகத்தில் செலவிடுகிறார்.  54 சதவீத அமெரிக்க இளைஞர்கள் சமூக ஊடகங்கள் இல்லாமல் வாழவே முடியாது என தெரிவித்துவிட்டனர்.
இன்ஸ்டாகிராமுக்கு நாடு முழுவதும் 200 கோடியும், ஃபேஸ்புக்குக்கு 300 கோடியும், ட்விட்டருக்கு 35 கோடியும், யூடியூபிற்கு 250 கோடி பயன்பாட்டாளர்கள் உள்ளனர். இதில், ஒரு நிமிஷத்துக்கு 500 மணி நேர நீள விடியோவை உலகம் முழுவதும் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
ஒரு நாளைக்கு 100 கோடி நேர நீளமான விடியோவை உலகம் முழுவதும் பாக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com