நினைவு தப்பவில்லை

நான் அவங்களைப் பாத்திருக்கேனாப்பா?
நினைவு தப்பவில்லை

''நான் அவங்களைப் பாத்திருக்கேனாப்பா?''
''பார்த்திருக்கம்மா?  நீ பிறந்தப்ப உன்னையப் பார்த்துக்கிறதுக்காக,  நாலு மாசம் நம்ம வீட்டுலதான் இருந்தாங்க பாப்பா!''
''அப்பல்லாம் உங்களையே எனக்கு அடையாளம் தெரியாது. அவங்களை எப்படித் தெரியும்?''
''அப்புறமும் அவங்க நிறைய தடவை நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க பாப்பா!''
''எப்ப?''
''நாம இ.பி. காலனி வீட்டில் இருக்கும்போது அப்பப்ப வந்திருக்காங்க?''
''நானு ரெண்டாவது படிக்கும்போதே இ.பி. காலனி வீட்டுல இருந்து வந்திட்டோம். அப்புறம் எப்படி எனக்கு அடையாளம் தெரியும்?''
ராமநாதபுரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த காரில் மகளின் கேள்விகளுக்கு நான் சொல்லிக் கொண்டிருக்கும் பதில்களைக் கவனித்தபடி கண் மூடிச் சாய்ந்திருந்த என் மனைவி.
''தாத்தா இறந்ததுக்கு வந்திருந்தாங்க பாப்பா. ராம்நாடுல இருந்து வந்தவங்கல்ல ரொம்ப அழுததுல அவங்களும் ஒருத்தங்க!'' என்றாள்.
''ரெண்டு பேரு ரொம்ப அழுதாங்க!'' என யோசித்த 
மகளிடம், ''சத்தமா பாட்டுப்பாடி அழுதாங்கல்ல, அவங்க!'' என்றாள் மனைவி.
''ஏங்க கல்லாப் பெட்டியே! என்னைய விட்டுட்டுப் போயிருச்சேன்னு அழுதாங்களே! அவங்களேதான்!''
''திடீர்ன்னு எதுக்கு அவங்களைப் பார்க்கப் போகலாம்னு கிளம்புனீங்க?''
''உங்க அப்பத்தா, அவங்ககூடப் பிறந்தவங்க யாரும் உயிரோட இல்லை.  உங்க தாத்தாவும் இல்லை. அவருகூடப் பிறந்தவங்கள்ல உயிரோட இருக்குறது இவங்க மட்டும்தான். இவங்களுக்கும் உடம்புக்குச் சரியில்லைன்னாங்க. அதான் உங்க அப்பா உடனே கிளம்பிட்டாரு!'' என்று என் மனைவி பதில் சொன்னாள்.
''எனக்கு முந்துன ஜெனரேஷன்ல உயிரோட இருக்குறது இவங்க மட்டும்தான் பாப்பா. இந்தப் பக்கம் உங்க டூர் புரோக்ராம் இருந்ததால, சரி இவங்களையும் பார்த்துரலாம்ன்னு முடிவு பண்னேன்!''
''இவங்களை உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமாப்பா?''
இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாததால் நான் அமைதியாக இருந்தேன்.  பதிலை எதிர்பார்த்து என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மகளும் சிறிது நேரத்தில் கண்களை மூடி அவளின் அம்மா மீது சாய்ந்து கொண்டாள்.
அப்ப நாங்க அருப்புக்கோட்டையில குடியிருந்தோம். இங்க நாங்கன்றது, நானு, அம்மா, அக்கா அப்புறம் தங்கச்சிக. இங்க அப்பங்குறது நாற்பது வருஷத்துக்கு முன்னால. அப்பா ராமநாதபுரத்தில் வேலை பார்த்தாரு.  டிபார்ட்மெண்டுல பேரு வாங்குன நல்ல வேலைக்காரரு. அதுனால, எப்பயாவதுதான் வீட்டுக்கு வருவாரு. அங்கேயே வீடு எடுத்து தங்கிட்டாரு!
ரயில்வேயில வேலை பார்த்த நண்பரோட குவார்ட்ரஸ்ல அவருக்குப் பதிலா இவரு இருந்தாரு.  அப்பாவுக்கு அடுத்ததாப் பிறந்தவங்க லட்சுமி அத்தை. கணவனை இழந்தவங்க. ஒரு பையன், ஒரு பொண்ணு. ரெண்டு பேருக்குமே கல்யாணம் ஆயிருச்சு. குழந்தைகளும் இருக்கு. பையனோட இருக்க ஒத்துவராததால, பொண்ணுகூட இருந்தாங்க. அண்ணன் தனியாக் கஷ்டப்படுறதுனால அவருக்கு சமைச்சுப் போடுறதுக்காக கிராமத்துல இருந்து ராமநாதபுரம் ரயில்வே குவார்ட்டர்ஸ் வீட்டுக்கு வந்துட்டாங்க!
மாசம் பொறக்குறதுக்கு ரெண்டு நாள் இருக்கும்போதே அம்மா என்னைய ராமநாதபுரம் அனுப்பிருவாங்க!  சம்பளம் வாங்குனதும் அப்பா வீட்டுச் செலவுக்குன்னு கொடுக்குறத வாங்கியார வேண்டியது என்னோட வேலை. இது ஒவ்வொரு மாசமும் நடக்குறதுதான். அம்மா பிறந்த ஊரும் வளர்ந்த ஊரும் ராம்நாடு பக்கத்துலதான் இருந்துச்சு. பெரியம்மா மகன் காமாட்சியும் அப்பாக்கிட்டதான் வேலை பார்த்தாரு. 
அவரோட சேர்ந்து அம்மா வளர்ந்த கிராமத்துக்கும் அப்பப்ப போயிட்டு வருவேன். 
பெரியம்மா ஒவ்வொரு தடவையும் புளி, மிளகாய், குதிரைவாளி, பச்சரிசி ...இப்படி எதையாவது குடுத்து விடுவாங்க. இதெல்லாம் ஊருக்குப் போகும்போது சுமக்கணுமேன்ற பயத்துலயே நான் மறந்தது மாதிரி ஊருல வச்சிட்டு வந்துருவேன். 
மறுநாள் அண்ணன் காமாட்சிக்கிட்ட மறக்காமக் குடுத்துவிட்டு என்ன சுமக்க விட்டுருவாங்க. பெரியம்மா குடுக்குறத ராமநாதபுரத்துல வச்சுட்டு வர முடியாது. அப்பாவும் திட்டுவாரு. அம்மாவும் திட்டுவாங்க. அத்தை அதைத் தொடக்கூட மாட்டாங்க!
அத்தை மத்தவங்கக்கிட்ட பேசும்போது,  என்னையப் பேரு சொல்லிச் சொன்னாலும் என்னைய 'தம்பி'ன்னுதான் கூப்பிடுவாங்க. என் மேல பிரியமா இருந்தாங்களா?, இல்லையான்றது எனக்குத் தெரியாது.
 'என் அப்பாவோட காச எங்க வீட்டுக்கு வரவிடாம, அவரோட சம்பாத்தியத்தை அழிச்சிக்கிட்டிருக்காங்க'ன்ற நெனப்பு எங்க வீட்டுல எல்லாருக்கும் இருந்ததால அவங்க மேல வெறுப்பு மட்டுந்தான் இருந்துச்சு. ஆனா, அத வெளியில காட்டுனா மாசாமாசம் அப்பா தர்ற கொஞ்சக் காசும் நின்னுபோயிரும்ன்ற பயத்துல அதை வெளியே காட்டிக்கிர்றதில்லை. 
பரீட்சை லீவு என்றால் ஒரு வாரம் பத்துநாள் வரைக்கும் என்னை அம்மா ராம்நாடுக்கு அனுப்பிடுவாங்க!  'ஏன்?' என்ற காரணம் எனக்கு எப்போதும் தெரியாது.
அங்க இருக்கிற சமையல் இன்றைக்கு வரைக்கும் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. சாம்பார் வச்சாக்கூட அதுல மீன், கருவாடு வாடை இருக்குற மாதிரியே தெரியும். 
அத்தை சமைச்சதை அப்பா நல்லா சாப்பிடுவாரு.  எனக்குத்தான் இறங்காது. எல்லாக் குழம்புக்கும் போடுற அந்த ஒரே மசால் வாடையே எனக்கு ஒத்துக்கிறதில்லை. அப்பா காலையில சாப்பிட மாட்டாரு? அவரு போனப்பறம் அத்தை இட்லி அவிச்சுக் குடுப்பாங்க. என்னால ஒரு இட்லிக்கு மேல சாப்பிட முடியாது. தினமும் இட்லிதானா என்று ஒருநாள் கேட்டதற்கு தோசை என்ற பெயரில் இட்லி கனத்துக்கு ஒரு தோசை சுட்டுக் கொடுத்தார்கள். மறுநாளும் அதுவே கிடைத்தது. என்னால் முழுசாக ஒன்றைக்கூட தின்ன முடியவில்லை. அந்தக் கொடுமையில் இருந்து தப்பிப்பதற்காக 'நாளைக்கு இட்லியே ஊத்திருங்க' என்ற என்னுடைய கோரிக்கை மறுநாளிலிருந்து நிறைவேற்றப்பட்டது. அத்தை அப்படித்தான் எந்தக் கோரிக்கையாக இருந்தாலும், அது கோரிக்கையாகத்தான் இருக்க வேண்டுமென்பதுகூட இல்லை என்னுடைய குறிப்பறிந்து செய்வார்.
காலையில் ஒற்றை இட்லி தின்ற வெற்று வயிற்றுடன் நான் ரயில்வே குடியிருப்பில் இருந்து கிளம்பி தண்டவாளத்தைத் தாண்டி ரயில் நிலைய நடைமேடையைக் கடந்து வாடகை வண்டி நிறுத்தத்தையும் கடந்து பிரதான சாலையேறி பேருந்து நிலையம் வந்து சேர்வேன். 
அன்றைக்கு இருந்தது ஒரே பேருந்து நிலையம்தான். இன்றைக்கு இருக்கின்ற பழைய பேருந்து நிலையம். அங்கே போகின்ற வருகின்ற பேருந்துகளையும், மக்களையும் வேடிக்கை பார்ப்பதை ஒரு கடமையைப்போல் செய்வேன். தான் எந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்பதைச் சொல்லாமல் எந்தப் பேருந்து வந்தாலும் இது எந்த ஊருக்குப் போகும்? என்று கேட்கும் கிராமத்து ஜனங்கள் நிறைந்திருந்த பேருந்து நிலையங்களில் இந்தப் பேருந்து நிலையமும் ஒன்று. தான் செல்ல வேண்டிய ஊரின் பெயர் சொல்லி, எந்தப் பேருந்து வந்தாலும் இது அந்த ஊருக்குப் போகுமா? என்று கேட்கும் அப்பாவி ஜனங்களும் அவர்களுக்கு இணையான எண்ணிக்கையில் நிலையத்தில் நிறைந்திருப்பார்கள். 
நான் ஒவ்வொரு ஊர்ப் பேருந்து புறப்படும்போதும் கடிகாரத்தைப் பார்த்து பேருந்து நேரத்தை மனதில் பதிந்து கொள்ள முயற்சி செய்வேன். மறுநாள் கேட்பவர்களுக்காவது சொல்லலாமே.
நடைமேடைக் கடைகளாக உயர்ந்திருக்கும் கவிழ்த்துப் போடப்பட்ட கள்ளிப் பெட்டிகளில் அவித்த பனங்கிழங்குகளும், முந்திரிப் பழங்களும், பிரிட்டானியா பிஸ்கட் பாக்கெட்டுகளும் விற்பனைக்காக வீற்றிருக்கும்.  சில வகையான கருவாடுகளுக்கும்கூட ஒருசில கடைகளில் ஓரமாக வைக்கப்பட்டிருக்கும். இன்றைக்கிருப்பதுபோல் அன்றைக்கு டீக்கடைகள் அதிக எண்ணிக்கையில் இல்லை. பேருந்து நிலையத்தின் எதிரில் இருக்கும் மாஸ்டர் பேக்கரி டீக்கடை ஊரில் மிகவும் பிரபலம்.  சில நாள்களில் காலைப் பொழுதின் பசியை மாஸ்டர் பேக்கரியின் 'பட்டர் பன்'தான் தீர்த்து வைக்கும். ஒன்று சாப்பிட்டாலே ஓரளவு வயிறு நிறைந்துவிடும். பேருந்து நிலையத்துக்கு உள்ளே பரவியிருக்கும் கலவையான வாசனை ஒருவிதக் கிறக்கத்தை ஏற்படுத்தும். அது சில நேரங்களில் எல்லை மீறி வாந்திக்கான தொடக்கமாகவும் மாறும். 
காலை,  மாலை தவிர்த்த மற்ற நேரங்களில் பேருந்து நிலையம் பெருமளவுக்குப் பரபரப்பாக இருப்பதில்லை. வேடிக்கை பார்ப்பதற்கு சுவாரஸ்யமற்ற சில நாள்களில் நான்கு பனங்கிழங்குகளை வாங்கிக் கொண்டு அவற்றைத் தின்றபடியே மெதுவாக பிரதான சாலையில் மேற்கு நோக்கி நடந்து பூக்கடை, மருது பாண்டியர் பணிமனை, எதிர் சாலையில் திரும்பி தங்கம் தியேட்டர், சந்தைக்கடை, இன்றைக்கு புதிய பேருந்து நிலையமாக இருக்கும் அன்றைய ஊரணி, முருகன் கோயில், வண்டிக்காரத் தெரு,கடை வீதி, அரண்மனை, குண்டுக்கரை முருகன் கோயில், ஆர்.சி. சர்ச், அரசு மருத்துவமனை.. என ஒரு சுற்று சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தால், கை காலைக் கழுவிட்டு வந்து சாப்பிடுங்க தம்பி என்று அத்தை அடுத்தகட்டப் போருக்கு என்னை ஆயத்தமாகச் சொல்வார்கள். 
எந்தக் குழம்பு என்றாலும் என்னால் சரியாகச் சாப்பிட முடியாது. போதும்,  போதும் என்று மறுக்கும்போது, 'இளவட்டம் இப்புடிச் சாப்பிட்டா எப்படி? ஏன் ஒழுங்காச் சாப்பிட மாட்டேன்றீங்க?' என்ற அத்தையின் கேள்விகள் வழக்கமானவை. 
'வாய்க்கு விளங்கலை' என மனதுக்குள் மட்டும் நான் சொல்லிக் கொள்ளும் வெளிப்படாத பதிலும் வழக்கமானதுதான்.
ஒருநாள் பட்டணங்காத்தானில் உறவினர் இறப்புக்கு அத்தை காலையில் புறப்பட்டுப் போனார்கள். போகும்போது போனமா,  வந்தமான்னு வந்துருவேன். வீட்டைப் பாத்துக்கங்க தம்பி!என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள். வீட்டைப் பூட்டுவது, சாவியை எங்கு கொடுப்பது என்பது போன்ற குழப்பங்களால் நான் வெளியில் எங்கும் செல்லாமல் ராகுல சாங்கிருத்தியாயனுடன் ஊர் சுற்றிக் கொண்டிருந்தேன். காலையில் சென்ற அத்தை 12 மணிக்குத்தான் வீட்டிற்கு வந்தார்கள். 
பின்வாசல் வழியாக வீட்டுக்குள் நுழையும்போதே, 'கடையநாடிப் போயி ஏதாவது பலகாரம் சாப்பிட்டு வந்தீங்களா?' என்ற கேள்வியுடன் நுழைந்தார்கள்.
'ம்' என்ற ஒற்றை வார்த்தைப் பொய்யுடன் நான் முடித்துக் கொண்டேன்.
குளித்து முடித்து அவசர அவசரமாக சமையல் கட்டுக்குள் புகுந்தார்கள். நான் புத்தகத்தில் மூழ்கியிருந்தேன். வழக்கமான மதிய உணவு நேரமான ஒரு மணிக்கு , ''சாப்பிட்டுப் படிங்க தம்பி!'' என்று கையில் கரண்டியுடன் வந்த அத்தை தட்டை எடுத்து வைத்தார்கள்.
''எப்படி இவ்வளவு சீக்கிரத்தில் சமையல் செய்தார்கள்? விதி வலியது'' என்று  நான் கை கழுவிக் கொண்டு அமர்ந்தேன்.
''லேட்டாயிருச்சுன்னா நீங்க பசி தாங்க மாட்டீங்கள்ல. அதான் அவசர அவசரமாச் செஞ்சதால வேற ஒண்ணும் செய்ய முடியல. வெறும் புளிச்சாறும் அப்பளமுந்தான். குமுலா கருவாடு கொஞ்சம் கிடக்கு. நாளைக்கு அதப் போட்டு கொழம்பு வச்சிறலாம்!''
நான் ஏதும் சொல்லாமல் சாப்பிட அமர்ந்தேன். காலையிலும் ஏதும் சாப்பிடாமல் இருந்த நான் நல்ல பசியில் இருந்தேன். மசால் ஏதும் இல்லாத புளிச்சாறு நன்றாக இருந்தது. மசால் ஏதும் இல்லாத அப்பளமும்கூட பிடித்திருந்தது. பொரித்த அப்பள வளைவுகளில் எண்ணெய் அங்கங்கே தங்கியிருந்தது. அது மீன் பொரித்த எண்ணெயாக இருக்கலாம். வழக்கமாக சாப்பிடுவதைவிட நான் அன்று மிக அதிகமாக, ஏறக்குறைய மூன்று மடங்கு சாப்பிட்டேன். இதுதான் எனக்கான உண்மையான மதிய உணவு அளவு.  அத்தை ஆச்சரியப்பட்டுப் போனார்கள். ''புளிச்சாறும் அப்பளமும் ரொம்பப் பிடிக்குமோ? இத்தனை நாளா இது தெரியாமப் போச்சே!'' என்றார்கள்.
பொரித்த அப்பளத்தின் மீன் எண்ணெய் வாடையை மீண்டும் அனுபவிப்பதைத் தவிர்ப்பதற்காக, 'இனிமேல் மீன் பொரிச்ச எண்ணெயில அப்பளம் பொரிக்காதீங்க!' என்று சொல்ல நினைத்து நான் ''அப்பளத்தப் பொரிக்கிறதுக்கு!'' என்று தயங்கி நிறுத்தினேன்.
'சுட்டுத் தந்துரவா?' என்று அத்தை கேட்டதும் 'சரி' என்று தலையாட்டினேன்.
அதற்குப் பிறகு நான் அத்தை வீட்டில் மதிய உணவாக புளிச்சாறும் சுட்ட அப்பளமும் தவிர வேறு எதுவும் சாப்பிட்டதில்லை. என் அப்பாவுக்கு என்ன குழம்பு வைத்தாலும் எனக்கெனத் தனியாக புளிச்சாறு, அப்பளம் என சிறப்பு சமையல் இருக்கும். மருமகனுக்கு கழனிப் புளிச்சாறும் சுட்ட அப்பளமும்தான் ரொம்பப் பிடிக்கும். 'நல்லாச் சாப்பிடுவாக?' என்ற வார்த்தைகளை ஒரு மந்திரம்போல் உறவினர்கள் அனைவரிடமும் அத்தை சொல்லி வைத்தார்கள். அவர்களுடைய பரப்புரையின் பலன் நான் அப்பா வழியில் எந்த உறவினர் வீட்டுக்குப் போனாலும் அவர்கள் வீட்டில் என்ன சமைத்திருந்தாலும் எனக்கு 'கழினிப் புளிச்சாறும், சுட்ட அப்பளமும்' மட்டும்தான் கிடைத்தன. 
கார் ராமநாதபுரத்தின் உள்ளே நுழைந்து குலுங்கத் தொடங்கியது. ''ராம்நாடு வந்துருச்சா. ஒரு டீ சாப்பிட்டுட்டுப் போகலாங்க!'' என்று தூக்கம் கலைந்த மனைவியின் வார்த்தைகளால் நினைவு திரும்பிய நான் டிரைவரிடம் புதிய பேருந்து நிலையத்தின் எதிரில் இருக்கும் மாஸ்டர் பேக்கரியில் காரை நிறுத்தச் சொன்னேன். அன்றைக்கு பழைய பேருந்து நிலையத்துக்கு எதிரில் இருந்ததைவிடவும் அதிக கூட்டம் இன்றைக்கு புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருந்தது. மனைவி, மகளின் முறைப்புகளுக்கு இடையே நான் என் சர்க்கரை அளவை மறந்து, பழைய நினைவுகளில் மிதந்தபடி ஒரு பட்டர் பன் சாப்பிட்டேன்.
சாத்தான்குளத்துக்கு போய்ச்சேர இன்னும் பத்துப் பதினைந்து நிமிடங்கள்தான் இருந்தன. 
''ரொம்ப நாளாவே உடம்பு சரியில்லை. எதுவும் ஞாபகத்துல இருக்க மாட்டேங்குது. இடையில ஒருநாள் ஒங்களப் பத்திக் கேட்டாங்க!' என்று லீலா அத்தாச்சி போனில் சொன்னது நினைவுக்கு வந்தது. ''உழைச்ச உடம்புதான். இருந்தாலும் வயது எண்பதுக்கு மேல ஆச்சுல்ல' என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ''என்னை ஞாபகம் இருக்குமா?''
அத்தைக்கு ஒல்லியான உடல்வாகு. இப்போது ஆறு மாதங்களுக்கு மேலாக, வெறும் நீர் ஆகாரம் மட்டுமே சாப்பிட்டு, படுத்த படுக்கையாக சுருங்கிப்போய்க் கிடந்தார். ஹாலை அடுத்த சிறிய ஹாலில் ஒரு பக்கம் அடுப்பு இருந்தது. மற்றொரு பக்கம் அத்தையின் படுக்கைக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. 
'கண்களில் ஏறக்குறைய ஒளி இல்லை. காது ஓரளவுக்குக் கேட்கிறது. அவங்க பேசுற சத்தம் ஒரு அடிதூரம் மட்டுமே பயணிக்கும் அளவுக்கு  வலுவிழந்திருக்கிறது. அவங்களுக்கு எல்லாமே மறந்துக்கிட்டே வருது. உள்ளூர்ல இருக்குற சித்தி மகளையே சமயத்துல யாருன்னு கேட்குறாங்க. உங்களையும் ஞாபகம் இருக்குமான்னு தெரியலை' என்றெல்லாம் எங்களுக்கு விவரம் சொன்ன லீலா அத்தாச்சி தூங்கிக் கொண்டிருந்த அத்தையைத் தொட்டு எழுப்பினார்கள். 
''என்னை ஞாபகம் இருக்குமா?''
''அம்மா.. அம்மா... எந்திரிங்க...! அருப்புக்கோட்டை மாமா மகன் உங்களைப் பாக்க வந்திருக்கு!'' என்று அயர்ந்து கிடந்த அத்தையிடம் சிறு சுறுசுறுப்பு தென்பட்டதுபோல் தெரிந்தது. புரண்டு படுத்தார்கள். கட்டிலில் நான் அவர்கள் அருகில் அமர்ந்தேன். என் கைகளைப் பிடித்துக் கொண்டார்கள். உதடுகளின் அசைவைப் பார்த்து நான் குனிந்தேன். வார்த்தைகள் தடுமாற்றத்துடன்தான் வெளிவந்தன.
''தம்பி நல்லா இருக்கீங்களா?''
''நான் நல்லா இருக்கேன். உங்களுக்கு என்ன பண்ணுது?''
''எனக்கு என்ன பண்ணுது. அண்ணனைப் பாக்கக் கிளம்பிக்கிட்டு இருக்கேன்!''
''உங்க அண்ணனைத்தான் பாப்பீங்களா? எங்களையெல்லாம் பாக்க மாட்டீங்களா?''
மெதுவான உதட்டுச் சுழிப்புச் சிரிப்பை மட்டும் பதிலாக்கிய ''அத்தை மகளும் பேத்தியாளும்,  எப்படி இருக்காங்க?'' என்றார்கள்.
''வந்திருக்காங்க!''  என்ற என் பதிலைப் புரிந்து கொண்டு, ''அம்மா'' என அருகில் வந்த என் மனைவி, ''பயப்படாம இருங்க!'' என்றாள்.
மனைவியின் கைபிடித்து, '' நானு எதுக்குப் பயப்படணும்? பேத்தியாள எங்க? என்று கேட்டார்கள்.
என் அருகில் அமர்ந்த மகள் , ''அம்மாச்சி!'' என்றதும் மெதுவாகத் தலையிலிருந்து முழங்கால்வரை இரண்டு கைகளாலும் தடவிப்பார்த்து மெதுவான புன்னகையுடன், ''குட்டீம்மா, தாத்தா மாதிரி நல்லா வளர்ந்துட்ட'' என்றார்.  
எல்லாத்தையும் மறந்துக்கிட்டே இருந்த அத்தைக்கு என் மகளுக்குப் பெயர் வைப்பதற்கு முன் நாங்கள் அழைத்த, செல்லப் பெயர் 'குட்டீம்மா' நினைவில் இருப்பது ஆச்சர்யந்தான். 
''நாங்கள் வந்தது ஒருவகையில் சரிதான்''
'அப்பா வளத்திக்கு இன்னும் கொஞ்சம்தான் அம்மாச்சி'  என்று மழலை மாறாமல் சொன்ன மகளை மோவாய் தொட்டுக் கொஞ்சினார். அவ்வளவு பேசியதில் களைப்பாயிருந்தார்.  மூச்சு வாங்கியது. குனிந்து காதுகொடுத்துக் கொண்டிருந்த மகள் நிமிர்ந்து என்னிடம், 'லீலான்றாங்க' என்றாள்.
''அவங்க மக.  உன்னோட பெரியம்மா!'' என்று சொல்லிவிட்டு சத்தமாக, ''அத்தாச்சி!'' என்று அழைத்தேன்.
ஹாலில் மெதுவாக அழுதுகொண்டிருந்த அத்தாச்சி கண்களைத் துடைத்தபடி வந்தார். அத்தைக்குக் காது கொடுக்கக் குனிந்த அவர்களுக்கு வழிவிட்டு நாங்கள் விலகினோம். ''சரிம்மா! சரிம்மா! சரிம்மா! நீங்க தூங்குங்க.. நான் பார்த்துக்குறேன்.''
'நான் என்னவாம்' என்று குறிப்பால் கேட்க, 'சொல்கிறேன்'  என அவர்களும் குறிப்புக் காட்டினார்.  அத்தைக்குப் போர்த்திவிட்டு அவர்கள் அமைதியாகும்வரை காத்திருந்து ஹாலுக்கு வந்தவர்களின் கையில் கொஞ்சம் பணம் கொடுத்தேன். ''பாத்துக்கங்க! என்ன சொன்னாங்க!  சரிம்மா, சரிம்மா'ன்னுக்கிட்டிருந்தீங்க?''
''அவங்களுக்கு பகலும் தெரியல, ராவும் தெரியல. இப்ப சாயங்காலம்ன்னு தெரியாம, இப்பத்தான் விடிஞ்சிருக்குன்னு நெனைச்சுக்கிட்டு பிள்ளைங்களுக்கு மீன் எடுத்து சமைச்சுப்போடு. தம்பிக்கு தனியா கழனிப் புளிச்சாறு வச்சு அப்பளம் சுட்டு வச்சுருன்றாங்க. அதைத்தான் திரும்பத் திரும்பச் சொன்னாங்க!''.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com