வில்லத்தனமான சிரிப்புடன், தனது ஆக்ரோஷமான நடைபயணத்தை சூரியன் துவங்கும் ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் இரவு தூக்கத்தில், காக்கைகள், குடும்பம் குடும்பமாக.. என் கனவில் வந்து, தங்கள் கூரிய அலகால் தலையில் வருடி(வருடல்=கொத்தல்) கொடுத்து, ''நாங்க செளக்கியம். நீங்க செளக்கியமா...?'' என்று கா.. கா. ராகத்தில் கானா பாட்டு பாடி, என்னிடம் நட்பு பாராட்டின.
சமகாலத்தில், பல காக்கைமார்கள், 'வாங்க பழகலாம்' என்று நட்பு பாராட்ட, காதுக்கு அருகில் வந்து, கா..கா.. என்று கரைந்தபோது, அத்தனை நட்புகளை(?) கூட்டமாகப் பார்த்தவுடன், எனக்கு கொஞ்சம் உதறல் எடுத்து, 'காழ்..காழ்..' என்று உளற ஆரம்பித்தேன். அப்பொழுது, என் தலையில், நறுக்கென்று ஒரு குட்டு விழுந்ததும், முக்கால் தூக்கம், அந்தக் குட்டில், கால் தூக்கமாக கரைந்து சுருங்கியது.
இந்த காக்கை கூட்டம் என்னை இப்படி கலாய்ப்பதற்கு காரண காரியங்களை ஆராயும்படி உள் மனது கூக்குரலிட்டது. காக்கா தலையில் கொத்தியதற்கான பலனைத் தெரிந்து கொள்ள, பாதி ராத்திரியில் பஞ்சாங்கத்தை தேட படுக்கையிலிருந்து எழுந்தேன்.
''சுத்த பழைய பஞ்சாங்கமா இருக்கீங்களே! நடு ராத்திரியில் காழ்.. காழ்ன்னு கத்திக்கிட்டு!'' என்று வழக்கம் போல், என் மனதை படித்த மனைவி, விரல்களை தடவி விட்டுக் கொண்டாள்.
''என்ன இது! பாறாங்கல்லு மாதிரி தலை. ஓங்கி குட்டியதில், என் மோதிரம் நசுங்கிடுச்சு. அதற்கு பதிலா வேற மோதிரம் வாங்கிக்கலாம். ஆனா, இழந்த தூக்கத்தை உங்களால் இந்த ஜென்மத்தில் திரும்ப வாங்கி தர முடியுமா?'' என்றுஅந்தத் தூக்கக் கலக்கத்திலேயே என்னை தாக்கி, கூழாக்கினாள்.
''நல்ல வேளை. உள்ளுக்குள்ள களிமண்ணுதான் இருக்குன்னு வாய்க்கு வாய் நிந்திச்சுக்கிட்டு இருந்தவ, இப்ப பாறாங்கல்லுன்னு புகழ்வதைக் கேட்டு, யாம் அகமகிழ்ந்தோம்!'' என்று ஓரிரு தூய தமிழ் வார்த்தைகள், தூக்கக் கலக்கத்தில், என்னையும் அறியாமலேயே வாயிலிருந்து வெளியே வந்து விழுந்தன.
''தூக்கக் கலக்கத்தில் ஒரு குட்டு குட்டினாத்தான், ஐயாவுக்கு தமிழ் வரும் போலிருக்கு! இப்பத்தான், தமிழ் வாத்தியாரின் மகன்னு ஞாபகம் வந்தது போல தெரியுது. உங்களுக்குள்ள ஒளிஞ்சிருக்கிற தமிழ்ப் புலமையை வெளியே கொண்டு வரவேண்டியது என் கூடுதல் பொறுப்பு. இனிமேல், தினமும் நடுராத்திரி, தூய தமிழ் பேசப் போறீங்க! என்றுஅவள் வைத்த 'குட்டு பொறி'யில் நானே தலையை கொடுத்து மாட்டிக் கொண்டேன். 'தமிழில் வெண்பா எழுதுவது வரை, எனக்கு ஓரளவு தமிழ் அறிவு உண்டு' என்று பீத்திக் கொள்ள எனக்கு தெரியாது(?).
எனக்குள் இப்படி பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் போது, ஏதோ பொறி தட்டியது போல் மனைவி எழுந்து உட்கார்ந்தாள்.
''நீங்க காழ்.. காழ்னு.. கத்தியது, கூழ்.. கூழ்னு.. உரு மாறி என் காதில் விழுந்தது நல்லதா போச்சு. நாலு தலைமுறையாக கொள்ளுபாட்டி, பாட்டி, அத்தை, அம்மாவிடம் இருந்த 'வற்றல் கட்டளை' அம்மா காலத்துக்குப் பிறகு, இந்த சோபகிருது வருஷத்திலிருந்து எனக்கு சொந்தமாகிறது. அந்தக் கட்டளை என் காலம் வரைக்கும் தொடரும். அதுவரை, வருடா வருடம், சித்திரை மாதத்தில் எங்க பரம்பரை ஃபார்முலாப்படி, வற்றல், வடாம் போட்டு, உறவினர்களின் மனம் குளிரும்படியாக நான் டிஸ்டிரிபியூட் செய்யணுங்கறதுதான் கட்டளை. அந்த ஃபார்முலா, ஒரு ஓலைச்சுவடியில் இருக்கு!'' என்று ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்கும் திறமை படைத்த மனைவி என்னிடம் கூலாக பேசினாள்.
'' அந்தச் சுவடி எங்கிருக்கு!'' என்று கொட்டாவி விட்டபடியே ஒரு சொத்தையான கேள்வியைக் கேட்டு வைத்தேன். இதுவரை, இந்த ஐட்டங்களை கடையில் வாங்கிக் கொண்டிருந்தவளுக்கு திடீரென்று தோன்றிய இந்த யோசனை, எனக்கு எதிர்பாராத சில கூடுதல் வேலைகளை கொண்டு வரும் என்ற பயம் தொற்றிக் கொண்டது.
''நம்ம கல்யாணத்தில் கொடுத்த பிறந்த வீட்டு சீர்வரிசையில் ஒரு சந்தனப் பேழை இருக்கும். அந்தப் பேழைக்குள்தான், சுவடி இருக்கும்!''
''அந்த பேளை எங்கிருக்கு?'' என்று தூக்கக் கலக்கத்தில், கேள்விகள் வெளியேறி தெரித்தன.
''உங்க நாக்கில், தர்ப்பையை போட்டு பொசுக்கணும். 'ழ'னாவை, 'ள'னாவா ஏன் உருமாத்தறீங்க.? நாளைக்கு, முழுவதும், 'ழ'னா வர வார்த்தைகளை மட்டும்தான் பேசறீங்க! இப்ப வாழைப்பழம்னு நூறு தடவை சொல்லுங்க!''
'தண்டனை' என்று வந்துவிட்டால், அவள் எந்த எல்லைக்கும் போக தயங்காதவள். அவளுடைய சொந்த ஊர் அம்பாசமுத்திரம் என்பது, இதுபோன்ற தருணங்களில் என் நினைவில் வந்து தொலைக்கும். அந்த ஊரிலிருந்துதான், மகன் 'சைனா'வுக்கு பெண் எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். 30 வயதாகியும் மகனுக்கு திருமணம் ஆகவில்லை என்ற வருத்தம் அவளை வாட்டிக் கொண்டிருந்தது. மகன் எப்பொழுதும் அம்மா கட்சிதான்.
அப்படித்தான், அன்றொரு கருப்பு நாளில், ஒலிம்பிக் ஜோதியை ஒப்படைப்பது போல், அடுப்பில் வைத்த பால் பொங்கி வழியாமல் பார்த்து கொள்ளும் மாபெரும் பொறுப்பை (?) என்னிடம் ஒப்படைத்துவிட்டு, அவள் ஃபேஸ் புக்கில் மூழ்கினாள். தினசரி கால அட்டவணைப்படி, அன்று அவளுடைய ஃபேஸ் புக் பார்வை நேரம் காலை 7.30 மணி. அது எனக்கு ஏழரையாக மாறி, என்னை சுட்டு வீழ்த்தும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
அந்த சமயத்தில், வாட்ஸ்அப்பில் பொங்கி வழிந்த வதந்தீகளில் மூழ்கி திளைத்துக் கொண்டிருந்தவனுக்கு, அடுப்பில் எரிந்த கொண்டிருந்த தீயை பற்றிய நினைவு அறவே அழிந்து போனது.
அதனால், அடுப்பில் சூடேறிக் கொண்டிருந்த பால் பொங்கி வழிந்து ஓடியதை கவனிக்க 'மிஸ்' பண்ணிவிட்டேன்.
ஏழரையை தாண்டி, வெளியே வந்த என் 'மிஸஸ்' அங்கு வந்து நின்று, வெப்பம் பரவிக் கொண்டிருந்த கிச்சனில், வாட்ஸ் அப்பில் படு சீரியஸாக மூழ்கியிருந்த என்னையும், தரையில் ஆறாக வழிந்தோடிய பாலையும், அடுப்பையும் மாறி மாறி கவனித்ததை நான் கவனிக்கவில்லை.
' 'உங்களிடம் என்ன சொல்லிட்டு போனேன்? என்று முதன் முதலாக, எனக்கு பதில் தெரிந்த கேள்வியை கேட்டாள்.
''அடுப்பில் வச்சிருக்கிற பாத்திரத்திற்குள் இருக்கிற பால் பொங்காம பார்த்துக்க சொன்னே?''
''இப்ப அந்த பாத்திரமும் பாலும் எங்கே?''
''எங்கே?''
''எவர்சில்வர் பாத்திரம் உருகி, கரித்துண்டாயிடுச்சு!''
''நல்ல வேளை. பாலுக்கு ஒண்ணும் ஆகலையே?'' என்ற என் அப்பாவித்தனமான கேள்வி அவளை வெகுவாக நோகடித்திருக்க வேண்டும்.
''நம்ம மண வாழ்க்கையில் பாலும் தேனும் ஆறாக பெருகி ஓடுமுன்னு ஒரு ஜோசியர் சொன்னது இப்ப பலிச்சிடுச்சு பாரு. என்ன, தேன்தான் மிஸ்ஸிங்க்'' என்ற என்னுடைய கொழுப்பு தோய்ந்த வியாக்கியானமும் அந்த நோகடிப்பிற்கு வலு சேர்த்திருக்க வேண்டும்.
அதற்கு தண்டனையாக, 48 நேரத்துக்கு எனக்கு காபி என்ற திரவ சப்ளை கட் செய்யப்பட் டது.
'பால்'ய கால நினைவுகளுடன், பள்ளி மாணவன் போல், 'வாழைப்பழம் நூறாவது தடவை' என்று சொல்லி, தண்டனையை முடித்ததும், நாக்கு குளறி வலித்தது.
'பொறுப்பை நிறைவேற்றும்போது வலி இருக்கத்தான் செய்யும். அதற்காக, சும்மா இருந்துட முடியுமா? பேழை எங்கிருக்குன்னு கேட்டதை மறந்திருப்பீங்களே. அது ஒரு மரப் பெட்டிக்குள் இருந்ததா ஞாபகம். நீங்க எதுக்கு இருக்கீங்க? காலையில் எழுந்ததும், முதல் வேலையாக பரணில் ஏறி அந்த பெட்டியை தேடி கண்டு
பிடிச்சு, ப்ராஜக்ட் மெட்டீரியலை டெளன் லோட் பண்ணுங்க! அதில் பரிவட்டம், குடை, சிலம்ப குச்சி, ஒரு ஜோடி செருப்பு இருக்கும். நாள் கடத்தினால், 'கட்டளை' எக்ஸ்பைர் ஆகி, அது என்னுடைய ஜூனியர்களுக்கு போயிடும். அந்த அவமானத்தை என்னால், தாங்கிக்க முடியாது. சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு, வழக்கமான உங்க தில்லுமுல்லு வேலைகளை இதில் காட்டிடாதீங்க?'' என்று வேலையை அலாட் செய்வதோடு மட்டுமின்றி, என் குணாதிசயங்களை (?) அவ்வப்போது சுட்டி காட்டுவதற்கு அவள் ஒருபோதும் தயங்கியதில்லை.
அது ஒன்றும் எனக்கு பெரிய வேலையாக தெரியவில்லை. ஆனால், அந்த பரணை நினைத்ததும், கதி கலங்கியது.
இந்த இடத்தில், வீட்டு பரணைப் பற்றி சொல்லியாக வேண்டும். அது ஃப்ரிஜ்ஜின் உருமாறிய குப்பைத் தொட்டி என்று சொல்லலாம். பரணை பற்றிய வெண்பாவில், ஃப்ரிஜ்ஜுக்கும் ஓர் இடமுண்டு. ஃப்ரிஜ்ஜின் முழுக் கட்டுப்பாடும் என் மனைவியிடம் இருந்தது.
ஆனால், அப்பர் பர்த் போல், அமைக்கப்பட்டிருந்த பரண், (துர்) அதிர்ஷ்டவசமாக, என் கட்டுப்பாட்டில் இருந்தது. அதற்கான காரணம், அது கைக்கு எட்டாத உயரத்தில் இருந்தது என்பதுதான். என்னைப் பொருத்தவரை, ஃப்ரிஜ்ஜும், பரணும், ஒரே குட்டையில் ஊறிய, குப்பை தொட்டிகள்தான்.
உடனடியாக தேவைப்படாத பொருள்களை திணிப்பதால், பரணில் அடிக்கடி டிராஃபிக் ஜாம் ஏற்படும். மனைவியை கேட்டால், 'எது எப்ப தேவைப்படும்னு சொல்ல முடியாது' என்பாள்.
'எதையும், அவள் அனுமதியின்றி தூக்கி போடக்கூடாது' என்பதுதான் அதற்கான அர்த்தம். அது போன்ற நெருக்கடிகளைச் சமாளிக்க, மனைவி வீட்டில் இல்லாதபோது, நான் என் 'வீசிங்' பவரை பயன்படுத்தி, பயன்பாட்டில் இல்லாத பொருள்களை வெளியில் வீசி எறிந்து, வெயிட்டிங் லிஸ்ட்டில் காத்திருக்கும் குப்பைகளுக்கு வழி விடுவேன். இது போன்ற, பரண் சார்ந்த பொருள்களின் கடத்தல் குற்றம் நடைபெறுவது இதுவரை மனைவிக்கு தெரியாது. ஃப்ரிஜ் போல், பரணில் உள்ள பொருள்களும் பாதுகாப்பாக இருப்பதாக அவள் எண்ணிக் கொண்டிருந்தாள். அதனால்தான், அந்தப் பெட்டியை பரணில் தேட கட்டளை பிறப்பித்தாள் என்று நினைக்கிறேன்.
அவள் குறிப்பிட்ட பெட்டியை, சமீபத்தில் பரண் மற்றும் பரண் சார்ந்த ஏரியாவில் பார்த்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. கண்ணை மூடினால், மறந்தவைகள் எனக்கு ஓரளவு ஞாபகத்திற்கு வரும். பக்க விளைவுகளிருந்து தப்பிக்க, கண்களை மூடினேன். ஊஹும் பெட்டிக்கு பதில், காக்கை கூட்டங்கள்தான், மீண்டும் கனவில் வந்தது. அந்த பெட்டிக்கும் காக்கைகளுக்கு ஏதோ தொடர்பு இருப்பது போல் தோன்றியது.
நான் தூங்கி எழுந்தபொது, பரண்தான் ஞாபகத்துக்கு வந்தது.
பரணுக்குள் நுழைந்து, அதில் இருக்கும் பழைய சாமான்களை இறக்கி வைத்து, பெட்டியை தேடுவதற்கு இரண்டு லாரிகள் தேவைப்படும். அதற்கு என் சோம்பேறித்தனம் நிச்சயம் இடம் கொடுக்காது.
சூடான காபியை உறிஞ்சி குடித்ததும், மூளை பொங்கி எழுந்தது.
'யுரேகா' என்று என்னையும் அறியாமல் கத்தினேன்.
''யார் அந்த ரேகா!'' என்று என்னை பார்த்து ஒருமுறை முறைத்துவிட்டு மனைவி போன் பேச போனாள்.
அப்பொழுது, நான் சற்றும் எதிர்பாராத ஒன்று நிகழ்ந்தது.
ரேகா என்ற பெயரை கேட்டதும், மகன் 'சைனா' என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.
''ரேகாவை உங்களுக்கு தெரியுமாப்பா!'' என்றான்.
''கடுப்படிக்காதேடா சும்மா இரு!''என்று அவனை அடக்கினேனே தவிர, திடீரென்று ரேகாவின் மீது அவனுக்கு என்ன திடீர் அக்கறை என்பது எனக்கு அப்போது புரியவில்லை.
''அம்மாவுக்கு இப்படி பெட்டி பாம்பா அடங்கியிருக்கீங்களே! எனக்கு ஒரு மாதிரியா இருக்குப்பா?'' என்று என் பக்கம் அனுதாப அலைவீசியதில், புல்லரித்து போனேன். ஆனால், அதற்கான காரணம்தான் புரியவில்லை. தனிக் கட்சி, வலுவான கூட்டணி கட்சியாக மாறுவதுபோல் எனக்கு தோன்றியது.
அதனால்தான், அந்தப் பெட்டியை தேடற டாஸ்க்கை எனக்கு கொடுத்திருக்கிறாள்! நடந்தவைகளை அவனிடம் விளக்கினேன்.
சீனிவாசன் என்ற அவனுடைய பெயர் காலப் போக்கில் சுருங்கி, முதல் சுருக்கத்தில் 'சீனி' என்றும், கடைசியாக 'சைனா' என்றும் ஆனது. மெக்கானிக்கல் மைன்ட் படைத்தவன், 'சைனா' என்ற பெயர் காரணத்தினால், எந்த பொருளை பார்த்தாலும் அதற்கான டூப்ளிகேட்டை தயாரித்துவிடுவான். எனவே, டூப்ளிகேட் என்பது அவன் மூளையில் ஊறிய ஒன்றாகும்.
என்னுடைய யுரேகா ஐடியா அவனுக்கும் பிடித்திருந்தது. பெட்டியை தேடுவதற்கு பதிலாக, அதே போல, ஒரு டூப்ளிகேட் பெட்டியை தயார்படுத்த வேண்டும் என்பதுதான் அந்த ஐடியாவின் சாராம்சம்.
''நாம ரெண்டு பேருமா சேர்ந்து பிரச்னையை கூழாக்கி சமாளிச்சுடலாம். கவலைப்படாதீங்க டாடி!'' என்றவனை சற்று திகைப்புடன் பார்த்தேன்.
பிரச்னையை தூள் தூளாக்கிவிடலாம் என்பதற்கு பதிலாக, கூழாக்கிவிடலாம் என்ற அவனுடைய வார்த்தைகள், மனைவியின் கூழ் ஆசையுடன் ஒத்துப் போனதுதான் அந்த
திகைப்புக்கு காரணம்.
நடக்கும் சம்பவங்கள் அனைத்தும், ஒன்றோடொன்று கைகோர்த்து நகர்வது போலவே எனக்கு தோன்றியது.
கோடம்பாக்கத்தில், சினிமாவுக்கு தேவையான செட் பிராப்பர்ட்டி சப்ளை செய்யும் இடம் எனக்கு தெரியும். ரூபாய் நோட்டு முதல், சண்டை காட்சிக்கான டூப் வரை எல்லாவற்றையும் அரேன்ஜ் செய்து கொடுப்பாங்க. இந்தப் பெட்டியெல்லாம், அவங்களுக்கு 'ஜுஜுபி' என்று தைரியம் கொடுத்தான்.
'பெட்டி வந்து சேரும் வரை, எப்படியாவது சமாளியுங்க. சமாளிக்க உங்களுக்கு சொல்லியா தரணும்' என்று ஒரிஜினல் அறிவுரையும் வழங்கினான்.
'எல்லாம் ரெடி. டூப்ளிகேட் சுவடி மட்டும் வரணும். ஆனா, அதற்கான 'கன்டென்ட்' வேண்டும்!' என்ற கோரிக்கையால் தாக்கப்பட்டதும், யோசித்து, மூளை கூழாகியது.
கூழானாலும், யோசித்ததில், 'யூ டியூபே துணை' என்ற பதில் கிடைத்தது.
யூ டியூபிலிருந்த கூழ் செய்முறையை, என் தமிழ் புலமையை பயன்படுத்தி, செய்யுள் வடிவில் மாற்றி கொடுத்ததும் சுவடியோடு, பெட்டி ரெடியானது.
அன்று மாலை, பெட்டியை அவள் முன் கொண்டு வந்து காட்டியதும், ஆச்சரியப்பட்டு ஆனந்த எமோஜியை வெளிப்படுத்துவாள் என்று காத்திருந்தேன்.
''உங்ககிட்ட ஒரு வேலையை ஒப்படைத்தால், நான் கவலையே படவேண்டாம். நாளைக்கு விடியற்காலையில், பெட்டியை ஓப்பன் பண்றோம். கட்டளையை செயல்படுத்த ஆரம்பிக்கிறோம்!'' என்றுபெட்டியை பார்த்த மனைவி உற்சாகமாக, அடுத்த வேலையை அலாட் செய்தாள்.
''கஷ்டப்பட்டு போடற வற்றல் வடாங்களை இந்த காக்காய்களிடமிருந்து காப்பாற்றுவதற்கு, வெயிலை பொருட்படுத்தாமல் பார்த்துக்க பொறுப்பா ஒரு ஆள் தேவை. ஒரு துளி சேதாரம் கூட ஆகாமல், பிராடக்ட்டை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது உங்க முழு பொறுப்பு!'' என்று ஏதோ நகை கடை விளம்பரம்போல் அறிவிப்புகளை வெளியிட்டு கொண்டிருந்தாள்.
''இந்த வைபவம் என்றைக்கு? என்று அப்பொழுது அங்கு வந்த சைனா ஆவலோடு கேட்டான்.
''உனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. நீ ஆபீஸ் கிளம்பி போற வழியை பார். விடியற்காலையில் எழுந்து, சுவடி படித்த பிறகுதான் முழு விவரம் தெரியும்!'' என்று மனைவி அவனை கட் செய்தாள்.
வழக்கமாக எட்டு மணிக்கு படுக்கையைவிட்டு எழும் சைனா, கட் ஆகாமல், விடியற்காலையிலேயே எழுந்து, எதுவுமே தெரியாதது போல் வந்து நின்றான். எதிர்பார்த்தபடியே, மனைவி என்னை சுவடியை பிரித்து படிக்க சொன்னாள்.
அதற்காகவே காத்திருந்தவன், அந்த டூப்ளிகேட் சுவடிக்கட்டை ஆச்சரியத்துடன் பார்த்தேன்.
பழுப்பு நிறம் கொண்ட ஓலைகளிலான சுவடி கட்டு, இடது பக்க துளை மூலம் செலுத்தப்பட்ட மஞ்சள் தடவிய கயிறால் பிணைக்கப்பட்டிருந்தது. கயிற்றின் மேல் நுனியில் ஒரு செப்புக் காசு இருந்தது. இரண்டு சவுக்கு கட்டைகள், சுவடியின் மேல் மற்றும் கீழ் பகுதிகளை இருகப் பற்றியிருந்தன.
நான் சுவடியை பிரித்து படிக்க ஆரம்பித்தேன்.
''மேலான சுபகிருது ஆண்டு தோற்றம் தோற்றமதில் கண்டேனே குடும்ப சுவடி. சுவடிதனில் விளம்பிய கட்டளைக்கு அடி பணிந்தோம். பரிவாரங்கள் சூழ, தண்ணீருடன் பச்சரிசியும், உப்பும், மிளகாயும் சேர்த்து அரைப்பின் பிறந்துடுமே வெண்மை கூழ் கூழ்தனை ஓர் இரவில் ஊறவிட!
ஊறவிட்ட கூழ்தனை புளிப்பு தட்ட தட்டியபின் வேகவைத்த ஜவ்வரிசியும் பெருங்காயமும் கலந்து சேர்க்க சேர்த்தபின் கெட்டியான கூழ்தனை வெள்ளை வேட்டியில் பிழிய,
பிழிந்தபின் கதிரவனை வேண்டி துதித்து மூன்று பகல் சேதாரமின்றி காய்ந்த பின்னே கவனத்துடன் வேட்டியையும் வற்றலையும் பிரித்தெடுத்து காக்கை போல் பகிர்ந்துடுவாய் பெண்மணியே!''
செய்முறையை காது கொடுத்து கேட்ட மனைவி, ''என்ன பண்ணுவீங்களோ? ஏது பண்ணுவிங்களோன்னு எனக்கு தெரியாது. நாலு கணு பிரண்டை வேணும். இல்லைன்னா, இந்த பிராஜக்டையே கைவிட வேண்டி வரும்!''என்று கட்டளையிட்டாள்.
''அப்படின்னா? அந்த மரம் எங்கே வளரும்?'' என்று வழக்கம்போல் வாயை பிளந்தேன்.
''இது கூட தெரியாம வளர்ந்திருக்கீங்க! உங்களை பெற்ற வயிற்றில் பிரண்டையைத்தான் கட்டணும்!'' என்றவள் யோசித்தாள்.
''பிரண்டை, அவ்வளவு ஈஸியா கிடைக்கற வஸ்து இல்லை. ஆனால், எங்கேயோ பார்த்த ஞாபகம். ஆங். இப்ப ஞாபகம் வந்துடுச்சு! பக்கத்து வீட்டு தோட்டத்தில், பிரண்டை கொடி பரந்து வளர்ந்திருக்கு. அந்த வீட்டுக்கு யாரோ புதுசா குடி வந்திருக்காங்க! அக்கம்பக்கத்தினரிடம் பேசுவதில்லை. ரொம்ப ரிசர்வ்ட் டைப் போலிருக்கு. அவங்களிடம் கேட்டு வாங்கி வாங்க!'' என்று என்னை விரட்டினாள்.
பக்கத்து வீட்டு காலிங் பெல்லை அழுத்தினேன். ஓர் இளம்பெண் கதவை திறந்து, 'வாங்க அங்கிள்' என்று வரவேற்று, என் கோரிக்கையை உள் வாங்கினாள்.
''ஓ. வச்சிரவல்லியா? தாராளமா எடுத்துக்கோங்களேன். அதை வெட்டும்போது கை அரிப்பு உண்டாகும். நானே வந்து எடுத்து தர்றேன்!'' என்று உதவிக்கரம் நீட்டியவள், வேலியில் படர்ந்திருந்த கொடியை லாவகமா கத்தரியால் வெட்டி, 'எலும்புக்கும், ஜீரண சக்திக்கும் பிரண்டை ரொம்ப நல்லது' என்று சொல்லி, ஒரு பேப்பரில் சுற்றி கொடுத்தாள்.
உங்க வீட்டில்..!