பரபரப்பாகும் மோகன்லால்

'இருவர்', 'உன்னை போல ஒருவன்', 'ஜில்லா',  'காப்பான்'  போன்ற படங்களில் நடித்திருந்தாலும், 'ஜெயிலர்' படத்தில் வந்த இரண்டு காட்சிகள் கை நிறைய கைதட்டல்களையும் விசில்களையும் மோகன்லாலுக்குப் பெற்று தந்தது. 
பரபரப்பாகும் மோகன்லால்

'இருவர்', 'உன்னை போல ஒருவன்', 'ஜில்லா',  'காப்பான்'  போன்ற படங்களில் நடித்திருந்தாலும், 'ஜெயிலர்' படத்தில் வந்த இரண்டு காட்சிகள் கை நிறைய கைதட்டல்களையும் விசில்களையும் மோகன்லாலுக்குப் பெற்று தந்தது. 

கேரளத்தில் இவருக்காகவே 'ஜெயிலர்'  சக்கைப் போடு போட்டது. இந்த ஒரு படத்தோடு அவரைச் சுருக்கிவிட முடியாது. கேரள மண்ணில்  முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத 'தம்புரானாக' வீற்றிருக்கும் அவர்,  'லாலேட்டன்' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.  

அடுத்தடுத்து வரவுள்ள மோகன்லாலின் படங்கள் குறித்துப் பார்ப்போம்.


மலைக்கோட்டை வாலிபன் 

அங்கமாலி டைரீஸ், 'ஈ.ம.யூ', 'ஜல்லிக்கட்டு' போன்ற படங்கள் மூலமாகத் தனி முத்திரை படைத்தவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி. இவர் முதன்முறையாக மோகன்லாலுடன்  'மலைக்கோட்டை வாலிபன்'  என்ற வரலாற்று கதைக்களத்தைக் கொண்ட படத்தில் இணைக்கிறார்.  மோகன்லால் மல்யுத்த வீரராக நடிக்கிறார். மோகன்லால் மொத்தமாகவே தன் கெட்டப்பை மாற்றி நடித்த படங்கள் மிகக் குறைவு என்பதாலும், வித்தியாசமான முன்னோட்ட காட்சிகளாலும் கூடுதல் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது இப்படம். அண்மையில், லிஜோ இயக்கத்தில் மம்மூட்டி நடித்த 'நண்பகல் நேரத்து மயக்கம்' திரைப்படம், ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்றது. அடுத்த ஆண்டு ஜனவரி 25இல் இந்தப் படம் வெளியாகிறது.

நேரு 

'த்ரிஷ்யம் 1', 'த்ரிஷ்யம் 2',  '12 மேன்' போன்ற படங்களுக்குப் பிறகு மோகன்லாலும் ஜீத்து ஜோசப்பும் இணையும் நான்காவது படம்.  கோர்ட்ரூம் டிராமாவான இந்தப் படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது. இயக்குநர் ஜீத்து ஜோசப்புடன் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கும் சாந்தி மகாதேவன், 'லியோ' படத்தில் பார்த்திபன் கதாபாத்திரத்துக்காக வாதாடும் வழக்குரைஞராக நடித்திருப்பார்.

எல்2: எம்புரான் 

மோகன்லாலின் ஃபேன் பாயான நடிகர் பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமான படம் 'லூசிஃபர்'. 'எங்க ஏட்டனுக்கு நான்தான் செய்வேன்'  என்று இறங்கி அடித்து, லூசிஃபரை ஒரு 'ஃபேன் பாய்' சம்பவமாக மாற்றினார். அதன் இரண்டாம் பாகம் 'எல்2: எம்புரான்' என்ற பெயரில் பிரித்விராஜ் இயக்கத்திலேயே வெளியாகவுள்ளது. அதற்கான படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மோகன்லாலின் அடுத்த மாஸ் படமாக இது இருக்கும். 

பர்ரோஸ் 

மோகன்லாலில் கனவுப் படம் என்று சொல்லப்படும் பர்ரோஸ் படம், 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டு வெளியாகவுள்ளது. மோகன்லால் இயக்குநராக அறிமுகமாகவுள்ள இப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார்.

2020ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டாலும், கரோனா பொது முடக்கம், அடுத்தடுத்த படங்களுக்கான வேலைகள் போன்ற காரணங்களால் தள்ளிப் போனது. இப்போது மீண்டும் புத்துயிர் பெற்றுள்ள படப்பிடிப்பால், 'பர்ரோஸ்' படம் அடுத்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் வெளியாகவுள்ளது.  

ரம்பான் 

மலையாள சினிமாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான ஜோஷி இயக்கத்தில் வெளிவரவுள்ள ஆக்ஷன் படம் ரம்பான். ஜோஷி  மோகன் லால் கூட்டணியில் பல படங்கள் வெளியாகியிருந்தாலும், செம்பன் வினோத்தின் எழுத்து 'ரம்பான்' மீதான எதிர்ப்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

ஒளிப்பதிவாளர் சமீர் தாகிர், படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன், இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் போன்ற சமகால ட்ரெண்ட்செட்டர்களும் இக்கூட்டணியில் இடம்பிடித்துள்ளார்கள். அடுத்த ஆண்டு மே மாதத்தில் இப்படத்திற்கான பணிகள் தொடங்கவுள்ளன. 2025ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. 

ராம்

ஜித்து ஜோசப்  மோகன் லால் இணையும் ஐந்தாவது படம் 'ராம்'. மோகன்லாலுடன் த்ரிஷா முதன்முதலாக நடிக்கிறார். 2020ஆம் ஆண்டே படப்பிடிப்பு தொடங்கி, பொது முடக்கத்தால் தள்ளிப்போனது. இப்போது மீண்டும் பணிகளைத் தொடங்கியுள்ளது படக்குழு.  இப்படம் இரண்டு பாகங்களாக வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

த்ரிஷ்யம் 3  கன்க்ளூஷன்

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வருகிறதோ இல்லையோ, ஒரு 'த்ரிஷ்யம்' பாகம் வந்து விடும் என்று குருவாயூர் கல்வெட்டில் வெட்டி வைக்காத குறையாக ஒரு விதி உருவாகி வருகிறது. அண்மையில், 'த்ரிஷயம்' படங்களின் தயாரிப்பு நிறுவனமான ஆசிர்வாத் சினிமாஸ் அதிகாரபூர்வமாக மூன்றாம் பாகத்துக்கான அறிவிப்பை வெளியிட்டது.

அடுத்தாண்டுதான் இதற்கான பணிகள் தொடங்கவுள்ளன என்றாலும், ஜார்ஜ் குட்டி ரசிகர்கள் இப்போதே குஷி மோடுக்கு போய்விட்டனர். 'நம்மவரோ' மய்யம், 'இந்தியன் 2', பிக் பாஸ் என பிஸியாக இருப்பதால், எல்.சி.யூவிலாவது சுயம்பு லிங்கத்தை கண்ணில் காட்டும்படி கமல் ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

ஆக்ஷன், த்ரில்லர், 3டி, வரலாற்றுப் படம் என எல்லா ஜானரிலும் களத்தில் இறங்கி, 'ஞான் ரெடியாய் வரவாய்... ஏட்டன் ஞான் ரெடியாய் வரவாய் மோனே தினேஷா...' என்று தனது அலப்பறையைக் கிளப்பத் தொடங்கியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com