ஆண்டு இறுதியில் மோதும் படங்கள்: இந்திய அளவில் ஒரு பார்வை

ஒரே சமயத்தில் இரண்டு பெரிய படங்கள் வெளியானால்,   யார் பெரியவர் ?  என்பதை நிரூபிக்கும் முனைப்பு ஒரே களேபரமாக இருக்கும். 
ஆண்டு இறுதியில் மோதும் படங்கள்:  இந்திய அளவில் ஒரு பார்வை

ஒரே சமயத்தில் இரண்டு பெரிய படங்கள் வெளியானால், யார் பெரியவர் ? என்பதை நிரூபிக்கும் முனைப்பு ஒரே களேபரமாக இருக்கும். பெரிய படம் என்றாலே தற்போது ஒரு மொழியில் மட்டும் வெளியாவதில்லை. பல மொழிகளில் டப் செய்யப்பட்டு, அதே நாளில் வெளியாகிறது. ஒரு பெரிய படத்தில் ரிலீஸ் தேதியை முடிவு செய்வது என்பது பெரிய டாஸ்க். விடுமுறை நாள்கள், பண்டிகை நாள்கள் எனப் பார்த்து பார்த்து முடிவெடுப்பார்கள். மற்ற மொழிகளிலும் வெளியிடத் திட்டமிருந்தால், அந்த மொழிகளில் பெரிய படங்கள் ஏதும் வெளியாகிறதா என்பதை பார்ப்பார்கள். அதற்கேற்றவாறு, ரிலீஸ் தேதி முடிவாகும். மோதுவதே சரி என்று முடிவு செய்துவிட்டால் இறங்கிவிடுவார்கள். அப்படி, இந்த ஆண்டில் மீதமிருக்கும் மூன்று மாதங்களில் வெளியாக இருக்கும் பெரிய படங்களின் பட்டியல் இது.

அக்டோபரில்.....: முதல் வாரத்தில் வாரத்தில் 'இறுகப்பற்று', '800', 'ரத்தம்', 'தி ரோட்' ஆகிய படங்கள். இரண்டாவது வாரத்தில் பெரிதாக ஒன்றுமில்லை. மூன்றாவது வாரமான அக். 19 இல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'லியோ' வெளியாகிறது. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தப் படத்தோடு தமிழில் வேறெந்த படமும் போட்டி போடவில்லை. ஆனால், தெலுங்கில் 'நேனு வஸ்துன்னாவ்' என்றும் களமிறங்குகிறார் பாலையா. அனில் ரவிப்புடி இயக்கத்தில் பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால் நடித்திருக்கும் 'பகவந்த் கேசரி' வெளியாகிறது.

அக். 20- இல் ரவிதேஜா நடிப்பில் உருவாகி இருக்கும் 'டைகர் நாகேஸ்வர ராவ்' திரைப்படம் வெளியாக இருக்கிறது. அவர் பாணி சினிமாக்களில் இருந்து வெளியே வந்து ரவிதேஜா நடிக்கும் பயோபிக் இது. கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்திருக்கும் 'கோஸ்ட்' திரைப்படம் அக். 19-இல் வெளியாகிறது. எம்.ஜி.ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் 2019-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி பேசப்பட்ட ' பைண்டிங் வைஜ்ரமுனி' என்ற படத்தின் தொடர்ச்சி என்றும் இதை ஒரு சர்வதேச மார்க்கெட் சினிமாவாக கொண்டு வர இருக்கிறார்கள் என்றும் பேசப்படுகிறது. ஹிந்தியில் விகாஷ் பாஹல் இயக்கத்தில் டைகர் ஷெராஃப், அமிதாப் பச்சன், கீர்த்தி சனோன் நடித்திருக்கும் 'கணபத்' திரைப்படமும் அக். 20 -இல் வெளியாகிறது.

நவம்பரில்...: தீபாவளியை முன்னிட்டு தமிழில் ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'ஜப்பான்', கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ‘ ஆகிய இரண்டு படங்கள் களம் காண இருக்கின்றன. இந்த இரண்டு படங்களுமே தெலுங்கிலும் வெளியாகும்.

டோலிவுட்டில் பெரிய படங்கள் எதுவும் தீபாவளியை முன்னிட்டு, வெளிவருவதாக இதுவரை தெரியவில்லை. ஒருவேளை, அக்டோபரில் வெளியாக இருக்கும் தெலுங்கு படங்கள் ஏதாவது தீபாவளிக்குத் தள்ளிப் போக வாய்ப்பிருக்கிறது.

ஹிந்தியில் சல்மான் கான் நடிக்கும் 'டைகர் 3' திரைப்படம் வெளியாகிறது. ஷாருக்கானின் 'ஃபேன்' படத்துக்குப் பிறகு, இயக்குநர் மணீஷ் ஷர்மா இயக்கும் இந்தப் படம் யாஷ்ராஜ் ஃபிலிமிஸ் யுனிவர்ஸில் வருகிறது. 'பதான்' படத்தில் சல்மான் கேமியோவில் வந்ததுபோல, இந்தப் படத்தில் ஷாருக்கான் கேமியோவில் வர இருக்கிறார். அடுத்ததாக, கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து நீண்ட காலமாக வெளியாகாமல் இருக்கும் 'துருவ நட்சத்திரம்' படம் நவ. 24 இல் வெளியாகிறது. அதே நாளில், கங்கனா ரணாவத் இயக்கி, நடிக்கும் இந்திரா காந்தி பயோபிக்கான 'எமர்ஜென்ஸி' படமும் வெளியாகிறது.

டிசம்பரில்...: டிச. 1இல் 'அர்ஜுன் ரெட்டி' இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் 'அனிமல்' எனும் பாலிவுட் திரைப்படம் வெளியாகிறது. டோலிவுட்டில் டிச. 8-இல் வருண் தேஜ், மானுஷி சில்லர் நடிக்கும் 'ஆபரேஷன் வேலண்டைன்' படமும் விஷ்வாக் சென் நடிக்கும் 'கேங் ஆப் கோதாவரி' எனும் படமும் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர்ராஜா இசையமைக்கிறார். டிச. 15-இல் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ் குமார், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பில் 'கேப்டன் மில்லர்' வெளியாகிறது. அதே நாள் ஹிந்தியில் 'அந்தாதுன்' விஜய் சேதுபதி, கேத்ரினா கைஃப் நடிக்கும் 'மேரி கிறிஸ்துமஸ்' ரிலீஸாக உள்ளது. செப். 28ஆம் தேதி வெளியாவதாக இருந்த பிரபாஸின் 'சலார்' திரைப்படம் டிச. 22-இல் வெளியாகிறது. அதேநாள், ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் ஷாருக்கான், டாப்ஸி நடிக்கும் 'டங்கி' திரைப்படமும் ஏற்கெனவே அறிவித்தபடி வெளியாகும் என்று கூறியிருக்கின்றனர்.

தெலுங்கில் 'ஹிட் செகண்ட் கேஸ்' படத்தை இயக்கி கவனம்பெற்ற இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் வெங்கடேஷ், ஆர்யா, ஷ்ரத்தா, ஆண்ட்ரியா, நவாஸூதின் சித்திக்கி ஆகியோர் நடித்து சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் 'சைந்தவ்' படம் வெளியாகும் என அறிவித்திருந்தனர். இது வெங்கடேஷின் 75-ஆவது படம்.

தவிர, நானி, மிருணால் தாக்கூர் நடிப்பில் 'ஹாய் நானா' என்ற படமும் டிச. 21-இல் வெளியாகும் என அறிவித்திருந்தனர். நித்தின் நடிப்பில் 'எக்ஸ்ட்ரா ஆர்டனரி மேன்' படமும் இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்கள் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
'சலார்' வெளியாவதால் மற்ற மூன்று தெலுங்கு படங்களின் ரிலீஸ் தேதியில் நிச்சயமாக மாற்றம் இருக்கும். இதில் குறிப்பிட்டிருக்கும் படங்கள் எல்லாம் பெரிய படங்கள். இவை இல்லாமல், சின்ன பட்ஜெட்டில் உருவாகி பல படங்கள் நமக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கின்றன. அதற்காகவும் காத்திருப்போம்.
டெல்டா அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com