
தாத்தா குருசாமி செட்டியார் ஜவுளி கடை வைத்திருந்தார். இன்னொரு ஜவுளி கடையில் சிறிது காலம் வேலை பார்த்த அனுபவத்தில், தனது தாயின் காசு மாலையை அடமானம் வைத்து சென்னை சாலையில் அந்தக் கடையைத் தொடங்கியிருந்தார். உளுந்தூர்பேட்டையில் அவர் கடை தான் முதல் கடை. அதுவும் இன்றைக்குப் போல வளர்ச்சி பெறாமல் குக்கிராமமாக இருந்தகாலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கடை. மேலும் உளுந்தூர்பேட்டைக்கு அது புதியதும் கூட!
சேலம், விழுப்புரம், சென்னை, திருச்சி... எனப் பல ஊர்களிலிருந்து ஜவுளிகளை வாங்கி வந்து, விவசாயமும் விவசாயத் தொழிலுமே வாழ்க்கையாக வாழ்ந்த அப்பகுதி மக்களுக்கு குறைந்த லாபத்தில் விற்பனை செய்தார். வியாபார ரீதியாக பார்க்காமல் சமூகக் கடமையும்கூட என்பதை உணர்ந்து செய்ததால் வணிகம் வளர்ந்தது.
ஆரம்பக் காலத்தில் ரொக்கத்துக்கு மட்டுமே விற்பனை செய்தவர் போகப் போக மக்களின் ஏழ்மை நிலையை கருதி, அவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு உதவ வேண்டியது கடமை என்பதை உணர்ந்து கடனுக்கும் கொடுத்தார். அதை பெற்றவர்கள் நிகழ்ச்சி முடிந்தோ அல்லது அறுவடை முடிந்தவுடனோ கொண்டு வந்து நாணயமாக திருப்பி செலுத்தினர். இதனால் ஒரு நல்ல தொடர்பு ஏற்பட்டதுடன் பரஸ்பரம் இருவருக்கும் இடையேயான அன்பும், அக்கறையும் வெளிப்பட்டது. இதனால் வியாபாரம் பல்கி பெருகியது.
தாத்தாவுக்கு வாரிசு ஒரேயொரு பெண் மட்டுமே, இருந்தும் தொலைதூரத்தில் உள்ள ஊரில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொடுத்தார். அந்தப் பெண்ணோ தான் ஒற்றையாக பிறந்ததை மனதில் கொண்டு ஐந்து மகன்கள், இரு மகள்கள் என வரிசையாக ஏழு பிள்ளைகளைப் பெற்றெடுக்க, குருசாமி செட்டியாருக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை.
மகளையும் மருமகனையும் குழந்தைகளையும் தன் வீட்டோடு அழைத்து வந்து வைத்துக் கொண்டதுடன் பேரப்பிள்ளைகளை வளர்த்துப் படிக்க வைத்தார். கல்லூரிப் படிப்பு முடித்த பெரிய பேரன் ஜெகன்நாதனை தனக்கு உதவியாக அழைத்துக் கொண்டதுடன், ஒரு ஏப்ரல் மாதத்தில் புது கணக்கு போட்ட நாளில் கடையின் சாவியை பேரனிடம் ஒப்படைத்தார் .
'இது கஷ்டப்பட்டு சேர்த்த காசிலே உருவான வியாபாரம். இது பல்கி பெருகணும். அதேசமயம் தர்மம் தவறக் கூடாது. எந்தத் தவறுக்கும் கடையோ, நீங்களோ உடந்தையா இருக்கக் கூடாது. இனி நீங்கள் ஐந்து பேருமே இதற்கு உரிமையாளர்கள். இந்தச் சொத்தை உங்களிடம் ஒப்படைக்கிறேன் இதன் நிர்வாகியாக நீ இருந்து நிர்வாகம் செய்வதுடன் உன் தம்பிகள், தங்கைகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டியதும் உன் தம்பிகளை அரவணைத்து அவர்களோடு இணைந்து வணிகத்தைத் தொடர வேண்டியதும் உனது பொறுப்பு. புதிதாக எந்த வியாபாரம் தொடங்கினாலும் அதையும் ஐந்து பேரின் பெயருக்கே தொடங்க வேண்டும். எந்தச் சொத்து வாங்கினாலும் அதை ஐந்து பேரின் பெயருக்கே வாங்க வேண்டும். கடைசி வரையில் கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும். உங்களைப் பார்த்து உங்கள் பிள்ளைகள் அதைப் பின்பற்ற வேண்டும். இதுதான் என் விருப்பம்' என்று கூறியவாறே கடையை விட்டு இறங்கி வீட்டுக்கு வந்து விட்டார். அதன் பிறகு கடைக்கு அவர் வரவில்லை. வீட்டில் இருந்தவாறு அனைவரையும் வழிநடத்தினார். வியாபாரத்தில் கிடைத்த லாபத்தை நகைகளாகச் சேமிக்காமல் நிலத்திலும் மனைகளிலும் முதலீடு செய்யுமாறு ஆலோசனை அளித்தார். அது இன்று பெரும் சொத்துகளாக வளர்ந்து நிற்கிறது.
இப்படிப்பட்ட தாத்தா குருசாமி அன்று சாப்பிட்டு, ஆன்மிக நூலை எடுத்துப் படிக்கத் தொடங்கியவர் நெஞ்சைப் பிடித்தவாறு, 'வலிக்கிறது' என்றார். இதையறிந்த உறவினர்கள் ஓடிச் சென்று அவரை தூக்குவதற்குள் உயிரைவிட்டார். உடனே வீட்டில் ஒரே குக்குரல். வாடிக்கையாளர்கள், வணிகர்கள், ஊர் மக்கள் திரண்டனர். ஆயிரக்கணக்கானோர் அஞ்சலிக்குப் பின்னர்,உடல் அடக்கமும் நடைபெற்றது.
'மனிதன் பிறக்கும்போது எதையும் கொண்டு வருவதில்லை. ஆனால் அவன் மனம் வைத்தால் எல்லாவற்றையும் உருவாக்கிக் கொண்டு மற்றவர் பாராட்ட வாழ, வளர முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்கிய தாத்தா இனி இருக்கப் போவதில்லை. ஆனால் தெய்வமாக இருந்த எல்லாரையும் வழிநடத்த போகிறார். வந்தவர்கள் எல்லாம் தாத்தாவின் பெருமையை பேசினார்கள். அவர் உழைப்பை பேசினார்கள். அவர் மன உறுதியை பேசினார்கள். இதையெல்லாம் கேட்க கேட்க அவர் வழியில் நாமும் பயணிக்க வேண்டும்' என்று அனைவருக்கும் தோன்றியது.
ஜெகன்நாதன் தனது அம்மாவிடம் சென்றான். எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்த அம்மாவை தொட்டதும் திரும்பினாள்.
'எல்லா கணக்கையும் முடிச்சிட்டியாப்பா?'
'முடிச்சிட்டேம்மா நம்மை வசதியா வாழ வச்சு தாத்தாவை நிம்மதியா, நிறைவா கொண்டுவச்சுட்டேம்மா?' என்று சொல்லி முடிப்பதற்குள் ஜெகன்நாதனுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
'அழாதப்பா, தாத்தா கொடுத்து வச்சவரு.. அவரு செஞ்ச புண்ணியம் படுத்த உடனே பொசுக்குன்னு போய்ட்டார். இனிமே அவரை தெய்வமாக நினைச்சிகிட்டு வாழ்வோம். அவருக்கு கொடுத்த வாக்கை காப்பாத்திட்டப்பா?'
'என் அப்பா இந்தக் கடையை உன் அப்பாகிட்ட ஒப்படைக்காம உன்கிட்ட ஒப்படைச்சது எதுக்கு தெரியுமா? சம்பாதிப்பது எத்தனை கஷ்டம், கூட பிறந்தவங்களோட அனுசரித்து வாழறது எவ்வளவு கஷ்டம்னு நீ உணரணும். அப்படி உணர்ந்தால்தான் இந்தத் தொழிலையும் பெரிய குடும்பத்தையும் நிலைநிறுத்த முடியும்னு உன்னிடம் ஒப்படைச்சார். நீ உணர்ந்தது மட்டுமல்ல. உன் தம்பிகள், தங்கைகளுக்கும் உணர்த்திட்டே. இனிமே இந்த குடும்பத்துக்கு முன்னேற்றம்தான்.'
அம்மா அவனை அருகே இழுத்து இருத்திக் கொண்டபோது அவன் குழைந்துபோனான்.
'மகனே ஒண்ணு சொல்லட்டுமா?'
'என்னம்மா?'
'தாத்தா சொன்ன மாதிரி தங்கைகளுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்திட்டே. அஞ்சு பேருக்கும் அஞ்சு பிசினஸ் உருவாக்கியிட்டே. தனித்தனியா வீடும் கட்டிக் கொடுத்துட்டே. அவுங்கவுங்களுக்கும் .. பிள்ளை
களும் வளர்ந்துட்டாங்க. அதனாலே ஆளுக்கொன்னா பிசினஸா பிரிச்சி கொடுத்துடுப்பா?'
அம்மாவிடமிருந்து இப்படியொரு வார்த்தை வரும் என எதிர்பார்த்திராத ஜெகன்நாதன் அம்மாவை ஊடுருவி பார்த்தான்.
'ஏம்மா இப்படி நினைக்கிறீங்க?'
'அன்னைக்கு அவுங்க சின்ன பிள்ளைங்க . இன்னைக்கு அவுங்கவுங்க வீட்டிலேயும் வளர்ந்த பிள்ளைங்க இருக்கிறாங்க? நாளைக்கு யாராவது உன்னை எதாவது சொல்லிட்டா என்னாலே தாங்க முடியாதுப்பா? என் அப்பாவுக்கு மகளாவும் உன் அப்பாவுக்கு மனைவியாகவும் இருந்த என்னை ஊரார் மலடின்னு சொல்லாம என் வயிற்றிலே ஜனிச்சு என்னை தாயாக்கிய தயாபரன் நீ. உன்னை யாரும் எதுவும் சொல்லிடக் கூடாது. அதனால்தான் சொல்றேன்.'
ஜெகன்நாதன் பதில் சொல்லாமல் அமைதிகாத்தான்.
'நான் உன்னை கட்டாயப்படுத்தலே. உனக்கு சரின்னு பட்டா தம்பிங்களை கலந்து ஆலோசிட்டு செய்.'
'சரிம்மா..'
'ஏம்பா ஒண்ணு கேட்கணும்னு நினைச்சேன் மறந்துட்டேன்.'
'என்னம்மா?'
'நம்ம வேலைக்காரங்க சமைக்கிறதுக்கு ரெண்டு பெண்களை கூட்டிட்டு வந்தாங்க? இது தவிர தாட்டிகமா ஒரு பொம்பள வந்து எல்லாரையும் அதிகாரம் பண்ணிக்கிட்டு எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செஞ்சிட்டு இருந்ததுப்பா. . நம்ம வேலைக்காரங்க கேட்டா அது யாருன்னு தெரியலேன்னுட்டாங்க உனக்கு அது யாருன்னு தெரியுமாப்பா?'
'ஆமாம்மா நானும் பார்த்தேன். முன்னாடியெல்லாம் நம்ம கடைக்கு வருவாங்க. தாத்தாகிட்டே ரொம்ப அன்யோன்யமா பேசுவாங்க. தாத்தா புடவை துணிமணிகள் கொடுப்பாங்க?'
'வேலையை இழுத்து போட்டுக்கிட்டு செஞ்சது மட்டுமில்லப்பா, அப்பப்ப தாத்தா வச்சிருந்த இடத்துக்கு வந்து அவங்கள பார்த்து பார்த்து மார்ல அடிச்சிகிட்டு அழுதிட்டிருந்தது நான் கூட எங்க அப்பாவுக்கு அந்த அளவுக்கு அழலேப்பா அந்த அம்மா அவ்வளவு அழுதுச்சு. ?'
'ஒருவேளை நம்ம தூரத்து சொந்தக்காரங்களா இருப்பாங்களா?'
'இல்லப்பா இந்த ஐம்பத்தெட்டு வருஷத்துல நான் பாக்காத சொந்தக்காரங்களா. . அது மட்டும் இல்லே வீட்டுக்கு போகும்போது சம்பளம் கூட வாங்கிட்டு போகலாயாம். உன் மனைவி வந்து சொன்னா?'
'வந்தா கொடுத்துடுவோம்மா அதை நினைச்சு கவலைப்படாம ரெஸ்ட் எடுத்துக்கங்கம்மா?'
'உன் விருப்பம்.'
மறுநாள் அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டன. தாத்தாவை வணங்கி விட்டு அவரவர் வேலை செய்ய தொடங்கினர்.
ஒருவாரம் கழிந்ததும் சம்பளம் வாங்கி செல்லாத அந்த தாட்டீக பெண்மணி ஓர் ஆட்டோவில் வந்து வீட்டு வாசலில் இறங்கினாள். அவளுடன் இரண்டு பதின்வயது பிள்ளைகளும் வந்திருந்தார்கள்.
' நான் உள்ளே வரலாமா?'
கேட்டவள் யாருடைய பதிலுக்கும் காத்திராமல் விறுவிறுவென உள்ளே வந்தாள். கையில் இருந்த கனத்த பையை தாத்தாவின் படத்துக்கு எதிரில் வைத்துவிட்டு, கீழே விழுந்து வணங்கினாள். பின்னர் மகன்கள் இருவரையும் வணங்கச் சொன்னாள். அந்த இருவரும் அவள் சொன்னதைக் கேட்டு விழுந்து வணங்கினர்.
'படைக்க இன்னும் கொஞ்சம் நேரம் ஆகணும்மா. அதுவரைக்கும் நாம கொஞ்சம் பேசுவோம்.'
அம்மா அந்த பெண்மணியை பார்த்து பேசியதுடன் அவளது கையை பிடித்து அழைத்துக் கொண்டு தன் அறைக்குள் சென்றாள். அனைவரும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். அம்மா அவளை கட்டிலிலும், உடன் வந்த பிள்ளைகளை நாற்காலியிலும் உட்கார சொல்லிவிட்டு காபி கொண்டு வந்து கொடுக்குமாறு கூறினாள். ஆனால் அந்தப் பெண்மணி அம்மாவை கட்டிலில் உட்கார வைத்துவிட்டு தரையில் உட்கார்ந்து கொண்டாள்.
'நீ யாருன்னு தெரியலம்மா? அப்பா செத்த அன்னைக்கு அத்தனை வேலையும் இழுத்து போட்டுகிட்டு செஞ்ச. நான் யோசிச்சு பாக்குறேன் நீ யாருன்னு. எனக்குப் புலப்படலை . என் பிள்ளைகளும் அவங்க வீட்டுக்காரங்களும் தெரியலன்னு சொல்லிட்டாங்க. சொல்லுமா நீ யாரு?'
'என் பேரு காமாட்சி, மங்கலம்பேட்டைக்கு பக்கத்தில் இருக்கிற முகாசப்பரூர் என் சொந்த ஊர். என் கணவர் குடும்பத்தை உடையார் குடும்பம்னு சொல்லுவாங்க. என் மாமனார் பெயர் ரத்தினம். எங்க வீட்டுக்காரர் பேரு நாகரத்தினம். எனக்கு அப்பா கிடையாது. அம்மா மட்டும்தான் அண்ணன்தான் என்ன இந்தக் குடும்பத்தில் கல்யாணம் பண்ணி வச்சார். புகுந்த வீட்டிலே எல்லோரும் என் மேல பாசமா தான் இருந்தாங்க? ஆனா மூணு வருஷம் ஆகியும் குழந்தை பிறக்காததாலே ஒவ்வொருத்தரா என்ன விட்டுவிலகிப் போக ஆரம்பிச்சாங்க? என் மாமியார் என் கணவருக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணி வைக்க என் மாமனாரை நச்சரிச்சாங்க... ஆரம்பத்தில் என் கணவர் ஒத்துக்கலை. அப்புறம் இன்னொரு பொண்ணோடவும் குடும்பம் நடத்தப் போறோங்கிற மகிழ்ச்சியிலே ஒத்துக்கிட்டார். நான் எவ்வளவோ தடுத்து பார்த்தேன் முடியலை. எங்க அண்ணன் வந்து கேட்டு பார்த்தார். உன் தங்கச்சிக்கு நீ செஞ்ச செலவுத் தொகையைவிட இரண்டு மடங்கு திருப்பி கொடுத்துடறோம். வீட்டோட கொண்டு வச்சுக்கன்னுட்டாங்க. அதுக்கு பயந்த அண்ணன் பேசாம ஒத்துக்கன்னு சொல்லிட்டு யார்கிட்டேயும் சொல்லாம கிளம்பி போயிட்டாரு? என் கணவர் இனிமே உனக்கு யாரு இருக்கா பேசாம ஒத்துக்கன்னார். வேற வழி இல்லாம நானும் ஒத்துக்க வேண்டிதாயிட்டு... விறுவிறுன்னு பொண்ணு பார்த்தாங்க நாள் குறிச்சாங்க? ஜவுளி எடுக்கறதுக்காக சம்பந்தி வீட்டுக்காரங்களோட நம்ம கடைக்கு வந்தாங்க என்னையும் கூப்பிட்டாங்க? வரலைன்னு சொன்னா நல்லா இருக்காதுன்னு நானும் புறப்பட்டு வந்தேன். நிறைய ஜவுளி எடுத்துட்டு பில் போடறதுக்கு அப்பாவை எதிர்பார்த்துகிட்டு இருந்தாங்க வயலுக்கு போயிருந்த அப்பா அப்பதான் வந்தாங்க? எங்க வீட்டுக்காரங்க கிட்ட பேசினாங்க? அப்பா 'என்ன உடையார் குடும்ப சகிதமா வந்திருக்கீங்க. வீட்ல விசேஷமா?'ன்னு கேட்டாரு?' என்று சொன்ன காமாட்சி, நடைபெற்ற உரையாடலை நினைவுப்படுத்தினார்.
'ஆமாம் கல்யாணமுன்னு' என்றார் நாகரத்தினம்.
'கல்யாணமா யாருக்கு?' என்றார் குருசாமி செட்டியார்.
'எனக்கு தாங்க?'
'இப்பதான் ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம்னு ஜவுளி எடுத்துட்டு போனதா ஞாபகம். அப்ப அது உங்க கல்யாணம் இல்லையா?'
'அது என்னோட கல்யாணம்தான் செட்டியாரே.. அதோ படி ஓரம் உட்க்காந்து இருக்கிறதுதான் என் மனைவி. ஆனா மூணு வருஷம் ஆயிடுச்சு குழந்தை பிறக்கலை. அப்பா, அம்மா வேற கல்யாணம் பண்ணி பார்க்கலாம் என்று சொன்னாங்க? அதான் வேற ஒரு பொண்ண பார்த்து பேசி முடிச்சிருக்கோம். பொண்ணு பெரியவடவாடி. இத உட்காந்து இருக்கிறவங்க பொண்ணு. குடும்பத்தார். இது அப்பா, அது மாமா. இது அத்தை. வரும் 24- ஆம் தேதி கல்யாணம் வெச்சிருக்கோம். அதுக்கு ஜவுளி எடுக்க தான் வந்திருக்கோம்.'
'மூணு வருஷம்தானே ஆயிருக்கு இன்னும் ஒன்னு ரெண்டு வருஷம் இருந்து பாக்கலாம் இல்லையா?'
'நான் காத்திருக்க தயாரா இருக்கேன் செட்டியார்.. ஆனா எங்க அம்மா அப்பா விடமாட்டேங்குறாங்க. தான் சாகறதுக்குள்ள பேரப்பிள்ளை பாக்கணும்கிறாங்க?'
'அதுக்காக ஒரு பொண்ணு வாழ்க்கையை வீணாக்கணுமா?'
'யாரும் யார் வாழ்க்கையும் வீணாக்க போதில்லே. அவளும் இங்க தான் இருக்க போறா?'
'உனக்கு ஒரு விஷயம் தெரியுமா உடையாரே. எனக்கு கல்யாணம் பண்ணி ஏழு வருஷம் கழிச்சுதான் குழந்தையை பிறந்தது குழந்தைங்கறது நம்ம கையில இல்லே.அது கடவுள் கொடுத்த வரம் யாருக்கு எப்போ எப்படி கொடுக்கணும்கிறது அவர் எடுக்கிற முடிவு. அறிவியல் ரீதியா அப்படி இல்லைன்னு மறுக்கலாம் ஆனா குழந்தை இல்லாதவங்களைப் போய் கேட்டுப்பாருங்க அறிவியல் தாண்டி அறவியல்னு ஒன்னு இருக்குன்னு சொல்லுவாங்க?'
'இவர் தான் பொண்ணு கொடுக்க போறவரா? ஏங்க உங்க பொண்ணுக்கும் குழந்தை பிறக்க லேன்னு நாளைக்கு இன்னொரு பொண்ண தேடிப் போக மாட்டாங்கன்னு என்ன உத்தரவாதம் இருக்கு...'
உடையார் குடும்பம் கோபம் கொண்டது. ஆளாளுக்கு பேசினார்கள்.
'செட்டியாரே ஜவுளி எடுக்க இங்க வந்திருக்கோம். அதுக்கான பணத்தை வாங்கிட்டு ஜவுளியை கொடுத்து எங்களை அனுப்பப் பாருங்க? அதை விட்டுட்டு என் குடும்பத்தை பற்றி பேசவோ எங்களுக்கு அட்வைஸ் பண்ணுவோ உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது புரிஞ்சுக்கங்க?'
'அப்படியா யாருப்பா ஜவுளி போட்டது..'
ஒரு பெரியவர் வந்தார்.
'நான்தான் போட்டேங்க...'
'எதையும் வெட்டலையே..'
'இல்லீங்க..'
'எல்லாத்தையும் தூக்கி ரேக்கில ஏத்துங்க.?'
'நீங்க போயிட்டு வரலாம். ஒரு தப்பான காரியத்துக்கு நானோ என் பொருள்களோ எந்த காலத்திலும் உடந்தையா இருக்க கூடாதுங்கற தர்மத்தோடத்தான் இந்தத் தொழிலை நான் செஞ்சுகிட்டு இருக்கேன்.'
நாகரத்தினம் குடும்பம் அதிர்ந்தது பின் வெகுண்டது.
'நல்லா யோசிச்சுதான் சொல்றீங்களா செட்டியாரே..'
'ஆமாம்'
'கிட்டத்தட்ட 25 ஆயிரம் ரூபாய்க்கு எடுக்கப் போறோம்..'
'நீங்க கொடுக்கிற பெரும் பணத்தைவிட நான் கடைப்பிடிக்கிற தர்மம் எனக்கு பெருசு. அதிலிருந்து நான் தவற மாட்டேன். தவறினால் அந்த ஆண்டவன் என்ன சும்மாவிட மாட்டான் நீங்க விழுப்புரம் போய் ஜவுளி எடுங்க? கல்யாணத்தை சிறப்பா நடத்துங்க?' என்றார் குருசாமி செட்டியார். பின்னர், அங்கிருந்து உடையார் குடும்பத்தினர் வெளியேறினர் என்று சொல்லிமுடித்த காமாட்சி கண்கலங்கியவாறு, தொடர்ந்தார்.
'எல்லோரும் கடையைவிட்டு வெளியே வந்துட்டோம். பொண்ணு கொடுக்க வந்தவரு நாங்க எங்க முடிவை மறுபரிசீலினை செஞ்சுகிட்டு வர்றோமுன்னு சொல்லிட்டு பஸ் ஏறிட்டாங்க.. நாங்க ஊருக்கு போயிட்டோம் வீட்டுக்கு போன உடனே எனக்கு நிறைய அடி விழுந்துச்சு உன்னை அழைச்சிட்டு போனதாலத்தான் இந்தக் கல்யாணம் நடக்கலைன்னு என் கணவர் மட்டும் இல்லை. என் மாமியார், மாமனார் எல்லாருமே அடிச்சாங்க? எல்லாத்தையும் தாங்கிட்டேன். அதுக்கு பிறகு வேற பொண்ணு பார்க்கலை . கோபம் தீர்ந்து மறுபடியும் என் கணவர் என்னிடம் பேச ஆறு மாசமாச்சு. அப்புறம் நாங்க ராசி ஆயிட்டோம். அடுத்த மூணாவது மாசமே நான் கருத்தரிச்சேன். பத்தாவது மாசம் குழந்தை பிறந்தது. சதா திட்டிக்கொண்டு இருந்த குடும்பம் என்ன அரவணைச்சுகிச்சு? குழந்தை பிறந்தது. ஆறாம் மாசம் குழந்தையை தூக்கிட்டு வந்து .. கடையிலேப் போய் அப்பாவை பார்த்தேன். என்னை அப்பாவுக்கு அடையாளம் தெரியலை. உடையார் வீட்டு மருமகள்னு சொல்லி நானே அறிமுகப்படுத்திகிட்டு நடந்த சம்பவங்களை நினைவுப் படுத்தினேன். அப்படியான்னு மகிழ்ச்சியோடு சொல்லிக்கிட்டே கொஞ்சம் கூட தயங்காம என்கிட்ட வந்து என் குழந்தையை வாங்கிட்டாங்க? கல்லாவிடம் போய் ஐம்பது ரூபா நோட்டை ஒன்னு எடுத்து குழந்தை கையில் கொடுத்தாங்க? கடை பையனை கூப்பிட்டு நல்ல டிரஸ் எடுத்துட்டு வரச்சொல்லி என்கிட்ட கொடுத்து போட சொன்னாங்க. காபி வாங்கிட்டு வர சொல்லி என்னை குடிக்க சொன்னாங்க என்னையும் மீறி அழுகை வந்துச்சு. 'புள்ள தான் பொறந்திருச்சும்மா அப்புறம் ஏன் அழறே‘ ன்னு கேட்டாங்க? 'அன்னைக்கு நீங்க மட்டும் அப்படி பேசலேன்னா அவருக்கு இரண்டாம் கல்யாணம் நடந்திருக்கும் . நானும் செத்துப் போயிருப்பேன். இந்த குழந்தையும் பிறந்து இருக்காதுப்பா' ன்னு சொன்னேன். என் பக்கத்துல வந்து என்னை அணைச்சுக்கிட்டாங்க? 'அப்படி எல்லாம் நடக்காதும்மா. நம்புகிறவங்கள. அந்த ஆண்டவன் கைவிடமாட்டான். நீ தைரியமா இருடா. உனக்கு இன்னொரு குழந்தை பிறக்கும் அதுவும் ஆம்பள புள்ளையா தான் பிறக்கும். ரெண்டு சிங்கக்குட்டியும் உன்னை தங்கமா பார்த்துக்கும்மா?'ன்னு சொன்னாங்க? அப்பா இல்லாத எனக்கு அப்பாவா இருந்து வாழ வச்சு அவங்களை என்னால மறக்க முடியலை. அப்பப்போ கடைக்கு வந்து பார்த்துட்டு போவேன். தீபாவளி, பொங்கலுக்கு புடவை, பாவாடை, ஜாக்கெட் பிள்ளைங்களுக்க சட்டை தருவாங்க? நல்லா உபசரிச்சு அனுப்புவாங்க? துணிகளுக்கு பணம் கொடுத்தா மகளுக்கு அப்பா கொடுக்க வேண்டியது கடமைன்னு சொல்லி பணம் வாங்க மாட்டாங்க? என் பிள்ளைகளை படிக்க வைக்கும் போது அவங்க கிட்ட வந்தேன் ஆசிர்வாதம் பண்ணினாங்க? ஆண்டவன் அருளால அவுங்களோட ஆசிர்வாதத்தாலும் பிள்ளைங்க படிச்சு நல்ல வேலைக்கு போய்ட்டாங்க? எனக்குத் தெரிஞ்சு நான்மட்டும்தான். ஆனா தெரியாம எத்தனை பேரோங்கற நினைப்பு வரும்போது அவரோட மகளா பிறக்கலேயேங்கற மனக்குறை ஏற்படும். இதுக்குள்ள என் கணவர் இறந்துட்டாரு அதனால பிள்ளைகளோட பெங்களூருக்கு போயிட்டேன். ஊருக்கு வரும்போது அப்பாவை வந்து பார்த்துட்டு போவேன். கடையை பேரப்பிள்ளைகளிடம் ஒப்படைச்சிட்டு வீட்டுக்கு வந்த பிறகு பார்க்க முடியலே. என்னாலையும் பெங்களூரிலிருந்து வர முடியலை. அப்பாவுக்கும் எனக்கும் இருந்த உறவை தெரிஞ்ச ஊர்க்காரி ஒருத்தி அப்பா இறந்த செய்தியை சொல்ல கடைசியா ஒருதடவை முகத்தைப் பாரக்கணும்னு வாடகை கார் பேசிட்டு புறப்பட்டு வந்தேன். என் பிள்ளைகளிடம் அப்பாவை பற்றி சொல்லி இருக்கேன். அவங்க ஆசிர்வாதம் வாங்கறதுக்குத்தான் இன்னைக்கு கூப்பிட்டு வந்திருக்கேன்..' என்று அனைத்தையும் அந்தப் பெண்மணி சொல்லி முடிக்க அங்கே கனத்த அமைதி நிலவியது.
அதற்குள் படைக்க வரலாம் என அழைப்புக் கேட்க அனைவரும் சென்றார்கள். ஒவ்வொருவரும் சாம்பிராணி போட்டு சூடம் ஏற்றி நீர் விளாவி வழிபட்டனர்.
அம்மா அந்த பெண்மணியையும் சாம்பிராணி போட்டு சூடம் ஏற்றி நீர் விளாவி வழிபடுமாறு கூற அவளும் அப்படியே செய்தாள். அம்மா அனைவருக்கும் விபூதி இட்டாள். அந்தப் பெண்மணியும் அம்மாவிடம் விபூதி பூசிக் கொண்டதுடன் தன் பிள்ளைகளுக்கும் பூசுமாறு சொல்ல அம்மா பூசி விட்டாள்.
'காரியம் முடியற வரை நீ இருந்துட்டுப் போகலாம்மா? நீ இருந்தா எனக்கும் ஆறுதலா இருக்கும்.. இன்னும் எட்டு நாள்தானே இருக்க முடியுமா?' என்று அம்மா கேட்க காமாட்சி தன் மகன்களைப் பார்த்தாள். அவர்கள் தலையாட்டலிலேயே சம்மதம் சொல்ல அவளும் சம்மதித்தாள்.
'தம்பி இவுங்களுக்கு என் பக்கத்திலேயே ஒரு கட்டிலைப் போடு. கடையிலேயிருந்து மாற்றுத்துணிகள் எடுத்துகிட்டு வந்து கொடுங்க? பிள்ளைங்க தங்கலாமாம்மா?'
'இல்லேம்மா நாங்க நாளை காலைலே வேலைக்குப் போகணும். நைட்பஸ்லே போய்டுவோம். அம்மா மட்டும் இருந்துட்டு வரட்டும்' என்று ஒருவன் பதில் சொன்னான்.
'தேங்க்ஸ்ப்பா. இது உங்க குடும்பம். நீங்களும் அடிக்கடி வாங்கப்பா?'
'உங்கப்பா மாதிரியே நீங்களும் எல்லோரையும் அரவணைச்சிக்கிறீங்கம்மா?'
மற்றொரு பையன் பேச்சு அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்தது.
மாலை கடையிலிருந்த காமாட்சிக்கு மாற்று உடைகள் வந்தன. கூடவே அந்த இரு பையன்களுக்கும் விலை உயர்ந்த பேண்ட், சட்டை வந்தது. அதை அம்மாவிடம் கொடுத்து அவர்களிடம் கொடுக்கச் சொன்னான். ஜெகன்நாதன்.
இரவு அவர்கள் இருவரையும் பேருந்து ஏற்றி அனுப்பிவிட்டு கடைகளை மூடிவிட்டு வீடு திரும்பி அனைவரும் சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்ததும் அம்மாவிடம் தன் விருப்பம் ஒன்றை வெளியிட்டாள் காமாட்சி.
'தம்பிங்க அஞ்சு பேர்கிட்டேயும் பேசணும். பேசலாமா?'
'பேசும்மா..'
அம்மா அனுமதி கொடுத்தாள்.
'தம்பிங்க மட்டும் இருந்தா போதாது. அவுங்க வீட்டுக்காரங்க மகன், மகள்கள் எல்லோரும் இருக்கணும்.'
'எல்லோரும் இங்கேதான் இருக்காங்க. பேசும்மா?'
காமாட்சி பேச ஆரம்பித்தாள்.
'நான் ரொம்ப உரிமை எடுத்துகிட்டு பேசறதா யாரும் நினைக்கக் கூடாது. அப்பா ஜவுளிக்கடை மட்டும் நடத்தினார். நீங்க பொறுப்பேற்ற பிறகு இன்னும் நாலு பிசினஸை தொடங்கி ஐந்து கடையாக்கிட்டீங்க. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. எல்லா பிசினசும் வளர்ந்திடுச்சி. ஒவ்வொரு கடையிலே வர்ற வருமானம் ஒரு குடும்பத்துக்கு ரெண்டு தலைமுறைகளுக்கு போதுமானது. இப்போ நினைச்சா கூட ஆளுக்கொன்னா பிரிச்சிகிட்டு அதை பார்த்துகிட்டு வசதியா வாழ முடியும். ஆனால் கடைகள் எண்ணிக்கை ஐந்தா இருந்தாலும் பெயர் ஒண்ணுதானே. எல்லாமே குருசாமி செட்டியார் கடைகள்தான். இந்த பேரை மாத்திடமுடியுமா?'
அனைவரையும் அது யோசிக்க வைத்தது.
'அதை எப்படி மாத்தமுடியும்.. ஏன் மாத்தணும்' என்று ஜெகன்நாதன் கேட்டான்.
'அப்படின்னா அஞ்சு கடையையும் எப்பவும் போல ஒண்ணா இருந்து நடத்துங்க. இத்தனை கடையையும் நீங்க வெற்றிகரமா நடத்தறதுக்கு காரணம் எது தெரியுமா? நீங்க கூட்டமா ஆள் பலத்தோட இருக்கிறதுதான். ஒருத்தர் மாத்தி ஒருத்தர் போய் உட்கார்ந்து எல்லா கடைகளையும் எல்லோரும் பார்க்கிறீங்களே? அதனாலேத்தான் அஞ்சு கடைகளும் சிறப்பா நடந்துகிட்டிருக்கு. இதனாலே எல்லா கடைகளும் எல்லோரது நேரடிப் பார்வைக்கும் வருது. குற்றம் குறைகள் உடனடியாக களையப்படுது. ஒரு கடைக்குத் தேவையான பணத்தை இன்னொன்றிலிருந்து எடுத்துப் போட்டுட்டு வியாபாரம் நடந்த பிறகு திரும்பி எடுக்க முடியுது. இப்படி வேண்டாம்.. தனித்தனியா பார்த்துப்போமுன்னு நினைச்சா. எல்லாமும் மாறிடும். ஆள்கள் கிடைக்காது. பணத்தட்டுபாடு ஏற்படும். அப்புறம் ஒரே இடத்திலே உட்கார்ந்து அது சார்ந்த பிரச்னைகளை பார்க்கும்போது அந்த வியாபாரமே வேண்டாமுங்கற மனோபாவம் வந்து கடையை மூடிடத் தோணும். இப்படி நடந்திடுச்சுன்னா அப்பாவோட ஆன்மா சாந்தி அடையாது. அப்பா இறந்தாலும் அவருரோட ஆன்மா இங்கேதான் சுத்திகட்டிருக்கும். அன்னைக்கு அப்பா எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஏற்க முடியாம இருபத்தைந்தாயிரம் ரூபாய் வியபாரத்தையே தூக்கி எறிஞசு தொழில் தர்மத்தை நிலைநாட்டினாங்க.. அவுங்களாலே விதை போடப்பட்ட இந்தத் தொழில்களை என்றென்றும் நிலைத்து நின்று அவங்க பெயரை சொல்ல வைப்பது. ஒரு விதத்திலே ஒரு தொழில் தர்மம்தான். அதை செய்துகாட்டவேண்டியது உங்க கடமை. அதுக்கு ஒரே வழி. எல்லா கடைகளையும் எல்லோரும் நிர்வாகம் பண்றதுதான். அப்படி செய்யும்போது இதுவரை நீங்க கடைபிடிச்சிகிட்டு வர்ற குடும்ப ஒற்றுமையும் என்றென்றைக்கும் நிலைச்சு நிற்கும். அப்பாவின் ஆன்மா சாந்தியடையும். கடன் அன்பை முறிக்கும்பாங்க. ஆனால் அப்பாவுக்கு நான் பட்டிருக்கிற கடனை அதே அன்பாலத்தான் அடைக்க முடியும். அந்த அன்பின் அடிப்படையில்தான் இந்த வேண்டுகோளை வைக்கிறேன்' என்று கைகூப்பி காமாட்சி பேசி முடித்தாள். உடனே ஜெகன்நாதன், ஓடிச்சென்று காமாட்சியின் கூப்பிய கரத்தை பிரித்துவிட்டான்.
அம்மாவின் கண்களிலிருந்து தாரைதாரையாக கண்ணீர் வழிந்தது.
'இறந்துபோனவரின் மகளாகவும் ஏழு பிள்ளைகளின் தாயாய் இருந்து தான் சொல்ல வேண்டிய அறிவுரையையும், செய்யவேண்டிய கடமையையும் எங்கிருந்தோ மகளாய் வந்த ஒருத்தி.. நீ பட்ட கடனாய் எண்ணி கூட்டு வணிகமும் அதன்மூலம் கூட்டுக்குடும்பமும் சிதறுண்டுபோகாமல் செய்தது நிறைவையும் நிம்மதியையும் தந்தது' என் திருப்தியில் அம்மாவோ காமாட்சியை இறுக அணைத்துக் கொண்டு விம்மினாள்.
அந்த காட்சியைப் பார்த்த அனைவரது கண்களிலிருந்தும் கண்ணீர் வெளிப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.