
வரதட்சிணை...
பெண் பார்க்க வந்தவர்கள், 'பெண் பிடிச்சிருக்கு. மேற்கொண்டு விவரத்தை ஊருக்குச் சென்று தருகிறோம்' என்று கூறி ஆட்டோவில் ஏறி ரயில் நிலையம் புறப்பட்டுச் சென்றனர்.
மறுநாள் காலையில் மாப்பிள்ளையின் தந்தை போனில், 'பெண் மிகவும் பிடித்துவிட்டது. வரதட்சிணையாக 60 பவுனுக்குப் பதில் 75 பவுனும், ரொக்கம் கூடுதலாக இருபது லட்சம் ரூபாயையும் கொடுங்க. பேசி முடிப்போம்' என்றனர்.
மணமகளின் தந்தையோ, 'வரதட்சிணையே வேண்டாம் என்றாலும் பெண் தர நாங்க தயாராக இல்லை.
'நல்லா இருக்கு பொண்ணு. மிக வசதியான குடும்பமாக இருக்கு. முடிந்தவரை இப்போ வாங்கிப்போம். அப்புறம் நம் பையன் வாங்கிடுவான்'- என நீங்க ஆட்டோவில் பேசிக் கொண்டு போனதை எங்க குடும்ப டிரைவர் கைப்பேசியில் பதிந்து போட்டுக் காட்டிட்டார்' என்று சொல்லி போனை துண்டித்தார்.
-இரா.சிவானந்தம், கோவில்பட்டி.
உடம்புக்கு என்ன?
ஆபீஸ் முடியும் நேரத்தில் மணிமாறனின் கைப்பேசி ஒலித்தது. எதிர்முனையில் மனைவி மணிமேகலை, 'என்னங்க.. இன்னிக்கு நைட்டிபன் கடையில் வாங்கி வந்திடுங்க.. உடம்புக்கு முடியலைங்க.....' என்றாள்.
சரியாகவும் கேட்காமலும், பதில் சொல்லாமலும் எரிச்சலுடன் போனை துண்டித்த மணிமாறன், 'இவளுக்கு இதே பழக்கமாச்சு. உன்னை என்ன செய்கிறேன் பார்..' என்று கூறி மணிமேகலையின் குடும்ப மருத்துவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.
'வாங்க டாக்டர்.. என்னங்க. திடீர்ன்னு டாக்டரை கூட்டிட்டு வந்திருக்கீங்க?'
'நீதானே உடம்புக்கு முடியலைன்னு சொன்னே...'
'அது எங்க அம்மாவுக்குங்க.. நான் முழுசா சொல்லி முடிக்கிறதுக்குள்ளே போனை கட் பண்ணிட்டிங்க..' என்று சொல்ல மணிமாறன் அசடு வழிந்தான்.
-ச.அரசமதி, தேனி.
தோசை கிடையாது..!
மணி ஒரு ஹோட்டலை நடத்திவந்தார். அங்கு தோசைக்கு நாட்டு சர்க்கரை தொட்டுக் கொள்ள இலவசம்தான். விலை அதிகமானதால், 'இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது' என்று எழுதி வைத்தார்.
இங்கு சுப்பு என்பவர் சாப்பிட சென்றார். முதல் தோசை சாப்பிட்டுவிட்டு, ரெண்டாவது தோசை வாங்கிவிட்டு நாட்டு சர்க்கரை கேட்டார்.
மணியோ, 'நாட்டு சர்க்கரை கிடையாது' என்றார். சுப்புவோ, 'போர்டை படிங்க. முதல் தோசைக்கு கிடையாது. இது ரெண்டாவது தோசைதானே. கொடுங்க?' என்றார்.
அடுத்தநாள் மணி போர்டை மாற்றி, 'இனி மேல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது' என்று எழுதிவைத்தார்.
மறுநாள் சுப்பு வந்து இரண்டு தோசை ஆர்டர் சொன்னார். மேல் தோசையை சாப்பிட்டுவிட்ட மணி, நாட்டு சர்க்கரையை கேட்டார். மணி மறுக்க சுப்புவோ, 'மேல் தோசைக்குதானே சர்க்கரை கிடையாது. கீழ் தோசைக்குக் கொடுங்க?' என்றார்.
நாட்டு சர்க்கரையைக் கொடுத்த மணி, தனது கடையில் தோசை போடுவதையே நிறுத்திவிட்டார்.
-ஜி.அர்ஜுனன், செங்கல்பட்டு.
கல்யாணம்...
கல்யாணத்துக்கு நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. லாவண்யா அவசர அவசரமாக பியூட்டி பார்லருக்குக் கிளம்பினாள்.
'பொறுமையா எல்லாத்தையும் நல்லா பார்த்து அழகு பண்ணிட்டு வாம்மா. அடுத்த வார கல்யாண வீடியோவிலும் போட்டோவிலும் நீ அழகாத் தெரியணும்.' என்று அவளது தாய் சரோஜாவின் குரலில் நெகிழ்ச்சி தெரிந்தது.
அலங்காரம் முடித்துகொண்டு வீடு திரும்பிய லாவண்யாவை ஒன்பது ஜெகம் புடவையில் பார்த்த சரோஜா, 'நீ எவ்வளவு அழகா இருக்கே.. என் கண்ணே பட்டுடும் போலிருக்கு..' என்று ரசித்தாள்.
'சரிம்மா.. நான் போய் என் கூட வேலை செய்யும் ஆபீஸ்காரங்களுக்கு பத்திரிகை கொடுத்துட்டு வந்துடறேன்...' என்று கூறியவாறு, வெள்ளித்தட்டுடன் அவளது பெற்றோர் 'சரோஜா நீலகண்டன்' சஷ்டியப்தபூர்த்தி பத்திரிகைகளை எடுத்துகொண்டு கிளம்பினாள் லாவண்யா.
-சௌமியா சுப்பிரமணியன், பல்லாவரம்.
பூப்பறிக்க..!
காலையில் கண்விழித்து மணி பார்த்தவுடன் தூக்கிவாரிப் போட்டது. மணி ஆறரைக்கு மேல் ஆகிவிட்டது. வீட்டிலோ சிறப்புப் பூஜை. ஏற்பாடுகள் முடித்து தூங்க நேரமாகிவிட்டது. வீட்டைச் சுற்றி பூச்செடிகளில் பூப்பறிக்க வேகமாக விரைந்தேன். ஒரு பூவைக்கூட விடாமல் யாரோ பறித்து சென்றுள்ளனர்.
தெருவின் கடைசியில் எதிர்வீட்டு நண்பன் ஒரு வீட்டில் பூப்பறிப்பதைப் பார்த்தவுடன் எனக்கு கோபம் தலைக்கு ஏறியது. அவனிடம் சண்டை போட தயாரானேன்.
என்னை பார்த்ததும் புன்னகையுடன் வேகமாக வந்த அவன், 'உன் மனைவி நீ அசதியில் தூங்குவதால் அதிகாலையில் பூப்பறிக்க வாசலுக்கு வந்தாள். காலம் கெட்டிருக்குன்னு சொல்லி உள்ளேஅனுப்பிவிட்டு, நான் பூப்பறித்தேன். பக்கத்து வீடுகளிலும் கேட்டு பூக்களைப் பறித்தேன். இந்தா..' என்று அளித்தார். என் அவசரத்தை எண்ணி வெட்கத்துடன் பூவை வாங்கிக் கொண்டேன்.
-ச.ஸ்ரீதர வித்யா சங்கர், சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.