

28 ஆண்டுகளுக்கு முந்தைய லட்சியம்
தமிழில் 'அலைபாயுதே', 'மின்னலே', 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'அன்பே சிவம்', 'யாவரும் நலம்', 'இறுதிச் சுற்று', 'விக்ரம் வேதா' உள்ளிட்ட பல ஹிட் படங்களைக் கொடுத்திருக்கும் மாதவன், ஹிந்தியில் ராஜ்குமார் ஹிரானியின் '3 இடியட்ஸ்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களிலும் நடித்திருக்கிறார்.
மேலும், மாதவன் 2022-இல் 'ராக்கெட்ரி: நம்பி விளைவு' என்ற படம் மூலம் இயக்குநராகவும் உருவெடுத்தார். மாதவன் நடிப்பில் ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்தப் படம், சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதையும் வாங்கியது. இதுதவிர திரைப்படத் தயாரிப்பாளராகவும் மாதவன் விளங்குகிறார்.
இந்த நிலையில், 28 வருடங்களுக்கு முன்பு தன்னுடைய பட்டப்படிப்பு சமயத்தில் தனது லட்சியம் குறித்து ஆண்டுப் புத்தகத்தில்தான் குறிப்பிட்டிருப்பது பற்றிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் மாதவன் பதிவிட்டிருக்கிறார்.
தந்தை மறைவு சமந்தா உருக்கம்!
சமீபத்தில் உடல்நிலை பாதிப்பு, தன்னைச் சுற்றி வலம் வந்த சலசலப்புகள் எனத் தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்து வருகிறார் சமந்தா.
இந்நிலையில், தான் சமந்தா நடிப்பில் வெளியான 'சிட்டாடெல்: ஹனி பனி' வெப் சீரீஸ் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. சமீபமாகத்தான் அவர் சமூக ஊடகங்களில் மீண்டும் இயங்கத் தொடங்கினார்.
இதற்கிடையில், தனது தந்தை ஜோசப் பிரபு காலமானதைத் தொடர்ந்து, சமந்தா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'மய்ற்ண்ப்ப் ஜ்ங் ம்ங்ங்ற் ஹஞ்ஹண்ய் ஈஹக்' எனப் பகிர்ந்திருக்கிறார். ஜோசப் பிரபு, கேரளாவைச் சேர்ந்த நினெட் பிரபு என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமந்தா திரைத்துறைக்கு வரும் வரை, அவரது குடும்பம் நடுத்தரக் குடும்பமாகவே இருந்து வந்திருக்கிறது.
தன் தந்தை குறித்து நடிகை சமந்தா ஒரு பேட்டியில், 'என் அப்பாவிடமிருந்து கிடைக்க வேண்டிய அங்கீகாரத்துக்காக நிறையப் போராடியிருக்கிறேன். எனக்குத் தெரிந்து இந்தியப் பெற்றோர்களில் பெரும்பாலானவர்களின் மனநிலை அப்படிதான் என நினைக்கிறேன்.
மேலும் என்னிடம் அடிக்கடி நீ ஸ்மார்ட்டான பெண் இல்லை எனக் கூறுவார். நீண்டகாலமாக நான் என்னை அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். அந்த எண்ணம்தான் என்னை வடிவமைக்க உதவியது. இப்படித்தான் இந்திய அப்பாக்கள் இருப்பார்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
பட விழாவில் தமிழ்ப் படங்கள்!
சென்னையில் டிசம்பர் 12-இல் தொடங்கி, 19-ஆம் தேதி வரை நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில், மொத்தமாக 25 படங்கள் தமிழ்த் திரைப்படங்கள் பிரிவில் திரையிடப்படவிருக்கின்றன.
அமரன், போட், ஜமா, கொட்டுக்காளி, கோழிப்பண்ணை செல்லதுரை, லப்பர் பந்து, மகாராஜா, மெய்யழகன், நந்தன், ரசவாதி, தங்கலான், வாழை, வேட்டையன், டிமான்டி காலனி -2, கருடன், லாக்டவுன், நீல நிற சூரியன், பார்க்கிங், டீன்ஸ், வல்லவன் வகுத்ததடா போன்ற திரைப்படங்கள் திரையிடலுக்குத் தேர்வாகியுள்ளன.
மேலும், செவப்பி, புஜ்ஜி அட் அனுப்பட்டி, வெப்பம் குளிர் மழை, அயலி, ஹாட்ஸ்பாட் போன்ற படைப்புகளும் திரையிடத் தேர்வாகியுள்ளன.
இதைத் தாண்டி உலக சினிமா போட்டி பிரிவில் 'கிணறு' என்கிற ஒரே ஒரு தமிழ்த் திரைப்படம் மட்டும் தேர்வாகியிருக்கிறது. இதனைத் தாண்டி 'ஹாய் நானா' திரைப்படமும் இப்பிரிவில் திரையிடப்படவுள்ளது.
இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்படவிருக்கும் ஒரே தமிழ்த் திரைப்படம் 'ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்' படம் மட்டும்தான். இப்படத்தைத் தாண்டி லெவல் க்ராஸ், ஆடுஜீவிதம், கிஷ்கிந்த காண்டம் போன்ற மலையாளப் படங்கள் திரையிடப்படவுள்ளன.
தனுஷ் மீது மீண்டும் தாக்குதல்!
நெட்ஃபிளிக்ஸில் வெளியான நடிகை நயன்தாராவின் வாழ்க்கை, திருமணம் குறித்த ஆவணப் படத்தில் தனுஷின் நிறுவனம் தயாரித்திருக்கும் 'நானும் ரெளடிதான்' படப்பிடிப்பு காட்சிகளைப் பயன்படுத்தியதிற்கு இழப்பீடு கேட்டுள்ளார் தனுஷ்.
இதுதொடர்பாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக நடிகர் தனுஷின் நிறுவனம் வழக்குத் தொடர்ந்திருக்கிறது.
இந்தப் பிரச்னைகள் குறித்தும் தனுஷ் குறித்தும் நயன்தாரா கடுமையாகத் தாக்கி வெளியிட்டிருந்த அறிக்கை கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்த, தற்போது தனுஷ் தரப்பில் நயன்தாராவுக்கு எதிராகத் தொடர்ப்பட்டிருக்கும் இந்த வழக்கு இருவருக்குமிடையேயான சர்ச்சையை இன்னும் சலசலப்பாக்கியிருக்கிறது.
நயன்தாரா. விக்னேஷ் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராமில் தனுஷை குற்றம் சாட்டி கடிதங்கள் வெளியிட்ட போதிலும், இதுகுறித்து தனுஷ் எந்தவித விளக்கமோ, பதிலும் கொடுக்காமல், சட்ட ரீதியாக அணுகி வருகிறார்.
இந்நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், 'கர்மா என்ன சொல்கிறது என்றால், பொய்களைப் பேசி ஒருவரின் வாழ்க்கையை நீங்கள் கெடுக்க நினைத்தால், அது அசலும் வட்டியுமாக உங்களிடமே மீண்டு வந்து சேரும்' என்று சூசகமாகப் பதிவிட்டிருக்கிறார். இது சமூக ஊடகங்களில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.