நாங்கள் அந்தக் கல்யாண மண்டபத்தை அடைந்தபோது, மண்டபத்தின் வாசலில் நின்று ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த மணமகளின் தந்தை, 'வாங்க! வாங்க!' என்று எங்களை உற்சாகமாக வரவேற்று, என் கைகளைப் பற்றிக் கொண்டே, 'ஏன் இவ்வளவு பிந்திவிட்டது?' என்று கேட்டார்.
அதில், 'நாங்கள் முந்தி வந்திருக்க வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு இருந்தது. நாங்களும் முந்தி வந்திருக்க வேண்டியதுதான். எவ்வளவோ அவசரமாகப் புறப்பட்டோம். நாங்கள் என்றால், நானும் என் மனைவியும்!
'ஒரு வேலை இருந்தது. அதனால் கொஞ்சம் பிந்திவிட்டது' என்று சொல்லிக் கொண்டே, 'கல்யாணம் சிறப்பாக முடிந்ததா?' என்று பதிலுக்குக் கேட்டேன்.
'கொஞ்சமில்லை. ரொம்பவே பிந்திவிட்டது' என்று தமாஷ் பண்ணிக் கொண்டே, 'கல்யாணம் சிறப்பாகவே முடிந்தது' என்றவர், 'என்னம்மா! நீயாவது சீக்கிரம் வந்திருக்கலாம்லா?' என்று கேட்டுக் கொண்டே என் மனைவியைப் பார்த்தார். ஒருவகையில் அவருக்கு என் மனைவி நெருங்கிய சொந்தம்.
நான் மொய் கவரை எடுத்து அவரிடம் நீட்டினேன். வாங்க மறுத்தவர், 'இதையெல்லாம் பிள்ளைகிட்டதான் கொடுக்கணும். வாங்க மேலே போகலாம். சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்கிடலாம்' என்று சொல்லிக் கொண்டே அவர் முன்னே நடந்தார்.
மணமேடை மேல்தளத்தில் இருந்தது. படிக்கட்டில் ஏறி, மணமேடையை எட்டிப் பார்த்தேன். மணமகனும் மணமகளும் பறக்கும் முத்தம் கொடுப்பதுபோல தோற்றத்தில் நின்றிருந்தனர். இந்தக் காட்சியைக் கண்ட என்னுள் ஓர் அதிர்ச்சி. அதனை வீடியோ கேமராவும் நிழற்பட கேமராவும் படம்பிடித்தன. அதோடு விடவில்லை.
இன்னும் விதவிதமான தோற்றம் கொடுக்கச் சொல்லிய கேமராக்காரர்கள், அவற்றை கேமராவுக்குள் பதித்தனர். கேமராக்காரர்கள் சொல்லியபடியெல்லாம் மணமக்கள் தோற்றம் கொடுப்பதைப் பார்த்து எனக்குள் இருந்த அதிர்ச்சி எரிச்சலாக மாறியது. மேடையின் முன் நின்றிருந்த இளசுகள் ஆரவாரித்து ஆடிப் பாடின. எல்லோரும் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் தெரிந்தவர்கள். அதுவும் சேர்ந்து என் ஆத்திரத்தைக் கிளறியது.
இப்போது மேடைக்குப் போக முடியாது என்பதைப் புரிந்துகொண்ட மணமகளின் தந்தை, அருகில் கிடந்த நாற்காலிகளில் எங்களை உட்காரச் சொல்லி, அவரும் ஒரு நாற்காலியில் அமர்ந்தார். என் மனைவியும் அவரும் ஏதோ குசலம் விசாரித்துகொண்டிருந்தனர். நான் பின்பக்கம் திரும்பிப் பார்த்தேன். ஆள்கள் அதிகமில்லை.
நாற்காலிகள் காலியாகக் கிடந்தன. கீழே சாப்பிடப் போயிருக்க வேண்டும் அல்லது சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குப் போயிருக்க வேண்டும். இருந்த கொஞ்ச பேரும் அவரவருக்குள் பேசிச் சிரித்துகொண்டிருந்தனர். 'நாம் ரொம்ப பிந்திதான் வந்திருக்கிறோம்' என்று மனதுக்குள் நினைத்துகொண்டேன்.
என் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்த மணமகளின் தந்தை என் பக்கம் திரும்பினார். 'பரவாயில்லை. பையனைப் பார்த்தால் நல்ல பையனாகத்தான் தெரியுது. நல்ல கம்பெனியில் வேலையும் பாக்கிறான். நல்ல மாப்பிள்ளையாகவே பார்த்திருக்கிறீர்கள்' என்று அவரிடம் ஏதாவது பேச வேண்டும் என்பதற்காகச் சொன்னேன்.
'அட! நீங்க ஒண்ணு. மாப்பிள்ளையைப் பார்ப்பதற்கு நான் பட்டபாடு இருக்கிறதே அது பெரும்பாடு. மூணு வருஷமா அலையா, அலைஞ்சிருக்கேன். பையன் பிடித்தால் வேலை பிடிக்காது. வேலை பிடித்தால் பையன் பிடிக்காது. ரெண்டும் பிடித்தால் குடும்பம் பிடிக்காது. எல்லாம் பிடித்து வந்தால் ஜாதகம் பொருந்தாது. அப்படி ஐம்பதுக்கு மேல ஜாதகம் பார்த்திருப்பேன். நம்ம ஜோசியர் இருக்காரே, அவர் எல்லாத்தையும் கழிச்சிடுவார். கடைசியில இது கொஞ்சம் பரவாயில்லை.
தரகருக்குக் கொஞ்சமா பணம் கொடுத்திருக்கேன். சும்மா சொல்லக் கூடாது. தரகரும் சலிக்காமல் ஜாதகம் தந்துகிட்டே இருந்தாரு. பெரிய அளவில வியாபாரம் பண்ணுகிற எத்தனையோ மாப்பிள்ளை வந்தது. நான் கூட கட்டிக் குடுத்திடலாம் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் என் மனைவி.. அதுதான் உங்க சித்தி.. (மணமகளின் தாய் என் மனைவி வழியில் எனக்குச் சித்தி முறை) படிச்ச பிள்ளையை வியாபாரிக்குக் கட்டிக் குடுக்கணுமா? வேலை பார்க்கிற பையனுக்குத்தான் கட்டிக் குடுக்கணும்னு பிடிவாதமாக இருந்தாள். கடவுள் புண்ணியத்துல அவள் நெனச்சபடி நடந்துவிட்டது. நம்ம பிள்ளைக்கு நெறைய நகை போடுறோம். ரொக்கம் அதிகம் கொடுக்குறோம். ஒரு நல்ல இடத்தில கொடுக்கிறது நல்லதுதானே' என்ற அவருடைய பேச்சில் ஒரு பூரிப்பு இருந்தது.
'அவங்க சொன்னதும் சரிதான. படித்த பொண்ணுக்குப் படித்து வேலை பார்க்கிற மாப்பிள்ளைதான் நல்லது. வியாபாரம் எந்நாளும் ஒண்ணுபோல இருக்குமா?' என்று சொல்லிக் கொண்டே நான் கடிகாரத்தைப் பார்த்தேன். அதற்குள் ஐந்து நிமிடம் கழிந்திருந்தது.
என் அவசரம் அவருக்குப் புரிந்திருக்கும் போல, 'ஆனா ஒண்ணு. பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறது லேசுப்பட்ட காரியம் இல்லை. அதை நான் இப்போ நல்லா தெரிஞ்சிக்கிட்டேன்' என்று சொல்லிக் கொண்டே மேடைக்குப் போக எழுந்தார். நாங்களும் கூடவே எழுந்தோம். 'கொஞ்சம் பொறுங்கள்' என்பது போல கேமராக்காரர்கள் சைகை காட்டினர். அவர்கள் அவர்களுடைய தொடர்ச்சி விட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். நாங்களும் மறுபடி உட்கார்ந்தோம். நேரம் சென்றுகொண்டிருந்தது.
'சாப்பிட்டுவிட்டு வந்திடலாம் வாரிங்களா?' என்று மணமகளின் தந்தைதான் கேட்டார். 'இல்லை. போகும்போது சாப்பிட்டுக்கிடலாம்' என்று நான் சொன்னதும், 'அப்போ இருங்க நான் கீழே போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன்' என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பிவிட்டார்.
இப்போதெல்லாம் கல்யாண வீடுகளில் போட்டோவும் வீடியோவும் எடுப்பது முக்கியத்துவம் ஆகிவிட்டன. 'பருப்பில்லாத சாம்பாரா?' என்பது போல 'வீடியோ இல்லாத கல்யாணாமா?' என்றாகிவிட்டது. அதனால் கல்யாண வீடுகளில் போட்டோக்காரர்களின் ஆதிக்கம் கொஞ்சம் அதிகமாகவே ஆகிவிட்டது. அதுவும் தாலி கட்டி முடிந்து, ஆசீர்வாதம் என்ற பெயரில் சொந்தமும் பந்தமும் பரிசு வழங்க மேடைக்கு வரிசையாகச் செல்லும்போது, அவர்களின் அதிகாரம் அத்துமீறியதாக இருக்கும்.
'அப்படி நில்லுங்க. இப்படி நில்லுங்க. சேர்ந்து நில்லுங்க. அசையாதிங்க' என்னு சொல்லி, ஆட்டிப்படைத்து, காத்திருக்க வைத்து, போட்டோவும் வீடியோவும் எடுத்த பிறகுதான் ஆள்கள் நகர்வதற்குப் பச்சைக்கொடி காட்டுவார்கள். போக்குவரத்து 'சிக்னலில்' நின்று வழிப்படுத்தும் காவலர் போல அதற்கு ஒரு கையாளையும் அமர்த்தி அமர்க்களப் படுத்துவர்.
அதற்குப் பிறகு பெண்ணையும் மாப்பிள்ளையையும் தனியாகப் படம் எடுக்கிறார்களே அதில், அவர்கள் காட்டும் ஆர்வமே தனி. மணமக்களை விதவிதமாகத் தோற்றம் கொடுக்கச் செய்து படுத்தும்பாட்டை அளவிடமுடியாது. அந்த அளவுக்கு எடுக்கும் போட்டோவெல்லாம் மணமக்களைப் பலர் முன்னிலையில் அசிங்கப்படுத்துவதாகவே எனக்குத் தோன்றும்.
அதில்தான் தங்கள் திறமை வெளிப்படுவதாக அவர்களுக்கு நினைப்பு. திரைப்படங்களில் பார்க்கும் காட்சிகளைப் போல கல்யாண வீடுகளிலும் போட்டோ எடுப்பதில் அவர்களுக்கொரு பிரியம். அதில் தணியாத தாகமும் கூட. அந்த நேரத்தில் திரைப்பட ஒளிப்பதிவாளர் என்றொரு நினைப்பு அவர்களுக்கு வந்துவிடும் போலும்.
முன்பெல்லாம் கல்யாணம் என்றால் இப்படியா விதவிதமாகப் படம் பிடித்தார்கள். ஏன்? பல கல்யாணங்களில் போட்டோ எடுப்பதே கிடையாது. கல்யாணம் முடிந்து புதுப்பெண்ணும் புதுமாப்பிள்ளையுமாய், முதல்முதலாகத் திருச்செந்தூர் கோயிலுக்குச் சாமி கும்பிடச் செல்லும்போது, அங்குள்ள ஸ்டுடியோவில் போட்டோ எடுத்துகொள்வார்கள். இல்லையெனில், அருகிலுள்ள ஊருக்குச் சென்று, ஏதாவது ஒரு ஸ்டுடியோவில் ஜோடியாகப் படம் எடுப்பார்கள். இதுதான் கல்யாண போட்டோ. இப்போ அப்படியா நடக்கிறது. தடித்த புத்தகம் அளவுக்கு இரண்டு, மூன்று ஆல்பம் போட்டு
விடுகிறார்கள். காணாக்குறைக்கு இரண்டு மணி நேரம் பார்க்கிற அளவுக்கு வீடியோவாகக் காட்சிப் படுத்திவிடுகின்றனர். அதில் திரைப்படப் பாடல்களைக் கலவை செய்து கவர்ச்சியும் காட்டிவிடுகின்றனர்.
கூடுதல் தொகை பெறுவதற்கு போட்டோக்காரர்கள் இப்படி இருக்கிறார்கள் என்றால் மக்களும் அதைத் தவிர்க்க விரும்புவதில்லையே? அந்தக் கல்யாணத்தில் இப்படி எடுத்தார்களே? இந்தக் கல்யாணத்தில் இப்படி எடுத்தார்களே? என்று அடுத்தவர்களைப் பார்த்துத் தாங்களும் அப்படியே எடுக்க நினைத்துவிடுகிறார்கள்.
அதிலும் இந்த இளைய தலைமுறையினரின் புத்தி எங்கே போனது? என்றுதான் புரியவில்லை. போட்டோகிராபர் சொல்கிறாரே என்று இவர்கள் ஏன் விதவிதமான தோற்றம் கொடுக்கிறார்கள்? அவர்கள் சொல்லத்தான் செய்வார்கள். அதற்காக இப்படியெல்லாம் சபை நடுவே தோற்றம் காட்டலாமா? நமக்கென்று ஒரு பாரம்பரியம் இருப்பது அவர்களுக்குத் தெரிய வேண்டாமா? அதை மீறுவது அசிங்கமாகத் தெரியவில்லையா?
இப்படியாக என் மனதில் ஓடிக் கொண்டிருந்த எண்ணங்களுக்குத் தடை போட்டு, மேடையை எட்டிப் பார்த்தேன். அங்கே மணமகனோ மணமகளைத் தூக்கி ஏந்தியபடி நின்றிருந்தார். மணமகள் மணமகனின் கழுத்தை வளைத்துப் பிடித்தவாறு ஒய்யாரமாகப் புன்முறுவல் காட்டிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் திரைப்படத்தில் வரும் காதல் 'டூயட்' பாடல் காட்சிதான் எனக்கு நினைவுக்கு வந்தது. அந்தக் காட்சியைப் படமாக்குவதில் கேமராக்கள் முனைப்புடன் ஈடுபட்டிருந்தன. இதனைப் பார்த்ததும் எனக்கு இன்னும் அதிகமான ஆத்திரம். போதாக்குறைக்கு அங்கிருந்தவர்களும் அதை ரசித்துப் பார்த்தது வேறு எனக்குள் குமுறலை உண்டாக்கியது.
எனக்கு கேமராக்காரர்கள் மேல் கோபம் என்று சொல்வதைவிட, மணமக்கள் மேல்தான் கோபம் கோபமாக வந்தது. 'இங்கே என்ன சினிமா படப்பிடிப்பா நடக்குது? சினிமாவில்தான் இயக்குநர் சொன்னபடியெல்லாம் நடிகர்கள் நடிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். கல்யாண வீட்டில் இந்த கேமராக்காரர்கள் சொன்னபடியெல்லாம் தோற்றம் கொடுக்க, இந்த மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் என்ன அவசியம் வந்தது? கொஞ்சமாவது கூச்சம் இருக்க வேண்டாமா?' என்று எழுந்த மனக் குமுறல், 'இது என்ன அதிசயமாக இருக்கு. இப்பவே இப்படியெல்லாம் அநியாயம்?' என்று முணுமுணுப்பாக வெளிப்பட்டுவிட்டது.
என் முணுமுணுப்பு பக்கத்தில் இருந்தவர் காதில் விழுந்திருக்க வேண்டும். என் மன ஓட்டத்தைப் புரிந்தவர்போல, 'இதில என்ன சார் அதிசயம், அநியாயம் இருக்கு. இங்கேயாவது பரவாயில்லை. கல்யாணம் முடிந்தவுடன் இப்படியெல்லாம் எடுக்காங்க? சில இடங்களில நிச்சயதார்த்தத்தோடே இப்படியெல்லாம் எடுக்காங்க? எனக்குத் தெரிஞ்ச இடத்தில நிச்சயதார்த்தத்தோட விதவிதமாக போட்டோ எடுத்து ஆனந்தப்பட்டாங்க? ஆனா பாருங்க? அந்த கல்யாணம் எதுக்காகவோ நடக்காம நின்னு போச்சு. இதெல்லாம் தேவையில்லாத அதிகப் பிரசங்கித்தனம்தான்.
கல்யாண நினைவாக போட்டோ அவசியம்தான். அதற்காக இப்படியெல்லாம் எடுக்கணுமா? அதுக்குச் சிறுசுகளும் இப்படி இடம் கொடுக்கலாமா? பின்னால ஒருநாள் நாலுபேர் கூட இருந்து ஆல்பத்தையோ, வீடியோவையோ பார்க்கும்போது எப்படியிருக்கும்' என்று தன் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தினார். பரவாயில்லை. என்னைப்போல் அவரும் நினைக்கிறார் என்று ஆனந்தப்பட்டு கொண்டேன்.
'இதோடு மட்டுமில்லை சார். இப்போ கல்யாணத்துக்கு முந்திய 'போட்டோ ஷூட்'டும் பரவலாகி வருகிறது. கல்யாணம் நடப்பதற்கு முன்னமே, இயற்கை எழில் நிறைந்த சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று போட்டோ எடுப்பதுதான் இப்போதுள்ள 'லேட்டஸ்டு பேஷன்'. சுற்றுலாத் தலம்கூட இல்லை சார். அரசுப் பேருந்திலேயே இப்படி படம் எடுத்து அது ரொம்ப 'வைரல்' ஆகியுள்ளது. இந்தப் பழக்கம் எப்படி இங்கு புகுந்தது என்று தெரியவில்லை' என்று அவர் மேலும் சொன்னதைக் கேட்டபோது, எனக்கு என்னவோ போலிருந்தது.
குழந்தைகளின் பிறந்தநாளுக்குப் பூங்கா, கடற்கரையென்று போய் போட்டோ எடுப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படி கல்யாணத்துக்கு முன் போட்டோ எடுக்கும் புதுமை நடப்பை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
'எத்தனை போட்டோ வேணுமானாலும் எடுத்துட்டு போகட்டும். ஆனால் அது கொஞ்சம் நாகரிகமாக இருந்தால் சரி'என்று அவருக்குப் பதில் சொல்லி முடித்த நான் என் மனைவியைப் பார்த்தேன். அவள் என்னைப் பார்த்த பார்வையில் ஒருமுறைப்பு தெரிந்தது.
களவிலே பழகிக் களித்த தலைவனாக இருந்தபோதும், மணமுற்றத்தில் கூடியிருக்கும் சுற்றத்தார் முன்னே தலைவனின் மணக்கோலத்தை ஏறெடுத்துப் பார்க்க முடியாமல் வெட்கப்பட்டு, கைகளால் கண்களைப் பொத்திக்கொண்ட சங்கத்தலைவியின் செயல் இப்போது என் நினைவுக்கு வந்தது. அந்த நினைவைப் புறம் தள்ளிவிட்டு, நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த காட்சியொன்று என்னுள்ளே ஓடத் தொடங்கியது.
அப்போதெல்லாம் கல்யாணம் முடிந்தவுடன் பல்லக்கில் மாப்பிள்ளையும் பெண்ணும் பட்டினப் பிரவேசமாக ஊர்வலம் வருவது வழக்கம். அப்படி ஒருமுறை பக்கத்து ஊரில் கல்யாணம் முடிந்து மாப்பிள்ளையும் பெண்ணும் ஊர்வலமாக வந்துகொண்டிருந்தனர். வெட்கப்பட்ட மணப்பெண் குனிந்த தலை நிமிரவே இல்லை. இத்தனைக்கும் காலையில் கல்யாணம் முடிந்து, மாலையில் மணமகன் வீட்டிற்கு வரும்போதுதான்.
இந்த ஊர்வலம். 'அப்படியென்றால் மணவறையில் இந்தப் பெண் எப்படி இருந்திருப்பார்' என்று பாருங்கள். குனிந்த தலை நிமிரவே இல்லையாம். தலையை நிமிர்த்திதான் தாலி கட்ட முடிந்ததாம். கல்யாணத்துக்குப் போயிருந்தவர்கள் சொன்னார்கள். பட்டினப் பிரவேசத்தைப் பார்ப்பதற்காகத் தெருவில் கூடியிருந்தவர்கள், 'ஏம்மா புதுப்பொண்ணே! கொஞ்சம் மொகத்தைத்தான் காட்டேன். கருப்பா? செவப்பான்னு பார்க்கிறோம்' என்று கேலி பண்ணியும் அந்தப் பெண் முகத்தைக் காட்டவேயில்லை. நிமிர்ந்து பார்க்கவேயில்லை. மறுநாள் கிணற்றுக்குத் தண்ணீர் எடுக்க வந்தபோதுதான் முகத்தைப் பார்த்ததாகப் பலநாள் அந்தப் பெண்ணைக் கேலி பேசிச் சிரிப்பார்கள்.
அப்படி, பெண்கள் வெட்கப்பட்ட காலம்போய், 'வெட்கத்தைப் பற்றிய நினைப்பே இல்லாமல், மணவறையில் விதவிதமாய்த் தோற்றம் கொடுக்கும் இப்படியொரு காலம் வந்துவிட்டதே. இது என்ன விந்தை' என்ற எண்ணத்தில் நான் இருந்தபோது, கீழே சென்றிருந்த மணமகளின் தந்தை,'ரொம்ப நேரம் ஆகிவிட்டதோ?' என்று கேட்டுக்கொண்டே எங்கள் அருகில் வந்தார்.
'இல்லை. சரியாகத்தான் வந்திருக்கிறீர்கள். இவ்வளவு நேரமும் கேமராக்காரர்கள் 'பிசி'யாகத்தான் இருந்தார்கள். இப்போதுதான் கொஞ்சம் 'ஃப்ரீ' யாகியிருக்கிறார்கள். நாம் இப்போது மேடைக்குப் போகலாம்' என்று சொல்லிக்கொண்டே நானும் என் மனைவியும் எழுந்தோம்.
மூவரும் மேடை ஏறினோம். மணமகள் புன்னகையோடு எங்களைப் பார்த்தாள். எங்களை மணமகனுக்கு அறிமுகப்படுத்தினார் மணமகளின் தந்தை. மணமகளின் கையில் கவரை கொடுத்துவிட்டு, கேமராக்காரர்கள் சொல்லியபடி கேமராவின் முன் நின்றோம். மேடையைவிட்டு இறங்கும்போது, மணமகளின் தந்தைக்குத் தெரிந்தவர் ஒருவர் அங்கே வந்தார். அவருடன் சேர்ந்து போட்டோ எடுப்பதற்காக, மணமகளின் தந்தை மேடையிலேயே நின்றார்.
நாங்கள் அவரிடம் சொல்லிவிட்டு கீழே இறங்கினோம். படியிறங்கும்போது, மணமகளின் தாய் மேலே ஏறி வந்து கொண்டிருந்தார்கள். எங்களைப் பார்த்ததும், 'சாப்பிட்டீங்களா?' என்று கேட்டவர், 'சாயங்காலம் ஆறு மணிக்கு வீடு பார்க்கப் போறோம். நாலு வேன் சொல்லியிருக்கோம். நீங்க ரெண்டு பேரும் கட்டாயம் வந்துவிடுங்க?' என்று வேண்டுகோள் வைத்தவாறே அவசரமாக மேலே ஏறினார். 'கட்டாயம் வருகிறோம்' என்று சொல்லிவிட்டு நாங்களும் கீழே வந்தோம்.
கல்யாண மண்டப முகப்பு வந்ததும், 'பார்த்தியா? கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் அந்தப் பொண்ணு 'போஸ்' கொடுக்குது' என்று என் மனைவியிடம் பேச்சைத் துவங்கினேன்.
'எல்லாம் பார்த்துக்கிட்டுத்தான் இருந்தேன். பக்கத்துல இருந்தவர் பேசினதையும் கேட்டுக்கிட்டே இருந்தேன். இப்ப அந்தப் பிள்ளகிட்ட என்ன தப்ப கண்டீங்க? உங்க பார்வையிலதான் தப்பிருக்கு. காலம் மாறிப்போச்சு. இது ஒண்ணும் பழங்காலமில்லை. இந்தக் காலத்துப் பொண்ணுக இப்படிதான் இருப்பாங்க? அவங்களுக்கு எப்படி இருக்கணும்னு நீங்க ஒண்ணும் சொல்லித்தர வேண்டாம்' என்று சொல்லிக் கொண்டே அவள் எனக்கு முன்னே நடக்கத் தொடங்கினாள்.
அவள் இப்படி சொன்னதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. இத்தனைக்கும் எங்களுக்குக் கல்யாணமாகி நாற்பது வருடங்களானாலும், நாலுபேர் இருக்கும்போது என் பக்கத்தில் உட்காருவதைத் தவிர்ப்பவள்தான் அவள். அப்படிப்பட்டவள் இப்படி சொன்னால், அதில் ஏதோ 'அர்த்தம் இருக்கத்தான் செய்யும்.. அது நியாயமாக இருக்கவும் கூடும்' என்று என் உள்ளுணர்வு சொன்னது.
'காலவேகத்திற்கேற்ப ஏற்படும் மாற்றங்களைத் தப்பான கண்ணோட்டத்தில் பார்க்காமல், சமரசம் செய்துகொள்வதுதான் பெருந்தன்மையான வாழ்க்கை என்ற புரிதல் எனக்கு இப்போது உண்டானது. அந்தப் புரிதலோடு, அவளைப் பின்தொடர்ந்து, கல்யாண மண்டபத்தைவிட்டு வெளியேறினேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.