ரஷியா செல்ல இந்தியர்கள் ஆர்வம்...

'வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பெரிய அளவில் ஈர்க்கும் நகரமாக விளங்குகிறது மாஸ்கோ. ரஷியாவுக்கு சுற்றுலா செல்வதில் இந்தியர்களின் ஆர்வமும் அதிகரித்துள்ளது' என்கிறார் கல்வி ஆலோசகர் ரவிச்சந்திரன்.
சித்திரிக்கப்பட்டது
சித்திரிக்கப்பட்டது
Updated on
2 min read

'வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பெரிய அளவில் ஈர்க்கும் நகரமாக விளங்குகிறது மாஸ்கோ. ரஷியாவுக்கு சுற்றுலா செல்வதில் இந்தியர்களின் ஆர்வமும் அதிகரித்துள்ளது' என்கிறார் கல்வி ஆலோசகர் ரவிச்சந்திரன்.

இவர் ரஷியாவில் படித்து, ரஷியப் பெண்ணை மணந்தவர். ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் படிப்பதற்காக ஆலோசனைகளை வழங்கிடும் கல்வி ஆலோசனை நிறுவனத்தையும் நடத்திவரும் அவரிடம் பேசியபோது:

'2024-இன் முதல் பாதியில், இந்தியாவில் இருந்து மாஸ்கோவுக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையானது 2023-இல் இதே காலகட்டத்தைவிட ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, இந்தியாவில் இருந்து 28,500 பேர் மாஸ்கோவுக்குச் சென்றுள்ளனர். கடந்த ஆண்டு இதே காலத்தில் 19,400 பேராக இருந்தது. மாஸ்கோவைத் தேர்ந்தெடுக்கும் அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில், இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

கலாசாரம், சுற்றுலா, பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகவே பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் மாஸ்கோவுக்கு வருகை தருகின்றனர். புகழ்பெற்ற கிரெம்ளின் மாளிகை, செயின்ட் பசில்ஸ் தேவாலயம், ரசிக்கத்தக்க பல சிறந்த ஓவியங்களைக் கொண்ட ட்ரெட்டியாகோவ் ஓவியக் காட்சிக்கூடம் உள்ளிட்டவை காணக் கூடிய முக்கிய இடங்கள்.

மாஸ்கோவின் மத்திய தெருக்களில் 18-19-ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட பழைமையான மாளிகைகளைக் காண்பதற்காகவும், அந்தத் தெருக்களில் உலா வருவதையும் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர்.

இந்தியப் பயணிகளில் ஐந்தில் ஒருவர் வர்த்தக நோக்கத்துடனே மாஸ்கோவுக்குச் செல்கிறார். இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் மாஸ்கோவுக்கு வருகை தந்த வர்த்தகப் பயணிகளின் எண்ணிக்கையின்படி, முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதேநேரத்தில், வர்த்தகச் சுற்றுலாப் பயணிகளில் சுமார் 40 % பேர் குடும்ப விடுமுறைப் பயணமாக மாஸ்கோவுக்குத் திரும்பவும் வருகின்றனர்.

இந்தியப் பயணிகளை ஈர்க்கும் நோக்கத்துடன் பல்வேறு நிகழ்ச்சிகளையும், திட்டங்களையும் மாஸ்கோ நகர சுற்றுலாக் குழு செயல்படுத்தி வருகிறது. இவற்றில் பொழுதுபோக்குக்காகவும், மைஸ் வகையிலும் (கூட்டங்கள், ஊக்கப்படுத்துதல், மாநாடுகள், கண்காட்சிகள் போன்ற வர்த்தக நோக்கங்களுக்காகப் பயணித்தல்) பயணிப்போர் அதிகம். 'ஈஸ்டர் பரிசு', 'மாஸ்கோ வசந்தம்' உள்ளிட்ட ஏராளமான திருவிழாக்கள் மாஸ்கோவில் நடத்தப்படுகின்றன.

ஆண்டுதோறும் நடத்தப்படும் குளோபல் மைஸ் காங்கிரஸ் பிரிக்ஸ் மாநாடு' என்கிற சர்வதேச மாநாட்டை மாஸ்கோ நகரம் டிசம்பர் 16, 17-ஆம் தேதிகளில், நடத்துகிறது.

இந்த மாநாடு மைஸ் தொழில் பிரதிநிதிகள் இடையே தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்கான உலகளாவிய தளமாகும். பிரிக்ஸ் நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களும், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வல்லுநர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

'மைஸ் தொழில்துறையின் முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைத்து, பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகளுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே புதிய வாய்ப்புகளை உருவாக்கும்' என்று மாஸ்கோ துணை மேயர் நடாலியா செர்குளினா கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

'மாஸ்கோ தூதுவர்கள்' என்ற சிறப்புத் திட்டத்தின் ஓர் அங்கமாக 2024-இல் இணையவழி சான்றிதழ் படிப்பை வெற்றிகரமாக முடித்த இந்தியர்கள் 200 பேர் சிறப்புச் சான்றிதழை பெற உள்ளனர்.

புதுதில்லியில் ஆகஸ்ட் இறுதியில் நடைபெற்ற 'வர்த்தக சுற்றுலா வணிகம், பொழுதுபோக்குப் பயணம், மைஸ் 2024' என்கிற மிகப் பெரிய கண்காட்சியில் மாஸ்கோ நகரமும் பங்கேற்றது.

ரஷிய பல்கலைக் கழகங்களில் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இந்திய தனியார் மருத்துவக் கல்லூரிகளைவிட ரஷிய மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் குறைவு. 'நீட்' தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே அங்கே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தவிர, இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் கிடைக்கும்.

வெளிநாட்டினருக்கும் வேலைவாய்ப்புகளை ரஷியா திறந்துள்ளது. எனவே, தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் வேலை வாய்ப்புக்களை இந்தியர்கள் பெற முடியும். சென்னை உள்ளிட்ட பல நகரங்களிலும் ரஷிய மொழி கற்கும் வசதிகள் வந்துவிட்டன. இணைய வழியிலும் கற்கலாம்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2024 ஜூலையில் இரண்டாம் முறையாக, ரஷியப் பயணம் மேற்கொண்டார். இதுதவிர, அண்மையில் பிரிக்ஸ் மாநாட்டுக்காகவும் அவர் ரஷியா சென்று திரும்பினார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்' என்கிறார் ரவிச்சந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com