'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 224
கருணாகரன் அமர்ந்திருந்த சோபாவுக்கு அருகில் இருந்த தொலைபேசி ஒலித்தது. அவரே எடுத்தார். பதிலேதும் கூறாமல் தொலைபேசியில் வந்த தகவலைக் கேட்டுவிட்டுக் கீழே வைத்தார்.
'சீதாராம் கேசரியும் பிரணாப் முகர்ஜியும் காரில் கிளம்பிச் சென்றிருக்கிறார்கள். அநேகமாக அவர்கள் குடியரசுத் தலைவரைச் சந்தித்து ஐக்கிய முன்னணி அரசுக்கு வழங்கி வரும் ஆதரவைத் திரும்பப் பெறும் கடிதத்தைக் கொடுப்பார்கள் என்று தெரிவிக்கிறார் பல்ராம் ஜாக்கர்' என்றபடி என்னைப் பார்த்தார்.
அவரிடமிருந்து விடைபெற்ற நான் விரைந்து காங்கிரஸ் தலைமையகத்தை நோக்கி...
கடந்த சில மாதங்களாக ஜீவனிழந்ததுபோலக் காட்சியளித்த 24, அக்பர் சாலை அலுவலகம் தொண்டர்கள், தலைவர்கள் நிறைந்து காணப்பட்டது. ஆட்சி கவிழ்ந்தால் தேர்தல் வரும் என்கிற அச்சத்தைவிட, ஆட்சி அதிகாரம் கைக்கெட்டிய தூரத்தில் தென்படுகிறது என்கிற உற்சாகத்துடன் வலம் வந்து கொண்டிருந்தார்கள் காங்கிரஸ்காரர்கள்.
அலுவலகப் புல்வெளியில் கட்சிக்காரர்கள் சிலருடன் பேசிக் கொண்டிருந்த மீரா குமாரைச் சுற்றி வளைத்தனர் பத்திரிகை நிருபர்கள். காங்கிரஸ் தலைமையில் ஆட்சியே அமைந்துவிட்டது போன்ற பூரிப்பில் இருந்தார் மீரா குமார்.
'கட்சியில் எந்தவிதக் கருத்து வேறுபாடும் இல்லை. அனைவரும் தலைவர் எடுத்திருக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறோம். முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்கிறோம். நாங்கள் ஐக்கிய முன்னணியை ஆதரித்ததுபோல, ஐக்கிய முன்னணி காங்கிரஸை ஆதரிக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது...' என்று தெரிவித்தார் அவர்.
காங்கிரஸ் தலைமையகம் இருந்த அதே அக்பர் சாலையின் இன்னொரு பகுதியில் அமைந்திருந்த ஐக்கிய முன்னணியின் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் செய்தித் தொடர்பாளர் ஜெய்பால் ரெட்டி. அக்பர் சாலையின் ஒரு பகுதியில் இருந்து மறுபகுதிக்கு மாறி மாறி விரைந்து கொண்டிருந்தோம் பத்திரிகையாளர்கள்.
'ஐக்கிய முன்னணியின் வழிகாட்டுக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு காங்கிரஸூக்கும் எங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது. முறைப்படி அறிவிக்கப்படாத பேச்சுவார்த்தை என்பதால் தலைவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்து இப்போது எதுவும் தெரிவிப்பதற்கில்லை' என்பதுதான் ஜெய்பால் ரெட்டி பகிர்ந்துகொண்ட தகவல்.
இரு தரப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தை எந்த நிலையில் இருக்கிறது என்று மீரா குமாராலோ, ஜெய்பால் ரெட்டியாலோ எதுவும் சொல்ல முடியவில்லை. சற்று தீவிரமாக விசாரித்தபோது, ஆட்சி கவிழ்ந்து தேர்தல் வந்துவிடாமல் தடுப்பதற்கு இரண்டு தரப்புமே முனைப்புக் காட்டுவது மட்டும் தெரிந்தது.
ஐக்கிய முன்னணி அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாகக் காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி, அதற்கான காரணங்களை 3 பக்கக் கடிதத்தில் பட்டியலிட்டுக் குடியரசுத் தலைவரிடம் கொடுத்திருந்தார். அதனடிப்படையில் ஏப்ரல் 7-ஆம் தேதிக்குள் ஐக்கிய முன்னணி அரசு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்குக் கோர வேண்டும் என்று குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா உத்தரவிட்டிருந்தார்.
தகவல் தெரிந்ததும் மத்திய அமைச்சரவை அவசரமாகக் கூடியது. எந்தக் காரணத்துக்காகவும் பதவி விலகப் போவதில்லை என்றும், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்குப் பெறப்போவதாகவும் பிரதமர் தேவே கெளடா திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து குடியரசுத் தலைவரைச் சந்திக்க பிரதமர் தேவே கெளடா விரைந்தபோது, அவர் பதவி விலகக் கூடும் என்கிற சந்தேகம் எழுந்தது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர்-குடியரசுத் தலைவர் சந்திப்பு சுமார் 30 நிமிஷங்களுக்கும் மேலாக நடந்தது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அதை நிறைவேற்ற முடியாமல் போனால் நிர்வாக ரீதியாக சிக்கல் ஏற்படும் என்பது குடியரசுத் தலைவரின் கவலையாக இருந்திருக்கக் கூடும். நம்பிக்கைத் தீர்மானத்துக்கான கெடுவை நீட்டிவைக்க வேண்டும் என்கிற கோரிக்கைக்காகத்தான் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பிரதமர் விரைந்தார் என்பது பிறகுதான் தெரிந்தது.
ஏப்ரல் 11-ஆம் தேதிக்குள் மக்களவையில் தேவே கெளடா அரசு நம்பிக்கை வாக்குக் கோர வேண்டும் என்கிற புதிய அறிவிப்பு குடியரசுத் தலைவர் மாளிகையால் வெளியிடப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டு, தனக்கு சாதகமாக காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சி வாக்களிக்க முற்படலாம் என்று பிரதமர் தேவே கெளடா எதிர்பார்த்தார் போலும்.
1997, ஏப்ரல் 1-ஆம் தேதி உண்மையிலேயே இந்திய அரசியல்வாதிகளுக்கு ஒரு முட்டாள்கள் தினமாகத்தான் அமைந்தது. தனது அரசுக்கான ஆதரவைத் திரும்பப் பெறும் தைரியம் காங்கிரஸூக்கு இருக்காது என்று நினைத்த பிரதமர் தேவே கெளடாவும் ஏமாந்தார்; ஆதரவை விலக்கிக் கொள்கிறோம் என்று சொன்னால் ஐக்கிய முன்னணிக் கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க சம்மதிக்கும் என்று எதிர்பார்த்த காங்கிரஸ் கட்சித் தலைவர் சீதாராம் கேசரியும் ஏமாந்தார்.
ஆட்சி கவிழ்ந்து தேர்தல் வந்துவிடலாகாது என்கிற அச்சம், பாஜக கூட்டணியைத் தவிர ஏனைய கட்சிகள் அனைத்தையும் பற்றிக் கொண்டது. காங்கிரஸூடன் பேச்சுவார்த்தை நடத்த மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித் தலைமையில் சந்திரபாபு நாயுடு, முலாயம் சிங் அடங்கிய குழுவை ஐக்கிய முன்னணி அமைத்தது. மருத்துவமனையில் இருந்த வி.பி.சிங்கை ஒருவர் பின் ஒருவராகத் தலைவர்கள் சந்திந்த வண்ணம் இருந்தனர்.
திமுக தலைவர் கருணாநிதி, தமாகா தலைவர் ஜி.கே.மூப்பனார் இருவரும் தில்லிக்கு வந்தனர். லாலு பிரசாத் யாதவ், ஃபரூக் அப்துல்லா, அஸ்ஸாம் முதல்வர் ப்ரஃபூல் குமார் மகந்தா ஆகியோரும் தில்லி வந்து சேர்ந்தனர். பத்து மாதங்களுக்கு முன்னால் வாஜ்பாய் தலைமையிலான 13 நாள் அரசு கவிழ்ந்தபோது காணப்பட்ட அதே பரபரப்பு இப்போது மீண்டும் உருவாகி இருந்தது.
காங்கிரஸ் தலைமையில் அரசு அமைந்தால் அதற்கு ஆதரவளிப்பதில்லை என்பதில் இடதுசாரிகள், திமுக, தெலுங்கு தேசம், அஸ்ஸாம் கண பரிஷத் உள்ளிட்ட கட்சிகள் உறுதியாக இருந்தன. அதே நேரத்தில் ஐக்கிய முன்னணியில் காங்கிரஸ் இணைவதை அவர்கள் எதிர்க்கவில்லை. ஆனால், தங்களது தலைமையில் மாற்று அரசு என்பதில் காங்கிரஸ் பிடிவாதமாக இருந்தது. அதனால்தான் எல்லா பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.
மிகவும் இக்கட்டான அரசியல் சூழ்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியும், தமாகா தலைவர் ஜி.கே.மூப்பனாரும் சென்னை திரும்பிவிட்டனர் என்பதுதான் ஆச்சரியம். நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கான கெடு தேதிக்கு ஒரு நாள் முன்புதான் அவர்கள் மீண்டும் தலைநகர் திரும்பினர்.
இவ்வளவு பரபரப்புக்கும் நடுவில் நான் 3, செளத் அவென்யூவில் உள்ள முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் வீட்டுக்குப் போயிருந்தேன். சுமார் ஒரு மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகுதான் அவரை சந்திக்க முடிந்தது. ஜனதா தளம், சமாஜவாதி, காங்கிரஸ் கட்சிகளின் எம்.பி.க்கள் சிலர் அவரை சந்திக்க வந்திருந்தனர். எதற்காக அவர்கள் சந்திரசேகர்ஜியை சந்திக்க வந்தார்கள் என்பது எனக்குப் புரியவில்லை.
'என்ன நடக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?'
'தேவே கெளடா அரசு கவிழும். ஆனால் ஐக்கிய முன்னணி ஆட்சி தொடரும். பாஜகவை திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் ஆதரித்தாலும்கூட ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை பலம் கிடைக்காது. அதனால், ஏதாவது சமரசம் ஏற்பட்டு காங்கிரஸ் இணைந்த அல்லது காங்கிரஸ் ஆதரவில் புதிய அரசு அமையுமே தவிர, நாடாளுமன்றத்துக்கான தேர்தல் வராது.'
'அப்படி அமைந்தால் யார் பிரதமராக இருப்பார் என்று நினைக்கிறீர்கள்?'
'நான் ஜோசியர் ஒன்றுமல்ல. ஒன்று மட்டும் நிச்சயம். சீதாராம் கேசரி பிரதமராக மாட்டார். அதேபோல, தேவே கெளடாவும் தொடர மாட்டார். எப்படி இருந்தாலும் பதவியில் தொடர முடியாது என்கிற நிலையில், தேவே கெளடா வேறு ஒருவருக்கு வழிவிட்டு ஒதுங்குவதுதான் புத்திசாலித்தனம்.'
வாஜ்பாய் தனது 13 நாள்கள் அரசு நம்பிக்கைத் தீர்மானத்தை சந்தித்தபோது ஆற்றிய உரையில் இருந்த அழுத்தமும், அது உருவாக்கிய அனுதாபமும், பிரதமர் தேவே கெளடாவின் உரையில் இருக்கவில்லை. காங்கிரஸை வசைபாடித் தீர்த்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
'பதவியில் இருந்து அகற்றப்பட இருக்கிறேன் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். பதவி விலகும் பிரதமர் என்ற நிலையில்தான் நான் பேசுகிறேன்' என்று தொடங்கி, காங்கிரஸை விமர்சிப்பதற்காகவே அந்த நம்பிக்கைத் தீர்மானத்தை பயன்படுத்திக் கொண்டார் பிரதமர் தேவே கெளடா.
'காங்கிரஸ் கட்சி மோசமான அரசியல் நடத்தி வருகிறது. ஐக்கிய முன்னணியை எப்படியாவது பிளவுபடுத்தத் துடிக்கிறது. காங்கிரஸ் கட்சிக்குத் துணிவிருந்தால் தேர்தலைச் சந்திக்கட்டும். சீதாராம் கேசரியின் ஒரே ஆசை எப்படியாவது பிரதமர் பதவியைப் பிடித்துவிட வேண்டும் என்பதுதான்.
நான் இதுவரை பத்து தடவைகள் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறேன். சீதாராம் கேசரி தனது வாழ்நாளில் ஒருமுறையாவது நேரிடையாக தேர்தலைச் சந்தித்ததுண்டா? முன்னாள் பிரதமர்களான சரண்சிங், வி.பி.சிங், சந்திரசேகர் வரிசையில் காங்கிரஸின் பேராசைக்கு ஆளான இன்னொரு பிரதமராக நான் அறியப்படுவேன். அதில் எனக்கு வருத்தமில்லை' - இதுதான் நம்பிக்கைத் தீர்மான உரையின் சாராம்சம்.
எதிர்பார்த்தது போலவே நம்பிக்கை தீர்மானம் தோல்வி அடைந்தது. ஐக்கிய முன்னணித் தலைவர்களின் வற்புறுத்தல் காரணமாகத் தனது ராஜிநாமாவைக் குடியரசுத் தலைவரிடம் அளித்த பிரதமர் தேவே கெளடா, மக்களவையைக் கலைத்துத் தேர்தலுக்கு வழிகோலப் பரிந்துரைக்கவில்லை.
தேவே கெளடாவின் பதவி விலகலைத் தொடர்ந்து காங்கிரஸிலும், ஐக்கிய முன்னணியிலும் நடந்த பேரங்கள், சந்தர்பவாத பேச்சுவார்த்தைகள், சற்றும் எதிர்பார்க்காத நிலைப்பாடுகள் போன்றவை எந்த அளவுக்கு அரசியல் என்பது சந்தர்ப்பவாதிகளின் ஆடுகளம் என்பதை வெளிப்படுத்தியது.
ஐக்கிய முன்னணியின் வழிகாட்டுக் குழுக் கூட்டத்தில், காங்கிரஸூக்கும், பாரதிய ஜனதாவுக்கும் ஆதரவு தருவதில்லை என்று எடுக்கப்பட்ட முடிவை திமுகவும், தமாகாவும் ஏற்கவில்லை. தீர்மானத்தில் கையொப்பமிட முதல்வர் கருணாநிதியும், தமாகா தலைவர் ஜி.கே.மூப்பனாரும் மறுத்துவிட்டனர். அதனால், திமுக ஒருவேளை பாஜக அணிக்கும், தமாகா காங்கிரஸ் அணிக்கும் தாவ நினைக்கிறதோ என்கிற ஐயப்பாடுகூட அப்போது எழுந்தது. திமுக முக்கியமான அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்பட்டால் பாஜகவின் கூட்டணியில் இடம் பெறலாம் என்றுகூட வதந்தி நிலவியது.
காங்கிரஸ் கட்சியிலும் மிகப் பெரிய குழப்பம் நிலவியது. ஆட்சி அமைப்பது அல்லது ஆட்சியில் பங்கு பெறுவது என்கிற தலைவர் சீதாராம் கேசரியின் பிடிவாதம், அமைச்சரவையில் இடம் பெற இருப்பது யார் யார் என்கிற பட்டியல் தயாரிக்கும் அளவுக்குத் தீவிரமடைந்திருந்தது.
அடுத்த பிரதமர் யார் என்பதை அடையாளம் காணும் முயற்சி ஒருபுறம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் வேளையில், சீதாராம் கேசரியும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் பிரதமர் கனவுடன் வலம் வந்தனர். தமாகா தலைவர் ஜி.கே.மூப்பனார் சோனியா காந்தியுடன் கலந்தாலோசனை செய்து கொண்டிருந்தார்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.