அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மரபு மீறல் தகாது!

மரபு மீறிய அரசியல் தலைவர்களின் நடத்தை விவாதப் பொருளாக மாறியிருப்பதைப் பற்றி...

News image
மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
Updated On :10 மார்ச் 2026, 9:45 pm

ஆசிரியர்

பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் இருந்து இந்தியா விடுதலை பெற்ற பிறகும்கூட, பிரிட்டிஷாரின் நாடாளுமன்ற நடைமுறைகளையும், ஆட்சிமுறை மரபுகளையும் இந்தியா தொடர முடிவு செய்தது. மன்னருக்குப் பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர் என்பதைத் தவிர இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கித் தந்த ஆட்சிமுறை பெரும்பாலும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற மரபுகளை அப்படியே பின்பற்றுவதாகத்தான் அமைந்தது.

79 ஆண்டுகள் கடந்தும்கூட சுதந்திர இந்தியாவில், முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அரசியல் நாகரிகத்தைக் கைவிடாமல் பின்பற்றி வருகின்றனர். வெளிநாட்டுத் தலைவர்கள் இந்தியா வரும்போதும், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் விருந்துகளின்போதும், மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளிலும் ஆளும்}எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்துக் கொள்வதும், மனமாச்சரியங்களைக் கடந்து அளவளாவி மகிழ்வதும் இந்திய ஜனநாயகத்தின் வெற்றி. தலைநகர் தில்லியில் தேசியத் தலைவர்கள் மத்தியில் காணப்படும் அரசியலுக்கு அப்பாலான நட்புணர்வும், மாற்றுக் கொள்கைகளை மதிக்கும் புரிதலும் பெரும்பாலான மாநிலங்களில் அருகி வருகிறது.

மரபுகள் சில மீறப்படுவதும், கடைப்பிடிக்கப்படாமல் இருப்பதும் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்த ஒரு கருத்தைப் பதிவு செய்யத் தோன்றுகிறது. "ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் எதிர் எதிர் கருத்தைக் கொண்ட கட்சிகளே தவிர எதிரிக்கட்சிகள் அல்ல. ஜனநாயகம் என்கிற நாணயத்தின் இரண்டு பக்கங்கள் அவை' என்பதுதான் அவர் தெரிவித்த கருத்து. இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளில் வெவ்வேறு மாநிலக் கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்கள் நடந்துகொண்ட விதத்தை சுட்டிக்

காட்டத் தோன்றுகிறது. இவை பொதுவெளியில் ஏன் விவாதப் பொருளாகவில்லை என்பது தெரியவில்லை. கடந்த நாலரை ஆண்டு காலமாக தமிழகத்தில் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவிக்கும் ஆட்சியில் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையிலான உறவு சுமுகமாக இருக்கவில்லை என்பது நாடறிந்த உண்மை.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் செயல்பாடுகளை வெளிப்படையாகவே விமர்சித்தவர் ஆளுநர் ஆர்.என்.ரவி. சட்டப்பேரவையில் ஆளுநர் உரை தொடர்பான முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு குறித்து நாம் இப்போது விவாதிப்பதில் அர்த்தமில்லை. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய பல மசோதாக்கள் ஆளுநர் ரவியால் ஒப்புதல் அளிக்கப்படவில்லை அல்லது கிடப்பில் போடப்பட்டன. அந்தப் பிரச்னை உச்சநீதிமன்றம் வரை சென்றது நாடறிந்த செய்தி.

தமிழக அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையே கடுமையான மோதல்போக்கு இருந்தும்கூட, ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டபோது முதல்வர் மு.க. ஸ்டாலின் கொள்கை வேறுபாடுகளையும், மனமாச்சரியங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு அவரை ஆளுநர் மாளிகையில் சந்தித்து "மரபுப்படி' வாழ்த்தி வழியனுப்ப முற்பட்டதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் அரசியல் நாகரிகத்தைப் பேண வேண்டும் என்கிற முதல்வர் மு.க.ஸ்டாலினின் மரபுவழி செயல்பாடு ஏனைய முதல்வர்களுக்கு முன்னுதாரணம்.

அண்டை மாநிலமான கேரளத்தில் ஆளுநராக இருந்த ஆரிஃப் முகமது கான் பிகார் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். ஆளுநர் ஆர்.என்.ரவி போலவே அவருக்கும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசுக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவின.

ஆளுநர் ஆரிஃப் முகமது கானின் இடமாற்றத்தைத் தொடர்ந்து அவர் கேரளத்தில் இருந்து விடைபெற்றபோது, அவரை முறைப்படி வழியனுப்பும் மரபை முதல்வர் பினராயி விஜயன் பின்பற்றவில்லை. இதேபோல வேறு சில மாநிலங்களிலும் ஆளுநர் - முதல்வர் இடையேயான மரபு பின்பற்றப்படுவதில்லை. சமீபத்தில் இன்னொரு நிகழ்வு.

சர்வதேச சந்தால் பழங்குடியினர் மாநாடு மேற்கு வங்கத்தில் கடந்த சனிக்கிழமை நடந்தது. அதில் கலந்துகொண்டு உரையாற்ற சந்தால் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மேற்கு வங்கம் வந்தார். சிலிகுரியின் பிதன்நகரில் நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்ட நிலையில், அதற்கு அனுமதி மறுத்த மாநில அரசு நிகழ்ச்சியை கோசியாபுருக்கு மாற்றியது. அந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர் கலந்துகொண்டார்.

ஆனால், மரியாதை நிமித்தம் குடியரசுத் தலைவரை வரவேற்கவோ, அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பங்குபெறவோ முதல்வர் மம்தா பானர்ஜி முற்படவில்லை. மரபு மீறப்பட்டது என்பது மட்டுமல்ல; குடியரசுத் தலைவருக்குத் தரப்பட வேண்டிய மரியாதை முதல்வர் மம்தா பானர்ஜியால் தரப்படவில்லை என்பதை வேதனையுடன் பதிவு செய்யத் தோன்றுகிறது.

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காரணத்தால் குடியரசுத் தலைவருடன் பயணிக்கவோ, அவரது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவோ முடியவில்லை என்கிற முதல்வர் மம்தா பானர்ஜியின் விளக்கம் ஏற்புடையதாக இல்லை. அந்த நிகழ்ச்சியை யார் ஒருங்கிணைக்கிறார்கள், யார் யார் கலந்துகொள்கிறார்கள், யாருடைய நிதியுதவியில் நடைபெறுகிறது உள்ளிட்ட தகவல்கள் இல்லாததால் கலந்து கொள்ளவில்லை என்கிற முதல்வர் மம்தாவின் கூற்று நகைப்பை வரவழைக்கிறது.

மேற்கு வங்க அரசின் காவல் துறையும், புலனாய்வுத் துறையும் என்ன செய்துகொண்டிருக்கின்றன என்று கேட்கத் தோன்றுகிறது. அரசியல் மனமாச்சரியங்கள் காரணமாக மரபை மீறுவது ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தும். அரசியல் தலைவர்கள் புரிந்து நடக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.