'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 225

தேவே கெளடாவின் பதவி விலகலைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் குழப்பத்துக்கு இடையில், எதிலும் தொடர்பில்லாமல் அமைதி காத்தவர்கள் மூவர்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 225
Published on
Updated on
4 min read

தேவே கெளடாவின் பதவி விலகலைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் குழப்பத்துக்கு இடையில், எதிலும் தொடர்பில்லாமல் அமைதி காத்தவர்கள் மூவர். முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ், பிரணாப் முகர்ஜி, சோனியா காந்தி ஆகிய மூவரும் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த பேச்சு வார்த்தைகளில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி இருந்தனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஸ்ரீகாந்த் ஜிச்கரை சந்தித்தபோது, 'நரசிம்ம ராவ் ஏதாவது கருத்துத் தெரிவித்தாரா?''என்று கேட்டேன். 'ஒன்றும் சொல்லவில்லை. அடுத்த கட்டத் திட்டமில்லாமல் ஆதரவைத் திரும்பப் பெற்றிருக்கக் கூடாது என்பதுதான் அவரது கருத்து என்று நினைக்கிறேன்'' என்று சொன்னார். தன்னை சந்திக்க விரும்பிய காங்கிரஸ் தலைவர்கள் யாரையும் சோனியா காந்தி சந்திக்கவில்லை. பிரணாப் முகர்ஜியும் யாரையும் சந்திக்கவில்லை.

எந்தவொரு கட்சிக்கும், எந்தவொரு அணிக்கும் ஆட்சி அமைக்கும் அளவிலான பெரும்பான்மை இல்லாத நிலையில், இந்தியாவின் நிர்வாகம் திரிசங்கு நிலையில் இருந்தது. மக்களவைத் தலைவர் உள்பட அவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 543. காலியிடங்கள் 2, ஆட்சி அமைக்க 272 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும்.

முக்கிய எதிர்க்கட்சியான பாஜக 162 இடங்களுடன் அதிக பலம் கொண்ட கட்சியாக இருந்தது. அதன் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்களையும் சேர்த்தாலும் அந்த அணியின் பலம் 193 மட்டுமே. 13 கட்சிக் கூட்டணியான ஐக்கிய முன்னணிக்கு, வெளியில் இருந்து ஆதரவு வழங்கும் சிறிய கட்சிகளின் எண்ணிக்கையையும் சேர்த்தால்கூட அதன் பலம் 188தான்.

பாஜகவுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கை பலம் கொண்ட கட்சியாக 139 இடங்களுடன் காங்கிரஸ் இருந்தது. எந்த அணியிலும் சேராமல் 21 உறுப்பினர்கள் வெவ்வேறு கட்சியின் சார்பில் இருந்தனர். இப்படிப்பட்ட நிலையில் கூட்டணிப் பேச்சுவார்த்தை "ஆடு-புலி-புல்லுக்கட்டு' புதிராகத்தான் இருந்ததே தவிர, ஒன்றுபடுவதற்கான சாத்தியம் தெரியவில்லை.

மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் தமிழ்நாடு இல்லத்தில் ஆலோசனையில் இருப்பதாகத் தகவல் கிடைத்ததும் அங்கே விரைந்தேன். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.கருணாநிதி, தமாகா தலைவர் ஜி.கே.மூப்பனார், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, அஸ்ஸாம் கண பரிஷத் தலைவரும், அந்த மாநில முதல்வருமான பிரஃபுல்ல குமார் மகந்தா ஆகியோர் அங்கே கூடி விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

அஸ்ஸாம் முதல்வர் பிரஃபுல்ல குமார் மகந்தாவுடன் வந்திருந்த அஸ்ஸாம் கண பரிஷத் மக்களவை உறுப்பினர் கேசப் மகந்தா எனக்கு ஓரளவுக்குப் பரிச்சயம். அவர்கள் என்னதான் விவாதிக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளப் பேச்சுக் கொடுத்தேன்.

'தற்போதைய சூழலில் இடைத் தேர்தல் வருவது சரியாக இருக்காது. தேர்தல் வருவதை எப்படியாவது தடுக்க வேண்டும். மக்களவையைக் கலைப்பது கடைசிக்கட்ட முடிவாகத்தான் இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கட்சியின் நிலைப்பாடு. கூட்டத்தில் என்ன முடிவெடுப்பார்கள் என்று எனக்குத் தெரியாது'' என்றார் கேசப் மகந்தா.

கூட்டம் முடிந்து எல்லோரும் கிளம்பினார்கள். 'கலைஞர் சொல்வார்'' என்றபடி நகர்ந்துவிட்டார் ஜி.கே.மூப்பனார். 'மீண்டும் ஆட்சி அமைப்பதா வேண்டாமா? என்று ஐக்கிய முன்னணியே இன்னும் முடிவெடுக்கவில்லை. இப்போது எதுவும் சொல்வதற்கில்லை'' என்றபடி கேள்விகளைத் தவிர்த்துவிட்டார் சந்திரபாபு நாயுடு.

மகந்தாவின் கருத்துக்குக் காத்திருக்காமல், நிச்சயம் திமுக தலைவர் கருணாநிதி கூட்டம் குறித்தும், ஆட்சி அமைப்பது குறித்தும் பத்திரிகையாளர்களிடம் ஏதாவது கருத்துத் தெரிவிப்பார் என்கிற எதிர்பார்ப்பில் இருந்தோம் அங்கே குழுமியிருந்த பத்திரிகையாளர்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது. அவர் எதுவும் பேசப் போவதில்லை என்று மாறன் தெரிவித்தார்.

அஸ்ஸாம் பவனில் முதல்வர் மகந்தாவைச் சந்தித்தால் என்ன என்று தோன்றியது. அங்கே விரைந்தேன். எனது நம்பிக்கை வீண்போகவில்லை. தகவல் சொல்லி அனுப்பியதும் உள்ளே வரச்சொன்னார்.

'எங்களது நான்கு மாநிலக் கட்சிகளுக்கு இடையேயும் எந்தவிதக் கருத்து வேறுபாடுகளும் இல்லை. மற்ற கட்சிகளைப்போலவே இடைத் தேர்தல் வருவதை அஸ்ஸாம் கண பரிஷத்தும் விரும்பவில்லை. அப்படிப்பட்ட சூழல் வருமானால் தேர்தலை சந்திக்கவும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்'' என்றார் அவர்.

'ஐக்கிய முன்னணியின் தலைமையை மாற்றினால் காங்கிரஸ் தனது ஆதரவைத் தொடரக்கூடும் என்பது குறித்து விவாதித்தீர்களா?''

'காங்கிரஸ் கூறுகிறது என்பதற்காக ஐக்கிய முன்னணியின் தலைமையை மாற்றுவது என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அப்படியே மாற்றினாலும், சில மாதங்களில் புதிய தலைமையையும் மாற்றச் சொல்ல மாட்டார்கள் என்று என்ன உத்தரவாதம்?''

காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சியில் பங்கு பெறுவது என்கிற கேள்விக்கே இடமில்லை என்று தெளிவுப்படுத்தினார் முதல்வர் மகந்தா. தங்களது அணியில் இணைய பாஜகவில் இருந்து தனக்குத் தொடர்ந்து அழைப்பு வருகிறது என்கிற தகவலையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

தேவே கெளடா அரசின் வீழ்ச்சியின்போது உருவானதுதான் பாஜக தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது இப்போது பலருக்கும் மறந்தே போயிருக்கக் கூடும். பாஜகவினருக்கேகூட நினைவிருக்குமா என்பது சந்தேகம்தான்.

முதலில் பாஜக தலைமையகமான 11, அசோகா சாலையில் நடக்க இருந்த பத்திரிகையாளர் சந்திப்பு, எதிர்க்கட்சித் தலைவரான வாஜ்பாயின் 7, சஃப்தர்ஜங் சாலை இல்லத்துக்கு மாற்றப்பட்டது. எல்லா பத்திரிகையாளர்களும் அங்கே குவிந்துவிட்டனர்.

மிகவும் நிதானமாகவும், தெளிவாகவும் எல்லா கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். அவருடன் கட்சித் தலைவர் எல்.கே.அத்வானியும், முன்னாள் தலைவர் முரளி மனோகர் ஜோஷியும் இருந்தனர்.

'ஆட்சி அமைக்க எங்களை அழைக்குமாறு குடியரசுத் தலைவரை வலியச் சென்று நாங்கள் கேட்கப் போவதில்லை'' என்று தெரிவித்த வாஜ்பாய் மேலும் தொடர்ந்தார்.

'குறைந்தபட்ச கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் கூட்டணிக் கட்சிகளையும், பிராந்தியக் கட்சிகளையும் கொண்ட புதிய கூட்டணியை பாஜக அமைத்து வருகிறது. தேசிய அளவில் அரசியல் கட்சிகளின் இணைப்புப் பாலமாக பாஜக செயல்படும். அதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கையில் கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி இறங்கி இருக்கிறார்'' என்று தெரிவித்தார்.

'அந்தக் கூட்டணிக்கு என்ன பெயர் வைப்பதாக இருக்கிறீர்கள்?''

'தேசிய ஜனநாயகக் கூட்டணி'' என்று தெரிவித்தார் எல்.கே.அத்வானி.

'தமிழ் மாநில காங்கிரஸ், திமுக, அஸ்ஸாம் கண பரிஷத், தெலுங்கு தேசம் கட்சிகளுடன் பாஜக தொடர்பு கொண்டு வருகிறதா?''

'அது பற்றியெல்லாம் இப்போது எதுவும் கூற நான் தயாராக இல்லை. சில பிராந்தியக் கட்சிகள் ஆர்வம் காட்டி இருக்கின்றன. பகுஜன் சமாஜ் கட்சியுடன் விவாதித்திருக்கிறோம். பாஜகவின் மீதான தீண்டாமை விரைவில் அகலும் என்பதை மட்டும் இப்போது தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறித் தனது பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக் கொண்டார் வாஜ்பாய்.

அடுத்தாற்போல அங்கிருந்து நான் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையகமான ஏ.கே.ஜி.பவனுக்கு நகர்ந்தேன். நான் போவதற்குள் இடதுசாரிக் கட்சித் தலைவர்களின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு முடிந்து, அறிக்கையை வழங்கிக் கொண்டிருந்தனர்.

'பிடிவாதமாக இருந்து தேவே கெளடா தலைமையிலான அரசைத் தோற்கடித்து சீதாராம் கேசரி சாதித்தது என்ன? என்ன காரணத்துக்காக ஆதரவை விலக்கிக் கொண்டார் என்பதை நாட்டு மக்களுக்கு அவர் தெரிவிக்க வேண்டும். ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி முயலாது என்று இப்போது கூறும் சீதாராம் கேசரி, ஐக்கிய முன்னணியின் தலைவரை மாற்றினால் போதும் என்று பேசத் தொடங்கி இருக்கிறார்.

அவருடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணமாக நாடு இப்போது கடுமையான அரசியல், பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசில் இடம் பெறுவதும் கூடாது; அதன் ஆதரவில் மீண்டும் அரசு அமைக்கவும் கூடாது என்பதுதான் இடதுசாரிக் கட்சிகளின் நிலைப்பாடு'' என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

ஐக்கிய முன்னணியின் வழிகாட்டுதல் கூட்டத்தில் தேவே கெளடா நாடாளுமன்றக் கட்சித் தலைவர் பதவியில் இருந்தும், ஐக்கிய முன்னணியின் தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்ததுடன், காங்கிரஸூடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது.

ஐக்கிய முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சந்திரபாபு நாயுடுவும் காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரியும் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து, சில உடன்படிக்கைகள் ஏற்பட்டன. புதிய ஐக்கிய முன்னணித் தலைவர் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று எழுத்துபூர்வமாக சீதாராம் கேசரி ஆதரவு அளித்தும்கூட, அதனால் பிரச்னை தீர்ந்துவிடவில்லை.

ஆட்சி அமைக்க உரிமை கோரிக் குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் கட்சி அளித்த கடிதத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள், காங்கிரஸ் ஆதரவுக்கு நிபந்தனை விதித்தன. புதிய தலைவர் யார் என்பது தெரியாமல் குடியரசுத் தலைவரிடம் அளித்திருக்கும் கடிதத்தைத் திரும்பப் பெற முடியாது என்று காங்கிரஸ் தீர்மானமாகக் கூறிவிட்டது.

இதற்கிடையில் ராஜேஷ் பைலட், கே.கருணாகரன், குலாம் நபி ஆசாத், ஜே.பி.பட்நாயக் ஆகிய நால்வரும் பலமுறை பிரணாப் முகர்ஜியை அவரது வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். காங்கிரஸூடன் தொடர்புடைய ஒருவர்தான் ஐக்கிய முன்னணியின் தலைவராகவும், பிரதமராகவும் இருக்க வேண்டும் என்பது அவர்கள் அனைவரின் கருத்தாக இருந்தது. அதை காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரியும் ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

கே.கருணாகரன், ராஜேஷ் பைலட் இருவரையும் சந்தித்து நான் கேட்டபோது அவர்கள் அதை உறுதிப்படுத்தினர். "அப்படியானால் அந்தக் காங்கிரஸ்காரர் தமாகா தலைவர் ஜி.கே.மூப்பனாரா?' என்று நான் கேட்டபோது, இருவரும் "ஆம்' என்று தலையசைத்தனர். பின்னாளில் அதை பிரணாப் முகர்ஜியும் உறுதிப்படுத்தினார்.

பிறகு ஏன் ஜி.கே.மூப்பனார் பிரதமராகவில்லை? அதற்குப் பிறகு நடந்த அரசியல் நகர்வுகள் என்னென்ன? மீண்டும் ஐக்கிய முன்னணி அரசு அமைந்ததன் பின்னணி என்ன? அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்களில் பிரணாப் முகர்ஜியின் பங்களிப்பு எப்படி இருந்தது?

(இப்போதைக்கு இடைவேளை)

பின்குறிப்பு

ஒர் அரசியல் தொடர் 225 வாரங்கள் தொடர்ந்து இதுபோல எழுதப்பட்டதில்லை என்று நினைக்கிறேன். 1973 முதல் 1997 வரையில் நான் அருகில் இருந்து பார்த்த அரசியல் நிகழ்வுகளின் பதிவுகள்தான் இதுவரை எழுதியவை.

பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற 2017 வரையிலான, சுவாரஸ்யமான எனது அடுத்த 20 ஆண்டுகால நிகழ்வுகள் பதிவு செய்யக் காத்திருக்கின்றன.

மூப்பனார் பிரதமராகாதது ஏன்? நரசிம்ம ராவின் இறுதி நாள்களில் அவர் எப்படி எல்லாம் அவமானப்படுத்தப்பட்டார்? ஐ.கே.குஜ்ரால் அரசு ஏன் கவிழ்ந்தது? அதிமுக - பாஜக உறவு கசந்தது ஏன்? சோனியா காந்தி பிரதமராகாததன் பின்னணி என்ன? பிரணாப் முகர்ஜி ஏன் பிரதமராகவில்லை? 2007-இல் பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் பதவிக்கு ஏன் தவிர்க்கப்பட்டார்? 2012-இல் அவர் குடியரசுத் தலைவர் வேட்பாளரானது எப்படி? -

உள்ளிட்ட பல கேள்விகளுக்கான விடைகளை நான் பதிவு செய்யாமல் இருந்துவிடக் கூடாதுதான். அதில் சந்தேகம் இல்லை.

இப்போதைக்கு இடைவேளை. இதுவரையில் என்னுடன் பயணித்த வாசகர்களுக்கு நன்றி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com