

முன்பெல்லாம் தொடக்கப் பள்ளிகளில் 'அம்மா இங்கே வா வா... ஆசை முத்தம் தா தா...', 'நிலா நிலா ஓடிவா.. நில்லாமல் ஓடி வா...',' கை வீசம்மா கை வீசு கடைக்குப் போகலாம் கை வீசு...' போன்ற குழந்தைப் பாடல்கள்தான் பிரபலம். இன்றைக்கும் அந்தப் பாடல்களுக்கு மாற்றுப் பாடல்கள் இருந்தாலும் பழைய பாடல்கள் போல பிரபலம் ஆகவில்லை.
இந்த நிலையில், மதுரை வலையங்குளத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சாந்தி சந்திரசேகரன், பறவைகள் குறித்த வித்தியாசமாக, சிறுவர்களுக்காக எளிமையான பாடல்களை'பாப்பாவுக்கு பறவைப் பாட்டு' என்ற தலைப்பில் எழுதி நூலாக வெளியிட்டுள்ளார். இவர் தனது பாடல்களில் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் பாணியைக் கடைப்பிடித்திருக்கிறார்.
இதுதொடர்பாக, சாந்தி சந்திரசேகரனிடம் பேசியபோது:
'தாய் மொழியை , தாய் நாட்டை நேசிக்க வேண்டியது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் மனிதர்கள் சார்ந்திருக்கும் இயற்கைச் செல்வங்களையும் நேசிக்க வேண்டும்.
இயற்கைச் சூழலைச் சமநிலையில் வைப்பதில் மனிதர்களுக்கு உதவுவது மரங்கள், காடுகள், விலங்குகள், பறவைகள் போன்றவையாகும்.
சில விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் ஏற்பட்டுள்ளது. மனிதனால் விலங்குகளுக்கும்,
விலங்குகளால் மனிதனுக்கும் பலவகையில் இழப்புகள் ஏற்படுகின்றன. ஆனால் பறவைகளால் மனிதர்களுக்கு அத்தனை இழப்புகள் ஏற்படுவதில்லை. இப்போதெல்லாம் வெளியே சென்று விளையாடுவதில்லை.
சிறுவர்கள் வீட்டுக்குள் அடங்கி, தொலைக்காட்சிப் பெட்டி முன் அல்லது பெரியவர்களின் செல்போனில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
எனக்கு புதுக் கவிதைதான் எழுத வரும். சிறுவர் பாடல்களை மரபு வழி எழுத புலவர் இராம.இளங்கோவன் பயிற்சி தந்தார். அந்தப் பயிற்சியில் முதல் முயற்சியாக வெளிவந்திருப்பதுதான்'பாப்பாவுக்கு பறவைப் பாட்டு'.
காட்சி ஊடகம் சிறுவர்களை எளிதில் கவர்ந்துவிடுகிறது. அதனால் சிறுவர்களை ஈர்ப்பதற்காக, பச்சைக்கிளி, மைனா, ம யில், குயில், மணிப்புறா, தூக்கணாங்குருவி, ஊர்குருவி, காக்கா, காடை, கவுதாரிஆந்தை, இராசாளி, மரங்கொத்தி உள்ளிட்ட 50 பறவைகளின் வண்ணப் படங்கள், அந்தந்த பறவைகள் குறித்த முறையான தகவல்கள்,
அதுதொடர்பான பாடல்கள் போன்றவற்றை எளிய சொற்களால் கோர்த்துள்ளேன்.
மனிதர்களுக்கு பலவகையில் உதவும் மகிழ்விக்கும் பறவைகளுக்கும் நன்றி பாராட்டுவிதமாகவும் இந்த நூலை அமைந்துள்ளேன். இந்த முயற்சியைப் பாராட்டி பல இலக்கிய அமைப்புகள் விருதுகளை வழங்கியுள்ளன.
குடும்பத் தலைவியாக இருந்துகொண்டு, புதுக்கவிதை, சிறுகதை தொகுப்பு உள்பட ஆறு நூல்களை வெளியிட்டிருக்கிறேன். தொடர்ந்து விலங்குகள், மலர்கள், கீரைகள், மூலிகைகள் குறித்த வண்ணப்படங்கள், தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். அதன் அடிப்
படையில் பாடல்களையும் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒளவையாரின் ஆத்திச்சூடி கொன்றைவேந்தன் வரிகளுக்குப் பொருத்தமான பாடல்களையும் எழுதிக் கொண்டிருக்கிறேன். சிறார்களின் மனதில் பதியும்படி சமூக நீதி முறைகளையும் பாடல்களில் பதிந்துகொண்டிருக்கிறேன் என்கிறார் சாந்தி சந்திரசேகரன்.
பாடல்களில் சில:
காடை குருவி : பொன் உருண்டை போலவே
மின்னு கின்ற காடையே
எண்ணி ரண்டு கண்களும்
உன்னைக் கண்டு மகிழுதே !
குயில் : குக்குக் கூவென கூவிடும் குயிலே
வெக்கம் விட்டு வெளியில் வாராய்
அக்கம் பக்கம் யாரும் இல்லை
பக்கம் பக்கம் பையவே வாராய்!
மயில்: அங்கே பாரு மயிலம்மா
தங்கக் கொண்டை ஆட்டியே
அங்கும் இங்கும் பாக்குதே
பொங்கும் இன்பம் பூக்குதே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.