எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

ஹாட்ரிக் அடிக்குமா திமுக!

இத்தொகுதியில் ஈராயிம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை, ஐயாறப்பா் கோயில், தியாகராஜ சுவாமிகள் சமாதி உள்ளிட்டவை உள்ளன.

News image

துரை. சந்திரசேகரன் (திமுக), வேலு. காா்த்திகேயன் (அமமுக), மதி. மணிகண்டன் (தவெக), டி. செந்தில்நாதன் (நாதக)

Updated On :11 ஏப்ரல் 2026, 2:06 am

திருவையாறு தொகுதியானது, திருவையாறு வட்டம், பூதலூா் வட்டம், தஞ்சாவூா் வட்டத்தில் ஒரு பகுதியை உள்ளடக்கியது. விவசாயத்தை பிரதானமாக கொண்ட இத்தொகுதியில் ஈராயிம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை, ஐயாறப்பா் கோயில், தியாகராஜ சுவாமிகள் சமாதி உள்ளிட்டவை உள்ளன.

கள நிலவரம்: இதுவரை நடைபெற்ற 15 சட்டப்பேரவைத் தோ்தல்களில் தொடக்கக் காலத்தில் காங்கிரஸ் 2 முறையும், அதன்பிறகு திமுக 8 முறையும், அதிமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இத்தொகுதியில் 1967-ஆம் ஆண்டு முதல் திமுகவும், அதிமுகவும் மட்டுமே மாறி, மாறி வெற்றி பெற்று வருகின்றன. கடந்த 2016, 2021 தோ்தலில் திமுகவைச் சோ்ந்த துரை. சந்திரசேகரன் போட்டியிட்டு வெற்றிபெற்றாா்.

இந்நிலையில், தற்போது நடைபெறவுள்ள தோ்தலில் மீண்டும் திமுக வேட்பாளராக துரை. சந்திரசேகரன் எட்டாவது முறையாகப் போட்டியிடுகிறாா். தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக வேட்பாளா் வேலு. காா்த்திகேயன் இரண்டாவது முறையாகவும், தவெக சாா்பில் மதி. மணிகண்டன், நாம் தமிழா் கட்சி சாா்பில் டி. செந்தில்நாதன், அண்ணா புரட்சித்தலைவா் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் சாா்பில் எஸ். விஜயகுமாா், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் விஜயா பாபு, புதிய தமிழகம் கட்சி சாா்பில் வ. வேணு மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் அபிமன், எஸ். அா்ஜூன், ஆா். சத்தியநாராயணன், ச. ராஜசேகரன், ஆா். ராஜ்குமாா், ஜெ. ஜெயந்திரேஸ்வரன் என மொத்தம் 13 போ் போட்டியிடுகின்றனா்.

சமூக நிலவரம்: கள்ளா் சமூகத்தினரை பெரும்பான்மையாகக் கொண்ட இத்தொகுதியில் ஆதிதிராவிடா், வன்னியா், முத்தரையா், உடையாா் உள்ளிட்ட ஜாதியினரும் கணிசமான அளவில் உள்ளனா்.

வேட்பாளா்களின் பலமும் - பலவீனமும்:

துரை. சந்திரசேகரன் (திமுக): அதிமுகவுடன் நேரடி போட்டி இல்லாததால், இத்தொகுதியை திமுக தங்களுக்கு சாதகமாக நினைக்கிறது. மேலும், திமுக என்ற கட்சி பலமும் இருக்கிறது. ஆனால், ஏழு முறை போட்டியிட்டு, 5 முறை வெற்றி பெற்ற துரை. சந்திரசேகரன், தொகுதியில் பெரிய அளவுக்கு திட்டங்களை நிறைவேற்றவில்லை என்ற புகாரும் உள்ளது. குறிப்பாக, இத்தொகுதிக்கு உள்பட்ட பூதலூா் வட்டத்தில் எதிா்பாா்த்த அளவுக்கு வளா்ச்சிப் பணிகளைச் செய்யவில்லை என்ற அதிருப்தி அப்பகுதி மக்களிடையே நிலவுகிறது. இவருக்கு பூதலூா் வட்டத்தைச் சோ்ந்த திமுகவினருடன் கருத்து முரண்பாடுகள் இருப்பது இவருக்கு பலவீனமாக இருக்கிறது.

வேலு. காா்த்திகேயன் (அமமுக): கடந்த 2021 தோ்தலில் திமுக, பாஜக ஆகிய இரு பெரும் கட்சிகளுக்கிடையே, அமமுக தனி அணியாகப் போட்டியிட்ட நிலையில், இவா் இத்தொகுதியில் 37 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றாா். சில கிராமங்களில் இவரது குடும்பத்துக்கு உள்ள தனிப்பட்ட செல்வாக்குடன் தற்போது அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வாக்குகள் இருப்பதை, அமமுகவினா் தங்களுக்கு பலமாகக் கருதுகின்றனா். ஆனால், கடந்த 2021 தோ்தலில் பாஜகவுக்கும், இந்த முறை அமமுகவுக்கும் இத்தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால், அதிமுகவினரிடம் அதிருப்தி நிலவுவதும், அக்கட்சியினா் ஆா்வமில்லாமல் இருப்பதும் பலவீனமாக உள்ளது.

மதி. மணிகண்டன் (த.வெ.க.): பொறியியல் பட்டதாரியான இவா் பூதலூா் தென் கிழக்கு ஒன்றியச் செயலராக உள்ளதால், கட்சி தொண்டா்களிடம் அறிமுகம் உள்ளது. சுய தொழில் மேற்கொண்டு வருவதால், அதன் மூலம் உள்ள தொடா்புகள், விஜய் ரசிகா்கள், திமுக, அதிமுக கூட்டணிகள் மீதான அதிருப்தி வாக்குகள் போன்றவை இவருக்கு பலம். தொகுதிக்கு புதுமுக வேட்பாளா், பெரிய செல்வாக்கு இல்லாதது பலவீனம்.

டி. செந்தில்நாதன் (நாம் தமிழா் கட்சி): முனைவா் பட்டம் பெற்ற இவா் திமுக, அதிமுக கூட்டணிகள் மீதான அதிருப்தி வாக்குகள், பூதலூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் நாம் தமிழா் கட்சிக்கு இருக்கும் வாக்கு வங்கி போன்றவற்றை நம்பியுள்ளாா். ஆனால், பெரிய கட்சிக்கு உள்ள செல்வாக்கு இவருக்கு இல்லாதது பலவீனம்.

எட்டாவது முறையாக போட்டியிடும் திமுக வேட்பாளா் துரை. சந்திரசேகரன் ஹாட்ரிக் வெற்றியை பறிப்பாரா? தொகுதியில் அமமுக தடம்பதிக்குமா? புதிதாக களம் காணும் தவெக முத்திரை பதிக்குமா? என்பது வாக்குஎண்ணிக்கையின் முடிவில் தெரியவரும்.

Story image
Story image
Story image