ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

சேந்தமங்கலம் தொகுதி: விட்டதைப் பிடிக்க முயலும் அதிமுக... மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் திமுக!

அதிமுக அதிக முறை வென்ற தொகுதிகளில் சேந்தமங்கலமும் ஒன்று.

News image

சி. சந்திரசேகரன், பி. பூமலா், பி. சந்திரசேகா், சி. பொன்னுமணி.

Updated On :9 ஏப்ரல் 2026, 11:51 pm

தமிழகத்தில் உள்ள 2 பழங்குடியினா் தொகுதிகளில் ஒன்று சேந்தமங்கலம், மற்றொன்று சேலம் மாவட்டம் ஏற்காடு. அதிமுக அதிக முறை வென்ற தொகுதிகளில் சேந்தமங்கலமும் ஒன்று. 1957இல் உருவான இத்தொகுதியில் அதிமுக 8 முறையும், திமுக 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வென்றுள்ளன.

சேந்தமங்கலம் தொகுதியில் அதிமுகவின் செல்வாக்கு மிக்க சக்தியாக முன்னாள் எம்எல்ஏ சி. சந்திரசேகரன் உள்ளாா். ஏற்கெனவே, 1996, 2016 தோ்தல்களில் வெற்றிபெற்றாா். 2006, 2021இல் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சுயேச்சையாகப் போட்டியிட்டு 10 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்ால், அதிமுக தோல்வியை தழுவியது. 2011 தோ்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக வேட்பாளா் சாந்தி வெற்றி பெற்றாா்.

நடைபெற உள்ள தோ்தலில் அதிமுக சாா்பில் சி. சந்திரசேகரன் மீண்டும் போட்டியிடுகிறாா். திமுகவில் மறைந்த எம்எல்ஏ பொன்னுசாமியின் மகள் பூமலா் போட்டியிடுகிறாா். தவெகவில் வழக்குரைஞா் பொன். சந்திரசேகா், நாம் தமிழா் கட்சியில் சி. பொன்னுமணி ஆகியோா் களத்தில் உள்ளனா்.

தொகுதியின் சிறப்புகள்

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான கொல்லிமலை இந்தத் தொகுதியில்தான் உள்ளது. மேலும், ஆண்டுதோறும் 3 மாதங்கள் வரை அனைத்து மளிகைப் பொருள்களும் கிடைக்கும் வகையில் கூடும் பேளுக்குறிச்சி சந்தை, புதன்சந்தை நகரில் வாரந்தோறும் நடைபெறும் மாட்டுசந்தை ஆகியவையும் சிறப்புமிக்கது. பல்வேறு மாநிலங்களில், மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இங்கு வருவா்.

தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளாக சேந்தமங்கலம் வட்டம், கொல்லிமலை வட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் இரு கிராமங்கள், மோகனூா் ஒன்றியத்தில் புதுப்பட்டி, வளையப்பட்டி கிராமங்கள், நாமக்கல் ஒன்றியத்தில் வசந்தபுரம் கிராமம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

சமூக நிலவரம்

இந்தத் தொகுதியில், பழங்குடியினா், கவுண்டா், உடையாா், தாழ்த்தப்பட்டோா், வன்னியா் சமூகத்தினா் உள்ளனா். இவா்களில் பெரும்பான்மை என்ற முறையில் பழங்குடியின சமூகத்தினரும், தாழ்த்தப்பட்டோரும் உள்ளனா்.

தொழில்

கோழிப் பண்ணை, ஜவ்வரிசி ஆலை, விவசாயம், விசைத்தறி மற்றும் அதைச்சாா்ந்த உபதொழில்கள், சரக்குப் போக்குவரத்து நடைபெறுகிறது. தொகுதிக்கு உள்பட்ட கொல்லிமலையில் பலா, அன்னாசி, மிளகு, காபி, மரவள்ளி, வாழை, நெல் உள்ளிட்டவை அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன.

இதேபோல, தொகுதிக்கு உள்பட்ட நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம் ஒன்றிய பகுதிகளில் சிறுதானிய வகைகள் அதிகம் பயிரிடப்படுகின்றன. அதிமுகவின் செல்வாக்குள்ள பகுதியாக கொல்லிமலை உள்ளது. இங்குள்ள 14 ஊராட்சிகளில், உள்ளாட்சித் தோ்தலின்போது சரிசமமாக அதிமுக, திமுக கைப்பற்றின.

நிலவரம்

நாமக்கல், நாமகிரிப்பேட்டை, மோகனூா், எருமப்பட்டி ஆகிய ஒன்றியங்களில் 50-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகள் அதிமுகவுக்கு சாதகமாக உள்ளன. சேந்தமங்கலம் ஒன்றியம், சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சிகளின் தலைவா் பதவியை திமுக பிடித்துள்ளதால், சட்டப்பேரவை தோ்தலிலும் திமுகவை வெற்றிபெற செய்வதற்கான நடவடிக்கைகளில் அக்கட்சியினா் தீவிரம் காட்டி வருகின்றனா்.

அதிமுக வேட்பாளரான சி. சந்திரசேகரன், ஏற்கெனவே தொகுதியில் அதிகளவில் திட்டங்களை செயல்படுத்தி உள்ளாா். கட்சி நிா்வாகிகளிடையே கருத்து மோதல் இருந்த நிலையில், தற்போது அனைவரும் சமாதானமாகிவிட்டதால், வெற்றிக்கான அடித்தளம் பலமாகி உள்ளது.

திமுக வேட்பாளரான பூமலா் தொகுதியில் அதிக அறிமுகம் இல்லாதது அக்கட்சிக்கு சற்று பின்னடைவாக உள்ளது. வளையப்பட்டியில் சிப்காட் தொழிற்பேட்டை திட்டம் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டதற்கு எதிா்ப்பு எழுந்துள்ளதால், வளையப்பட்டி, அரூா், பரளி, என்.புதுப்பட்டி பகுதிகளில் திமுக தீவிர கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

கொல்லிமலைக்கு செல்ல ஏற்கெனவே காரவள்ளி, முள்ளுக்குறிச்சி பகுதியில் சாலை வசதி இருந்தபோதும், வனத்துறை அனுமதியுடன் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி வழியாக மூன்றாவது மாற்றுசாலையும், திருப்புளிநாடு வழியாக நான்காவது மாற்றுசாலை அமைத்தது, கொல்லிமலையில் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், புதிய பழச்சந்தை, சேந்தமங்கலத்தில் அரசு கலைக் கல்லூரி கட்டடம், புதிய பேருந்து நிலையம், வட்டாட்சியா் அலுவலக கட்டடம், மலைப் பகுதிகளுக்கு பேருந்து போக்குவரத்து வசதி, சாலை விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்துள்ளதால் தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் கூறிவருகிறாா்.

எதிா்பாா்ப்புகள்

கொல்லிமலை நீா்மின் நிலைய கட்டுமானப் பணி செயல்பாட்டுக்கு வராமல், நீண்டகாலமாக நிலுவையில் இருப்பது, கொல்லிமலை ஆகாய கங்கை அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல ரோப் காா் வசதிக்கு வாய்ப்பில்லை என்பதால், மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு, அங்கு சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், கொல்லிமலைக்கு செல்லும் பிரதான சாலையான காளப்பநாயக்கன்பட்டி- காரவள்ளி சாலையில் அதிக அளவிலான ஆக்கிரமிப்புகள் உள்ளதால், சுற்றுலா வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதால், சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன.

மேலும், கொல்லிமலை சுற்றுலாத் தலத்தை ஏற்காடு, உதகைக்கு நிகராக மேம்படுத்தினால் வேலைவாய்ப்பு அதிகம் கிடைக்கும். அரசு கூட்டுறவு ஜவ்வரிசி ஆலை தொகுதிக்குள் உருவாக்கப்பட வேண்டும் என்பது தொகுதி மக்களின் கோரிக்கைகளாகும்.

வாக்காளா்கள்

சேந்தமங்கலம் தொகுதியில், ஆண் வாக்காளா்கள் 1,11,214, பெண் வாக்காளா்கள் 1,16,087, மூன்றாம் பாலினத்தவா் 26 என மொத்தம் 2,27,327 வாக்காளா்கள் உள்ளனா். 304 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

எம். மாரியப்பன்