பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 184

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 184

நரசிம்மராவின் ஆட்சேபமும் காங்கிரஸ் கூட்டத்தின் தீர்மானங்களும்

நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை ராஜேஷ் பைலட் சுருக்கமாகத் தெரிவித்தார்.

'எந்த ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு முன்பும் அதை உறுப்பினர்களின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும். இந்தத் தீர்மானத்தில் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என்பது நரசிம்மராவின் ஆட்சேபம். 24 பேரிடம் காட்டி அவர்களது கையொப்பமும் பெறப்பட்டிருக்கிறது என்று சொன்னபோது தீர்மானத்தைப் பரிசீலிப்பதாகச் சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார்.'

'நீங்கள் என்ன செய்தீர்கள்?'

'தீர்மானம் நிறைவேறியதாகக் குரல் வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்தோம். அந்தத் தீர்மானத்தைக் கட்சித் தலைவர் சீதாராம் கேசரியிடம் கொடுக்கச் சென்று கொண்டிருக்கிறார்கள். மாலையில் காரிய கமிட்டியின் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் இந்தத் தீர்மானத்தின் மீது முடிவெடுக்கும் அதிகாரத்தை, தலைவர் சீதாராம் கேசரிக்குக் கொடுக்க இருக்கிறோம்.'

'அவர் என்ன செய்வார் என்று நினைக்கிறீர்கள்?'

'மாலையில் அக்பர் ரோடு அலுவலகத்துக்கு வாருங்கள் தெரியும்..' என்று சொன்னார்.

அக்பர் ரோடு அலுவலகத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூடியது. தனது உடல்நிலை காரணமாக அதில் கலந்துகொள்ள முடியவில்லை என்று நரசிம்மராவ் தகவல் அனுப்பியிருந்தார்.

கூட்டத்தில், நரசிம்மராவிடம் பதவி விலகல்கோரும் அதிகாரத்தை தலைவர் சீதாராம் கேசரிக்கு அளிக்க முடிவெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சீதாராம் கேசரியின் கடிதத்தை எடுத்துகொண்டு பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆஸ்கர் பெர்னாண்டஸ் நரசிம்மராவை நேரில் சந்தித்துக் கொடுக்க கிளம்பினார்.

அலுவலகத்தில் இருந்து கிளம்பும்போது, போகிற வழியில், முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் 3, சௌத் அவென்யூவுக்குப் போய் சிறிது நேரம் அரசியல் நிலவரம் குறித்து அங்கிருப்பவர்களிடம் உரையாடலாம் என்று நினைத்தேன். சந்திரசேகர்ஜி போன்ஸி பண்ணை வீட்டில் இருந்ததால், அங்கே யாரும் இருக்கவில்லை.

அங்கிருந்து வெளியே வரும்போது, 2-ஆம் இலக்க வீட்டுக்கு முன்னால் வந்து நின்ற காரிலிருந்து சுமித்ரா மகாஜன் இறங்கிக் கொண்டிருந்தார். சந்திரசேகர் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் அப்போது அவர் இருந்தார்.

பின்னாளில் அடல் பிகாரி வாஜ்பாய் அமைச்சரவையில் இணை அமைச்சராகவும், 16-வது மக்களவையில் அவைத் தலைவராகவும் உயர்ந்த சுமித்ரா மகாஜன் எளிமையானவர் மட்டுமல்ல, அனைவரிடமும் 'பந்தா' எதுவும் இல்லாமல் பழகக் கூடியவரும்கூட. அவரை நான் பலமுறை பாஜக தலைமை அலுவலகத்தில் பார்த்திருக்கிறேனே தவிர, எனக்கு அவருடன் நேரடிப் பழக்கம் கிடையாது.

அவரைப் பார்த்ததும் மரியாதைக்காக நான் வணக்கம் தெரிவித்தேன். பதில் வணக்கம் தெரிவித்த அவர், 'உங்களுக்கு என்ன வேண்டும்' என்று ஹிந்தியில் கேட்டார்.

'நான் ஒரு பத்திரிகையாளர். செய்தி நிறுவனம் நடத்துகிறேன். சந்திரசேகர்ஜியைப் பார்க்க வந்தேன். அவர் இல்லை. அதனால் திரும்பிச் செல்கிறேன்' என்று ஆங்கிலத்தில் சொன்னேன்.

'ஏன் இப்படி வெளியில் நின்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள்! உள்ளே வாருங்கள். சாயா குடித்துவிட்டுப் போகலாம்....'

அப்படித்தான் அவருடனான அந்த முதல் சந்திப்பு நடந்தது. உள்ளே போனேன். சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தோம். காங்கிரஸில் என்னதான் நடக்கிறது என்று கேட்டுத் தெரிந்து கொண்டார். அவரது ஆர்வம் தில்லி அரசியலைவிட தமிழ்நாட்டு அரசியலில்தான் இருந்தது.

'ஜெயலலிதாஜி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறாரே... என்னவாகும்?' என்பதில் தொடங்கி சுமார் அரை மணி நேரம் அதுகுறித்துப் பேசிக்கொண்டிருந்தார். விடை பெறுவதற்கு முன்னர் அவர் சொன்ன வார்த்தைகள் இவை- 'சீதாராம் கேசரி விரைவில் இந்த ஆட்சியைக் கவிழ்த்து விடுவார். அதற்குப் பிறகு தேர்தல் வருவதைத் தவிர்க்க முடியாது. அந்தத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் பாரதிய ஜனதா கூட்டணி அமையும். ஆட்சியும் அமையும்.'

'எப்படி இவ்வளவு தீர்மானமாகச் சொல்கிறீர்கள்.'

'நான் நகர்மன்ற உறுப்பினராக இருந்து அரசியலில் படிப்படியாக உயர்ந்து இப்போது மக்களவை உறுப்பினராக இருப்பவள். ஜெயலலிதா மீது வழக்குத் தொடுத்து சிறையில் அடைத்திருப்பது அவர் மீது அனுதாபத்தை ஏற்படுத்தி செல்வாக்கையும் அதிகரிக்கும்.'

விடைபெற்றபோது அவர் சொன்னார்- 'சந்திரசேகர்ஜியை பார்க்க வரும்போது நான் வீட்டில் இருந்தால், பத்து நிமிடம் என்னிடமும் பேசிவிட்டுப் போங்கள். உங்கள் தமிழ்நாட்டு அரசியல் குறித்து நானும் கொஞ்சம் தெரிந்து கொள்வேன்...'

அப்போது அவர் அமைச்சராவார், மக்களவைத் தலைவராவார் என்றெல்லாம் நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. 1989 முதல் 2019 வரையில் தொடர்ந்து 30 ஆண்டுகள், 8 மக்களவைத் தேர்தல்களில் மத்தியப் பிரதேசத்தின் இந்தோர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, மிக அதிக காலம் தொடர்ந்து வெற்றி பெற்ற ஒரே பெண் உறுப்பினர் சுமித்ரா மகாஜன் என்று வரலாறு பதிவு செய்கிறது.

வாசல் வரை வந்து வழியனுப்பும்போது, சுமித்ரா மகாஜன் சிரித்துக்கொண்டே சொன்ன வார்த்தைகள் இவை:

'நாளைப் பொழுது உங்களைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கு பரபரப்பான பொழுதாக விடியப் போகிறது. உ.பி.யில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தி இருப்பது தொடர்பான தீர்ப்பை அலாகாபாத் உயர்நீதிமன்றம் வழங்க இருக்கிறது. நரசிம்மராவ் பதவி விலகல் குறித்து நாளை தெரியும். என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்ப்போம்...'

சுமித்ரா மகாஜன் சொன்னதுபோலவே உத்தரப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிப் பிரகடனம் செய்தது செல்லாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சட்ட ரீதியாக சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள ஆளுநர் தவறிவிட்டார் என்றும், குறைந்தபட்சம் பேரவையிலாவது அரசியல் கட்சிகளின் பலம் சோதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.

கான்ஷிராம் முன்பு தெரிவித்த அவரது தீர்மானமான கருத்து எனது காதில் எதிரொலித்தது. 'எப்போது மாயாவதியை அவர்கள் முதல்வராக ஏற்றுக் கொள்கிறார்களோ, அப்போது உ.பி.யில் ஆட்சி அமையும். இல்லாவிட்டால் மீண்டும் தேர்தல் அமையும்' என்று அவர் சொன்னதைத் தீர்ப்பு உறுதிப்படுத்துவதுபோல இருந்தது.

காங்கிரஸ் முன்மொழிந்ததுபோல, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் - காங்கிரஸ் கூட்டணிக்கு, ஐக்கிய முன்னணி கட்சிகள், குறிப்பாக வி.பி.சிங்கின் ஜனதா தளமும், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்திருந்தால் இந்தப் பிரச்னையே எழுந்திருக்காது.

எதற்கும் அக்பர் ரோடு காங்கிரஸ் தலைமையகத்துக்கு போவோம், அங்கே சென்றால் எல்லா விவரங்களும் கிடைக்கும் என்று நினைத்துக் கிளம்பினேன். எனது எதிர்பார்ப்புப் பொய்க்கவில்லை.

நரசிம்மராவ் 'எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனைக்குச் சென்றிருக்கிறார்; மருத்துவமனையில் அனுமதியாகி, நாடாளுமன்றக் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதை அவர் தவிர்க்க நினைக்கிறார்' என்று சில பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

'நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், நரசிம்மராவ் பதவி விலகுவது சரியாக இருக்காது' என்று சிலர் சொன்னார்கள்.

பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கான அறையில் பேசிக் கொண்டிருக்கும்போது, நரசிம்மராவ் தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி இருக்கிறார் என்கிற தகவல் வந்தது. தனது ராஜினாமா தொடர்பாக நரசிம்மராவ் இரண்டு கடிதங்களை அனுப்பி இருந்தார் என்று சொல்லப்பட்டது.

ஒரு கடிதத்தில், தனது பதவி விலகலை மட்டுமே குறிப்பிட்டிருந்தார்; இன்னொரு கடிதத்தில், தான் பதவி விலகுவதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு சில கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தார் என்று கட்சித் தலைவர் சீதாராம் கேசரிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் செயலாளர்களில் ஒருவரான பிரித்விராஜ் சவாண் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகச் சொன்னார்கள்.

இந்திய அரசியல் சந்தித்த குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப வல்லுநர் பிரித்விராஜ் சவாண். 'பிட்ஸ்' பிலானியிலும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பொறியியல் படித்த சவாண், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்பான பொறியியலில் நிபுணர். ராஜீவ் காந்தியால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர்களில் அவரும் ஒருவர்.

தனது தாய் பிரமிளா சவாணின் 'கரத்' தொகுதியில் 1991-இல் போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரித்விராஜ் சவாண், பின்னாளில் மன்மோகன் சிங் அமைச்சரவையில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். மகாராஷ்டிர மாநில முதல்வராகவும் இருந்தவர். அரசியலில் நேர்மைக்கும், நிர்வாகத் திறமைக்கும் அப்பழுக்கில்லாத அரசியல் வாழ்க்கைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குபவர்.

'நரசிம்மராவின் பதவி விலகல் கோரிக்கை குறித்து பரிசீலிக்க நாடாளுமன்ற காங்கிரஸின் நிர்வாகிகள் கூட்டம் கூட்டப்பட இருக்கிறது. அதில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்' என்கிற அதிகாரப்பூர்வ அறிக்கையுடன் தனது செய்தியாளர்கள் சந்திப்பை சுருக்கமாக முடித்துக் கொண்டார் சவாண்.

சந்திப்பு முடிந்த பிறகு, பிரித்விராஜ் சவாணை அவரது அறையில் சென்று பார்த்தேன். சற்று நேரம் நாங்கள் எதுவும் பேசவில்லை.

'நரசிம்மராவின் பதவி விலகல் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?'

'எதுவும் நினைக்கவில்லை. இதைத் தவிர அவருக்கு வேறு வழியேதும் இல்லை. அவர் தானாகவே முன்வந்து ராஜிநாமா செய்திருக்க வேண்டும்.'

'அடுத்தாற்போல நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவராவதற்கு யாருக்கு வாய்ப்பிருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள்?'

'நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. தலைவர் சீதாராம் கேசரியே நாடாளுமன்றக் கட்சித் தலைவராகவும் இருக்க விரும்பக்கூடும், யார் கண்டது'

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே தொலைபேசி ஒலித்தது. எடுத்துப் பேசினார். அவர் முகம் மாறியது. அதில் கடுகடுப்புத் தெரிந்தது.

'என்ன செய்தி?' என்று அவரிடம் எப்படிக் கேட்பது. அந்த அளவுக்கு ராஜேஷ் பைலட், அஜீத் சிங், மாதவராவ் சிந்தியா போல அவரிடம் எனக்கு நெருக்கம் கிடையாது. ஆனால் அவரே பேசத் தொடங்கினார்-

'காங்கிரஸ் கட்சியில் யார் தலைவர் என்கிற மரியாதையே இல்லாமல் போய்விட்டது. இன்னார் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்கிற வரைமுறைகூட இல்லை...'

'என்ன அறிவிப்பு?'

'நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்தல் திங்கள்கிழமை நடைபெறும் என்று சரத் பவார் அறிவித்திருக்கிறார். கட்சித் தலைவர் சீதாராம் கேசரியின் அனுமதியுடன்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டாரா, இல்லை நாடாளுமன்றக் கட்சியின் துணைத் தலைவர் என்கிற முறையில் வெளியிட்டாரா தெரியவில்லை...'

நான் எதுவும் பேசாமல் மௌனமாக அமர்ந்திருந்தேன். அவருக்கு தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. தொந்தரவாக இருக்கக்கூடாது என்று கருதி, நான் கிளம்பத் தயாரானேன். என்னை நிமிர்ந்து பார்த்தபடி, ப்ரித்விராஜ் சவாண் கேட்டார் - 'விசாரியுங்கள். மாநிலங்களவை காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா பதவியை பிரணாப் முகர்ஜி ராஜினாமா செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். அவர் ஏன் ராஜிநாமா செய்ய வேண்டும்?'

சவாணிடமிருந்து விடைபெற்று, பிரணாப் முகர்ஜியை சந்திக்க கிரேட்டர் கைலாஷ் நோக்கி விரைந்தேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com