'ஸ்பைடர்மன்' பார்த்திருப்பீர்கள், 'அயர்ன்மன்' பார்த்திருப்பீர்கள். 'அணில் மனிதன்' பார்த்திருக்கிறீர்களா? யாரும் பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் நான் பார்த்திருக்கிறேன். 'எங்கே பார்த்தாய்?' என்று கேட்பீர்கள். எங்கள் வீட்டு வேப்ப மரத்தில்தான் பார்த்தேன். 'அது எப்படி?' என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். அது அப்படித்தான். அது எப்படி என்று இப்போது சொல்கிறேன். அது ஓர் அற்புதமான அனுபவம்.
எங்கள் வீட்டில் ஒரு பெரிய வேப்ப மரம் இருந்தது. முப்பது ஆண்டாக வளர்ந்த மரம் அது. அதன் அடிப்பகுதி ரொம்ப பருமன். ஒரு பெரிய ஆள் ஆவி சேர்த்துக் கட்டிப் பிடித்தால் கூட கைக்குள் அடங்காது. அவ்வளவு தடிமன். அதன் கிளைகள் ஆகாயத்தை மறைக்கும் பெரிய குடை போல பரந்து விரிந்து இருக்கும். அதில், கூடுகட்டி, காகம் குஞ்சு பொரிக்கும். அணில்கள் ஆணும் பெண்ணுமாய் அங்கும் இங்கும் தாவி ஓடி விளையாடும். சில நேரங்களில் குயில் இருந்து 'அக்கோ அக்கோ' என்று கூவும். இரவு நேரத்தில் எங்கிருந்தோ வந்து தங்கும் பெரிய வெளவால்கள் வாதாங்கொட்டையை உமிழ்ந்து செல்லும்.
கத்திரி வெயில் காலத்தில்கூட எங்கள் வீட்டில் குளிர்ச்சியாக நிழல் இருக்கும். இதனால் அந்த மரத்தின் மீது எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும் அலாதியான பிரியம். குறிப்பாக, என் பேத்திக்கு அது ரொம்ப பிடிக்கும். சென்னையிலிருந்து வரும்போதெல்லாம் அதில் ஊஞ்சல் போட்டு ஆடுவதிலும் அதன் நிழலில் உட்கார்ந்து சோறு பொங்கி விளையாடுவதிலும் அவள் அலாதியான மகிழ்ச்சி அடைவாள். அப்படிப்பட்ட முதிர்ந்த மரத்தை விற்க வேண்டும்
என முடிவெடுத்தோம்.
அந்த மரத்தை விற்க வேண்டிய அவசியம் ஒண்ணும் எங்களுக்கு இல்லை. ஆனால் அடுத்த இடத்துக்காரன் அந்த மரம் இருப்பது அவனுக்கு இடைஞ்சலாக இருப்பதாக எங்களுக்கு நெருக்கடி கொடுத்தான். எங்கள் வீட்டுக் கோட்டைச் சுவர் ஓரத்தில் மரம் இருந்ததால் எங்கள் வீட்டையும் தாண்டி அவன் இடத்துக்கு மேலும் கிளைகள் பரந்து விரிந்திருந்தன. அதனால் அந்தப் பகுதியில் எப்பொழுதும் நிழல் இருக்கும். இவ்வளவு நாளும்அந்த இடம் வேலி இல்லாத வெட்டவெளியாய்தான் கிடந்தது.
இப்போது வேலி போட்டு அதில் முருங்கை நட்டிருந்தான். அதனால் நிழல் பரப்பும் எங்கள் மரம் அவனுக்கு இப்போது இடைஞ்சலாகிவிட்டது. என்னைப் பார்க்கும் போதெல்லாம், 'அந்த மரத்தை வெட்டி விடுங்கள்'' என்று சொல்லிக் கொண்டே இருப்பான். ''நம்ம வீட்டில் நிற்கும் மரத்தை அவன் சொல்லி வெட்டுவதா?'' என்று சில நேரம் எனக்குத் தன்மானம் பொங்கி, சண்டை போடத் தோன்றும். ஆனாலும், 'அடுத்த இடத்துக்காரனிடம் பகை வளர்க்க வேண்டாம்' என்று நினைத்து, அதை அடக்கிக் கொள்வேன். இருப்பினும் அவனுடைய தொடர் தொந்தரவு தாங்க முடியாமல் மரத்தை விற்பதென முடிவெடுத்தோம்.
இதனைத் தெரிந்து கொண்ட மர வியாபாரிகள் சிலர் வந்து மரத்தைப் பார்த்தனர். அவர்கள் ரொம்ப குறைந்த விலைக்கே அதை மதித்தனர். இரண்டு, மூன்று பெரிய தடிகள் விழும். விறகும் கணிசமாகச் சேரும். ஆனாலும் குறைந்த விலைக்கே அவர்கள் கேட்டனர்.
''இவ்வளவு பெரிய மரம் இந்த அளவுக்குத்தான் விலை போகுமா? விறகுக்கு வெட்டி விற்றாலும் ஒரு பெரும்தொகை கிடைக்குமே'' என்று நான் கேட்டதற்கு, ''மரம் பெரிசுதான். ஆனால் ரொம்ப இடைஞ்சலான இடத்தில் இருக்கு. அதை வெட்டி எடுப்பது ரொம்ப சிரமம். வெட்டி எடுத்துத் தடியை வெளியே கொண்டு போறதும் கஷ்டம். விறகை அள்ளி வெளியேற்றுவதும் கஷ்டம். அதற்குக் கூலி நிறைய ஆகும்'' என்று சொல்லி, நான் கேட்ட தொகையைத் தர அவர்களுக்கு இஷ்டம் இல்லை. ''கட்டுப்படியாகாது'' என்று மறுத்து, போய் விட்டனர்.
உண்மையில் அந்த மரம் இடைஞ்சலான இடத்தில்தான் இருந்தது. வெட்டும்போது கோட்டைச் சுவரில் கிளைகள் விழுந்தால் கோட்டைச் சுவர் உடைந்துதான் போகும். அப்படி உடைந்தால் அதைச் சரிப்படுத்த பெரும்தொகை செலவாகும். பெரிய கிளையொன்று எங்கள் வீட்டு மாடிச் சுவரை உராய்ந்துகொண்டிருந்தது. அது மட்டுமில்லை. குலை தள்ளும் பருவத்தில் நான்கு வாழைகள் எங்கள் வீட்டு வெளிப்பரப்பில் வளர்ந்திருந்தன. போதாக்குறைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வைத்த இரண்டு தென்னங்கன்றுகள் இப்போதுதான் செழிப்புடன் குருத்துவிடத் தொடங்கியிருந்தன. வேப்பமரத்தை வெட்டும்போது அவற்றின்மீது கொப்புகள் விழும் அபாயமும் இருந்தது. அப்படி விழுந்தால் அவை பட்டுவிடும். அதனால் அவற்றின் மீது விழாமல் பக்குவமாக வெட்டி இறக்க வேண்டும். இதோடு கூட, வியாபாரிகள் சொன்னது போல தடியை வெளியே கொண்டு செல்வதும் சிரமம்தான். வீட்டு முன்வாசல் இரும்பு 'கேட்டும்' சின்னது. அதாவது பரவாயில்லை. கொஞ்சம் 'அட்ஜெஸ்ட்' பண்ணி வெளியே கொண்டு போய்விடலாம். ஆனால் தடியை உருட்டிக் கொண்டு போகும்போது, வீட்டைச் சுற்றியும் முன்பகுதியிலும் போட்டிருக்கும் சிமென்ட் தளம் நொறுங்கிவிடும். அந்த வேப்பமரத்தை வெட்டி வெளியில் எடுப்பதில் இவ்வளவு சிரமம் இருந்தது. இதனால்தான் வருகின்ற வியாபாரிகள் எல்லோரும் குறைத்து மதிப்பிட்டார்கள். அதிக ஆர்வம் காட்டாமல் பின்வாங்கிக் கொண்டிருந்தனர்.
'ஒருகாலத்தில் வேம்பு, பனைமரம் நல்ல விலைக்குப் போனது. அவற்றை வாங்கி வெட்டுவதற்கு வியாபாரிகள் விரும்பி வருவார்கள். இப்போது இப்படி மதிப்பில்லாமல் போய்விட்டதே. காலம்தான் எப்படி மாறிவிட்டது. என்ன செய்வது? நாம் எதிர்பார்க்கும் விலைக்கு மரம் போகாது போல' என்று எனக்குள் கவலை எழத் தொடங்கியது.
ஒருநாள் அணில் மனிதன் வந்தான். அவன் மட்டும் வரவில்லை. அவன் அப்பாவும் கூட வந்திருந்தார். நாங்கள் மரம் விற்கப் போவதை எப்படியோ கேள்விப்பட்டிருக்கிறார்கள். அப்போது அவனை 'அணில் மனிதன்' என்று நான் நினைக்கவில்லை. சாதாரண மனிதனாகத்தான் நினைத்தேன். பிறகு மரம் வெட்டும்போதுதான் அவன் 'அணில் மனிதன்' என்பதைப் புரிந்து கொண்டேன். தகப்பனும் மகனும் கயிறொன்று எடுத்து மரத்தைச் சுற்றி அளந்து பார்த்தனர்.
உயரத்தைக் கவனித்தனர்.
நான் சொன்ன வாழை, தென்னை, கோட்டைச் சுவர், மாடிப்படிச்சுவர், குளியலறைத் தளம் போன்றவற்றையும் அவர்கள் உன்னிப்பாகக் கேட்டனர். எல்லாவற்றையும் கணக்கில் எடுத்து, ஆராய்ந்து தெளிந்த பின்பு,சுருட்டைப் பற்றவைத்துக் கொண்டே அணில் மனிதனுடைய அப்பா, ''என்ன விலைக்குக் கொடுப்பீங்க?'' என்று என்னிடம் கேட்டார்.
''நீங்கள் சொல்லுங்கள்'' என்று நானும் அவர்களின் பொறுப்புக்கு விட்டேன். தகப்பனும் மகனும் காதோடு காதாகப் பேசி, ஒருவிலையைச் சொன்னார்கள். அது மற்ற வியாபாரிகள் சொன்ன விலையைவிடக் கூடுதலாக இருந்தது. நானும் கூடக் கொஞ்சம் கூட்டித் தருமாறு கேட்டேன். அதற்கு அவர்கள் மற்ற வியாபாரிகள் சொன்ன 'மைனஸ்' எல்லாவற்றையும் சொல்லி, இதுதான் சரியான விலை' என்றார்கள்.
''சம்பளத்துக்கு ஆள் வைத்து வெட்டினால் கூலிக்குக் கூட கட்டாது. நாங்கள் தகப்பனும் மகனுமாய்ச் சொந்தமாக வெட்டினால்தான் எங்களுக்கு அந்தக் கூலியாவது மிஞ்சும். உழைக்கிற உழைப்புக்கு எங்களுக்கும் கொஞ்சம் லாபம் கிடைக்க வேண்டாமா?'' என்று உண்மை நிலைமையைச் சொன்னார்.
''இதற்கு மேல் யாராவது கூடுதல் விலைக்குக் கேட்டால் கொடுத்துவிடுங்கள்''என்று சொல்லி நழுவவும் பார்த்தார்கள். அவர்களின் வெளிப்படையான பேச்சு எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. 'இதைவிடக் கூடுதல் தொகையை எதிர்பார்த்து காலம் கடத்துவது சரியில்லை. இவர்களை விட்டுவிடக் கூடாது' என்று நினைத்து அவர்கள் தந்த முன்பணத்தை வாங்கிக் கொண்டேன்.
முன்பணம் தந்த ஒருவாரம் கழித்து, ஒருநாள் வெட்டரிவாள், நீளமான தடித்த பிளாஸ்டிக் கயிறு (முன்பெல்லாம் பாரக்கயிறு என்பது தென்னந்தும்பால் திரித்த கொச்சக் கயிறாக இருக்கும். ஆனால் இப்போது அப்படியில்லை. பிளாஸ்டிக் கயிறு வந்துவிட்டது), மரம் அறுக்கும் கை மிஷின், மண்வெட்டி.. என்று சகல ஆயுதங்களோடு மரத்தை வெட்டுவதற்குத் தயாராக வந்துவிட்டார்கள்.
நான் சொன்ன அணில் மனிதன் மரத்தின் மீது ஏறினான். அவனுடைய அப்பா கீழே இருந்து கொண்டு அவனுக்கு அப்படி,இப்படியென்று ஏவி, அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். அவனுக்கு ஏற்கெனவே இவையெல்லாம் அத்துபடி போலும். அதனால் ரொம்ப லாவகமாகக் கிளைகள் மீது ஏறிக் கொண்டிருந்தான். ஏறிக் கொண்டிருந்தான் என்பதை விடத் தாவிக் கொண்டிருந்தான் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி ஒரு கொப்பின் நுனிக்குப் போய் கொப்போடு ஒட்டி படுத்துக் கொண்டான்.
அவன் அப்படி கொப்போடு கொப்பாக ஒட்டிப் படுத்திருப்பதைப் பார்த்த எனக்கு அணில்தான் நினைவுக்கு வந்தது. சில நேரம் அணில் அப்படித்தான் மரக்கிளையில் ஒட்டிக்கிடக்கும். அதைப் பலதடவை நான் பார்த்திருக்கிறேன். இப்படித்தான் அவன் எனக்கு அணில் மனிதனானான். இடது கையால் மரக்கிளையைச் சுற்றிப் பிடித்துக் கொண்டு, வலது கையிலிருந்த வெட்டரிவாளால் கொப்பின் நுனியில் இருந்த சிறு கம்புகளை அரக்கிக் கொண்டிருந்தான். அந்த அரிவாள் ரொம்ப கூர்மையாக இருந்தது. அவன் சொன்ன சீருக்கு வெட்டு வீழ்ந்தது.
அது ஒரு பெரிய கொப்பு. அதன் கனத்த நுனி கீழே விழும்போது அவன் படுத்திருக்கும் அடிமரம் அவனை ஒரு தூக்கு தூக்கி விடும் என்பது எனக்குத் தெரியும்.. அதனால், அவன் நிலை தடுமாறி, பிடி தவறிக் கீழே விழுந்துவிடக் கூடாது என்று எனக்குள் ஒரு பயம். ஆனால் அவன் கொஞ்சம் கூடப் பயந்ததாகத் தெரியவில்லை. காற்றில் ஆடும் கிளையில் அணில் கிடப்பது போல கிடந்து, தைரியமாக வெட்டிக்கொண்டிருந்தான்.
''இதுவே வீதியில் இருந்தால் 'மடமடனு' வெட்டிச் சாய்த்திருப்போம். ரொம்ப இடைஞ்சலான இடத்தில் இருக்கு பாருங்க. அதனால் கவனமாத்தான் வெட்ட வேண்டியிருக்கு. இப்பவும் இந்தக் கொப்பு தென்னங்கண்ணு மேல விழாமல் இருக்கணும் பாருங்க. அதனாலதான் இவ்வளவு கவனமா வெட்டிக்கிட்டு இருக்கான். இப்பல்லாம் யாரு சார் இப்படி மரத்தில் ஏறி வெட்டுறாங்க. ஜே.சி.பி. யை வச்சி தோண்டிப்போட்டுட்டு, கீழே நின்னே அறுத்துபுடுறாங்க?'' என்றுஅவனுடைய அப்பா என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போது கொப்பு சரிந்து மடாரென கீழே விழுந்தது. தென்னங்கன்று மீது விழாமல் கொஞ்சம் தள்ளி விழுந்தது. நல்ல வேளை என்று நான் நினைத்துக் கொண்டேன்.
அடுத்ததாக ரொம்ப தடிமனான ஒரு கொப்பு. அது கீழே விழும்போது எப்படியும் தென்னை,வாழை மீதுதான் விழும். நாம் கஷ்டப்பட்டு வளர்த்த தென்னை இப்போது நசுங்கப் போகிறது. அப்படிப்பட்ட பெரிய கொப்பு. 'இதை எப்படி வெட்டப் போகிறான்' என்று எனக்குள் ஒரே படபடப்பு. ஆனால் அவன் ரொம்ப கவனமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தான். முதலில் சிறு சிறு கொப்புகளை அரிவாளால் அரக்கி அதன் பளுவைக் குறைத்தான். பின் அப்பாவிடம் கயிற்றை மேலே போடச் சொன்னான். அவரும் அதை மேலே வீசினார். இரண்டு மூன்று முறை வீசியபின்தான் அவனால் அதைப் பிடிக்க முடிந்தது. அந்தக் கயிற்றை மேல் கிளையில் இருந்த ஒரு கவுட்டை வழியாகச் செலுத்தி, அதன் முனையைப் பிடித்திழுத்து, அரக்கிய கொப்பின் நுனியில் கட்டினான். கயிற்றின் மறுமுனையைக் கீழே போட்டான். அவன் அப்பா அதைப் பிடித்து, மரத்தின் தூரைச் சுற்றிக் கட்டினார். அவன் கொஞ்சம் கீழே இறங்கி இருந்து கொண்டு, மிஷினை வாங்கி அறுக்கத்
தொடங்கினான்.
மிஷினால் அறுப்பது எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. 'உய்ங்' என்று அது எழுப்பிய இரைச்சலும் ஒரு நொடியில் அறுத்துவிடும் வேகமும் வெளியேறும் மரத்தூள்களும் எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் எனக்குள் ஒரு பயம். அந்தக் கொப்பு விழும்போது கோட்டைச்சுவர் மீதுதான் விழும். என் பயத்தை அவன் அப்பாவிடம் சொன்னேன்.
''அதெல்லாம் விழாது சார். அதுக்குத்தான கயிறை மேலே கவுட்டையில தொங்கப் போட்டிருக்கோம். நீங்க பார்த்துகிட்டே இருங்க?'' என்று எனக்கு ஆறுதல் சொன்னார். அவர் சொன்னது போல அந்தக் கொப்பு மெல்ல மெல்ல சாய்ந்து, கோட்டைச்சுவருக்கு மூன்றடிக்குமேலே அந்தரத்தில் தொங்கி, ஊசலாடிக் கொண்டிருந்தது. மரத்தில் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்த அப்பா அதைக் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி, அந்தப் பெருந்தடியைப் பூமியில் கிடத்தினார்.
இன்னொரு கொப்பு. அது வானத்தைப் பார்த்து நேராக வளர்ந்திருந்தது. அணில் போல் அதன் உச்சியில் ஏறி, கயிற்றின் ஒரு முனையைக் கட்டினான். மறுமுனையைக் கீழே போட்டு அப்பாவைப் பிடித்துக்கொள்ளச் சொன்னான். பின் கீழ்ப்பகுதியை வெட்டினான். கொஞ்சம் வெட்டிய பிறகு அப்பாவிடம் கயிற்றை இழுக்குமாறு சொன்னான். அவரும் இழுத்துப் பார்த்தார். ஆனால் கொப்பு ஒடிய மறுத்தது. அதனால் திரும்பவும் மேலே ஏறி, இரண்டு வெட்டு வெட்டினான். பின் உயரத்தில் இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு ஒருகாலால் அந்தக் கம்பை மிதித்துக் கீழே தள்ளினான். அவன் அப்பாவும் ஒரு பக்கமாய்த் தள்ளி நின்று கொண்டு கயிற்றை உன்னி உன்னி இழுத்தார். தென்னை,வாழை மீது விழாமல் அந்தப் பெரிய கொப்பு கொஞ்சம் தள்ளி தரையில் பொத்தென்று வீழ்ந்தது. நான் பரவசமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
இடைஞ்சலான இடத்தில் நின்ற அந்த மரத்தை, எந்தவிதமான சேதாரமும் இல்லாமல் வெட்டியெடுத்த அந்த அணில் மனிதனின் சாதுர்யம் எனக்குள் வியப்பை ஏற்படுத்தியது. முப்பது ஆண்டுகள் வளர்ந்த மரம் இரண்டே நாளில் காணாமல் போய், அந்த இடம் ஒரு வெட்டவெளியாய் 'விரீரெனத்'தெரிந்ததைப் பார்த்து, இழக்கக் கூடாத ஒன்றை இழந்துவிட்டதாக எனக்குள் எழுந்த நெருடலில் அந்த வியப்பு மறைந்து போனது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை




