மெய்யாகவே விரைவுப் பேருந்துதான். ஆனால் தூக்கித் தூக்கிப் போடவில்லை. சாலையின் தரம் மேம்பட்டிருந்தது. ஆனால், ரசிக்கும் மனநிலையில் அஞ்சலி ஏனோ இல்லை. விடிந்தால் ராக்கி என்கிற ரக்ஷ பந்தன். பண்டிகையை முன்னிட்டு புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டுக்குப் பயணம். இருக்கையில் அஞ்சலி சற்று நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டாள். இன்னும் ஒரு மணி நேரத்தில் ஜெய்பூர் சேர்ந்து விடலாம் என்று புரிந்தது. 'அம்மாகிட்ட என்ன பேசப் போறோம்? எப்படிப் பார்த்துக்கப் போறோம்?' சஞ்சலத்தில் அஞ்சலியின் இதயம் அதிகமாகப் படபடத்தது.
'திலீப்! எழுந்திரிடா... அஞ்சலி விடிகாலையிலேயே எழுந்து குளிச்சு பூஜையை முடிச்சிட்டு வெறும் வயித்தோட உனக்கு ராக்கிச் சரடைக் கட்ட உக்காந்திருக்கா... எவ்வளவு நேரம்தான் தூங்குவே? கொஞ்சம் இரக்கம் வேண்டாமா?'
சின்ன வயதில் விடிகாலையில் ஒவ்வொரு ரக்ஷபந்தன் பண்டிகைத் தினத்தன்றும் அவர்கள் தாயாரின் குரல் ஓங்கும். சீக்கிரம் எழ அழிச்சாட்டியம் செய்யும் அவள் அண்ணன் திலீப் அன்று தாயார் முதல் சத்தம் கேட்டதுமே பாயைச் சுருட்டிவிடுவான். விடுவென்று ஓடி பல்லைத் தேய்த்துக் கொள்வான். உடனே உடம்பையும் நனைத்துக்கொண்டு விடுவான். காலைத் தேநீர் அவன் நினைவில் இருக்காது. தலையைச் சிலுப்பிக்கொண்டு திலகம் இட்டுக்கொள்ள அவள் முன் திலீப் அமர்ந்து கொள்வான். அஞ்சலிக்கு சிரிப்புடன் அழுகையும் சேர்ந்து கிளம்பும்.
'ராக்கி நாந்தானே கட்டிக்கணும். அதுக்கு நீயேன் இவ்வளவு நேரம் பட்டினி கிடக்கணும்? அவசியமா? சரி... சீக்கிரம் கட்டிவிடு'
அஞ்சலிக்கு மட்டும் கேட்கும்படி திலீப் உண்மையான கரிசனத்துடன் முனங்குவான். கரத்தையும் உடனே நீட்டுவான். அஞ்சலி அவன் சொன்னதைக் காதில் வாங்காததுபோல் அவனுக்கு ராக்கிச் சரடைக் கட்டிவிட்டு நெகிழ்ச்சியுடன் அவன் காலில் விழுந்து வணங்குவாள். ஐந்து வயதுதான் வித்தியாசம்.
உடனே திலீப் ஓடிப்போய் அவனுடைய ஸ்கூல் பையிலிருந்து அவளுக்காக வாங்கி வைத்திருந்த அன்பளிப்பை எடுத்துக் கொடுப்பான்.
'இந்த இனிப்பைச் சாப்பிட்டுவிட்டுப் போ!'
அஞ்சலி கத்தியது அவன் காதில் விழுந்திருக்காது. அப்பா அவ்வப்போது அவனுக்குத் தந்திருந்த பணத்திலிருந்து ஒரு பைசா கூட தனக்குச் செலவழிக்காமல் திலீப் ரக்ஷபந்தனன்று அஞ்சலிக்கு ஏதாவது தர சேமித்து வைத்திருக்கிறான் என்று அஞ்சலி அறிந்ததுதான். அவன் அவள் கையில் வைத்த பொருளை சரியாகக் காணக்கூட முடியாமல் கண்ணீர் அவள் பார்வையை மறைத்திருக்கும்.
பெற்றோர்கள் உணர்ச்சிபூர்வமாக அங்கு நடப்பதையே கவனித்துவிட்டு கண்களைத் துடைத்துக் கொள்வார்கள். வருடாவருடம் நடப்பதுதான். அஞ்சலியின் சின்ன வயதில் சிவந்த நிறத்தில் குங்குமம் தோய்த்ததுபோல் இருக்கும் சாதாரண நூல் சரட்டில் தொடங்கியது ராக்கி பண்டிகை. அவள் வயது ஏற ஏற பட்டு நூல் சரடு, பல நிறங்களில் கற்றையாக முறுக்கி ஒன்றான சரடு, குஞ்சம் வைத்த சரடு என்று படிப்படியாக உயர்ந்திருந்தது.
ராக்கி பண்டிகைக்கு இரண்டு நாட்கள் முன்னதாக அஞ்சலி தாயாருடன் தன் அங்காடி படையெடுப்பைத் தொடங்குவாள். ஒவ்வொரு கடையிலும் ஏறி இறங்கி நேர்த்தியான சரடை மகள் ஆர்வத்துடன் பொறுக்குவதை தாயார் பொறுமையுடன் கவனித்துக் கொண்டிருப்பார்.
'நீ உனக்கு சல்வார் கமீஸ் எடுக்கும்போதுகூட இவ்வளவு நேரம் தேடிப்பாக்கல...' சொல்லிக்கொண்டே செல்லமாக அஞ்சலி தலையில் ஒரு குட்டு வைப்பார்.
'எப்போதும் போல குலோப் ஜாமுன் வாங்காதீங்கம்மா. ராக்கிக்கு அண்ணனுக்குப் பிடிச்ச ரஸமலாய் அல்லது பால்கோவா வாங்குங்க. இன்னிக்கு செலவைப் பாக்கவேண்டாம்' அஞ்சலி மேலும் தன் நச்சரிப்பை விடமாட்டாள்.
சின்ன பென்சில், ரிப்பன், பேனா என்று தொடங்கி புடவை சுடிதார் வரை அவர்களின் வயதுக்கு ஏற்ப திலீப் அஞ்சலிக்குத் தந்த அன்பளிப்புகளும் வளர்ந்திருந்தன. கையில் கட்டிய சரடுடன் திலீப் பெருமையுடன் தன் நண்பர்களுடன் சுற்றுவதை அஞ்சலி ஆர்வத்துடன் கவனிப்பாள்.
அஞ்சலியின் தோழிகள் தீபாவளி, ஹோலி என்று பண்டிகைகளுக்கு ஏங்குவார்கள். விரல்களைவிட்டு நாட்களையும் எண்ணிக் கொண்டிருப்பார்கள். அஞ்சலியின் எதிர்பார்ப்பு என்னவோ இந்த ரக்ஷபந்தன் மட்டும்தான். அந்த ரட்சயை சகோதரன் கரத்தில் கட்டும்போது ஏற்படும் பூரிப்பு அவளுக்கு எதிலும் கிடைத்ததில்லை. பழங்காலத்தில் அந்நியர் படையெடுப்பின்போது தங்களின் மானம் காக்கப்பட வேண்டும் என வேண்டி, ஒவ்வொரு பெண்ணும் தங்களது சகோதரர்கள் கரத்தில் ரட்சையைக் கட்டித் தொடங்கி வைத்த வழக்கம். ஏன், அந்தக் கரங்களுக்குச் சொந்தக்காரன் கூடப் பிறக்காமல் சகோதரனாகப் பாவித்தவனாகவும் இருக்கலாம். ஆனால், அஞ்சலிக்கு அது என்னவோ ஓர் உறவுப் பாலமாகவே தோன்றியது. சகோதரனுடன் அதிகம் பிணைத்ததாகத் தோன்றியது. இப்போது திருமணம் ஆனவுடன் பிறந்த வீட்டுடன் உறவை மேம்படுத்தும் விழாவாகத்தான் தெரிந்தது.
பெற்றோர் எவ்வளவு வற்புறுத்தியும் முதலில் திருமணம் செய்துகொள்ள திலீப் மறுத்துவிட்டான். வீட்டின் முதல் வைபவம் அஞ்சலியின் திருமணம்தான் என்பதில் உறுதியாக இருந்தான். கட்டுச் சோற்றுடன் அஞ்சலி கிளம்பும்போது திலீப் எப்படியெல்லாம் அழுதிருப்பான்? பிழியப் பிழிய திலீப் அழுததை முதன் முதலாக அஞ்சலி அன்றுதான் பார்த்தாள். திருமண நிகழ்ச்சியில் அமைதியாக இருந்த அஞ்சலி கணவன் சந்தீப் 'நான் ஏதோ வில்லன் மாதிரி வந்து உங்களைப் பிரித்து விட்டேனா?' என்று சொல்லியதும்தான் சூழ்நிலை சற்று கலகலத்தது.
ஒரு வருடம் கழித்துதான் அவள் அண்ணியாக சுரபி வந்துசேர்ந்தாள். அவள் வந்த வேளையோ என்னவோ... திலீபனுக்கு துபையில் வேலை கிடைத்தது. சின்ன வயதிலேயே தங்க நகைகள் தயாரிப்பிலும், வைரம் பதிப்பதிலும் சிறிது அனுபவம் பெற்றிருந்தான். துபை செல்வது எளிதாக இருந்தது. மூன்று வருடங்கள் வர அவன் திரும்பிப் பார்க்கவேயில்லை. ஒவ்வொரு வருடமும் அஞ்சலி ராக்கியை தபாலில்தான் அனுப்புவாள்.
'இங்க கட்டிவிடத்தான் ஆள் இல்லை... உனக்கான அன்பளிப்பெல்லாம் ஒரு சூட்கேசில் பத்திரமா வச்சிருக்கேன். அங்க வரப்ப வாங்கிக்க...'
மறக்காமல் போனில் பேசிவிட்டு கலகலவென்று சிரிப்பான்.
'கடலைத் தாண்ட மாட்டோம்' என்று வைராக்கியத்தோடு இருந்த பெற்றோர்களையும் ஒரு வழியாக இருக்குமிடத்துக்கு வரவழைத்தான். ஆனால், எதிர்பாராவிதமாக அவர்கள் தகப்பனார் ஹார்ட் அட்டாக்கில் அங்கேயே மரணமடைந்தார். அவர் முகத்தைக்கூட பார்க்கும் கொடுப்பினை அஞ்சலிக்கு அமையவில்லை. விசா தொல்லையால் அம்மா அதிக நாட்கள் துபையில் இருக்க முடியாது. அம்மாவுக்கு விருப்பமும் இருக்காது.
ஊரில் விட நீண்ட நாட்கள் கழித்து மனைவி குழந்தையுடன் திலீப் வந்திருக்கிறான். கண்களில் தூசி விழுந்ததுபோல் பாவனை செய்துகொண்டு அஞ்சலி துடைத்துக்கொண்டாள். ஒரு முழுங்கு குளிர்ந்த நீர் துக்கத்தைக் கொஞ்சம் அடக்கியது.
வெளிப்புறம் நோக்கினாள். பஸ் ஜெய்பூரை நெருங்கியிருந்தது. ஊரின் வெளிப்புறம் ஒரு நேர்த்தியான காம்பவுண்ட் அடக்கிய கான்வென்ட் ஸ்கூல். கழுத்துப்பட்டை, கால்சராய், காலணிகளுடன் மாணாக்கர்கள் அலைந்து கொண்டிருந்தனர். அஞ்சலியும் திலீபனும் ஒரு சாதாரண நடுத்தர குடுபத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். திலீபனது கனவுகளோ அகன்று விரிந்தவை. சின்ன வயது ஏக்கத்தில் பிறந்தவை.
'ஊரின் ஒதுக்குப்புறமாக இருந்தாலும் ஒரு தனி வீடு, சின்ன தோட்டம், ஊஞ்சல் வைக்க இடம், குழந்தைகள் படிக்க கான்வென்ட்.ஏன் முடிந்தால் டெல்லியில் கூட ஹாஸ்டலில் போடலாம்.' சொல்லிக்கொண்டே இருப்பான்.
'இப்ப சம்பாதிக்கிறது வச்சு சேமிக்க முடியல. இன்னும் கொஞ்ச வருஷமாகலாம். முடிஞ்சா சுரபிக்கும் வேலை தேடணும். செளகரியமா இருக்கு. வெளியில கடும் வெயில். ஆனா, வீடெல்லாம் ஏசி.' துபை போனவுடன் திலீபன் சொன்ன ஞாபகம். அவனுக்கு இருக்கும் வசதிகளைக் கேட்டு அஞ்சலி அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. கையிலும் கழுத்திலும் நகைகள் நிரம்பிய அண்ணி சுரபியை எத்தனை முறை கற்பனையில் பார்த்திருப்பாள்?
வாழ்க்கையில் எல்லாம் சுலபமாய் கிடைப்பதில்லை.ஆனால், அவ்வப்போது கிடைக்கும் வழுக்கல்கள்தான் வாழ்க்கையோ. அஞ்சலி குழம்பினாள். அப்பா மறைவு ஒரு இடி. சந்தேகமில்லை. அம்மா தனியாக இருக்கணும். கனத்த உடல், முட்டி வலி, போதாக்குறைக்கு சர்க்கரை நோய்.
அப்பாவின் இழப்பைவிட அண்ணனுக்கு உதவ முடியவில்லை என்ற துக்கம்தான் அஞ்சலியை வதைத்துக்கொண்டிருந்தது. தன்னுடன் வந்து இருக்க மாட்டாள். வற்புறுத்திக் கூட்டிப் போக நினைத்தாள். கணவன், மாமனார், மாமியார் மனநிலை ஒத்துவரவில்லை. ஜாடைமாடையாகக் கேட்டுப் பார்த்தாள். அஞ்சலி கணவன் சந்தீப் முகத்திலும் சங்கடம் தெரிந்தது.
'யார் யார் எங்க இருக்கணுமோ அங்கதான் இருக்கணும்.'
அஞ்சலியின் மாமனார் அவள் எண்ணத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். அவர்களும் திருமணமான தன் பெண் வீட்டுக்கு அனாவசியாமாகப் போய் அஞ்சலி பார்த்ததில்லை. மற்றபடி அஞ்சலியை ஒரு பெண்போல்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள். எப்படி சகோதரன் திலீபன் முகத்தை நிமிர்ந்து பார்ப்பது என்றே அஞ்சலிக்குப் புரியவில்லை. பெண்ணுக்குப் பிறந்த வீட்டுச் சொத்துரிமை பற்றியெல்லாம் பேசுகிறார்கள். ஒரு பெண் திருமணம் ஆனபிறகும் தன் பெற்றோர்களை பராமரிப்பதில் என்ன தவறு? ஏன் வழக்கில் வரக்கூடாது? அஞ்சலி நினைத்தே மருகிக்கொண்டிருந்தாள். இப்போது கிளம்பும் முன்னர்கூட கணவன் முகத்தை ஒருமுறை பார்த்தாள்.
'நீ வரவரைக்கும் நம்ம பையனை பத்திரமா பார்த்துக்கிறேன்... கவலைப் படாதே!'
சொல்லிவிட்டு சங்கடத்துடன் முகத்தைத் திருப்பிக்கொண்டான். மற்றபடி நல்லவன்தான்.
ஜெய்பூர் பஸ் ஸ்டாண்டில் நுழையும்போதே கவனித்தாள். பரபரப்புடன் ஒவ்வொருத்தரையும் கேட்டுக்கொண்டே நின்றது திலீபன்தான். இந்த மூன்று நான்கு வருடங்களில் பாவம் அவன் சிரத்தில் சில வெண் முடிகள். மற்றவர்கள் இறங்கும் முன்னரே முண்டியடித்துக்கொண்டு அவள் அருகில் வரப் பிரயத்தனம் செய்தது அவளுக்கு அந்தத் துக்கத்திலும் சிரிப்பைத் தந்தது.
'சில நடப்புகள் நம்ம கையில் இல்ல. வீட்ல போய்ப் பேசிக்கலாம்...அழுகையை அடக்கிக்க...'
தோளில் சாய்ந்து அழ முயன்ற அஞ்சலியை சமாதானப்படுத்தி திலீபன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். உனக்கு எப்படி உதவுவதுன்னு தெரியலங்கறதாலதான் அதிக அழுகைன்னு அஞ்சலியால் வாய்விட்டுச் சொல்ல முடியவில்லை.
அஞ்சலி தாயாரும் வீட்டு வாசலிலேயே அவளுக்காகக் காத்திருந்தாள். தாயாரின் வெறும் நெற்றி அஞ்சலியை வதைத்தது. கனத்த சரீரத்தை அவர் நாற்காலியிலிருந்து உயர்த்து முன்னரே அஞ்சலி சென்று தாங்கிக்கொண்டாள். இருவரும் கண்களைத் துடைத்துக்கொண்டே வீட்டுக்குள் சென்றனர்.
மாலை போட்ட அப்பாவின் படம். முன்னால் அமர்ந்து கொண்டனர். அப்பாவுக்கு எப்படி அட்டாக் வந்தது, ஹாஸ்பிடல் அட்மிஷன், விசா காலம் எமெர்ஜென்சி முறையில எப்படி நீடிச்சோம் எல்லாம் அவள் தாயார் துக்கத்துடன் விவரித்தாள். அழுதுகொண்டே எவ்வளவு நேரம் பேசினார்களோ தெரியவில்லை. சுரபிதான் வந்து ஆகாரத்துக்கு ஞாபகப் படுத்தினாள்.
'என்னால பாத்துக்க முடியாத நிலைமை அம்மா. நீ எப்படி தனியா இருக்கபோற?' அஞ்சலி சொல்ல வந்தது அவள் தொண்டைக்குள்ளேயே நின்றது.
'ராக்கிக்கு இருப்ப இல்லையா... ராக்கிச் சரடு கட்டலாம். இல்லைன்னு நெனைச்சுக்காதே.'
அம்மா சன்னமாகத்தான் கேட்டாள். அஞ்சலி மெளனமாகத் தலையாட்டினாள்.
மறுநாள் விடிந்தபோது அஞ்சலி அவசரம் அவசரமாகக் குளித்தாள். தாம்பாளத்தில் திலகம், ராக்கிச் சரடு, பூ, இனிப்புகள் எடுத்து வைத்தாள். 'திலீபனை எழுப்ப வேண்டும். அவளது இயலாமையை எப்படியாவது அன்றே சொல்லிவிட வேண்டும்.' யோசித்துக்கொண்டே வந்தவள் குளித்துமுடித்துவிட்டு குர்தா பைஜாமாவுடன் வந்து நின்ற திலீபனைக் கண்டு ஆச்சரியப்பட்டாள்..
'என்ன அப்படிப் பார்க்கிற... ராக்கி கட்டிவிடு... நான் வேலை பார்க்கிற இடத்துல சீக்கிரம் எழுந்துபோய் பழக்கமாயிடுத்து...'
கண்களில் நீர் தளும்ப அஞ்சலி திலீபனுக்கு சரடைக் கட்டிவிட்டு திலகமும் இட்டுவிட்டாள். இனிப்பை வழங்கினாள்.
'நான் நாலு வருஷமா உனக்குத் தர இருந்ததை ஒரு சூட்கேஸ்ல வச்சிருக்கேன்... தந்துடறேன். இன்னிக்கு ஒண்ணும் தராட்டி பரவாயில்லையா..?'
திலீபன் சிரித்துக்கொண்டே கேட்டான்.
'எனக்கு ஒண்ணும் வேண்டாம். நான் தான் உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்..'
அஞ்சலி தலையைக் குனிந்துகொண்டே பேசினாள்.
'அதுக்கு அவசியமேயில்ல... அம்மாவைப் பத்திக் கவலைப்படாதே. நான் குடும்பத்தோட திரும்பவும் இங்கேயே வந்துட்டேன். அம்மாவைத் தனியா விடமாட்டேன்.'
அஞ்சலி திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.
'உன்னோட மனசில என்னென்ன போராட்டங்கள் எப்படியெல்லாம் நடந்திருக்கும்னு எனக்குத் தெரியும். நீ சொல்லவே வேண்டாம். அம்மாவப் பாத்துக்கிறது மட்டும் என்னோட கடமையில்ல... கல்யாணம் பண்ணிக்கொடுத்த சகோதரியை நிம்மதியாவும் சந்தோஷமாவும் வைக்கறதும் கூடத்தான். தாலிங்கிற மங்கல சூத்திரம் கயிறா மட்டும் ஒங்க கழுத்தில தொங்கிறதில்ல... அதுக்கு நீங்க கொடுக்கிற மரியாதையே வேற... ராக்கிச் சரட்டையும் நான் அப்படித்தான் மதிக்கிறேன்.
இது எங்க கையில ரொம்ப நாள் தங்கிறதில்ல... ஆனா, அது எப்பவும் கையில இருக்கிற உணர்வோட தான் நான் இருக்கேன். உன்னோட கெளரவத்தையும் தன்மானத்தையும் காப்பாத்தறதும் கூடப் பிறந்த என்னோட கடமை. அம்மாவை எப்படி தனியா விடறது, நம்பளால பார்த்துக்க முடியாதே... புகுந்த வீட்டிலேர்ந்து அதுக்கு அனுசரணை இருக்காதே... அப்படியெல்லாம் எதையும் நெனைச்சு கவலைப் படாதே... பணத்தையும் வசதியையும் நான் பின்னால கூட சம்பாதிச்சுக்கலாம்... இந்த வருஷ ராக்கிக்கு இதுதான் என்னோட அன்பளிப்பு... இத மட்டும் மறுக்காம ஏத்துக்கோ..!'
சொல்லிக்கொண்டே திலீப் அஞ்சலியின் வாயிலும் இனிப்பைத் திணித்தான். அஞ்சலிக்கு கண்ணீர் நிற்கத்தான் அதிக நேரம் பிடித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிறிஸ்தவ அமைப்புகளைக் குறிவைக்கும் பாஜகவின் சதித் திட்டம்! அதிமுக நிலைப்பாடு என்ன?

திமுகவை நம்பினால் நடுரோட்டில் நிற்பார்கள்: மயிலாப்பூரில் இபிஎஸ் பேச்சு
இனிப்பில் தங்கிய கசப்பு
பா(ர்)வை படுத்தும் பாடு...
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

