'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 186

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: கேசரியின் அதிரடி நகர்வு, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 186

சீதாராம் கேசரியை அங்கே இருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை என்பதால் அமைதி நிலவியது. அவரே மேலும் தொடர்ந்தார்:

'எப்போது நாடாளுமன்றக் கட்சித் தலைவர் தேர்தல் நடக்கும், யார் போட்டியிடப் போகிறார்கள், யார் தேர்ந்தெடுக்கப்படலாம் என்பது பற்றியெல்லாம் விவாதித்துக் கொண்டிருக்கிறீர்களோ? தேதியை காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் முடிவு செய்யும்...' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் அவர். யாருடைய முகத்திலும் ஈயாடவில்லை.

சரத்பவார் ஏற்கெனவே டிசம்பர் 23-இல் தேர்தல் நடக்கும் என்று தெரிவித்திருக்கும் நிலையில் இப்போது கட்சித் தலைவர் சீதாராம் கேசரி, காங்கிரஸ் காரியக் கமிட்டி முடிவு செய்யும் என்று சொல்வதில் இருந்து எல்லோருக்கும் ஒன்று தெளிவாகத் தெரிந்தது. அது, சரத்பவாரின் அறிவிப்பை சீதாராம் கேசரி ஏற்றுக் கொள்வதாக இல்லை என்பதுதான். கேசரி சொன்னது போல அன்று மாலையிலேயே காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்துக்கான அறிவிப்பை வெளியிட்டார்.

காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடியது. ஏற்கனவே சரத்பவார் அறிவித்த தேர்தல் அறிவிப்பு டிசம்பர் 23-ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையைக் காரணம் காட்டி, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க ஜனவரி 3-ஆம் தேதி நிச்சயிக்கப்பட்டது. நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து நரசிம்மராவின் ஆதரவாளர் சுரேஷ் கல்மாதி அகற்றப்பட்டார்.

காங்கிரஸ் கட்சியில் இந்தக் குழப்பங்கள் நடந்து கொண்டிருந்தபோது, இன்னொரு திருப்பத்துக்கு உச்சநீதிமன்றம் வழிகோலியது.

உத்தரப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திய ஐக்கிய முன்னணி அரசின் உத்தரவை, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னௌ அமர்வு நிராகரித்திருந்தது. அதனால் மீண்டும் ஆட்சி அமைப்பது குறித்து பாரதிய ஜனதா கட்சி மும்முரமாக களமிறங்கி இருந்தது. கான்ஷி ராமிடமும், பகுஜன் சமாஜ் கட்சியின் ஏனைய தலைவர்களுடனும் உத்தரப் பிரதேசத்தின் மூத்த பாஜக தலைவர்களான லால்ஜி தாண்டனும், கல்ராஜ் மிஸ்ராவும் பேச்சுவார்த்தைகள் நடத்தத் தொடங்கி இருந்தனர்.

'உத்தரப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது செல்லாது' என்கிற அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துவிட்டது. மேல்முறையீட்டின் தீர்ப்பு வரும்வரை, சட்டப் பேரவையைக் கலைக்கக் கூடாது என்றும் உத்தரவு குறிப்பிட்டிருந்தது.

'மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைவதையோ, அதற்கான வாய்ப்புகளை ஆளுநர் ஆராய்வதையோ இந்தத் தடையாணை எந்தவிதத்திலும் பாதிக்காது' என்று உச்ச நீதிமன்ற இடைக்காலத் தடையில் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.எம்.அகமதி, நீதிபதிகள் என்.பி.சிங், சுஜாதா மனோகர் அடங்கிய அந்த அமர்வின் இடைக்காலத் தடைக்கான தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சட்டப் பேரவை பெரும்பான்மை குறித்த வழக்குகளில், மேற்கோள் காட்டப்படும் தீர்ப்புகளில் இதுவும் ஒன்று.

உத்தரப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டிய சூழல் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் அப்போது மத்திய அரசின் தலைமை வழக்குரைஞராக (அட்டர்னி ஜெனரல்) இருந்த அசோக் தேசாய் முன்வைத்த காரணங்கள் இவை:

'இன்றைய அரசியல் சூழ்நிலையில் எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை இல்லாத திரிசங்கு சட்டப் பேரவைகள் அமைந்து விடுகின்றன. அத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொள்ள உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன' என்கிற வேண்டுகோளுடன்தான் தனது வாதங்களை முன்வைத்திருந்தார் அவர்.

'உத்தரப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருப்பதால், முதல்வரைத் தேர்ந்தெடுக்க சட்டப் பேரவையைத் கூட்ட முடியாத நிலைமை என்பது ஒருபுறம்; சட்டப் பேரவையைக் கூட்டினாலும் எந்தவொரு கட்சிக்கோ, கூட்டணிக்கோ பெரும்பான்மை இல்லை என்பது இன்னொருபுறம். பெரும்பான்மை இல்லாத நிலையில், யாராவது ஒருவரை முதல்வராகப் பதவி பிரமாணம் செய்து வைத்தால், அது குதிரைப் பேரத்துக்கு வழிகோலக்கூடும். உயர்நீதிமன்றத் தீர்ப்புப்படி, குடியசுத் தலைவர் ஆட்சி அகற்றப்பட்டால், உத்தரப் பிரதேசத்தில் அரசியல் வெற்றிடம்தான் ஏற்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம்தான் தெளிவுபடுத்த முடியும்...' என்பதுதான் அட்டர்னி ஜெனரல் அசோக் தேசாயின் அதி அற்புதமான வாதம்.

உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு, பாஜகவின் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. பகுஜன் சமாஜ் கட்சியும் இப்போதைக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிட்டாது என்கிற மனநிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால், அந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரியின் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்தனர்.

சீதாராம் கேசரி, நாடாளுமன்றக் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றால்தான் தங்களது அடுத்தகட்ட முயற்சிகள் கைகூடும் என்று அவர்களுக்குத் தெரியும். நாடாளுமன்றக் கட்சித் தலைவர் தேர்தலுக்கு ஒருபுறம் தயாராகிக் கொண்டிருந்த வேளையில், நாடாளுமன்றக் காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

அரசியல் நிலவரங்கள் குறித்துத் தெரிந்துகொள்ள ஷாஜஹான் சாலையில் உள்ள வி.என்.காட்கிலின் வீட்டுக்குப் போயிருந்தேன். அங்கே அவரை சந்திக்க ஜனார்தன பூஜாரி, ஜகந்நாத் மிஸ்ரா, சுரேஷ் கல்மாதி ஆகியோர் வந்திருந்தனர். அவர்களின் கலந்தாலோசனை அந்தப் பொதுக்குழுக் கூட்டம் குறித்ததாக இருந்தது என்பதை கூட்டம் முடிந்த பிறகு வி.என்.காட்கிலிடமிருந்து தெரிந்து கொண்டேன்.

நாடாளுமன்றக் கட்சித் தலைவராக இருந்த பி.வி.நரசிம்ம ராவுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமாக அது அமையும் என்றும், அதில் கலந்துகொள்ள சீதாராம் கேசரியே சம்மதித்திருக்கிறார் என்றும் என்னிடம் தெரிவித்தார் காட்கில்.

நாடாளுமன்றத்தின் சென்ட்ரல் ஹாலில் நடந்த அந்தக் கூட்டத்துக்குப் பத்திரிகையாளர்கள் அழைக்கப்படவில்லை. ஆனால் ஒரு சில பத்திரிகையாளர்கள் சில தலைவர்களுடன் வந்தபோது, அவர்கள் தடுக்கப்படவில்லை. ஸ்ரீகாந்த் ஜிச்கரின் தயவில் நானும் நுழைந்து ஓர் ஓரமாக அவருடன் அமர்ந்து கொண்டேன்.

அந்தக் கூட்டத்துக்கு சீதாராம் கேசரி அழைக்கப்பட்டிருந்தது மட்டுமல்ல, அவர்தான் தலைமை ஏற்றிருந்தார். நரசிம்ம ராவின் உரைதான் மிகவும் உருக்கமாக இருந்தது.

'காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி என்பது மிகவும் உயர்ந்தது. காந்திஜி, நேதாஜி, நேருஜி உள்ளிட்ட பெரும் தலைவர்கள் அலங்கரித்த பதவி அது. அப்படிப்பட்ட தலைவர் பதவியில் இருக்கும் ஒருவர் என்னைப் பதவி விலகச் சொன்னபோது, அவரது உத்தரவை நான் மீற விரும்பவில்லை. நாடாளுமன்றக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினாலும், கட்சியின் சாதாரணத் தொண்டனாகத் தொடர்ந்து பணியாற்றுவேன்.

எதிர்காலத்தில் கட்சிக்கு ஏற்பட இருக்கும் சோதனைகள் ஏராளம். அதைக் கருத்தில் கொண்டு எம்.பி.க்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். நான் கட்சித் தலைவராகவும், பிரதமராகவும் பணியாற்றிய காலத்தில் எனக்கு ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறி நரசிம்மராவ் அமர்ந்தபோது, அங்கே கூடியிருந்த அனைவரும் நெகிழ்ந்தனர் என்பதை என்னால் உணர முடிந்தது.

நரசிம்ம ராவுக்குப் பிறகு பேசிய, பிகார் முன்னாள் முதல்வர் ஜகந்நாத் மிஸ்ரா, தனது உரையில் மறைமுகமாக சீதாராம் கேசரியைக் கடுமையாக விமர்சித்தார். சீதாராம் கேசரியின் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் இருந்தது.

'நாடாளுமன்றக் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதும், பதவியிலிருந்து விலக்குவதும் பொதுக்குழுக் கூட்டத்தில்தான் முடிவெடுக்கப்பட வேண்டும். பதவியிலிருந்து விலக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு நிர்பந்திப்பது, எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணமாக இருக்கப் போகிறது. இதற்கு முன்னால் இப்படி நடந்ததே இல்லை' என்று ஜகந்நாத் மிஸ்ரா கூறியபோது, ராவ் ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் கரவொலி எழுப்பி ஆமோதித்தனர். அப்போது, நரசிம்ம ராவின் முகத்திலும் எந்தவித உணர்ச்சியும் தென்படவில்லை.

கடைசியில் சீதாராம் கேசரியும் உரையாற்றினார். 'எனக்குத் தலைவராகவும், பிரதமராகவும் இருந்தவர் நரசிம்ம ராவ்ஜி. அவர் பிரதமராகப் பதவி வகித்தபோது நாட்டுக்கு ஆற்றிய பணிகள் ஏராளம். எங்களது நடவடிக்கைகள் சில உங்களில் சிலருக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். சிலரைப் புண்படுத்தி இருக்கலாம். எங்கள் நோக்கம் நரசிம்ம ராவ்ஜியைப் புண்படுத்துவதோ, அவமானப்படுத்துவதோ அல்ல. காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதக் களங்கமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதுதான்' என்று சொன்னபோது, ஜகந்நாத் மிஸ்ராவுக்குத் கிடைத்தது போன்ற கரகோஷம் எழவில்லை. மௌனம்தான் நிலவியது.

நாடாளுமன்றக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் முடிந்த பிறகு, ஸ்ரீகாந்த் ஜிச்கருடன் வெளியே வந்தேன். ஜந்தர் மந்தர் மார்க்கிலுள்ள கேரளா ஹவுஸில் என்னை இறக்கி விட்டுவிட்டு, நரசிம்ம ராவைச் சந்திக்கக் கிளம்பினார் ஜிச்கர். கேரளா ஹவுஸில் யாராவது நண்பர்கள் இருக்கக்கூடும் என்று நுழைந்தேன். யாருமே இல்லை.

பொடி நடையாக அங்கிருந்து ஐ.என்.எஸ். கட்டடத்துக்கு வந்து சேர்ந்தேன். இப்போது எப்படி என்று தெரியவில்லை. 30 ஆண்டுகளுக்கு முன்னால், ரக்ஃபி மார்க் ஐ.என்.எஸ். கட்டடம், யு.என்.ஐ. கேன்டீன், ராசீனா சாலையில் உள்ள பிரஸ் கிளப் மூன்றுக்கும் விஜயம் செய்தால் தலைநகர அரசியலில் என்ன நடக்கிறது என்பதை ஓரளவுக்குத் தெரிந்து கொண்டு விடலாம்.

எனக்குக் கிடைத்த தகவல்கள் இவை:

சரத் பவார் களத்தில் இறங்கத் தீவிரமாக முயற்சிகளை மேற்கொள்கிறார். ஏற்கனவே நரசிம்மராவையும், சீதாராம் கேசரியையும் தனித்தனியாக சந்தித்துப் பேசி இருக்கிறார். அவர்களது ஆதரவைக் கோரினார் என்று தெரிகிறது.

இன்னொரு பக்கம், கருணாகரனின் தலைமையில் விஜய பாஸ்கர ரெட்டியும், ஏ.கே.அந்தோணியும் நாடாளுமன்றக் கட்சியின் தலைவர் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவு திரட்டிக் கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில், ஜி.வெங்கட சுவாமி புதிதாக ஒரு கருத்துடன் களமிறங்கி இருந்தார். 'எப்போதும்போல கட்சித் தலைவர் சீதாராம் கேசரியே நாடாளுமன்றக் கட்சிக்கும் தலைவராக இருக்க வேண்டும். எம்.பி.க்கள் அதை வலியுறுத்த வேண்டும். அப்படி அவர் மறுக்கும்பட்சத்தில், தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்படித் தேர்தல் நடந்தால் நான் அந்தப் பதவிக்குப் போட்டியிடப் போகிறேன்' என்று ஜி.வெங்கட சுவாமி அறிவித்தபோது, அதன் பின்னணியில் சீதாராம் கேசரி இருந்தார் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

சீதாராம் கேசரி மாநிலங்களவை உறுப்பினர். நாடாளுமன்றக் கட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில், மக்களவை உறுப்பினர்கள் மட்டும்தான் களமிறங்க வேண்டும் என்பது ராஜேஷ் பைலட்டின் வாதம். அவர் போட்டியில் இறங்கப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

பரபரப்பாக எல்லோரும் நாடாளுமன்றக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்தும், உத்தரப் பிரதேச நிலவரம் குறித்து சிந்தித்தும், செயல்பட்டும் கொண்டிருந்தார்கள் என்றால் ஒருவர் மட்டும் தனது இலக்கை நிர்ணயித்து அதை மட்டுமே குறிவைத்துக் காயை நகர்த்திக் கொண்டிருந்தார்.

'ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி நிற்குமாம் கொக்கு' என்பார்கள். அவர் அதற்கும் மேலே, 'பகல் வெல்லும் கூகையைக் காக்கை...' ரகம். அவருடைய அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்று தெரியாமல் எல்லோருமே குழப்பத்தில் ஆழ்ந்திருந்தனர்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com