"கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்' என்பார்கள். பல்கலைக்கழகத்தைச் சுற்றிவந்த ஒரு பூனையும் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறது. இந்தியாவில் அல்ல; அமெரிக்காவில்..!
டாக்டர் பட்டம் என்றால் சும்மாவா? படித்துப் பதிந்து ஆராய்ச்சி எல்லாம் செய்து, அப்பாடா...! அல்லாமல் செயற்கரிய செயல்களைச் செய்யும் சிலருக்கு மதித்துப் பாராட்டும் விதமாகவும் (கெளரவ) டாக்டர் பட்டங்கள் வழங்கப்படுகின்றன.
அமெரிக்காவில் வெர்மான்ட் மாகாணத்திலுள்ள கேஸ்டில்டன் நகரில் செயல்படும் வெர்மான்ட் பல்கலைக்கழக வளாகமோ, ஒரு பூனைக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிக் கொண்டாடுகிறது.
மாணவ, மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழாவையொட்டி, மாணவர்களுக்கு வழங்கப்படும் "டாக்டர் ஆஃப் லிட்ரேச்சர்' என்பதைப் போல, மேக்ஸ் என்ற நம்ம பூனைக்கு, "நம் சமுதாயத்தின் மதிப்புக்குரிய உறுப்பினர்' எனப் பாராட்டி "டாக்டர் ஆஃப் லிட்-ரேச்சர்' (லிட்டர் குப்பை கூளம்) என்ற பட்டம் வழங்கப்படுகிறது.
ஏதோ எலி பிடிப்பதற்காகவோ அல்லது வளாகத்தில் தூக்கம் போடுவதற்காக இந்தப் பட்டம் வழங்கப்படவில்லை; மேக்ஸினுடைய நட்புக்காக, நட்பைப் பாராட்டி வழங்கப்படுகிறது.
"பூனை மேக்ஸ், கேஸ்டில்டன் குடும்பத்தில் பல ஆண்டுகளாக பாசக்கார உறுப்பினராக இருந்துவருகிறது' என்று முகநூல் நிலைப்பதிவொன்றில் தெரிவித்திருக்கிறது பல்கலை நிர்வாகம்.
பல்கலைக்கழக வளாகத்தின் பிரதான வாசல் இருக்கும் வீதியிலுள்ள ஒரு குடும்பத்துடன்தான் புகழ்பெற்ற இந்தப் பூனை வாழ்ந்து வருகிறது. விரும்பும் நேரங்களில் பல்கலை வளாகத்துக்குள் சென்று மாணவர்களுடன் உறவாடிவிட்டுத் திரும்பும்; மேக்ஸை மாணவ, மாணவியர் அனைவரும் விரும்புவார்கள் என்கிறார் அதன் உரிமையாளர் ஆஷ்லி டோவ்.
""சுமார் 4 ஆண்டுகளாக இங்கேதான் இருக்கிறது. மேக்ஸைப் பார்த்ததும் மாணவர்கள் உற்சாகமடைவார்கள். தூக்கிக் கொஞ்சுவார்கள். தற்படம் எடுத்துக் கொள்வார்கள். சில மாணவர்களுடன் சுற்றுலாவுக்கு எல்லாம் மேக்ஸ் சென்று வந்திருக்கிறது. எப்படியென்றே தெரியவில்லை, எல்லாருடனும் ஒட்டிக்கொண்டுவிடும், ஊர்சுற்றிவிட்டு வரும்'' என்கிறார் டோவ்.
டோவ் என்ற இந்தப் பெண்ணைத்தான் மேக்ஸின் அம்மாவென மாணவர்கள் அழைக்கிறார்கள். வெளியூர்கள் சென்றுவந்தால் மேக்ஸின் நலம் பற்றி அம்மாவிடம் விசாரித்துக்கொள்வார்கள். ஆனால், ஏனோ மாணவர்களுக்கான வழக்கமான பட்டமளிப்பு விழாவில் மேக்ஸ் பங்கேற்கவில்லை. தனியே வீட்டுக்கே கொண்டு செல்லப்பட்டு டோவ் ஆஷ்லியிடம் பட்டம் வழங்கப்படுகிறது.
ஒரு பூனையாகக்கூட பிறந்திருக்கலாமோ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.