ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வயிற்றில் அமிலச் சுரப்பு குணமடைய..?

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வயிற்றில் அமிலச் சுரப்பு குணமடைய..?
Updated on
1 min read

வயிற்றிலுள்ள அமிலச் சுரப்பு மேல்நோக்கிக் கிளம்பி உணவுக் குழாயின் உள்புறச் சவ்வுகளை வெந்துப் போகச் செய்யும் நிலை, செரிமானத்தில் தாமதம் ஆகிய உபாதைகளால் துன்புறுகிறேன். இவை குணமாக என்ன வகையான மூலிகைகளின் கலப்பு ஏற்புடையதாக இருக்கும்?

-சஞ்ஜீவி, வேதாரண்யம்.

வெற்றிலை, லவங்கப்பட்டை, சகதுப்பை, கொத்தமல்லி விதை, சீரகம், சோம்பு, கருஞ்சீரகம், பிரண்டை, ஓமம் ஆகிய மூலிகைகளின் கலப்பினால் தயாரித்து விற்கப்படும் 'பேசிபெ சிரப்' எனும் மருந்து நீங்கள் குறிப்பிடும் உபாதைகளுக்கான சிறந்த வலி நிவாரணியாகச் செயல்படும்.

சென்னையில் 'ஆபெக்ஸ்' எனும் நிறுவனம் இந்த மூலிகைகளின் சேர்க்கையினால் சிரப் வடிவில் விற்பனை செய்கிறார்கள்.

சுமார் பதினைந்து மில்லி காலை, இரவு உணவுக்குப் பின்னர் சாப்பிட மிகவும் உகந்தது. இந்த மருந்தைச் சாப்பிடும் நாள்களில் உணவுக் கட்டுப்பாடும் அவசியமாகும்.

காலையில் ஜவ்வரிசி, கசகசா சேர்த்துக் கஞ்சி காய்ச்சி, சிறிது பால், சர்க்கரை சாப்பிட நல்லது. செரிமானத்தில் எளிதானதும், உள்புறப் புண்ணை ஆற்றக் கூடிய திறன் வாய்ந்த இந்தக் கஞ்சியில் நெல்லிக்காய் வற்றல், கடுக்காய் தோடு கலந்து சாப்பிட்டால் இருமுறை நீர்ப்பேதியாகி, மேல்நோக்கி கிளம்பும் பித்தநீரை கீழிறக்கி வெளியேற்றிவிடும் மருந்தாகவும் செயல்படும்.

பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை திரிபலை, சிவதைவேர்ப்பொடியை இரவு, சூடான நீரில் கலந்து ஊறவைத்து, மறுநாள் காலை வெறும் வயிற்றில் குடிக்க, குடலின் உள்புறம் சூடு நிறைந்த பித்த தோஷத்தைக் கிளறிவிட்டு பேதி மூலம் வெளியேற்றி குடல் காந்தலை அடக்கி, குளிரச் செய்யும் நடைமுறை சாத்தியமான எளிய சிகிச்சையை நீங்கள் மேற்கொள்வது நல்லதே.

டீ, காபி, மதுபானம், கஞ்சா, புகையிலை, புலால் உணவு போன்றவை பித்த தோஷத்தை வயிற்றில் அதிகம் தோற்றுவித்து, உடல், மன உட்புழக்கத்தை அதிகரிக்கும் தன்மையுடவை. எனவே, அந்தப் பழக்கங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை அறவே நீங்கள் ஒதுக்க வேண்டும்.

அதுபோலவே மனம் சார்ந்த அதிக கோபம், துக்கம், வெறுப்பு, பேராசை, பொறாமை போன்ற விஷயங்களில் இருந்து நீங்கள் விலகியிருக்கவும் வேண்டும்.

கோதுமை மாவில் சிறிது உருக்கிய பசு நெய், சர்க்கரை கலந்து உருண்டைகளாக்கி இரவில் தூங்கும்போது அருகே வைத்துகொள்ளவும். உணவுக் குழாயில் பித்தம் எதுக்களித்து வந்தால், உட்கார்ந்து இரண்டு, மூன்று உருண்டைகளை வாயினுள் போட்டு சுவைத்து சாப்பிட்டால் பித்த நீர் உடனே கீழிறங்கி விடும். தண்ணீரில் ரோஜா இதழ்கள், தனியா, சீரகம், உலர்திராட்சைகளைப் போட்டு ஊறிய தண்ணீரை அருந்தி வருவதும் நலம்.

இனிப்பு, கசப்பு, துவர்ப்புச் சுவையினால் பித்த நீரில் மேல் எழும்பும் தன்மையை குணமாக்கலாம். செரிமானத்தின் இயற்கைத் தன்மையை, அதாவது செறிவூட்டும் தன்மையையும் மேம்படுத்தலாம்.

(தொடரும்)

- பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com