உள்ளங்கையில் யுரேனியம்...

உள்ளங்கையில் யுரேனியம்: மின்சாரத்தின் புதிய வழிமுறை
உள்ளங்கையில் யுரேனியம்...
Picasa
Updated on
1 min read

'உள்ளங்கையில் இருக்கும் பத்து கிராம் எடையுள்ள யுரேனியம் 10 டன் நிலக்கரி அளிக்கும் மின்சாரத்தையோ, எரிசக்தியையோ தரும்' என்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த முத்துகுமார்.

கோவையில் 'கெமிக்கல் என்ஜினீயரிங்' முடித்த இவர், ஓரிரு ஆண்டுகள் சில நிறுவனங்களில் அடுத்தடுத்து வேலை பார்த்து வந்தார். இந்தச் சூழ்நிலையில், சுவீடனில் பிரபலமான கே.டி.ஹெச். தொழில்நுட்பக் கல்லூரியில் அணுஆராய்ச்சியில் ஈடுபட்ட அனுமதி கிடைத்தது.

உலகின் தரவரிசையில் முதல் நூறு கல்லூரிகளில் ஒன்றான இந்தக் கல்லூரியில் வாய்ப்புக் கிடைத்தவுடன் அங்கு சென்றுவிட்ட முத்துகுமார், மின் பேட்டரி, ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்துதல், காற்றில் இருக்கும் கார்பனை கைப்பற்றுதல், சிறு அணு உலைகள் நிறுவுதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் தனது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

அவரிடம் பேசியபோது:

'உள்ளங்கையில் உள்ளது 'யுரேனியம் ஆக்ஸைட்' என்ற கனிமத்தின் ஒரு சிறிய துண்டு. இதை 'யூ238' என்று குறிப்பிடுவார்கள். ஒரு கிராம் 'யூ238' கனிமத்தை செறிவூட்டினால் ஒரு வீட்டுக்கு ஒரு ஆண்டுக்குத் தேவையான மின்சக்தியை குறைந்த செலவில் வழங்கும்.

உயிருக்கும் உடலுக்கும் அபாயமான யுரேனியத்தை உள்ளங்கையில் வைக்கலாமா? என்ற கேள்வி எழும். 'யூ238'-இல் அதிகபட்சம் 'ஆல்ஃபா' கதிர்வீச்சு மட்டுமே இருக்கும். 'ஆல்ஃபா' கதிர்கள் அத்தனை அபாயகரமானதும் இல்லை. வெறும் கையுறை அணிந்தும் கையாளலாம்.

யுரேனிய கனிமத்தில் 'பீட்டா' கதிர் வீச்சு கொஞ்சம் அபாயம் கூடியதாகும். 'யூ238' செறிவூட்டப்பட்டால் 'காமா' கதிர்வீச்சுகளை வெளியிடும்.

'காமா' கதிர்கள் அதிக அபாயம் கொண்டவை. எல்லா கதிர்வீச்சுகளையும் பாதுகாப்பாகக் கையாள எல்லா வசதிகளும் ஆய்வுக் கூடங்களிலும், அணு உலைகளிலும் உள்ளன.

ஸ்வீடன் கல்லூரி வளாகத்திலேயே இருந்த அணு உலையை தற்போது மாற்றிவிட்டனர். சுவீடனில் கால் பங்கு மின்சக்தி தேவைகளை அணு உலைகளே பூர்த்தி செய்கின்றன என்றாலும், அத்தனையும் பலமான பாதுகாப்பு சூழலில் இயங்குகின்றன.

சுவீடனிலும், அதன் அண்டை நாடுகளிலும் ஆங்காங்கே சிறு அணு உலைகளை கடுமையான பாதுகாப்பு விதிகளுடன் அமைக்கின்றனர். மின் சக்தியில் சுயசார்பு அடைய சிறு அணு உலைகள் உதவும். சிறு அணு உலைகளை நிறுவி மின்சார உற்பத்தியை அதிகரிக்கலாம். மின் பேட்டரியில் ஓடும் வாகனங்களால் செலவும் குறையும். மின் பேட்டரிகளால் விமானத்தை இயக்க முடியாது. ஹைட்டிரஜனை எரி பொருளாக மாற்றினால், விமானத்தை நீண்ட தூரம் இயக்கலாம். பெட்ரோல் பயன்பாட்டைக் குறைக்கலாம்.

சுவீடனில் அணு உலைகளை எப்படி நிர்வகிக்க வேண்டும், அணு கழிவுகளை கையாளுதலில் சிறந்து. அணுகழிவு மேலாண்மையில் உலகுக்கே வழிகாட்டும் நாடாக விளங்குகிறது.

இவ்வாறு கையாண்டால் பெரிய அணு உலைகளையும் பாதுகாப்பாக இயக்கலாம்' என்கிறார் முத்துகுமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com