

'அல்போன்சா' வகை மாம்பழத்தையும் முந்நூறு வகையான திராட்சைகளையும் அறிமுகம் செய்தவர், புதிய வகை காய்கறிகள், ஆபரணச் செடிகள், பூக்கள், மூலிகைச்செடிகள், நறுமணச்செடிகளை அறிமுகம் செய்து புதிய பரிமாணத்தை தந்தவர், நாட்டில் முதன்முறையாக பெங்களூரு வேளாண் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை கல்லூரியைத் தொடங்கியவர், பெங்களூரில் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கியவர், லால்பாக் பூங்காவில் ஆண்டுதோறும் இருமுறை நடக்கும் மலர்க்கண்காட்சிக்கு வித்திட்டவர், மைசூரு தோட்டக்கலை சங்கத்தை தொடங்கியவர், பெங்களூரில் சாலையோர மரங்களை நடுவதற்கு காரணமாக இருந்தவர்.. என்ற பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் மரிகௌடா.
இதனாலேயே, இந்தியாவின் தோட்டக்கலை தந்தை என்று அறியப்படும் மரிகெளடாவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 8-இல் 'தேசிய தோட்டக்கலை நாள்' என கொண்டாடப்படுகிறது.
'பூங்கா நகர்' என்று பெங்களூருக்கும், 'நாட்டின் தோட்டக்கலை மாநிலம்' என்ற பெயரை கர்நாடகத்துக்குப் பெற்றுத் தந்தவர் மரிகெளடா. அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பாலமாக விளங்கி கர்நாடகத்தை தோட்டக்கலையின் தொட்டிலாக மாற்றி, அதை பாராட்டி தாலாட்டி வளர்த்தவர்.
மைசூரு மாவட்டத்துக்கு உள்பட்ட டி.நரசிபுரா வட்டத்தின் மரேகெளடனஹள்ளி கிராமத்தில் 1916 ஆகஸ்ட் 8-இல் பிறந்தவர் எம்.எச்.மரிகெளடா. பள்ளிப் படிப்பை மகாராஜா உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். பெங்களூரு, சென்ட்ரல் கல்லூரியில் பிஎஸ்சி(இயற்கை அறிவியல்) பட்டப்படிப்பை 1939-இல் நிறைவு செய்தவுடன், லக்னெள பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி பட்டத்தை 1942-இல் பெற்றார்.
படிப்பை முடித்ததும் மைசூரு மாகாண அரசு தோட்டங்கள் துறையில் உதவி கண்காணிப்பாளராகப் பணியில் சேர்ந்தார். இவரது ஆர்வம், திறமை, தனித்தன்மையை உணர்ந்த அப்போதைய அரசு, மரிகெளடாவை மேற்படிப்புக்காக இங்கிலாந்து நாட்டில் உள்ள கீவ் தோட்டத்துக்கு அனுப்பியது. தொடர்ந்து ஹோலந்து நாட்டுக்கும் அவர் சென்று பயிற்சி பெற்றார். ஓராண்டு பயிற்சியில் தோட்டக்கலையில் நவீன தொழில்நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகள், நவீன தோட்டக்கலைநுட்பங்களை அவர் கற்றார்.
இங்கிலாந்தில் பயிற்சியை முடித்த கையோடு 1948-இல் அமெரிக்காவுக்கு சென்ற மரிகெளடா, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலையில் முனைவர் பட்டம் பெற்றார். ( தோட்டக்கலைத் துறையில் நாட்டில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவரும் இவர்தான்.)
1951-இல் நாடு திரும்பிய மரிகெளடாவுக்கு மைசூரு மாகாண அரசில் அரசு தோட்டங்கள் துறையின் துணைக் கண்காணிப்பாளர் பணி வழங்கப்பட்டது. விரைவிலேயே கண்காணிப்பாளராகவும் உயர்ந்தார்.
வெளிநாடுகளில் கற்ற அறிவாற்றலை விவசாயிகளின் மேம்பாட்டுக்கு பயன்படுத்த முடிவு செய்த மரிகெளடா, அரசு தோட்டங்கள் துறைக்கு புதிய பணித் திட்டத்தை வகுத்தார்.
கர்நாடகத்தில் 1963-இல் இந்தத் துறையை தோட்டக்கலைத்துறையாக மாற்றி அமைத்து தனது செயல்பாட்டு பரப்பை விரிவாக்கினார். அதே ஆண்டில், தோட்டக்கலைத் துறை முதல் இயக்குநராகவும் மரிகெளடா நியமிக்கப்பட்டார். அயராது உழைத்த மரிகெளடா, 1974-இல் தனது 23 ஆண்டுகால அரசுப்பணியில் இருந்து ஓய்வுபெற்றார். இவரது சாதனைகளைப் போற்றும் வகையில் 1993-இல்'தோட்டக்கலை ரத்தினம்' என்ற விருதை மரிகெளடாவுக்கு கர்நாடக அரசு வழங்கியது.
தனது பணிக்காலத்தில் கர்நாடகத்தை தோட்டக்கலை மாநிலமாக உயர்த்தினார். இந்தியாவின் முதல் தோட்டக்கலை மாநிலமாகவும் கர்நாடகத்தை புகழடைய செய்தார். 1951-இல் கர்நாடகத்தில் 2 தோட்டக்கலை பண்ணைகள் மட்டுமே இருந்தன. இந்த எண்ணிக்கை 1974-ஆம் ஆண்டில் 394 -ஆக உயர்ந்தது. மாநிலத்தின் தோட்டக்கலை பரப்பை 100 ஏக்கரிலிருந்து 18 ஆயிரம் ஏக்கராக விரிவாக்கினார். 140 ஏக்கரில் பசுமை பொங்கிவந்த லால்பாக் பூங்கா, 240 ஏக்கரில் பல அரிய மரங்கள், மலர்கள், தாவரங்கள் கொண்ட பசுமைப் பகுதியாக மாற்றிக் காட்டினார்.
தோட்டக்கலைத் துறை (அறிவியல், தொழில்நுட்ப வழிகாட்டுதல்), நாற்றங்கால் கூட்டுறவுச் சங்கம் (நகர மக்களுக்கு தோட்டம் சம்பந்தமான ஊட்டம் அளித்தல்), தோட்டக்கலை உற்பத்தி விற்பனை கூட்டுறவுச் சங்கம்(தோட்டக்கலை விளைபொருள்களை அறிவியல்ரீதியாக விற்றல்), மைசூரு தோட்டக்கலை சங்கம்(தோட்டக்கலை பரப்புரை- கற்பித்தல்) ஆகிய நான்கு முனைத் திட்டங்களை வகுத்து செயல்படுத்தினார்.
தாவரவியல் மாணவர்களின் குவி மையமாகத் திகழும் அளவுக்கு உலகின் பல்வேறு மூலைமுடுக்குகளில் இருந்து அரியவகை தாவர வகைகளை லால்பாக் பூங்காவில் நட்டுவைத்து அலங்கரித்தார் மரிகௌடா. புதுமையாகச் சிந்தித்து அவற்றை செயல்படுத்துவதில் வல்லவரான மரிகெளடா, தரிசு நிலத்தில் தோட்டக்கலையை மேம்படுத்த ஆர்வம் காட்டி, விவசாயிகளை ஊக்குவித்து அதை தன் வாழ்நாளில் சாதித்தும் காட்டினார். புளி,மா, பலா மரங்களை வளர்க்க விவசாயிகளை ஊக்குவித்தார்.
நாட்டின் முதல்முறையாக தரிசு நிலத்தில் தோட்டக்கலை பயிர்களை விளைவிக்க திரிபாசனத்தை அறிமுகத்தினார். மண் பானையில் பஞ்சை அடைத்து அதில் சிறுதுவாரங்களை ஏற்படுத்தி தண்ணீரை ஊற்றி மரச்செடிக்கு கீழே புதைத்து வைப்பதே திரிபாசனமாகும். இதனால், ஒருவாரத்துக்கு ஈரப்பதத்தை நிலத்தில் தேக்கி வைத்து மரச்செடிக்கு உயிரூட்ட ஊட்டமாக இருக்க முடியும் என்பதை நிரூபித்தார்.
கோலார், தும்கூரு, சித்ரதுர்கா போன்ற வறண்ட மாவட்டங்களில் இன்றும் திரிபாசனம் நடைமுறையில் இருப்பதும், அங்கு பசுமையான தோட்டக்கலை உயிர்ப்புடன் இருப்பதும் மரிகெளடாவின் முயற்சிக்கு இன்றும் சான்று பகர்ந்துள்ளன. பல்வேறு புதிய வகையான பழங்களை அறிமுகப்படுத்தினார்.
பெங்களூரில் லால்பாக் பூங்கா அமைந்திருக்கும் தெருவுக்கு 'எம்.எச்.மரிகெளடா சாலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டு எம்.எச்.
மரிகெளடாவின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டபோது, லால்பாக் பூங்காவில் அவரது உருவச்சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. மைசூரு கர்சன் பூங்காவில் எம்.எச்.மரிகெளடாவின் சிலையை முதல்வர் சித்தராமையா கடந்த ஆண்டில் திறந்துவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.